புதுதில்லி:
சமூக பாதுகாப்புத் துறைகளான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) அலுவலகம் மற்றும் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி காப்பீட்டு நிறுவனம் (ESI)ஆகியவை தொழிலாளர் நலனுக்காக செயல்படும் தன்னாட்சி நிறுவனங்கள் ஆகும்.
நாடாளுமன்ற விதிகளின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த இரண்டு துறைகளையும், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சகம் நிர்வகித்து வருகிறது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர், இத்துறைகளின் தலைவராகவும், தொழிலாளர் நலத்துறைச் செயலர், துணைத் தலைவராகவும் இருந்து வருகின்றனர்.இந்நிலையில், இவ்விரு துறைகளையும் கார்ப்பரேட் மயமாக்கும் வகையில், மத்திய அரசு விதிமுறைகளை மாற்றியமைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கான வரைவுச் சட்ட மசோதா, தற்போது பொதுமக்கள் கருத்துக்காக வெளியிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.இந்த புதிய வரைவுச் சட்ட மசோதாவின்படி, இனி இந்த இரு துறைகளுக்கும் தனித்தனியே தலைமைச் செயல் அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த அதிகாரிகள் ஐஏஎஸ் அதிகாரிகளாக இருப்பார்கள். குறிப்பாக, இபிஎப், இஎஸ்ஐ ஆகிய இரண்டு நிறுவனங்களும் இனிமேல் கார்ப்பரேட் நிறுவனங்களாக செயல்படும் என்று கூறப்படுகிறது.