articles

img

பொருளியல் அரங்கம் - க.சுவாமிநாதன்

பொருளியல்          அரங்கம்   -  க.சுவாமிநாதன்  

ஈரான் தெருக்களில் நடந்தேறும் எதிர்ப்பு இயக்கங்களை எவ்வாறு ஈரான் அணுக வேண்டும் என்ற விவாதம் முக்கியம் என்றாலும் ஈரான் பொருளாதாரத்தின் மூச்சை திணற வைத்த சில காரணிகளும்  முக்கியமானவை.  பொருளாதாரத் தடையால் பாதிக்கப்பட்ட உலக நாடுகளில் மிக அதிகமான தாக்குதலுக்கு ஆளாகி வந்திருப்பது ஈரான். இது 50 ஆண்டு தொடரும் கதை.  1979 இல் ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டு 12 பில்லியன் டாலர் (இன்றைய இந்திய ரூபாய் மதிப்பில் 1,08,000 கோடி) ஈரான் சொத்துக்கள் முடக்கப்பட்டன. 1995 இல் ஈரானின் ஹைட்ரோ கார்பன் துறையில் அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்யக்கூடாது என்று அன்றைய அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் தடைவிதித்தார். 2006 இல் ஐநா பாதுகாப்புக் கவுன்சில் ஈரான் அணு திட்டத்தின் காரணமாக கூடுதல் தடைகளை விதித்தது. 2019 இல் டிரம்பின் முதல் ஆட்சிக் காலத்தில் “இஸ்லாமிக் ரெவல்யூஷனரி கார்ட் கார்ப்ஸ்” என்கிற துணை நிறுவன அமைப்பு “அந்நிய தீவிரவாத அமைப்பு” என அறிவிக்கப்பட்டது. தற்போது உலகம் முழுவதும் முதலீடு செய்யப்பட்ட ஈரான் சொத்துக்கள் அநேகமாக முடக்கப்பட்டுள்ளன. இதனால் ஈரான் வர்த்தகம் செய்ய இயலாத நிலையில் வெளிநாடுகளும் நிறுவனங்களும் ஈரானில் முதலீடு செய்ய முடியாத நிலைமையும் உருவாக்கப்பட்டுள்ளது. இடையில் அமெரிக்காவிலிருந்த ஒபாமா நிர்வாகம் சில தளர்வுகளை தந்தாலும் அதை எல்லாம் டிரம்ப் முதல் ஆட்சிக் காலத்தில் ரத்து செய்துவிட்டார். ஐரோப்பிய நாடுகளும் இத்தாக்குதலில் இணைந்து கொண்டன. கடந்த ஜூன் மாதம் அமெரிக்க இஸ்ரேல் கூட்டு ராணுவத் தாக்குதலுக்கு ஈரான் ஆளாக்கப்பட்டது.  இந்த சூழலில் ஈரானின் ரியால் நாணயம் கடந்த டிசம்பரில் 16 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. ஜூன் மாத போர்க்காலத்திலிருந்து கணக்கிட்டால் 60% வீழ்ச்சியை ரியால் சந்தித்தது. உணவுப் பணவீக்கம் 72 சதவீதத்தை தொட்டுள்ளது. பொருளாதாரத் தடைகளால் ஏற்பட்டுள்ள வருமான இழப்பு பெரும் பற்றாக்குறைக்கு இட்டுச் சென்றுள்ளது.  இத்தகைய பொருளாதார நெருக்கடியை சந்திக்க ஈரான் அரசு வரிகளை உயர்த்தியும், உணவு மற்றும் எரிபொருள் மானியங்களை நீக்கியும் எடுத்த நடவடிக்கைகள் பொதுமக்களின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஈரான் வியாபாரிகள் களத்திற்கு வந்து அமைதியான முறையில் நடத்திய போராட்டம் அமெரிக்க இஸ்ரேல் தலையீடுகளால் பெரும் கலவரமாக மாற்றப்பட்டுள்ளதாகவும், மேலை நாடுகளின் உளவுத்துறை இப் போராட்டத்தை ஹைஜாக் செய்துவிட்டதாகவும் ஈரான் குற்றம் சாட்டுகிறது.  ஈரான் அரசு போராட்டத்திற்கு எதிராக எடுத்துள்ள நடவடிக்கைகளில் பெரும் உயிர்ப்பலிகள் நிகழ்ந்துள்ளதாக சர்வதேச ஊடகச் செய்திகள் கூறுகின்றன. 

ஐ.எல்.ஓ ஊதும்  அபாயச் சங்கு 

ஜனவரி 14, 2026 அன்று சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் (ILO) “வேலை வாய்ப்பு மற்றும் சமூகப் போக்குகள்” குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  உலகளாவிய வேலையின்மை 4.9 சதவீதமாகவே நீடிக்கிறது; அதாவது 18.6 கோடி மக்கள் வேலையின்றி உள்ளனர் என்கிறது அந்த அறிக்கை. இளைஞர் வேலையின்மை 2024 இல் 12.3 சதவீதம் எனில் 2025-இல் 12.4 சதவீதம் ஆகும். வேலை, கல்வி, பயிற்சி  மூன்றிலும் இல்லாத (NEET)  இளைஞர்களும் 19.9 லிருந்து 20 சதவீதமாக இதே காலத்தில் உயர்ந்துள்ளது. 25.7 கோடி இளைஞர்கள் வேலை, கல்வி, பயிற்சி (NEET) எதிலும் இல்லாமல் இருப்பது பேரவலம் ஆகும்.  கடுமையான வறுமை பற்றியும் அந்த அறிக்கை வெளியிட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சியை அளிப்பவை ஆகும். 28.4 கோடி தொழிலாளர்கள் கடுமையான வறுமைக்குள் சிக்கி இருப்பதாகக் கூறுகிறது. கடுமையான வறுமை எனில் ஒரு நாளைக்கு 3 அமெரிக்க டாலர்களுக்கு கீழே குறைவாக சம்பாதிப்பவர்கள் என்று பொருள். இன்னுமோர் தகவல்தான் ரத்த அழுத்தத்தை கன்னாபின்னா என்று உயர்த்துவது ஆகும். உலகம் முழுமையும் 200 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் முறைசாரா வேலை வாய்ப்புகளில் (Informal Employment) இருக்கிறார்கள் என்பதே. 2026 லிலும் வெளிச்சம் கண்ணுக்கு தெரியவில்லை. முறைசாரா வேலை வாய்ப்புகளில் (Informal Employment) இருப்போர் எண்ணிக்கை 210 கோடிகளாக உயருமென்கிறது அறிக்கை.  பாலின பேதமும் அறிக்கையால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தில் பெண்கள் ஆண்களை விட 24.2 சதவீதம் பின் தங்கியுள்ளனர். இளம் பெண்கள் வேலை, கல்வி, பயிற்சி (NEET) ஆகிய மூன்றிலும் இல்லாமை என்பது ஆண்களை ஒப்பிடும் போது 14.4 சதவீதம் அதிகம். 

டாவோஸ் நகரில் கூடுவது  “பில்லியனர் கிளப்”

சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் ஜனவரி 19, 2026 அன்று உலகப் பொருளாதார அமைப்பின் (World Economic Forum) கூட்டம் நடைபெற்றது. உலகப் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவது பற்றிய விவாதங்கள் அங்கு நடைபெறும் என்று வானத்திற்கும் பூமிக்கும் உலகம் முழுவதுமுள்ள பொருளாதார “சிந்தனைத் தொட்டிகள்” குதித்தாலும் அது உலகம் முழுக்க உள்ள “பில்லியனர் கிளப்” கூட்டமாகவே அமையப் போகிறது என்று விவரம் அறிந்தோர் சிரிக்கிறார்கள்.  இவர்கள் சுற்றுச் சூழல் பற்றி பேசுவார்கள். ஆனால் அங்கு வந்து சேருவதற்கு 1000 தனி ஜெட் விமானங்களை பயன்படுத்தப் போகிறார்கள். ஒரு ஜெட் விமானத்தின் வருகை ஒரு ஆண்டு முழுக்க ஓடும் காரின் கார்பன் உமிழ்வைப் போல 4 மடங்குகள் ஆகும்.  சமூக நல அம்சங்கள் பற்றி பேசுவார்கள். ஆனால் அந்த நிகழ்வுக்கு செய்யப்படும் ஆடம்பரச் செலவுகள், ஏற்பாடுகள் சாமானிய மக்களின் வரிப் பணத்தின் மீதுதான் கை வைக்கப் போகிறது. 5000 படை வீரர்களை, காவல் படையினரை அங்கு பணிக்கு நிறுத்தப் போகிறார்கள். இது 3.2 கோடி படுத்த படுக்கையாக உள்ள நோயாளிகளுக்கு தனி நர்சு நியமிக்கும் ஒரு ஆண்டு செலவை விட அதிகம்.  தேச நலன் பற்றி பேசுவார்கள். ஆனால் உண்மையில் அது “பில்லியனர் கிளப்” கூட்டம்தான். அதில் பங்கேற்கும் உறுப்பினர்கள் கட்டணம் இந்திய ரூபாய் மதிப்பில் 67.60 லட்சம். அதிலேயே பிரிமிய உறுப்பினர் எனில் ரூ. 6.76 கோடி செலுத்த வேண்டும். அப்போதுதான் உட்கார்ந்து பங்கேற்பதற்கு சேரும், டேபிளும் கிடைக்கும். உண்மையில் இதில் பங்கேற்பவர்களுக்கு தேசத்தின் மீது விசுவாசம் இருக்காது. சாதாரண மக்களின் வாழ்க்கை செலவுகள் பற்றிய கவலை இருக்காது. உயர் தட்டு கனவான்களாக இருப்பார்கள். உலகத்தை கார்ப்பரேட் போர்டு ரூம்களில் அமர்ந்து கொண்டு ஸ்க்ரீனில் பார்ப்பவர்களாக இருப்பார்கள். அங்கே நடப்பது பொருளாதார மேம்பாட்டுக்கான விவாதம் அல்ல. சந்தைக்கான “கார்ப்பரேட் லாபி” தான். நன்றி: WIONEWS - அபினவ் யாதவ் - 17.01.2026