மூலதனம் நூலைப் படிக்க ஜென்னி மார்க்ஸின் டிப்ஸ்
கார்ல் மார்க்ஸின் ‘மூலதனம்: பாகம் 1’ நூலை நீங்கள் ஏற்கனவே வாங்கியிருந்து, என்னைப் போலவே அதன் ஆரம்ப அத்தியாயங்களின் ‘இயங்கியல் நுட்பங்களில்’ சிக்கித் தவிப்பவர் என்றால், உங்களுக்கு என் ஆலோசனை இதுதான்: ‘மூலதனத்தின் ஆதித்திரட்டல்’ மற்றும் ‘நவீன காலனிய ஆதிக்கக் கோட்பாடு’ பற்றிய பகுதிகளை முதலில் படியுங்கள். இப்பகுதிகள் என்னைப் போலவே உங்களுக்கும் பெரும் மனநிறைவைத் தரும் என்று உறுதியாக நம்புகிறேன்.
தன்னை ‘சோஷலிச’ உலகம் என்று அழைத்துக்கொள்ளும் இன்றைய ‘பூர்ஷுவா’ உலகம் கூச்சலிட்டுக் கேட்கும் உடனடித் தீர்வுகள் ஏதும் மார்க்ஸிடம் இல்லை என்பது உண்மைதான். நம் பிளவுற்ற சமூகத்தின் ரத்தம் சொட்டும் காயங்களை ஆற்ற அவரிடம் மாத்திரைகளோ, களிம்புகளோ, கட்டுத்துணிகளோ இல்லை. ஆனால் எனக்கு ஒன்று தோன்றுகிறது: நவீன சமூகத்தின் வரலாற்று ரீதியான எழுச்சியையும் வளர்ச்சியையும் அடிப்படையாகக் கொண்டு, மிகத் துணிச்சலான முடிவுகள் உட்பட, அதன் விளைவுகளையும் நடைமுறைப் பயன்பாடுகளையும் அவர் மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார். புள்ளிவிவரங்கள் மற்றும் தர்க்கரீதியான வாதங்கள் மூலம், திகைத்துப்போன சாமானியனையும்கூட பின்வரும் சிக்கல்களின் தலைசுற்ற வைக்கும் உயரங்களுக்கு அழைத்துச் சென்றிருப்பது சாதாரண விஷயமல்ல: “புதிய சமுதாயத்தைக் கருத்தரித்துள்ள ஒவ்வொரு பழைய சமுதாயத்திற்கும் ‘வன்முறை’யே மருத்துவச்சியாக இருக்கிறது. அதுவே ஒரு பொருளாதார சக்தியாகவும் திகழ்கிறது... இன்று அமெரிக்காவில் எவ்விதப் பிறப்புச் சான்றிதழும் இன்றித் தோன்றும் பெரும் மூலதனம், நேற்று இங்கிலாந்தில் குழந்தைகளின் ரத்தத்தை மூலதனமாக்கியதன் விளைவே... பணம் ‘பிறக்கும்போதே ஒரு கன்னத்தில் ரத்தக் கறையோடு உலகிற்கு வருகிறதென்றால்’, மூலதனமோ தலை முதல் கால் வரை, ஒவ்வொரு நுண்துளையிலிருந்தும் ரத்தமும் சேறும் சொட்டச் சொட்ட வருகிறது.” அல்லது, “முதலாளித்துவத் தனியார் சொத்துடைமைக்கு சாவு மணி அடிக்கப்படுகிறது...” என்று தொடங்கி இறுதி வரை செல்லும் அந்த முழுப் பத்தியையும் குறிப்பிடலாம். இந்த எளிய உருக்கமிகு கருத்துகளால் நான் ஈர்க்கப்பட்டேன் என்பதையும், வரலாறு எனக்குப் பகல் வெளிச்சத்தைப் போலத் தெளிவாகியது என்பதையும் நான் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். - ஜொஹான் பிலிப் பெக்கருக்கு எழுதிய அக்டோபர்,1867 நாளிட்ட மடலில் ஜென்னி மார்க்ஸ்.
