articles

img

விவசாயிகளின் உரிமைகளை மீட்டெடுக்க ஒன்றிணைவோம்! - கே.பி.பெருமாள்

விவசாயிகளின் உரிமைகளை மீட்டெடுக்க ஒன்றிணைவோம்!

மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக இந்திய  விவசாயிகள் 2019 ஆம் ஆண்டு முதல் போராட்டங் களைத் தொடங்கினர். இந்தக் கார்ப்பரேட் சார்புச் சட்டங்கள் இந்திய விவசாயிகளுக்கு எதிரானவை என்ற உறுதியான நிலைப்பாட்டுடன், 500-க்கும்  மேற்பட்ட விவசாயச் சங்கங்களைச் சேர்ந்த லட்சக் கணக்கான விவசாயிகள் ‘டெல்லி சலோ’ பேரணியை 2020, நவம்பர் 26 அன்று தொடங்கினர். பஞ்சாப்,  ஹரியானா, மேற்கு உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான்  உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வந்த விவசாயி கள், தில்லியை நோக்கிச் சென்றபோது, காவல்துறை யினராலும் துணை ராணுவப் படைகளாலும் தலைநகருக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால், விவசாயிகள் சிங்கு, திக்ரி, காஜிப்பூர் போன்ற எல்லைகளில் முகாமிட்டு 382 நாட்கள் தொடர் போராட்டத்தை நடத்தினர்.

பல கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, விவசாயிகளின் உறுதியான போராட்டத்தின் விளை வாக, ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் முன் மொழிந்த மூன்று வேளாண் சட்டங்களையும்  திரும்பப் பெற்றது. இதனையொட்டி, ஒன்றிய அரசு மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி (Samyukt Kisan Morcha) தலைவர்களுக்கிடையே 2021, டிசம்பர்  9 அன்று ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு, பல்வேறு முக்கியக் கோரிக்கைகள் ஏற்கப்படுவதாக உறுதி யளிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

நிறைவேறாத வாக்குறுதிகளும் தொடரும் போராட்டமும்

ஆனால், ஒன்றிய மோடி அரசு ஐக்கிய விவசாயி கள் முன்னணியுடன் போட்ட ஒப்பந்தத்தில் குறிப்பி டப்பட்ட எந்தவொரு கோரிக்கையையும் இன்றுவரை நிறைவேற்றவில்லை. இது, விவசாயிகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

2020 நவம்பர் 26 அன்று தொடங்கிய ‘டெல்லி சலோ’ பேரணியை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளில் ஒன்றிய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் மற்றும் தொழி லாளர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 2025 நவம்பர் 26 என்பது ஐந்தாவது ஆண்டாகும்.  அன்றைய தினம் நாடு முழுவதும் மாநில மற்றும்  மாவட்டத் தலைநகரங்கள், கிராமங்கள் எனப் பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை நடத்திட அக்டோபர் 27 கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள், நடைபயணங்கள், சைக்கிள் பிரச்சாரங்கள், தெருமுனைக் கூட்டங்கள் மற்றும் துண்டுப் பிரசுரம் விநியோகம் போன்ற வடிவங்களை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தின் இயக்க முக்கிய கோரிக்கைகள்

ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து முன்வைக்கும் முக்கியக் கோரிக்கைகள்:

விவசாயிகளின் நலன்கள்

 குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP): சி2 + 50% என்ற அடிப்படையில் எம்.எஸ்.பி-க்கு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றுதல். எழுத்துப்பூர்வமான உத்தர வாதத்தை ஒன்றிய அரசு உடனடியாகச் செயல் படுத்த வேண்டும்.

கொள்முதல்: அனைத்து மாநிலங்களிலும் அரசு மண்டிகள்/சந்தைகள் திறக்கப்பட்டு கொள்முதல் மற்றும் விற்பனை செய்யப்பட வேண்டும். நெல் கொள்முதலில் ஈரப்பத வரம்பை 17% இலிருந்து 22% ஆக உயர்த்த வேண்டும்.

கடன் தள்ளுபடி: விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்குக் கடன் தள்ளுபடி திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும். வட்டி விகிதத்தைக் கட்டுப்படுத்தவும், தனியார் சுரண்டலைத் தடுக்கவும்,  வட்டி இல்லாத கடன் திட்டத்தைச் செயல்படுத்த ரிசர்வ் வங்கியின் உபரியை நபார்டு வங்கிக்கு மாற்றுதல்.

காப்பீடு: தோல்வியடைந்த பிரதமரின் ஃபசல் பீமா யோஜனாவை ரத்து செய்து, எல்.ஐ.சி போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் பயிர்  மற்றும் கால்நடைகளுக்கான காப்பீட்டு நிறுவனத்தை ஏற்படுத்துதல்.

உர மானியம்: ஒன்றிய பட்ஜெட்டில் குறைக்கப்பட்ட ₹87,000 கோடி உர மானியத்தை மீண்டும் வழங்கிட வேண்டும்.

நிலச் சீர்திருத்தம்: குத்தகை விவசாயிகளைப் பதிவு செய்தல், அனைத்து நிலமற்ற குடும்பங்களுக்கும் சாகுபடி நிலம் வழங்குதல், வீடு இல்லாத குடும்பங்களுக்கு வீடு வழங்குதல்.

தொழிலாளர் மற்றும் பொதுத்துறை நலன்கள்

தொழிலாளர் சட்டங்கள்: நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை ரத்து செய்து, குறைந்தபட்ச ஊதியத்திற்கான உரிமையைப் பாதுகாக்க வேண்டும். வேலைவாய்ப்பு: கிராமப்புற வேலைத் திட்டத்தை (100 நாள் வேலை) விவசாயம் மற்றும் பால் பண்ணை தொழிலுடன் இணைத்து, 200 நாட்கள் வேலை மற்றும் ₹700 கூலி ஆகியவற்றை உறுதி செய்திடல். அரசுத் துறை: தற்காலிக, அவுட்சோர்சிங், ஒப்பந்த வேலைகளைத் தவிர்த்து, ஆட்சேர்ப்புத் தடையை நீக்கி, அரசு மற்றும் பொதுத்துறையில் உள்ள 65 லட்சம் காலியிடங்களில் நியமனங்களைச் செய்திடவும், நிரந்தர வேலைவாய்ப்பைப் பாதுகாத்திடவும் வேண்டும்.  ஓய்வூதியம்: பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ₹10,000 முதியோர் ஓய்வூதியம் வழங்க வேண்டும். தனியார்மயமாக்கல்: மின்சாரம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மய மாக்குவதை நிறுத்த வேண்டும். ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்தக் கூடாது. மின்சார திருத்த மசோதா 2025-ஐ ரத்து செய்திடல்.

சமூக நீதி மற்றும் இறையாண்மை

இயற்கை வளங்கள்: வன உரிமைச் சட்டம் 2006 மற்றும் பெசா (PESA) சட்டம் 1996 ஆகியவற்றைச் செயல்படுத்தி, இயற்கை வளங்கள் மீதான பழங்குடியினரின் உரிமைகளைப் பாதுகாக்கவும், நீர், நிலம், காடு மற்றும் கனிம வளங்களை பெரு  நிறுவனங்கள் கையகப்படுத்துவதைத் தடுத்திடவும். இடஒதுக்கீடு: தனியார்மயமாக்கலை நிறுத்தி, இடஒதுக்கீட்டைப் பாதுகாத்திடவும், பட்டியல், பழங்குடி, இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கான சமூக இடஒதுக்கீட்டை அமல்படுத்திடவும். சகிப்புத்தன்மை: மதச்சார்பற்ற ஒற்றுமையை, குறிப்பாக இந்து-முஸ்லிம் ஒற்றுமையைப் பாதுகாக்க ஒரு மக்கள் இயக்கத்தை ஏற்படுத்திடவும். பாதுகாப்பு: பெண்கள், தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டு வர, தடுப்பு சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இத்தகைய உரிமைக் கோரிக்கைகளை முன்வைத்து, நாடு முழுவதும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து நவம்பர் 26 அன்று மாபெரும் போராட்டத்தை நடத்தத் தீர்மானித்துள்ளன.

தமிழகத்தில் உள்ள உழைப்பாளி மக்கள், ஏழை-எளிய சிறு, குறு விவசாயிகள் மற்றும் நடுத்தர  மக்கள் இந்தப் போராட்டத்தில் பெரிய அளவில் பங்கேற்பது காலத்தின் கட்டாயம். அப்போதுதான் நாம் இழந்த அல்லது இழக்கப் போகும் உரிமைகளை மீட்டெடுக்க முடியும்.

ஒன்றிணைவோம்! போராட்டத்தை வெற்றி பெறச் செய்வோம்!