articles

img

புதிய இந்தியாவை படைக்க ஒன்று சேர்வோம்.... ஏஐடியுசி, சிஐடியு மேதின கூட்டு பிரகடனம்....

சிஐடியு தமிழ் மாநிலக்குழு செயலாளர்  ஜி.சுகுமாறன்  , ஏஐடியூசி  தமிழ்நாடு பொதுச் செயலாளர் டி.எம்.மூர்த்தி ஆகியோர் விடுக்கும் கூட்டறிக்கை வருமாறு:உலகத் தொழிலாளர்களின் பெருமைக்குரிய ஒற்றுமைத் திருநாளான மே தினத்தில், தமிழகத்தின் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் புரட்சிகரமான வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம். உலக மக்களுக்கு, குறிப்பாகதொழிலாளர்களுக்கு நெருக்கடி சூழ்ந்துள்ள இவ்வேளையில், அதை வெற்றிகரமாகக் கடந்து செல்வதற்கான விரிவடைந்த ஒற்றுமையை உருவாக்கவும், கட்டமைந்த உறுதிமிக்க போராட்டங்கள் வலுப்பெறவும்,  இந்த 2021 ஆம் ஆண்டின் மே தினம் வழிகாட்டட்டும்.

சென்ற ஆண்டில் தொடங்கிய கொரோனா பெருந்தொற்று, மனித குலத்தை ஆட்டிப்படைத்தது. மீண்டும்இரண்டாவது அலை குரூரமாக உயர்ந்து அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. நமது அருமையான தலைவர்களையும், ஊழியர்களையும்  இந்த பெருந்தொற்று பறித்துச் சென்றது. அவர்களுக்கும், உலகம் முழுவதிலும் இதனால்மரணமடைந்த லட்சக்கணக்கான மக்களுக்கும் தமிழக தொழிலாளி வர்க்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த அஞ்சலி செலுத்துகிறோம்.

தலை வணங்குகிறோம்
உலக மக்கள் அனைவருக்கும் சுகாதாரமான வாழ்க்கை, பணியிடப் பாதுகாப்பு, தரமான உணவு, குடிநீர்,குழந்தைகளுக்கு கல்வி, விரிவான தரமான விலையற்ற பொது மருத்துவ சேவை ஆகியவை கிடைக்க வேண்டியதன் அவசியத்தை இந்த பெருந்தொற்று அழுத்தமாக எடுத்துரைத்துள்ளது. இவற்றை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கைகளை எழுப்பியும்,  பொது முடக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு, மத்திய - மாநில அரசுகள் எடுத்தமக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்தும், இந்த கொரோனா காலத்திலும்  ஏராளமான போராட்டங்களில் நமது தோழர்கள் இறங்கினார்கள். ஒவ்வொரு வீட்டிலும், தெரு முனைகளிலும் உரிமை முழக்கங்களை எழுப்பினார்கள். இதற்காக தமிழக அரசு போட்டுள்ள வழக்குகளையும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பெருமைக்குரிய வீரர்களுக்கு நமது வணக்கத்தையும் பாராட்டுகளையும் உரித்தாக்குகிறோம்.

பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுவிடாமல் தடுக்க, மருத்துவர்கள், செவிலியர்கள்,  மருத்துவப் பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள், உள்ளாட்சி ஊழியர்கள், போக்குவரத்துப் பணியாளர்கள் உள்ளிட்டோர் தமது உயிரைப்பணயம் வைத்து பொதுமக்களுக்கு உயரிய பணியாற்றியிருக்கிறார்கள். உறவுகளும் நட்புகளும் வேலையை விட்டுவருமாறு வலியுறுத்திய போதிலும், தினக்கூலி தற்காலிக தொழிலாளர்கள் உள்ளிட்ட ஒரு தொழிலாளி கூட களத்தைவிட்டு நீங்க மறுத்து சேவையாற்றினர். அந்த உழைப்பாளிகளின் உன்னத அர்ப்பணிப்பு உணர்வுக்கும், தன்னல மறுப்புக்கும் தலை வணங்குகிறோம்.உற்பத்தி முடங்கி, வேலை இழந்து, உயிருக்கு அஞ்சியிருந்த நெருக்கடியிலும் கூட முதலாளித்துவம் தனது குரூர முகத்தைக் காட்டியது. அம்பானி, அதானி உள்ளிட்ட உள்நாட்டு, அயல்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபம், சாதாரண காலத்தைக் காட்டிலும் இந்த காலத்தில் கூடுதலாக அதிகரித்துள்ளது.

பெரு லாப வேட்டை
கொரோனாவுக்கு தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பதை பெருலாப வேட்டையாகக் கருதி, பன்னாட்டு நிறுவனங்கள் அலைமோதின.  இந்தியாவில் இரண்டு தடுப்பூசி மருந்துகள்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பெரும் பாதிப்பில் உலகிலேயே இரண்டாவது, மூன்றாவது இடத்தை வகித்த, மக்கள் தொகை அதிகமுள்ள இந்தியா தடுப்பூசி செலுத்துவதில் எட்டாவது, ஒன்பதாவது இடத்தில் பின்தங்கியுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி மருந்துகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. உள்நாட்டில் மருந்துக்கு பற்றாக்குறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் நலன் காக்க வேண்டிய அரசு, தடுப்பூசி மருந்துகளை தனியாரிடம் வாங்கிக் கொள்ளுமாறு கூறி கை விரிக்கிறது. கார்ப்பரேட்நிறுவனங்களுக்கு சாதகமாக மத்திய அரசின் கொள்கை தடுப்பூசி விலை மடமடவென உயர்வதற்கு வழி வகுத்திருக்கிறது. ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உள்நாட்டின் மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கும்போது, ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மக்கள் உயிரைக் காப்பாற்றும் நோக்கம் இல்லாமல், எல்லாமே பெருலாபம் ஈட்டுவதற்கான வாய்ப்பாக  மடைமாற்றப்படுகின்றன.  தன் சகமனிதர்களின் உயிர் இழந்த உடல்களை மானுடம் எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில், இந்த லாப வேட்டை சகிக்க முடியாததாக இருக்கிறது.

இவ்வளவு பெரிய நாடான இந்தியாவுக்கு தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்வதற்கான உரிமம், இரண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே தரப்பட்டுள்ளது வியப்பளிக்கிறது. நீலகிரி பாஸ்டியர் இன்ஸ்டிடியூட், கிண்டி கிங் இன்ஸ்டிடியூட், பிசிஜி தடுப்பூசி நிறுவனம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்ய துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். செங்கல்பட்டில் உற்பத்திக்கு ஆயத்த நிலையில்உள்ள மருந்து நிறுவனத்தை உடனே செயல்படுத்த வேண்டும். இந்தியா உட்பட உலக மக்கள் அனைவருக்கும் முற்றிலும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடவேண்டும் என்பதே உலகத் தொழிற்சங்க சம்மேளனம் வைத்துள்ள கோரிக்கையாகும்.

முடங்கிய வாழ்க்கை
எந்த ஆயத்தமும் இல்லாமல், சென்ற ஆண்டில் மத்திய அரசு பொறுப்பற்று அறிவித்த பொது முடக்கத்தால் இந்திய மக்கள், குறிப்பாக உழைத்து உணவை ஈட்டும் கோடிக்கணக்கான தொழிலாளர் குடும்பங்கள், முன் கண்டறியாத அவல வாழ்க்கையை அனுபவித்தன. துரிதவேகத்தில் செல்லும் போக்குவரத்து வாகனங்கள், ரயில்கள்பல லட்சக்கணக்கில் இருக்கும் நாட்டில், பல நூறு, ஆயிரம்கிலோ மீட்டர் தூரங்களை காலால் நடந்தே கடக்க வேண்டியதுயரம் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர் குடும்பங்களுக்கு நேர்ந்தது கண் கொண்டு பார்க்க முடியாத வேதனையாகும். இவர்களைக் கூட மத்திய மாநிலஅரசுகள் தண்டித்தன; தடியடி நடத்தின. இரக்கமற்று மத்தியமந்திரிகள் இவர்களைக் கிண்டலும் செய்தார்கள்.நீடித்த பொது முடக்கம், சிறு, குறு, நடுத்தரத் தொழில்நிறுவனங்களை இனி இயங்க இயலாதவாறு மூடிவிட்டது. ஆறு கோடிப் பேருக்கு மேல் வேலை இழந்து விட்டனர். இதையே காரணமாகக் கொண்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் தமது நிரந்தர தொழிலாளர்களை வேலையை விட்டு வெளியேற்றின. வேலை இழந்த தொழிலாளர்களின் கையறு நிலையை பயன்படுத்தி, உழைப்பை ஒட்டச் சுரண்டி சம்பளத் தொகையை பல மடங்கு குறைத்தன.

இந்தப் பின்னணியில், இந்திய தொழிலாளர்கள் 150 ஆண்டு காலமாக போராடி வென்றெடுத்த 44 தொழிலாளர் சட்டங்களை மத்திய அரசு வெட்டிக் குறைத்து 4 சட்டத்தொகுப்புகளாக்கியது. விவசாயிகளை நிலத்தை விட்டுவிரட்டி, விவசாயத்தை கார்ப்பரேட்களிடம் ஒப்படைக்கும் சதியாக, மூன்று வேளாண் சட்டங்களையும் நிறைவேற்றியது. நாடாளுமன்ற ஜனநாயகத்தை சாகடித்து, விதிமுறைகளை மீறி சர்வாதிகார முறையில் இவை சட்டங்களாக்கப்பட்டன.‘வளர்ச்சியின் நாயகன்’ என தம்பட்டம் அடித்து ஆட்சியைப் பிடித்த மோடியின் தவறான பொருளாதார கொள்கைகளால், நாடு இன்று கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆட்பட்டிருக்கிறது. இதிலிருந்து மீள வழி தெரியாமல், விடுதலை அடைந்த நாளிலிருந்து இந்திய மக்களின் பொதுச் சொத்தாக உருவாக்கப்பட்டிருந்த பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக மோடி அரசு விற்றுக் கொண்டிருக்கிறது. மத்திய அரசுக்கு பெரும் லாபப் பங்கீடும் தந்து, முறையாக வரி செலுத்தி வந்த பொதுத்துறை நிறுவனங்கள் ஒவ்வொன்றாக விற்கப்பட்டு வருகின்றன. பொன் முட்டையிடும் வாத்தை அறுத்து பார்த்த அறிவாளி போல, மோடி அரசு பொதுச்சொத்தை சூறையாடி வருகிறது.

கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சாதகமாக சட்டங்களை திருத்தியமைத்து, மிகப் பெருமளவுக்கு வங்கிக் கடன்களை தந்து, வரி குறைப்பு செய்து, சலுகைகளை வாரி வழங்கி, ஒரு சில இந்திய  கோடீஸ்வரர்கள் உலகப் பெரும் பணக்காரர்பட்டியலில் இடம் பெற மோடி அரசு வழி செய்திருக்கிறது. அதே நேரத்தில் உலகின் மிக அதிகமான மக்கள் கடும் பட்டினியில் உள்ள 15 நாடுகளின் பட்டியலில்  இந்தியாவும் இடம் பெற்றிருப்பது, இந்திய மக்களின் வயிற்றில் அடித்து இந்த கோடீஸ்வரர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது.  

விண்ணை முட்டும்  விலைவாசி உயர்வு
கட்டுக்கடங்காமல் உயரும் விலைவாசியால் மக்களின் வாழ்க்கை அழிக்கப்பட்டுவருகிறது. கல்வியும், மருத்துவமும் வணிக மயமாக்கப்பட்டு மக்களின் கைக்கு எட்டாத உயரத்துக்கு சென்றுவிட்டன. நீட் போன்ற செயற்கையான வடிகட்டும் முறைகளால்,  சாதாரண குடும்பங்களில் இருந்து வந்த மாணவர்களுக்கு உயர்கல்வி மறுக்கப்படுகிறது. ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, நலிவடைந்த மக்கள் பகுதி, சமூக பொருளாதார மேம்பாடு அடைவது திட்டமிட்டு தடுக்கப்படுகிறது.பிரச்சனைகளை திசை திருப்புவதற்காக, மதவெறியையும் சாதி வெறியையும் தூண்டி, மக்களை பாரதிய ஜனதாபிளவுபடுத்தி வருகிறது. இந்த வெட்கங்கெட்ட செயலை சோசியல் இன்ஜினியரிங் என்று அதைப் பெருமையாகவேறு சொல்லிக் கொள்கிறது. அரசை கண்காணிப்பதற்காக இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கி வைத்த நீதிமன்றங்கள், கணக்கு தணிக்கை அமைப்புகள், புலனாய்வுநிறுவனங்கள் உள்ளிட்டவற்றை வெறும் பொம்மைகளாக பாரதிய ஜனதா அரசு மாற்றிவிட்டது. ஊடகங்கள் குரல்எழுப்ப முடியாமல் அடக்கப்பட்டு இருக்கின்றன. உழைக்கும்மக்களின் துயரங்களும் உரிமைகளுக்கான அவர்களது முழக்கமும் வெளியே தெரிந்து விடாமல் மறைக்கப்பட்டு வருகின்றன.இவற்றின் விளைவாக  தமிழக மக்கள் பாரதிய ஜனதா மீதும் அதன் தனிப்பெரும் தலைவரான பிரதமர் மோடி மீதும் வெறுப்பும் கசப்பும் அடைந்துள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தலில் சொந்த கட்சி வேட்பாளர்கள் கூட மோடி படத்தை போட்டு பரப்புரை செய்ய முடியாத அழுத்தத்தை தமிழக மக்கள் பாரதிய ஜனதாவுக்கு தந்திருக்கின்றனர்.

வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தினால், வாக்கு எண்ணிக்கை முடிக்க மூன்று நாட்கள் ஆகிவிடும் என்று காரணம் சொல்லி மறுத்தார்கள். ஆனால், நான்கு மணி நேரத்தில் வாக்கு எண்ணிக்கை முடிக்கக்கூடிய நவீன எந்திரங்களில் பதிந்த வாக்குகளை, ஏறத்தாழ ஒரு மாதத்திற்கும் மேலாக அடை காத்து வருகிறார்கள்.உழவர்களையும், உழைக்கும் மக்களையும் பொருட்டாகக் கருதாமல் மோடி அரசுக்கு வால் பிடிப்பதையே வாழ்வின் கடமையாகக் கொண்டிருந்த எடப்பாடி பழனிச்சாமியின் ஆடம்பர, அலங்கார தர்பார் முடிவுக்கு வந்திருக்கிறது. மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும் என்பதை மக்களின் கருத்துக்கள் உறுதிப்படுத்துகின்றன.

ஒற்றுமை எனும் வலிய ஆயுதம்
தொழிலாளி வர்க்க அரசியலை உயிர் மூச்சாகக் கொண்ட, நம்முடைய 12 தோழர்கள், இந்த சட்டப் பேரவைத்தேர்தல் களத்தில் நிற்கிறார்கள். சென்ற ஐந்து ஆண்டுகள்போலல்லாது, நமது போராட்ட குரல்கள், சட்டப்பேரவையில் சுருதி குறையாது எதிரொலிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

தொழிலாளர் பிரச்சனைகளில், ஒரு ‘மயான அமைதி’யை ஏற்படுத்த மோடி - எடப்பாடி அரசுகள் முயற்சித்தன. பாறையிலும் வேர்விடும் அரச மரம் போல, அந்த முயற்சிகளை தொழிலாளர்கள் போராடி முறியடித்து வந்துள்ளனர். ஆழ்நெருக்கடிக்கு ஆட்பட்டுள்ள முதலாளித்துவம், உயிர் பிழைப்பதற்காக தனது நெருக்கடிகளை எல்லாம் தொழிலாளர்கள் தலை மீது சுமத்த முயற்சிக்கிறது.எந்த வலிய முற்றுகையையும் உடைத்தெறிய வல்ல ஒற்றுமை என்னும் ஆயுதம் நம் கைகளில் இருக்கிறது.

மென்மேலும் ஒன்றுபடுவோம்! வர்க்க அரசியலைக் கட்டுவோம்! 
உழைப்பவரை வெல்லும் சக்தி ஒருவருக்கும் கிடையாதுஎன்பதை நிலைநாட்டுவோம்!

‘ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை’ 

என்ற வள்ளுவர் வாக்கை நெஞ்சில் ஏந்துவோம். சோர்வு இல்லாத ஊக்கத்துடன் நாம் உழைக்கும் போது,ஆக்கமானது தானே நாம் உள்ள இடத்திற்கு வழிகேட்டுக்கொண்டு வந்து சேரும்.இந்த வேளையில் அமெரிக்க நெருக்கடிகளுக்கு ஈடுகொடுத்து, உலகத்துக்கே இலவச மருத்துவம் தந்த வீரஞ்செறிந்த கியூபா வென்று நிலை பெற வாழ்த்துவோம்!இஸ்ரேலின் முரட்டு பிடியிலிருந்து பாலஸ்தீனம் விடுதலை பெற குரல்கொடுப்போம்! வெனிசுலா, சிரியா,லெபனான் மக்களுக்கு நமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவோம்! ஏகாதிபத்திய ஒடுக்குமுறைகளை உடைத்தெறிந்து, சுதந்திரமான, நியாயமான, ஜனநாயக உலகை நிலைநாட்ட உறுதி ஏற்போம்! இந்த ஆண்டில் உலக தொழிற்சங்க சம்மேளனம் (WFTU) நடத்துகிற உலக தொழிற்சங்கப் பேராயம் வெற்றி பெறத் துணை நிற்போம்!

நமது சர்வதேச சகோதரர்களோடு கரம் கோர்ப்போம்! இந்தியா முழுமையிலும் உள்ள கரத்தாலும் கருத்தாலும் உழைக்கும் மக்கள், விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் எல்லோரோடும், ஒரு புதிய இந்தியாவை படைக்கும் அணியாக ஒன்று சேர்வோம்!

தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக!

மே தினம் நீடூழி வாழ்க!