ஐக்கிய நாடுகள் சபையின் ‘நிலையான விவசாயம்’ என்ற குறிக்கோளை நிறைவேற்ற உலகவிவசாயம் மற்றும் உணவு உற்பத்தி முறைகளை வரைமுறைப்படுத்திட வரும் செப்டம்பரில் ஐநா சபை உணவு முறைகள் உச்சிமாநாடு நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த பின்னணியில் தான் நமது நாட்டில் தற்போது மோடி அரசு விவசாய சட்டங்களை திருத்தி நமது நாட்டின் உணவு பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது. மோடி அரசின் இந்த நடவடிக்கை என்பது உலகளாவிய நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகும். உலக பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) விவசாயத்தில் புதிய பார்வை மற்றும் ஐநா வின் 2030 நிகழ்ச்சி நிரல் அதாவதுஉலக விவசாயத்தை கார்ப்பரேட் மயமாக்குதல் என்ற வழித்தடத்தின் படி மோடி அறிவித்துள்ள தீவிர விவசாய சட்ட திருத்தங்கள் அமைந்துள்ளன என்பது உண்மை.
செப்டம்பர் 2020ல் நாடாளுமன்ற குரல் வாக்கெடுப்பில் விவசாய சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடாமல் மோடி அரசு இந்திய விவசாயத்தினை முடமாக்கும் மூன்று புதிய விவசாய சட்டங்களை நிறைவேற்றியது. இந்த சட்டங்களை ரத்து செய்யக்கோரி கடந்த 100 நாட்களாக விவசாய அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளன.இந்த சட்டத் திருத்தத்தின் விளைவாக விவசாயிகளின் உற்பத்தி பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த, கார்ப்பரேட் நிறுவனங்கள் நிலம் வாங்குதல் மற்றும் பொருட்களை இருப்பு வைப்பதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுஇந்தச் சட்டங்களை கொண்டு வந்துள்ளார் பிரதமர்மோடி. கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளூர் மற்றும்பிராந்திய விவசாய சந்தைகளை தவிர்த்து விவசாயிகளுடன் நேரடியாக விவசாய விளை பொருட்களை கொள்முதல்செய்ய வழி வகுக்கிறது. இந்த நடவடிக்கைகளினால் ஏற்கனவே பலவீனமாக உள்ள இந்திய உணவுச் சங்கிலியில் விளிம்பு நிலையில் உள்ள சிறு விவசாயிகள் மற்றும் சிறு இடைத்தரகர்கள் பல்லாயிரக்கணக்கானோரின் வாழ்நிலை அழிவுக்கு செல்லும்.
அமெரிக்க ராக்ஃபெல்லர் அறக்கட்டளையால் முன்மொழியப்பட்ட கார்ப்பரேட் வேளாண் வணிக மாதிரியை1990 முதல் உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியம் இந்தியாவில் அமல்படுத்த வேண்டுமென மத்திய அரசை நிர்பந்தித்து வந்தது. பொருளாதார சீர்திருத்தங்களை தீவிரமாக அமல்படுத்திய காங்கிரஸ் அரசும் இந்த வேளாண்சட்டங்களை திருத்த முன்வரவில்லை. ஆனால் மோடி அரசு அவற்றை திருத்தி அதற்கான நியாயத்தை கற்பிக்க முயல்கிறது. அதாவது 2022லிருந்து விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக அதிகரிக்கும் என்று அறிவிக்கிறார். இதுஎந்தவகையிலும் நிரூபிக்கப்படாத சந்தேகத்திற்குரிய கூற்றாகும். இது கார்ப்பரேட் நிறுவனங்கள் தேசிய அளவில்முதன்முறையாக பண்ணை நிலங்களை வாங்க அனுமதிக்கிறது. பெரிய வணிக நிறுவனங்கள், உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் பண்ணைத்துறையில் முதலீடு செய்யலாம். இந்த தீவிர நடவடிக்கைகளின் பின்னால் யார் உள்ளனர்? உலக பொருளாதார மன்றம் மற்றும் கேட்ஸ் அறக்கட்டளையின் தீவிர உலகமயமாக்கப்பட்ட விவசாய நிகழ்ச்சி நிரலை நாம் காணலாம்.
இந்த சட்டத்திருத்தங்கள் உலக பொருளாதார மன்றத்தின் பல ஆண்டுகால முயற்சி மற்றும் விவசாயத்திற்கான புதிய பார்வை (New Vision for Agriculture) என்பதன் நேரடி விளைவாகும். ஆப்ரிக்க, லத்தீன் அமெரிக்க மற்றும் ஆசிய நாடுகளில் கடந்த 12 ஆண்டுகளாக இந்த கார்ப்பரேட் விவசாய முறையை இந்த இரண்டு முதலாளிகள் அமைப்புகள் நடைமுறைப்படுத்தி வருகின்றன. அவர்களின் இலக்கு அதிக மக்கள் தொகையை கொண்டஇந்திய நாடு, இந்திய விவசாயத்தை கையகப்படுத்தும் கார்ப்பரேட்டுகளின் முயற்சி கடந்த 1960 முதல் இந்திய விவசாயிகளின் தொடர் எதிர்ப்பால் நிறைவேறாமல் இருந்து வந்துள்ளது. ஆனால் இன்று உலக பொருளாதார மன்றத்தின் கிரேட் ரிசெட் அல்லது ஐநாவின் நிலையானவிவசாயம் என்ற போர்வையில் நாட்டின் பாரம்பரிய விவசாயம் மற்றும் உணவு உற்பத்தி முறை உடைத்தெறியப்பட்டுள்ளது.
சிறு,குறு விவசாயிகள் தங்களது நிலங்களை பெரிய வேளாண் வணிக நிறுவனங்களுக்கு விற்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். ஐநா வின் குறிக்கோளான நிலையான விவசாயம் என்பதன் பலன்கள் பெரிய வேளாண் வணிகர்களுக்கு தான் சாருமே ஒழிய சாதாரண விவசாயிகளுக்கு எந்தவித பலன் அளிக்காது.
பெரும் முதலாளிகள் அமைப்பின் சூழ்ச்சி
உலகப் பொருளாதார மன்றம் தனது குறிக்கோளை நிறைவேற்ற இந்தியாவில் (New Vision For Agriculture) என்விஏ இந்திய வர்த்தக கவுன்சில் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளது. அந்த அமைப்பின் வெப்சைட்டில் என்விஏ இந்திய வர்த்தகக் கவுன்சில் இந்தியாவில் நிலையான விவசாய வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக தனியார் துறை ஒத்துழைப்பு மற்றும் முதலீட்டை ஈர்க்கவும், வென்றெடுப்பதற்கான உயர் மட்ட தலைமைக் குழுவாகச் செயல்படுகிறது. 2017 ஆம் ஆண்டில் உலகப் பொருளாதார மன்றத்தின்என்விஏ இந்திய வர்த்தக கவுன்சிலில் உலகத்தின் மிகப்பெரிய சுத்திகரிப்பாளர்களில் ஒருவரான பேயர் கிராப் சைன்ஸ், மான்சாண்டோ, அமெரிக்காவின் மிகப்பெரிய தானிய நிறுவனமான கார்கில் இந்தியா சீட்ஸ், டவ் அக்ரோ சயின்சஸ், டுபான்ட், உலக தானிய கார்டல் லூயிஸ் ட்ரேஃபஸ் கம்பெனி, வால்மார்ட் இந்தியா, இந்தியாவின் மஹிந்திரா & மஹிந்திரா (உலகின் மிகப்பெரிய டிராக்டர் தயாரிப்பாளர்), நெஸ்லே இந்தியா லிமிடெட்; பெப்சிகோ இந்தியா; ரபோபங்க் இன்டர்நேஷனல்; ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா; உலகின் மிகப்பெரிய மறு காப்பீட்டாளரான சுவிஸ் ரீ சர்வீசஸ் மற்றும் மோடியின் பாஜகவின் முக்கிய நிதியாளர், நிதி ஆலோசகர் மற்றும் நண்பர் கௌதம் அதானி போன்றோரை கொண்ட அமைப்பாக உள்ளது. இதில் விவசாயத்தில் ஈடுபடும் எந்த அமைப்பும், நபரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. “நிலையானது” என்பதன் அர்த்தம் என்ன என்பது அவர்களின் உறுப்பினர்களில் காணப்படுகிறது.
இது மட்டுமல்ல மோடியின் மற்றொரு நண்பரும் ஆசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரரும் இந்தியாவில் சீர்திருத்தங்களை தீவிரமாக ஆதரிக்கும் ரிலையன்ஸ் மேலாண்மை இயக்குநரான முகேஷ் அம்பானி உலக பொருளாதார மன்ற நியு விஷன் ஃபார் அக்ரிகல்சர் என்ற அமைப்பில் இயக்குநராக இருக்கிறார். இப்படிப்பட்ட கார்ப்பரேட் நிறுவன தலைவர்களை கொண்ட அமைப்பு நாட்டில் உள்ள 65 கோடி விவசாயிகளின் நலன்களுக்கு எவ்வாறு முன்னுரிமை அளிக்கும்? குறிப்பாக இப்போது அமெரிக்காவில் உள்ள இந்தியரான ஐஎம்எப் முதன்மை பொருளாதார வல்லுநர் கீதா கோபிநாத் இந்த வேளாண் சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து இந்திய விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கான ஆற்றலைக் கொண்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
களாஸ் ஸ்வாப் குறிப்பிட்டது போன்று உலகளாவிய உணவு மற்றும் விவசாயத் தொழில்களை மேம்படுத்துவதற்கான நிகழ்ச்சி நிரல்-2030 வெற்றி பெற உலகின் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட இந்திய வேளாண் வணிகத்தை பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டின் வலையில் கொண்டு வரவும், 2021 ல் நடைபெறவுள்ள ஐநாஉணவு முறைகள் உச்சிமாநாட்டை மனதில் கொண்டுதான் மோடி அரசு கட்டுப்பாடுகளை நீக்கி உள்ளார்.ஐ.நா 2030ன் குறிக்கோளான நிலையான அபிவிருத்திஇலக்குகளுக்கு இணங்க “உணவு முறைகள் அணுகுமுறையின்” நன்மைகளை அதிகரிக்கும் நோக்கத்துடன் ஐ.நா 2021 ஆம் ஆண்டில் உணவு முறைகள் உச்சி மாநாட்டை நடத்தப் போவதாக ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் 2019 இல் அறிவித்தார். உச்சிமாநாட்டின் முக்கிய நோக்கம் என்பது துல்லியமான விவசாயம். இதை நிறைவேற்ற ஜி.பி.எஸ், பிக் டேட்டா மற்றும் ரோபாட்டிக்ஸ் மற்றும் ஜி.எம்.ஓ போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற முன்மொழிவை செய்ய உள்ளது.
ஆப்பிரிக்க அனுபவம்
போரினால் பாதிக்கப்பட்ட ருவாண்டாவில் முன்னாள்விவசாய அமைச்சராக இருந்த கலிபாட்டா, ஆப்பிரிக்காவின் பசுமைப் புரட்சிக்கான கூட்டணியின் தலைவராகவும் உள்ளார். GMO காப்புரிமை பெற்ற விதைகள் மற்றும் அதன் தொடர்புடைய ரசாயன பூச்சிக்கொல்லிகளை ஆப்பிரிக்க விவசாயத்தில் அறிமுகப்படுத்திய கேட்ஸ் மற்றும்ராக்பெல்லர் அறக்கட்டளைகளால் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ்அறக்கட்டளை நிறுவனம் உலகப் பொருளாதார மன்றத்தின்ஒரு அங்கமாகும்.கடந்த 15 வருடங்களாக கேட்ஸ் மற்றும் ராக்ஃபல்லர் நிறுவனங்கள் பத்து கோடி டாலர் நிதி உதவி வழங்கியுள்ளனர். இருப்பினும் ஆப்பிரிக்க விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தமுடியவில்லை. விதைகளை மன்சாண்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்களிடம் வாங்க விவசாயிகள் நிர்பந்திக்கப்பட்டனர். விதைகளை மீண்டும் பயன்படுத்த விவசாயிகள் தடைசெய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பாரம்பரிய விதைகளை கைவிட நிர்பந்திக்கப்படுகிறார்கள். இதன் விளைவாகவிவசாயிகள் கடன் மற்றும் திவால் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். AGRA இன் கவனம் என்பது”சந்தை சார்ந்த” ,கார்கில் மற்றும் பிற முக்கிய தானிய கார்டெல் ராட்சதர்களால் கட்டுப்படுத்தப்படும் உலகளாவிய ஏற்றுமதி சந்தையாகும். 1990 களில், வாஷிங்டன் மற்றும் வேளாண் வணிகத்தின் அழுத்தத்தின் கீழ், வளரும் நாடுகளில் ஆப்பிரிக்க மற்றும் பிற அரசாங்கங்கள் தங்கள் விவசாய மானியங்களை முடிவுக்குக் கொண்டுவருமாறு உலக வங்கி கோரியது.
ஆனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்களது நாட்டில் விவசாயத்திற்கு பெரிதளவு மானியம் வழங்கி வருகின்றனர்.குறைந்த மானியத்தை வழங்கும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஓ.இ.சி.டிநாடுகள் உள்ளூர்விவசாயிகளை திவாலாக்கி வருகின்றன. பசியின்மையைக் குறைப்பதற்குப் பதிலாக, அக்ரா தொடங்கப்பட்டதிலிருந்து 13 நாடுகளின் நிலைமை மோசமடைந்துள்ளது. அக்ரா மையம் கொண்ட நாடுகளில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது.
கேட்ஸ் அறக்கட்டளையின் 2008-11க்கான விவசாய மேம்பாட்டு உத்தி கீழ்கண்டவாறு தெரிவித்துள்ளது:
வறுமையிலிருந்து வெளியேற உபரி உற்பத்தி செய்யும் திறன் கொண்ட, சிறு உரிமையாளர்கள் பணப்பயிர் மற்றும்சந்தை சார்ந்த விவசாய முறையை உருவாக்க வேண்டும் என்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் அவற்றை ஆதரிக்கும் கேட்ஸ் போன்ற அறக்கட்டளை அமைப்புகள் அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.138 கோடி மக்கட்தொகையை கொண்ட இந்திய நாட்டில்வேளாண் துறையில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த 1960 முதல் கடந்த மாதம் வரைஇந்திய வேளாண்துறை கார்ப்பரேட் மயமாக்க முடியாத கோட்டையாக திகழ்ந்து வந்துள்ளது. ஆனால் இன்று மோடி அரசின் கொள்கைகளால் சுயச்சார்பு தகர்க்கப்பட்டு இந்திய மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு இந்தியநாட்டின் வேளாண்துறையை தாரைவார்த்துள்ளார் மோடி. அரசின் இந்த நடவடிக்கைகளை கண்டித்து கடந்தநூறு நாட்களுக்கு மேலாக இந்திய விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இவர்களை ஆதரித்து 26.11.2020 அன்று 25 கோடி தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்கள் பங்கேற்ற பொது வேலைநிறுத்தம் நடைபெற்றது. மோடியின் கைப்பாவையாக இருக்கும் தமிழகஅரசும் மத்திய அரசின் இந்த தேச விரோத நடவடிக்கைகளை ஆதரித்து வருகிறது. இந்த இரு கட்சிகளுக்கும் பாடம் புகட்டும் வகையில் வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள்நலனை முன்னிலைப்படுத்தும் மதச்சார்பற்ற கூட்டணியைவெற்றிபெறச் செய்ய பிரச்சாரம் செய்வோம்.
கட்டுரையாளர் : கே.சி.கோபிகுமார், சிஐடியு மாநிலச் செயலாளர்