articles

img

அரசு உதவி பெறும் கல்லூரிகளைப் பாதுகாக்க களமிறங்குவோம் - பேரா. அ.தி.செந்தாமரைகண்ணன்

அரசு உதவி பெறும் கல்லூரிகளைப் பாதுகாக்க களமிறங்குவோம்

தமிழ்நாடு அரசு சட்டமன்றக் கூட்டத் தொடரில் நிறைவேற்றியுள்ள தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டியதன் அவசியத்தை அரசு உணர வேண்டும். இந்தியாவில் உயர்கல்வி பெறும் மாணவர்களின் சராசரியைவிடத் தமிழ்நாட்டில் உயர்கல்வி பெறும் மாணவர்களின் சராசரியானது மிக அதிகமாக உள்ளது. இதற்கான அடிப்படைக் காரணங்களைத் தெரிந்துகொள்ளும்போதுதான், இச்சட்டத் திருத்தம் தமிழ்நாட்டுக்கு எவ்வளவு பேராபத்தாக முடியும் என்பதை உணர முடியும். தமிழ்நாட்டில் உயர்கல்வி வளர்ச்சி: அடிப்படைத் தூண்கள் தமிழ்நாட்டில் நவீன, அறிவியல்பூர்வமான கல்வி மீதான அக்கறையும் வளர்ச்சியும் காலனிய காலத்திலேயே தொடங்கிவிட்டன. தமிழ்நாட்டு உயர்கல்வி வளர்ச்சியின் அடிக்கல்லாக நான்கு காரணிகளைக் குறிப்பிடலாம்

: w    சமயப் பணியாளர்கள், ஆர்வலர்களால் தொடங்கப்பட்ட பள்ளிகளும் கல்லூரிகளும். w    காலனிய அரசால் ஏற்படுத்தப்பட்ட பள்ளி, கல்லூரிகள். w    பொதுக்கல்விச் செயல்பாட்டிற்காக நிலம், கட்டிடம், பணம் எனப் பல முதலீடுகளைத் தானமாக அளித்த சமூக அக்கறை கொண்ட பெரியோர்களின் முயற்சி. w    நாட்டு மக்களின் கல்வி வளர்ச்சியில் ஆர்வம் கொண்டிருந்த அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சிகள். விடுதலைக்குப் பிந்தைய தமிழ்நாட்டில் ஆட்சி புரிந்த காமராசர், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என அனைவருமே உயர்கல்வியை வளர்த்தெடுத்துள்ளனர். இதன் பின்னால் எண்ணற்ற போராட்டங்களும் உள்ளன. இந்த வரலாற்றுத் தொடர்ச்சியின் மிக முக்கியமான கண்ணியாக வளர்ச்சியை உறுதிப்படுத்தியவைதான் அரசு உதவி- மானியம் பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகும். அரசு உதவி பெறும் கல்லூரிகள்: விடியலின் வரலாறு காலனிய காலம், குடியரசுக் காலம் எனும் இரண்டிலும் அரசுக் கல்லூரிகளில் மிகக் குறைந்த கட்டணமே உண்டு, ஆசிரியர்களுக்கும் அலுவலர்களுக்கும் நிரந்தரமான ஊதியம், பணிப் பாதுகாப்பு ஆகியவை இருந்தன. இதனால் ஆரோக்கி யமான கல்விச் சூழல் நிலவியது. சமூக சேவை நோக்கில் தொடங்கப்பட்ட தனியார் கல்லூரிகளில், காலப்போக்கில் ஆசிரியர்களுக்குப் போதிய ஊதியம்  வழங்க முடியாத நிலை, சேவை நோக்கத்தைக் கைவிட்டு லாப நோக்கை முதன்மைப்படுத்திய நிலை போன்ற பிரச்சினைகள் எழுந்தன. இது உயர்கல்வி வளர்ச்சிக்குத் தடையாக மாறியது. இந்தச் சூழலில்தான் 1970களில் மதுரையில் தனியார் கல்லூரிப் பேராசிரியர்கள் ஒன்று திரண்டு மூட்டா (மதுரை காமராசர், மனோன்மணீயம் சுந்தர னார் பல்கலை. ஆசிரியர் மன்றம் - மூட்டா) என்னும் அமைப்பைத் தொடங்கிப் போராடத் தொடங்கி னர்.

ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள் எனும் கூட்டுப் போராட்டங்கள் வலுப்பெற்றன. இதன் காரணமாகத் தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் கல்லூரிகளில் பணிபுரியும்  ஆசிரியர், அலுவலர்களுக்கு முதன் முறையாகப் பணிப் பாதுகாப்பு, நிரந்தர ஊதியம் கிடைத்தது. இதனால், மாணவர்கள் தங்கள் கல்விக்காலம் முழு வதும் நிலையான ஆசிரியர்களைச் சந்தித்து ஆரோக்கியமான கல்விச் சூழலைப் பெற இயலும் நிலை உருவானது. 1970களுக்குப் பிறகு தனியார்கள் நடத்தி வந்த கல்லூரிகளுக்கு அரசு ஊதிய மானியம் வழங்கத் தொடங்கியதால், அவற்றின் மீதான அரசின் பிடிமானம் அதிகமானது. இதன் விளைவாக,  மாணவர் சேர்க்கை, ஆசிரியர், அலுவலர் நியமனம் ஆகியவற்றில் இட ஒதுக்கீடு மூலம் சமூக நீதி  முதன்முறையாக உறுதி செய்யப்பட்டது. தமிழ் நாட்டின் 69 சதவீத இட ஒதுக்கீட்டை நிலைநிறுத்த முடிந்தது. இதுவே இன்றும் தொடர்கிறது. தமிழ்நாட்டில் உயர்கல்வி வளர்ச்சியின் இரு அடிப்படைத் தூண்களாக, இரட்டைத் தண்ட வாளங்களாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களே விளங்கி வருகின்றன. அத னால்தான் ஏழை, எளிய மாணவர்களின் உயர்கல்வி பெறுவது இன்றும் சாத்தியமாகி வருகிறது. தனியார் பல்கலைக்கழகச் சட்டம்

: பேராபத்து இப்போது கொண்டு வரப்பட்டுள்ள சட்டம், பொதுமக்கள் பலருடைய தானம், நாட்டு மக்களின் வரிப்பணம், தமிழ்நாடு அரசு மானியம், யு.ஜி.சி. நிதி நல்கை ஆகியவற்றின் காரணமாக எழுந்து நிற்கும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களை முழுமையாகத் தனியருக்குச் சொந்தமாக மாற்றி விடும் நிலையை உருவாக்கியுள்ளது. அந்தக் கல்லூரிகள் பல்கலைக்கழகங்களாக மாறியவுடன் அரசின் மானியம் நிறுத்தப்பட்டுவிடும் எனச் சட்டம் தெளிவாகச் சொல்கிறது. அவ்வாறு மானியம் நிறுத்தப்பட்டவுடன், 69 சதவீத இடஒதுக்கீடு அடிப்ப டையிலான மாணவர் சேர்க்கை, ஆசிரியர், அலுவலர் நியமனம் அனைத்துமே இல்லாமல் போய்விடும். பொதுச்சொத்தை தனியார் சொத்தாக மடைமாற்றுவது... அரசு மானியம், யு.ஜி.சி. நிதிநல்கை மற்றும் பொதுமக்கள் தானத்தால் வளர்ந்துள்ள இந்தக் கல்வி நிறுவனங்கள், மானியம் நிறுத்தப்பட்டவுடன் தனியாருக்கே முழுச் சொந்தமாக மாறுவது என்பது,  பொதுச்சொத்தை தனியார் சொத்தாக மடைமாற்றும் செயல். இது எல்லோருக்கும் எல்லாம் என்பதைச் சாத்தியப்படுத்திக் கொண்டிருக்கும் அரசு உதவி பெறும் கல்லூரிகளை, உயர் வர்க்கத்திற்கு மட்டுமே உரியதாக மாற்றி, பெரும்பான்மையோரை கல்வியில் இருந்து விலக்கி வைக்க முனைகிறது.

அரசின் பொறுப்புத் துறப்பும் - விளைவுகளும் தமிழ்நாட்டில் உயர்கல்வியில் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு அடுத்தபடியாக மாநிலப்  பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றில் பெரு மளவில் இருப்பவை அரசுப் பல்கலைக்கழகங்களே. ஆனால், தமிழ்நாடு அரசானது தனது சொந்தப் பல்கலைக்கழகங்களுக்குத் தொடர்ந்து நிதி  வழங்கும் பொறுப்பிலிருந்து விலகி நிற்கிறது.  உதாரணமாக, மதுரை காமராசர் பல்கலைக்கழ கத்திற்கு 2007 ஆம் ஆண்டிலிருந்து 2023-2024 ஆம்  ஆண்டு வரை ஏறத்தாழ 300 கோடி ரூபாய் நிலுவைத் தொகை அரசால் தரப்படவில்லை. இப்படி பாரம்பரியமிக்க அரசுப் பல்கலைக்கழ கங்களுக்குப் போதிய நிதி வழங்காமல், உதவி பெறும் கல்லூரிகளைத் தனியார் பல்கலைக்கழ கங்களாக மாற்றும் முயற்சி, தனியார்மயமாக்கலின் கருத்தியலைக் கொண்ட தேசியக் கல்விக் கொள்கை 2020-ஐ தமிழ்நாட்டில் அமல்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகவே உள்ளது என்று கல்வியாளர்கள் கருதுகின்றனர். உயர்கல்வியில் தனக்குள்ள பொறுப்பைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதானது, அரசு உதவி  பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், பணிபுரி யும் ஆசிரியர், அலுவலர் வாழ்வை கேள்விக்கு உள்ளாக்குகிறது. இந்தக் கல்வி நிறுவனங்கள் இனிவரும் காலங்களில் எல்லோருக்கும் எல்லாம் என்பதை வழங்காது.

இது தமிழ்நாட்டின் உயர்கல்வி  வளர்ச்சியைப் பின்னோக்கி இழுத்துச் சென்றுவிடும். இச்சட்டம், ஒரு வகையில் கண்ணை விற்று சித்திரம் வாங்கும் செயலை ஒத்ததாகவும், வளர்ந்து  நிற்கும் ஆலமரத்தின் வேரில் வெந்நீர் ஊற்றும் செயலாகவுமே அமைந்துவிடும். இது தமிழ்நாட்டின் உயர்கல்வியின் மீது வன்மம் கொண்டவர்களின் ஆசையை எளிதாக்குகிறது. நமது கடமை எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக இந்தச்  சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாட்டின்  நலனில் அக்கறை கொண்ட சட்டமன்ற உறுப்பி னர்கள் அனைவரும் கட்சிப் பாகுபாடின்றி இதனை  வலியுறுத்த வேண்டும். 2008 ஆம் ஆண்டு இதே போன்ற சட்டத் திருத்தத்திற்கான மசோதாவை அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் கொண்டு வந்தபோது, அனைவரின் எதிர்ப்பின்  காரணமாக அதைத் திரும்பப் பெற்றார். அந்த வகை யில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுவதே சாலச் சிறந்ததாகும். நூற்றாண்டாகப் பல கோடிப் பேரின் முயற்சி யாலும் கூட்டுச் செயற்பாட்டாலும் வளர்ந்து நிற்கும் உயர்கல்வியை வீழ்ச்சி அடையாமல் பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியைப் பாதுகாக்க, தமிழ்நாடு உறுதியுடன் போராடும், வெல்லும். கட்டுரையாளர் : பொதுச்செயலாளர், மூட்டா (MUTA)