உலகக்கோப்பை மகளிர் இளையோர் ஹாக்கி இந்திய அணி அறிவிப்பு
சிலி நாட்டின் சாண்டியாகோ நகரில் 11ஆவது சீசன் மகளிர் இளையோர் ஹாக்கி தொடர் டிசம்பர் 1 முதல் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியா உட்பட 5 கண்டங்களில் இருந்து மொத்தம் 24 நாடுகள் இந்த தொடரில் பங்கேற்க உள்ளன. அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய அணி “குரூப் சி” பிரிவில் உள்ளன. இந்த பிரிவில் இந்தியா, ஜெர்மனி, நமீபியா, அயர்லாந்து ஆகிய அணிகள் உள்ளன. இந்நிலையில், இந்த உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 20 பேர் கொண்ட இந்திய அணியை ஜோதி சிங் வழிநடத்துவார் என ஹாக்கி இந்தியா சம்மேளனம் கூறியுள்ளது. இதுதொடர்பாக முன்னாள் இந்திய வீரரும், மகளிர் அணியின் தலை மைப் பயிற்சியாளருமான துஷார் காண்ட்கர் கூறுகையில்,”20 பேர் கொண்ட அணியில் 18 வீராங்கனை கள் மற்றும் 2 மாற்று வீராங்கனைகள் உள்ளனர். வீராங்கனைகள் சூப்பர் பார்மில் உள்ளனர். கடும் ஒழுக்க கட்டுப்பாடு மற்றும் கடுமையான அணியை வழிநடத்தி வருகிறேன். அதனால் மகளிர் இளையோர் ஹாக்கி உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி நல்ல நிலையில் முன்னேறுவோம்” என அவர் கூறினார்.
உலக ஏடிஏ பைனல்ஸ் டென்னிஸ் ஜெர்மனி வீரர் ஜுவரேவ் அபாரம்
உலக தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள வீரர்கள் மட்டும் பங்கேற்கும் உலக ஏடிஏ (ATA - Association of Tennis Professionals) பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் 56ஆவது சீசன் ஐரோப்பா நாடான இத்தாலியின் டூரின் நகரில் நவம்பர் 9ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரின் முதல் சுற்று ஆட்டம் இந்திய நேரப்படி திங்களன்று அதிகாலை நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் தரவரிசையில் 3ஆவது இடத்தில் உள்ள ஜெர்மனியின் ஜுவரேவ், 5ஆவது இடத்தில் உள்ள அமெரிக்காவின் செல்டானை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய ஜுவரேவ் 6-3, 7-6 (8-6) என்ற நேர் செட் கணக்கில் செல்டானை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
சர்வதேச ஸ்குவாஷ் போட்டி இறுதிப்போட்டியில் தமிழ்நாடு வீராங்கனை ராதிகா அதிர்ச்சி தோல்வி
ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி நகரில் “நியூ சவுத் வேல்ஸ் ஓபன்” என்ற பெயரில் சர்வதேச ஸ்குவாஷ் போட்டி நடைபெற்றது. இந்த தொடரின் தொடக்கச் சுற்று முதலே அசத்தலாக விளையாடிய தமிழ்நாட்டின் ராதிகா சுதந்திரா சீலன் இறுதிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் கனடாவின் இமான் ஷகீனை ராதிகா எதிர்கொண்டார். இதில் முதல் 2 செட்டுகளை ஷகீன் கைப்பற்றிய நிலையில், அடுத்த 2 செட்டுகளை ராதிகா கைப்பற்றி பதிலடி கொடுத்தார். ஆனால் டை பிரேக்கர் சுற்றான 5ஆவது செட்டை ஷகீன் கைப்பற்றினார். இதன்மூலம் 8-11, 3-11, 11-4, 12-10, 10-21 என்ற செட் கணக்கில் ராதிகா அதிர்ச்சி தோல்வியடைய, கனடாவின் இமான் ஷகீன் சாம்பியன் பட்டம் வென்றார்.
