அசாமில் அதிருப்தி... காங்கிரஸில் இணைந்தார் பாஜக அமைச்சர்!
தேர்தல் நெருங்கும் வேளையில் அசாம் மாநில பாஜகவில் உட்கட்சிப் பூசல் வெடித்துள்ள நிலையில், அம்மாநில விளையாட்டுத் துறை அமைச்சரான நந்திதா கார்லோசா பாஜகவிலிருந்து விலகி காங்கிரசில் இணைந்துள்ளார். சீட் மறுப்பால் அதிருப்தி ஹாப்லாங் (Haflong) தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான நந்திதாவுக்கு இம்முறை போட்டி யிட பாஜக வாய்ப்பு மறுத்தது. அவருக்குப் பதிலாக ரூபாலி லங்டாசா என்ற புதிய முகத்தைப் பாஜக வேட்பாளராக நிறுத்தியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நந்திதா, உடனே காங்கிரஸில் ஐக்கியமானார். காங்கிரஸ் கட்சியில் இணைந்த கையோடு, ஹாப்லாங் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராகவும் நந்திதா கார்லோசா அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் வேட்பாளர் நிர்மல் லங்டாசாவுக்குப் பதிலாக இப்போது நந்திதா களமிறக்கப்படுகிறார். கார்ப்பரேட் விசுவாசமும்... பாஜகவின் பழிவாங்கலும் ஹாப்லாங் தொகுதிப் பழங்குடியின மக்களின் நிலங்களைப் பெருநிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்க முயன்ற முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் போக்கை நந்திதா எதிர்த்த தாலேயே அவருக்கு பாஜகவில் சீட் மறுக்கப்பட்டது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. கட்சி மாறுவதைத் தடுக்க முதலமைச்சர் நேரடியாக நந்திதாவின் வீட்டிற்கே சென்று சமாதானம் பேசியும் பலனளிக்கவில்லை. மக்கள் விரோத கார்ப்பரேட் போக்கைக் கடைப்பிடிக்கும் பாஜகவின் உண்மை முகம் அசாமில் மீண்டும் அம்பலமாகியுள்ளது!
