பெண்ணின் ஒவ்வொரு பிரச்சனையும் அரசியல் பிரச்சனையே!
நவம்பர் 22 அன்று சென்னையில் நடைபெற்ற எல்ஐசி உழைக்கும் மகளிர் தமிழ்நாடு மாநில 9ஆவது மாநாட்டில் ஊடகவியலாளர் கவிதா முரளிதரன் உரையாற்றினார். அவரது உரையின் அம்சங்கள்
ஊடகங்களில், குறிப்பாகத் தொலைக் காட்சி விவாதங்களில், முக்கியமான பெண்கள் சம்பந்தப்பட்ட தலைப்புகளுக்கு மட்டுமே பெண்கள் அழைக்கப்படுகின்றனர். பொதுவான அனைத்து தலைப்புகளிலும் ஆண்கள் மட்டுமே குழுவாகப் பேசும் ‘மேனல்’ (Manel - ஆண்கள் குழு - அதாவது பேச்சாளர் குழு ‘panel’ என்பதற்கு பதிலாக ‘ manel’ ) கலாச்சாரம் பெரும்பாலும் நிலவுகிறது. அரசியல், சமூகப் பிரச்சனைகள், பெண்கள் மீதான வன்முறை போன்ற தலைப்புகளில்தான் பெண்களின் பங்கேற்பு முக்கியத்துவம் பெறுகிறது. அத்தகைய விமர்சனங்களால் தற்போது சிறிய மாற்றங்கள் வரத் தொடங்கியுள்ளன. பெண்கள் இயக்கமாய் ஒன்றிணைந்தால் மட்டுமே, தனித்தனியாகச் செய்ய முடியாத பெரிய பணிகளையும் சாதிக்கமுடியும்.
ஜெஃப்ரி எப்ஸ்டீன் விவகாரமும் அரசியல் தொடர்பும்
அமெரிக்கப் பணக்கார பைனான்சியரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் விவகாரம், பெண்கள் மீதான ஒடுக்குமுறை மற்றும் அதிகார மட்டங்களின் தொடர்புகளை அம்பலப்படுத்துகிறது. 2019இல் சிறையில் தற்கொலை செய்துகொண்ட (கொலை என்றும் கூறப்படுவதுண்டு) எப்ஸ்டீன், 13-14 வயதுடைய இளம் பெண்களைப் பாலியல் வணிகத்தில் ஈடுபடுத்தி, அவர்களை அமெரிக்க மற்றும் உலகத் தலைவர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய அனுப்பியுள்ளார். எப்ஸ்டீன் கோப்பு களில் டிரம்ப் மற்றும் இங்கிலாந்தின் இளவரசர் ஆண்ட்ரூ, பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இளவரசர் ஆண்ட்ரூ எப்ஸ்டீனின் வாடிக்கை யாளராக இருந்த காரணத்தால், இளவரசர் என்ற பட்டத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று தண்டனை வழங்கப்பட்டது.
மோடி-எப்ஸ்டீன் தொடர்பு (சமீபத்திய தகவல்)
சமீபத்திய ‘ஒயர்’ இதழ் கட்டுரையில், 2019 தேர்தலில் மோடி வெற்றி பெற்ற பிறகு, எப்ஸ்டீன் வெள்ளை மாளிகை அதிகாரியான ஸ்டீவ் பேனனிடம், மோடிக்கும் டிரம்ப்க்கும் இடை யேயான சந்திப்பிற்கு ஏற்பாடு செய்வதாகப் பேசிய தகவல் வெளிவந்துள்ளது. டிரம்ப் மற்றும் மோடி போன்றவர்களிடம் இருந்து ‘சமாதானப் பூர்வமான’ அரசியல் நம்மைக் காப்பாற்றும் என்று எதிர்பார்க்க முடியாது. மக்கள் இயக்க மாகத் திரள்வதும், ஒன்றிணைவதுமே நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள கூடுதல் முக்கி யத்துவம் வாய்ந்தது.
உழைப்பு, சமையல் மற்றும் பாலினப் பாகுபாடு
இந்த உலகத்தில் உழைக்காத மகளிர் யாரும் இல்லை. சமையல் போன்ற வேலைகளில் பெண்களின் உழைப்பு குறைவாகப் பார்க்கப்படு கிறது. ஓய்வு நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் கூட பெண்களுக்குத்தான் கூடுதல் வேலை இருக் கிறது. உணவு எல்லாருக்கும் பொதுவானது என்றால், சமையல் மட்டும் ஏன் பெண்களின் வேலையாக இருக்க வேண்டும்? சமையல் என்பது ஒரு அடிப்படை உயிர்வாழ்வதற்கான திறன்; அது அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டிய ஒன்று. ஆனால், சமையல் தொழில் வணிகமயமானதால், வணிக ரீதியாக மட்டும் ஆண்கள் அதைக் கையில் எடுக்கிறார்கள்.
நெருக்கடிகளும் “தனிப்பட்டதே அரசியல்” என்ற கூற்றும்
“தனிப்பட்டதே அரசியல்” என்ற கூற்றின் அடிப்படையில், பெண்கள் தனிமைப்படுத்தப்பட முடியாது. வரதட்சணை மற்றும் குடும்ப வன் முறை போன்ற பிரச்சனைகள் ஒருவருக்கு மட்டும் நடப்பதில்லை; அது இந்தியா முழுக்க நடக்கிறது. ஒரு பெண்ணுக்கு நடக்கும் கொடுமைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று மற்றொரு பெண் நினைக்கக் கூடாது. தனக்கு எது தனிப்பட்ட ஒரு விஷயமோ, அதுவே தன்னுடைய அரசியலாகிறது. பாதிக்கப்பட்டவர் களையே கேள்வி கேட்கும் இச்சமூகத்தில், ஆண்களை உடனே குறை சொல்லக் கூடாது என்று அவர்களைப் பாதுகாக்கும் இடத்துக்குச் சமூகம் நகர்ந்துள்ளது.
சிசுக்கொலையின் பரிணாமமும் குறியீட்டு மொழியும்
தமிழ்நாட்டில் இன்றும் சிசுக்கொலை நடைபெறுகிறது; அதன் வடிவம் மட்டுமே மாறியுள்ளது. 1990களில் கருக்கொலை நடந்த போதுதான் ஸ்கேன் செய்வதைத் தடை செய்யும் சட்டம் வந்தது. அதன் பிறகு அது சிசுக்கொலை யாக மாறியது. சேலம் வாழப்பாடி அருகே ஜோதி டர்கள் மூலமாகப் பெண் குழந்தையை அடை யாளம் கண்டு சிசுக்கொலை நடைபெறும் அவல நிலை இருந்தது. ஸ்கேன் சென்டர்களில், பாலி னத்தைச் சொல்வது சட்டப்படி குற்றம் என்பதால் “மிரண்டா சாப்பிடுகிறீர்களா (ஆண்), ஃபேன்டா சாப்பிடுகிறீர்களா (பெண்)” போன்ற குறியீடு களைப் பயன்படுத்துகின்றனர். தற்போது மொபைல் வேன்கள் மூலம் ஸ்கேன் செய்யும் புதிய ஒடுக்குமுறை வடிவங்களும் வந்துள்ளன. எனவே, ஒரு பெண் மீதான ஒடுக்குமுறை பிறப்பதற்கு முன்பிருந்தே தொடங்குகிறது.
கல்வியில் பாகுபாடும் குழந்தைத் திருமணங்களும்
ஆண் குழந்தைக்கு இன்ஜினியரிங், பெண் குழந்தைக்கு ஆர்ட்ஸ் என்று கல்வித் தேர்வில் பாலினப் பாகுபாடு இன்றும் இயல்பாக நடக்கிறது தமிழ்நாட்டில் குழந்தைத் திருமணங்கள் அதிகமாகி வருகின்றன என்பதும் உண்மை. சரி யான கழிப்பறை வசதி இல்லாததால், குறிப்பாகப் பூப்படைந்த பிறகு, மாணவிகளின் கல்வி இடைநிற்றல் அதிகமாக உள்ளது.
பணிப் பாதுகாப்பு மற்றும் குற்ற உணர்வில் பாகுபாடு
வேலைக்குப் போகும் பெண்களுக்கு ஊதி யத்தில் தொடங்கி இரவில் திரும்புவதற்கான பாது காப்பு இல்லை என்ற சூழல் வரை பல நெருக்கடி கள் ஏற்படுகின்றன. பாலியல் வன்முறை சம்ப வம் நடந்தால், “நீ அந்த டைம்ல ஏன் அங்கு சென்றாய்” என்று பாதிக்கப்பட்டவர்களை நோக்கிச் சமூகம் கை நீட்டுகிறது. இத்தகைய கேள்விகளைக் கேட்கும் ஆண்களைப் பார்த்து, “அந்தச் சூழலில் நீங்களும் அப்படித்தான் நடந்து கொள்வீர்களா?” என்று கேள்வி கேட்க வேண்டி யுள்ளது. திருமணம் என்று வரும்போது, பெண் களுக்குத் துணையைத் தேர்ந்தெடுக்கக்கூடிய உரிமை முழுமையாக மறுக்கப்படுகிறது. உணவில் உள்ள பாகுபாடு பெண்களை குற்ற உணர்வுக்குள் தள்ளுகிறது. ‘தோசையம்மா தோசை’ போன்ற குழந்தைப் பாடல்களில் கூடப் பெண் குழந்தைக்குக் குறைவாகத் தோசை கிடைக்கும் அநீதி சுட்டிக்காட்டப்படுகிறது. உடல் வடிவம் என்பது ஆண்களுக்கு ஆரோக்கியம் சார்ந்ததுடன் நின்றுவிட, பெண்களுக்கு அழ கியல் சார்ந்தும் வருவதால், அவர்கள் “அதிகம் சாப்பிடக்கூடாது” என்ற கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் போன்ற கிராமங்களில் விவசாயக் கூலி வேலை செய்யும் பெண்கள் வீட்டில் கடைசியாகச் சாப்பி டுவதால், அவர்களுக்குப் போதுமான உணவு கிடைப்பதில்லை. இந்த ஒடுக்குமுறையை மாற்ற, குடும்பத்துடன் சேர்ந்து பெண்கள் சாப்பிட வேண்டும் என்ற பிரச்சாரம் தேவைப்பட்டது.
ஊடகங்களின் பங்கு மற்றும் காலநிலை மாற்றம்
தொலைக்காட்சித் தொடர் மற்றும் சினிமாக் களில் வரதட்சணை வழங்குவது இயல்பான ஒன்றாக சித்தரிக்கப்படுகிறது. வரதட்சணை கொடுப்பதும் வாங்குவதும் குற்றமாகும். இருப்பி னும், ஆல்கஹால் விளம்பரங்களில் வருவது போல, வரதட்சணை கொடுப்பது தவறு என்று எந்த ஒரு ஊடகத்திலும் அறிவிப்புவருவதில்லை. ஊடகங்கள் தற்கொலைச் செய்திகளை மிகவும் கிராஃபிக்காக விவரிப்பதும், நீண்ட நேரம் ‘லைவ்’ செய்வதும் ‘காப்பி கேட்’ (Copy Cat) தற்கொலைகளைத் தூண்டுவதாக அமைகிறது. ஒரு குற்றம் நடந்த இடத்தை வைத்து (தில்லி யில் நடந்தால் தேசிய அவமானம், கிராமத்தில் நடந்தால் இல்லை) அதன் தீவிரத்தைத் தீர்மானிக்காமல், இடம், வர்க்கம், சாதி, மதம் போன்றவை ஒரு குற்றத்தின் தீவிரத்தைத் தீர்மா னிக்கக் கூடாது. அனைத்துக் குற்றங்களுக்கும் எதிராகச் சரியாகச் செயல்பட வேண்டும். காலநிலை மாற்றம் பெண்களை மிகவும் அதிகமாகப் பாதிக்கிறது. தண்ணீர் கொண்டு வரும் பொறுப்பு இந்தியாவிலும் பெரும்பாலான பெண்களுக்குரியதாகவே உள்ளது. காலநிலை மாற்றம், இதுவரை போராடிப் பெற்ற அனைத்து உரிமைகளையும் காலியாக்கக்கூடிய மிகப் பெரிய அச்சுறுத்தலாக வரப்போகிறது.
எதை ஆதரிக்கிறோம்?
பெண்களுக்கான சட்டங்களும், ஆணை யங்களும் வெறும் காகிதத்திலும், கோப்புகளி லும் மட்டுமே உள்ளன. அவற்றை நடைமுறைப் படுத்த வேண்டியுள்ளது. எல்லாப் பெண்களுமே ஒடுக்குமுறையைச் சந்தித்தாலும், அதன் விகிதம் மாறுபடுகிறது. தன்னை விட ஒடுக்கப் பட்ட மக்களுக்காகவும் குரல் கொடுக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. நாம் எதிர்கொள்ளும் சிக்கலை அடையாளப்படுத்தி, அதைக் கேள்வி கேட்கும் கடமை நமக்கு உள்ளது. இதைச் செய்ய வில்லை என்றால், நாம் சமுதாயத்தில் உள்ள பிற்போக்குத் தனத்தை ஆதரிக்கிறோம் என்று அர்த்தம். தொகுப்பு: எஸ்.ராமு
