விவசாய நெருக்கடியிலிருந்து நாகரீக நெருக்கடி வரை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் விதித்த மிரட்டல் வரியால் இந்தியாவின் விவசாயம் என்ன நிலைக்கு ஆளாகிக்கொண்டி ருக்கிறது என்பதைப் பார்ப்போம். டிரம்ப் விதித்த வரிகளால் தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இறால் விவசாயிகள் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். வேலூரில் தோல் தொழில் ஒட்டுமொத்தமாக மூடப்படும் நிலைக்கு வந்துள்ளது. இந்த மிரட்டல் வரிகள், ஜவுளி, ஆயத்த ஆடைகள் மீது பிரதானமாகப் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பருத்தி ஆடைகள் மீது 50% வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளில் முக்கால்வாசி பேர் பருத்தி விவசாயிகள் எனும் உண்மையை நாம் அறியும்போது, இந்த வரி ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை உணர முடியும். பருத்தி இறக்குமதி மீதான வரிவிலக்கு: மோடி அரசின் கோழைத்தனம் இந்த மிரட்டல் வரிப் பிரச்சினையை மோடி தலைமையிலான அரசு எவ்வளவு கோழைத் தனமாகக் கையாள்கிறது என்ற உண்மையை இந்திய ஊடகங்கள் மறைத்துவிட்டன. வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் பருத்தி மீது விதிக்கப்பட்டிருந்த 11% வரியை மத்திய அரசாங்கம் ஒரு மாத காலத்திற்குச் சத்தமில்லாமல் நீக்கியது. இப்போது, இந்த வரி விலக்கை டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளது. விவசாயிகள் தற்கொலைகள் பிரச்சனை துவங்கிய தொடக்க காலத்தில், பருத்தி மீதான வரியை அன்றைய மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார் பூஜ்ஜியமாகத்தான் வைத்திருந்தார். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகே 5% இறக்குமதி வரி, பிறகு 11% வரி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வரிவிலக்கு நீட்டிப்பு நம் விவசாயி களைப் கடுமையாகப் பாதிக்கும். நீண்டகாலப் போராட்டத்திற்குப் பிறகு தற்போதுதான் முதல்முறையாக ஒரு குவிண்டால் பருத்திக்கு ரூபாய் 8,125 என்ற குறைந்தபட்ச ஆதாரவிலை (MSP) நமக்குக் கிடைத்துள்ளது. ஆனால், மகாராஷ்டிராவின் விவசாயிகளை நான் சந்தித்தபோது, அவர்கள் ஒரு குவிண்டா லுக்கு ரூபாய் 6,500-க்கு மேல் விலை பெற வில்லை என்றார்கள்.
உற்பத்திச் செலவைக் காட்டிலும் இது குறைவான விலையே. நிலைமை இப்படி இருக்க, இறக்குமதி வரி விலக்கிற்குப் பிறகு நம்முடைய பருத்தி விவசாயிகள் நிலை இனி என்னாகும் என்று நினைத்துப் பாருங்கள். இந்திய விவசாயத்தின் வீழ்ச்சி கடந்த 40-50 ஆண்டுகாலமாக இந்திய முதலாளித்துவமும், உலக முதலாளித்துவமும் இந்திய விவசாயத்தைத் தரமிறக்கிவிட்டன. 1974 ஆம் ஆண்டில் விதர்பா பகுதியைச் சேர்ந்த பருத்தி விவசாயி ஒருவரால் ஒரு குவிண்டால் பருத்தியை விற்று 10-12 கிராம் தங்கம் வாங்க முடிந்தது. இன்றைக்கு ஒரு விவசாயி இரண்டு குவிண்டால்கள் பருத்தி விற்றால் தான் 1 கிராம் தங்கம் வாங்க முடியும். வேண்டியுள்ளது. விவசாயிகளின் ஒட்டு மொத்த வாழ்க்கைத்தரம், சமூக அந்தஸ்து, பொருளாதாரம் எல்லாமே படுமோசமாகத் தர மிறக்கப்பட்டுவிட்டன. குறிப்பாக, இந்த நிலை 1991 ஆம் ஆண்டின் புதிய பொருளாதாரக் கொள்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டது. இடுபொருள் விலை உயர்வு 2003 ஆம் ஆண்டில் ஒரு ஏக்கர் பாசனம் செய்யப்படாத பருத்தி சாகுபடிக்கு ஆன செலவு ரூ. 2,500 முதல் ரூ. 4,000 வரைதான். ஆனால், பத்தாண்டில் பி.டி. பருத்தி வந்தபிறகு, பாசனம் செய்யப்படாத பருத்தி சாகுபடிக்கு ஆன செலவு ஏக்கருக்கு ரூ. 15,000-20,000 ஆக உயர்ந்தது.
பாசனம் செய்யப்பட்ட சாகு படிக்கு ஏக்கருக்கு ரூ. 48,000-50,000 வரை உயர்ந்தது. கிட்டத்தட்ட 7 மடங்கு வரை இடு பொருள் விலை உயர்ந்துள்ளது. இதே அள வில் விளைபொருளுக்கான ஆதாரவிலை எங்காவது உயர்ந்துள்ளதா? இல்லை. எனவே, டிரம்ப் மிரட்டல் வரி எல்லாம் வருவதற்கு வெகு காலம் முன்பாகவே, விவசாயிகளின் வாழ்க்கை க்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. சோயா விவசாயிகளின் கதி முன்பு பருத்தியால் நஷ்டமடைந்த விவசாயி கள் குறைந்த இடுபொருள் விலை இருக்கிறது என்று நம்பி சோயா சாகுபடிக்கு மாறினார்கள். இப்போது டிரம்ப் சீனா மீது வரி யுத்தத்தை அறி வித்துள்ளார். சீனா அமெரிக்கப் பொருட்கள் மீது 45% வரி விதித்துள்ளதுடன், சோயாபீன் உள்ளிட்ட சில பொருட்களின் இறக்குமதியை அமெரிக்காவிலிருந்து முற்றிலும் தடைசெய்து விட்டது. முன்பு 13-16 பில்லியன் டாலர் மதிப்பி லான சோயா அமெரிக்காவில் இருந்து சீனா விற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இப்போது சீனா அர்ஜென்டினா, பிரேசிலில் இருந்து சோயா வாங்குகிறது.
இதனால் அமெரிக்கச் சோயா விவசாயிகள் மிக மோச மாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இப்போது 16 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்கச் சோயா எங்கு இறக்குமதி செய்யப்படும்? இந்தக் கேள்வியை நான் நமது சோயா விவசாயி களிடம் கேட்டபோது, “எங்கள் தலையில்தான் கொட்டப்படும்” என்று சொன்னார்கள். எனவே, இந்தியச் சோயா விவசாயிகள் உற்பத்தி செய்கிற சோயாவிற்கு என்ன கதி ஏற்படும் என்று நாம் ஊகிக்கலாம். மோடி அரசு, நம் உரிமைகளுக்காகச் சண்டையிடாமல், வாகன உற்பத்தி, மருந்து உள்ளிட்ட பிற துறைகளின் நலனை முன்னி றுத்திப் பேரம் பேசுவதற்கும், எச்1பி (H1B) விசா விவகாரத்திற்காகவும் 11% வரிவிலக்கு சலுகை யை டிரம்ப் நிர்வாகத்திற்குக் கொடுத்து, விவ சாயிகளின் நலன்களை விட்டுக்கொடுத்துள் ளது என்பதையே இது காட்டுகிறது. மீன்வளம் மற்றும் வர்த்தகப் பற்றாக்குறை டிரம்ப்பின் கொள்கை, மீனவ மக்கள், இறால் விவசாயிகளையும் கடுமையாகப் பாதிக்கிறது.
ஆந்திராவின் 80% கடல் உணவு அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஒரு மாதத்தில் இந்தியக் கடல் உணவு ஏற்றுமதி 43.8% வீழ்ச்சி அடைந்துள்ளது. இறால் ஏற்றுமதி 52% வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க வரி அறிவிக்கப்பட்ட பிறகு இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை மிக மோசமாக அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் $26.47 பில்லியன் டாலராக இருந்த வர்த்தகப் பற்றாக்குறை, அமெரிக்க வரி விதிப்புக்குப் பிறகு செப்டம்பர் மாதத்தில் $32.5 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது மிகமோசமான அதிகரிப்பு. 1990களில் புதிய பொருளாதாரக் கொள்கையை நாம் ஏற்றுக் கொண்டபோது வலியுறுத்தப்பட்ட ‘ஏற்றுமதி யால் விளையும் வளர்ச்சிப்பாதை’ என்கிற அணுகுமுறை, முதலாளித்துவ முறையில் ஒரு கட்டுக்கதை என்பதை டிரம்ப் நிரூபித்துவிட்டார். இந்தப் பாதிப்பிலிருந்து மீள இந்தியா செய்ய வேண்டியது என்ன? இந்தியா வாயை மூடிக்கொண்டு டிரம்ப் விதிப்பதை எல்லாம் ஏற்றுக்கொள்ளாமல், பதிலடி கொடுக்க வேண்டும்.
பிரேசில் அமெரிக்காவை எதிர்த்து வெற்றிபெற்றதை நாம் உதாரணமாகக் கொள்ள வேண்டும். ஏற்றுமதிக் கடன் வசதி: பிரேசில், அமெரிக்கா வரி விதித்தவுடன், வர்த்தகப் பிரி வினரைப் பாதுகாத்திட $6 பில்லியன் டாலர் ஏற்றுமதிக் கடன் வசதி நிதியை உடனடியாக உரு வாக்கியது. இந்த முறையில் நாம் நம்முடைய விவசாயிகளுக்கு உதவிக்கரம் நீட்டினால் எவ்வளவு பெரிய அழிவு தடுக்கப்படும்! அரசு கொள்முதல் உறுதி: நம் நாட்டின் விவ சாயிகள் இயக்கம் முன்வைக்கிற மற்றொரு பரிந்துரையை நாம் நிறைவேற்றலாம்: நாட்டில் விவசாயிகள் உற்பத்தி செய்கிற ஒவ்வொரு பருத்தி மூட்டையையும் இந்தியப் பருத்திக் கழ கம் குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்து விநியோகம் செய்ய லாம்.
கொள்முதல் உத்தரவாதம் இல்லாத குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் விவ சாயிகளுக்கு எந்தப் பலனும் அளிக்காது. உண்மையில், இந்த வழி பிரேசிலின் வழியைக் காட்டிலும் மிகுந்த பலனை நமக்களிக்கும். சாகுபடி நெருக்கடியிலிருந்து நாகரீக நெருக்கடி வரை கடந்த மூன்று தசாப்தங்களாகப் பணப்பயி ருக்கு நாம் மாறியுள்ளோம். 1998 ஆம் ஆண்டில் உத்சா பட்நாயக் முதன்முதலாக விவ சாய மந்தநிலை (agrarian depression) என்று குறிப்பிட்டார். 2000 ஆம் ஆண்டில் நான் விவ சாய நெருக்கடி (agrarian crisis) என்ற பதத்தைப் பயன்படுத்தினேன். இந்தச் சாகுபடி நெருக்கடிக்கு மூலகார ணம் நிறுவன கடனுதவி நிறுத்தம் ஆகும். மக்க ளுக்கு வழங்கப்பட வேண்டிய கடன்கள் அம்பானி, அதானிக்குக் கொடுக்கப்படுகின் றன. வாரக் கடன்களில் 75% கார்ப்பரேட் கடன்கள் தாம். விவசாயிகளின் வெளியேற்றம் உலகம் முழுக்க விவசாய மக்களின் எண்ணிக்கை வெகுவேகமாகக் குறைந்து வருகிறது.
1991-ல் இருந்து 2001 வரையிலான காலத்தில், விவசாயத்தை மட்டுமே முழு நேரப் பணியாகச் செய்துவந்த 72 லட்சம் விவ சாயிகள், விவசாயத்தை விட்டு வெளியேறி னார்கள். 2001-2011 மக்கள்தொகைக் கணக்கெடுப் பில் 77 லட்சம் மக்கள் வெளியேறினார்கள். 20 ஆண்டுகளில் 1.5 கோடி மக்கள் விவ சாயத்தை விட்டு வெளியேறினார்கள். இவர்களுக்கு என்ன வகையான மாற்று வேலைவாய்ப்பை நாம் உருவாக்கினோம்? நகர்ப்புறங்களில் வீட்டு வேலை, இரவுக் காவல் பணிக்குத்தானே இவர்களால் சேர முடிந்தது. இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் இதுதான் நிலைமை. ஐரோப்பிய யூனியனில் ஒவ்வொரு ஆண்டும் 3 லட்சத்து 53 ஏக்கர் விவசாய நிலங்கள் கைவிடப்படுகின்றன. இந்த நிலங்களை கார்ப்பரேட்டுகள்தான் எடுத்துக்கொள்கின்றன. அமெரிக்காவில் 99% விவசாயம் கார்ப்பரேட் மயமாகிவிட்டது.
நாகரீக நெருக்கடி ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டு காலமாக நாகரீகங்களின் அடிப்படையாக இருந்தது சிறு விவசாயிகள்தான். இன்றைக்குச் சிறு விவசாயிகளின் நிலங்கள் கார்ப்பரேட்டுகள் கைகளுக்கு மாறுகின்றன. அதனால், இன்றை க்கு உலகில் நடைபெறும் மிகப்பெரும் வர்க்கப் போராட்டமாக சிறு விவசாயிகள் கார்ப்பரேட் விவசாயத்தை எதிர்த்து நடத்தும் போராட்டம் திகழ்கிறது. விவசாயிகளின் டெல்லி போராட்டம் உலகின் மிக நீண்ட, மிகப் பெரிய ஜனநாயகப் போராட்டமாகத் திகழ்ந்தது. அந்தப் போராட்டத்தில் விவசாயிகள் தங்கள் எதிரிகள் யார் என்பதைத் தெளிவாக உணர்ந்திருந்தா ர்கள் – அவர்கள் அம்பானி, அதானிகளை எதிர்த்துத்தான் கோஷமிட்டார்கள்.
ஏகாதிபத்தியம் கார்ப்பரேட் அதிகாரத்தின் வாயிலாகத்தான் அமல்படுத்தப்படுகிறது. விவசாயச் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் எழுதப்படவில்லை; அம்பானி, அதானியின் போர்டு ரூம்களில் எழுதப்பட்டன. நம்முடைய எதிர்காலச் சந்ததியினர் விவசாயிகள் இல்லாத உலகில், நாகரீக நெருக்கடியில் வாழப்போகிறார்களா என்பதை நாம் சிந்திக்க வேண்டும், செயல்பட வேண்டும், நாகரீக நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தொகுப்பு : நர்மதாதேவி