articles

img

விஸ்வகுருவின் மவுனம் - அ.அன்வர் உசேன்

விஸ்வகுருவின் மவுனம் - அ.அன்வர் உசேன்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இந்திய பிரதமர் மோடி போல அதிரடி அறிவிப்புகளை வெளியிடுவதை கலையாக கொண்டவர். அப்படித்தான் ஏப்ரல் 3ஆம் தேதியன்று உலகில் உள்ள பல நாடுகளுக்கு இறக்கு மதி வரியை சகட்டு மேனிக்கு அறிவித்தார். ஒரே வாரத்தில் அந்த வரிகளை 90 நாட்களுக்கு நிறுத்தம் எனவும் ஆனால் சீனாவுக்கு மட்டும் 125% வரி எனவும் பல்டி அடித்தார். எனினும் அனைத்து நாடுகளுக்கும் 10% வரி என்பது நிலைநாட்டப்பட்டுள்ளது. உலக வணிக வட்டாரங்களில் பெரும் பூகம்பத்தையும் கோபத்தையும் ஏற்படுத்திய இந்த அறிவிப்பு குறித்து  சிலர் பதில் வரிவிதிப்பை அறிவித்தனர்; சிலர் அமெரிக்கா தமது பொருட்களுக்கு 0% வரி என அறி வித்தால் தாங்களும் 0% என நிர்ணயிக்கிறோம் என அறிவித்தனர்; சிலர் டிரம்புக்கு வெள்ளை கொடி காட்டினர். ஆனால் இது குறித்து  மவுனம் காத்தது இந்தியா மட்டுமே! தம்மை விஸ்வகுரு எனவும் உலகமே ஒரு குடும்பம்தான் எனவும் கூறிக்கொள்ப வர்கள் குடும்பத்துக்குள் நடந்த இந்த கலகம் பற்றி மவுனமாக இருந்தனர். வாய்ச்சொல்லில் மட்டும் வீரம் பேசுவோரிடம் வேறு எதனை எதிர்பார்க்க இயலும்?

டிரம்ப் அறிவிப்பின்  ஆழமான வன்மம்

டிரம்ப் இந்த வரி விதிப்புகளை “பொருளாதார அவசரநிலை” சட்டத்தின் கீழ் அறிவித்தார். ஏன்? ஏனெனில் அமெரிக்க சட்டப்படி அவசரநிலை மூலம் ஜனாதிபதி அறிவிக்கும் எந்த சட்டத்தையும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. வரி விதிப்பு கொள்கை பற்றி அமெரிக்க நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய இயலும். ஆனால் நாடாளுமன்றத்தில் விவாதிக்க டிரம்ப் விரும்ப வில்லை. எனவே அவசரநிலை சட்டம் மூலம் அறி வித்தார். விதிவிலக்காக பயன்படுத்த வேண்டிய ஒரு அதிகாரத்தை திட்டமிட்டே டிரம்ப் விதிவிலக்கான சூழல் இல்லையென்ற போதிலும் அறிவித்தார். மேலும் இந்த சட்ட அறிவிப்பின் பொழுது அவரின் கூற்றுகளை கவனிப்பது அவசியம். அவர் கூறினார்

: “இன்றுதான் அமெரிக்காவின் உண்மையான விடுதலை நாள்”  

அவர் மேலும் கூறினார்: “நமது தேசம் மற்ற தேசங்களால் பகற் கொள்ளை அடிக்கப்பட்டது; திருடப்பட்டது; கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டது; ஒட்டச்சுரண்டப்பட்டது; பொருளா தார பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது; (rape என்ற வார்த்தையை டிரம்ப் பயன்படுத்தினார்)அமெரிக்க மக்களின் வரிப்பணம் 50 ஆண்டுகளாக களவாடப் பட்டுள்ளது. இனி அப்படி நடக்காது”.  இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் பல நாடுகளை சீரழித்த ஒரு தேசத்தின் ஜனாதிபதி இவ் வாறு கூறுவது விந்தையாக இல்லையா? மற்ற நாடுகளை கொள்ளை அடித்துவிட்டு, ஜனநாயகவாதி களையும் முற்போக்குவாதிகளையும் படுகொலை செய்துவிட்டு இப்பொழுது அமெரிக்காதான் பாதிக் கப்பட்ட தேசம் போல பிம்பம் உருவாக்க முயல்கிறார் டிரம்ப். எனினும் டிரம்ப்பின் வார்த்தைகளையும் செயல் களையும் சாதாரணமாக கடந்து செல்லச்கூடாது.

ஏன் வர்த்தக இடைவெளி?

அமெரிக்காவுக்கும் ஏனைய தேசங்களுக்கும் வர்த்தக இடைவெளி உள்ளது எனவும் அதனால் அமெரிக்கா பாதிக்கப்பட்டுள்ளது எனவும்; எனவே தான் இந்த வரிவிதிப்பு எனவும் டிரம்ப் கூறுகிறார். ஒரு தேசம் குறிப்பிட்ட தேசத்திடமிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களின் மதிப்புக்கும் ஏற்றுமதி செய்யும் பொருளுக்கும் உள்ள இடைவெளியே வர்த்தக பற்றாக்குறை எனப்படுகிறது. உதார ணத்துக்கு இந்தியா அமெரிக்காவிடமிருந்து 100 டால ருக்கு பொருட்களை இறக்குமதி செய்து 120 டாலர்  பொருட்களை ஏற்றுமதி செய்தால் வர்த்தக இடைவெளி 20 டாலர் ஆகும். இதற்கு ஏற்றுமதி செய்யும் தேசத்தை குறை கூறுவது அபத்தமானது. தனக்கு வேண்டிய பொருட்களை அபரிமிதமாக வாங்கிக் கொண்டு பின்னர் அவற்றை கொடுத்த தேசத்தை தனது பிரச்ச னைகளுக்கு காரணமாக குறை கூறுவது பொருத்த மற்ற ஒன்று. ஏன் சீனா/ இந்தியா/ கொரியா ஆகிய தேசங்களிடமிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்கிறது? ஏனெனில் இந்த தேசங்களிடமிருந்து பொருட்கள் விலை குறைவாக கிடைக்கின்றன. இதே பொருட்கள் அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்தால் விலை அதிகமாக இருக்கும். நுகர்வோர் கள் வாங்க மாட்டார்கள்.  யார் இந்த பொருட்களை வாங்கினார்கள்? அமெ ரிக்காவின் ஏழை மக்களும் நடுத்தர மக்களும்! இவர்க ளில் பெரும்பாலோர் டிரம்புக்கு வாக்களித்தவர்கள். இப்பொழுது வரிவிதிப்பின் காரணமாக இந்த பொ ருட்களை இறக்குமதி செய்தாலும் அல்லது உள்ளூ ரிலேயே உற்பத்தி செய்தாலும்  விலை அதிகமாகும். இந்த விலை உயர்வு யார் தலையில் விழும்? அமெ ரிக்க ஏழை மற்றும் நடுத்தர மக்கள்தான் இதனை  சுமக்க வேண்டி வரும். உதாரணத்துக்கு கிறிஸ்து மஸின் பொழுது குழந்தைகளுக்கு தரப்படும் ஒரு பொம்மை வண்டியின் விலை 29 டாலர். வரி விதிப்பிற்கு பின்னர் அது 40 டாலராக உயரும் என மதிப்பிடப்படு கிறது. உள்ளூரில் உற்பத்தி செய்தாலும் அமெ ரிக்க தொழிலாளிக்கு கூடுதல் ஊதியம் தர வேண்டி யிருப்பதால் விலை உயர்வு தவிர்க்க இயலாத ஒன்றாக இருக்கும்.  மேலும் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் கார்களின் உதிரி பாகங்கள் மெக்சிகோ/ தென் கொரியா/ ஜப்பான்/ கனடா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த தேசங்கள் அனைத்துக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது. எனவே கார்களின் விலை 4000 முதல் 6000 டாலர் வரை உயரும் என அஞ்சப்படுகிறது. எனவே இந்த வரி விதிப்புகளின் மூலம் அமெரிக்கா தன் காலில் தானே சுட்டுக்கொண்டதாக நிபுணர்கள் மதிப்பிடு கின்றனர். கடன் அட்டை மூலம் சூப்பர் மார்க்கெட்டில் ஏராளமான பொருட்களை வாங்கிய ஒருவன் தான் கடனாளி ஆனதற்கு அந்த சூப்பர் மார்க்கெட்தான் காரணம் என பழி போடுவது போல உள்ளது டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைகள். 

தேசங்களின் எதிர்வினை

சீனா மீது ஏற்கெனவே உள்ள வரிகள் மட்டுமல்லாது  மீண்டும் 20% ஆக மொத்தம் 54% வரி விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்வினையாக சீனா அமெரிக்க இறக்கு மதி பொருட்கள் மீது 34% வரி விதித்தது. இதனால் கோப முற்ற டிரம்ப் மேலும் 50% வரியை போட்டு மொத்தம் 104% என அறிவித்தார். இதற்கு எதிர்வினையாக சீனா அமெரிக்க பொருட்கள் மீது வரி 84% என அறி வித்தது. இப்பொழுது டிரம்ப் சீன பொருட்கள் மீது 125% வரி என அறிவித்துள்ளார். தான் பேச்சு வார்த்தை களுக்கு தயார் என அறிவித்துள்ள சீனா தான் மண்டியி டுவோம் என அமெரிக்கா நினைத்தால் அது தவறு எனவும் வர்த்தகப் போராக இருந்தாலும் வேறு வடிவ மான போராக இருந்தாலும் இறுதி வரை போரிடு கின்ற திறன் சீனாவுக்கு உள்ளது எனவும் அறி வித்துள்ளது. 

J   சீனா மட்டுமல்லாது ஐரோப்பிய ஒன்றியம் அமெ ரிக்க பொருட்களுக்கு 20% வரி விதித்தது. அமெ ரிக்காவின் செயல் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்தது.  

 J   கனடாவும் 10 முதல் 25% வரி விதித்தது. கனடா பிரத மர் “சர்வதேச வர்த்தகத்தின் தன்மை அடிப்படை யில் மாற்றமடைந்துவிட்டது” என எச்சரித்தார்.

  J   இத்தாலி பிரதமர் மிலோனி, டிரம்ப் செய்தது தவறு என விமர்சித்தார்.  

 J   டிரம்பின் நடவடிக்கைக்கு எவ்வித நியாயமும் கற்பிக்க இயலாது என அயர்லாந்து கூறியது.

J   சர்வதேச வர்த்தக போர் உண்மையாகிவிட்டது என தென் கொரியா விமர்சித்தது.  

 J   இது மிகவும் வருந்தத்தக்கது என ஜப்பான் அங்க லாய்த்தது.    

J   இனி தாராள வர்த்தகம் என்பது கனவாகிவிட்டது என பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் கூறினார்.   இந்த தேசங்கள் எல்லாம் அமெரிக்காவின் நேச நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு இரு தேசங்களின் எ
திர்வினை குறிப்பி டப்பட வேண்டும். ஒன்று ரஷ்யாவின் எதிர்வினை. ரஷ்யா மீது எவ்வித வரி விதிப்பும் இல்லை.

எனினும் இத்தகைய செயல்கள் சர்வதேச வர்த்தகத்தை பாதிக்கும் என ரஷ்யா விமர்சித்தது. இன்னொரு தேசம் சிங்கப்பூர். தன் மீது 10% வரிதான் விதிக்கப்பட்டாலும் சிங்கப்பூரின் பிரதமர் அமெரிக்காவின் செயலை மிக கடுமையாக விமர்சித்தார். அனேகமாக சீனாவுக்கு அடுத்த படியாக கடும் எதிர்வினையை முன்வைத்தது சிங்கப்பூர்தான்!

டிரம்ப்பின் பல்டி

டிரம்ப்பின் அறிவிப்பு பல பாதகமான விளைவு களை உருவாக்கியது. அதன் முதல் எதிர்வினையாக உலகம் முழுவதும் பங்குச் சந்தைகள் மிகப்பெரிய சரிவை கண்டன. பல்வேறு தரப்புகளிலிருந்தும் எதிர்ப்பு  கிளம்பியது. டிரம்புக்கு நன்கொடை கொடுத்தவர்கள் தமது அதிருப்தியை வெளியிட்டனர். டிரம்பின் வாக்கு வங்கியும் அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாயின. எனவே டிரம்ப் இந்த வரிவிதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். ஆனால் கீழே விழுந்தாலும் மண் ஒட்டவில்லை எனும் கதையாக சுமார் 75 நாடுகள் தன்னை தொடர்பு கொண்டு கெஞ்சியதாகவும் சிலர் மண்டியிட்டு தங்களை வாழவைக்க வேண்டும் என இறை ஞ்சியதாகவும் எனவே நிறுத்தி வைப்பதாகவும் அறி வித்தார். ஒரு ஏகாதிபத்திய தேசத்தின் மூர்க்கத் தனமான ஒரு ஏகாதிபத்தியவாதி எப்படி செயல்படு வார் என்பதற்கும் எப்படியெல்லாம் மற்றவர்களை இழிவுபடுத்துவார் என்பதற்கும் டிரம்ப் ஒரு உதார ணம் எனில் மிகை அல்ல.  

இந்தியா யாருடன்  நிற்க வேண்டும்?

இந்தச் சூழலில் வாய்மூடி மவுனம் காத்தது இந்திய ஆட்சியாளர்கள் மட்டுமே! 56 இன்ச் எனவும் விஸ்வகுரு எனவும் இந்தியாவின் பெருமை உலகம் முழுதும் உயர்ந்துள்ளது எனவும் பெருமை பீற்றியவர்கள் ஒரு எதிர்ப்பு முணுமுணுப்பு கூட செய்யவில்லை. இந்த வரிவிதிப்புகளுக்கு முன்பே பல பொருட்களின் வரியை குறைக்கிறோம் என இந்தியா அறிவித்தது. எனினும் அமெரிக்கா 26% வரி விதிப்பை சுமத்தியது.  மேலும் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலின் சில கூற்றுகள் விந்தையாக இருந்தன. சீனப் பொ ருட்களுக்கு பதிலாக அமெரிக்க பொருட்களை வாங்கு மாறு அவர் அறிவுறுத்தினார். சீனாவிலிருந்து இறக்கு மதியை குறைத்துக் கொள்கிறோம் என அமெ ரிக்காவுக்கு வாக்குறுதி தரப்பட்டதாக செய்திகள் வெளி வந்தன. இப்பொழுது பியூஷ் கோயல் பேசியுள்ளது மேலும் அவர்கள் மன்னிப்பு திலகத்தின் உண்மை யான வாரிசுகள் என நிரூபித்துள்ளனர். அமெரிக்கா வின் இந்த செயலுக்கு சீனாதான் காரணமாம்! என்றை க்கு சீனா 2000ஆம் ஆண்டில் உலக வர்த்தக அமைப்பில் இணைந்ததோ அன்றிலிருந்து சீனா உலக வர்த்த கத்தில் தகிடுதத்தம் செய்து வருகிறது எனவும் இதற்கு முழு பொறுப்பும் சீனாதான் ஏற்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இப்படியெல்லாம் சீனாவை வசை பாடினால் அமெரிக்காவின் கருணை கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்கள் போலும்! இழந்து கொண்டிருக்கும் தனது செல்வாக்கு மற்றும் ஆதிக்கத்தை தொடர்ந்து நிலை நாட்ட முயலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சீனா உட்பட பல நாடுகளுடனும் இந்தியா கை கோர்க்க வேண்டிய நேரமிது. ஆனால் சீனாவை எதிர்த்துக் கொண்டால் அங்கிருந்து வெளியேறும் அமெரிக்க நிறுவ னங்கள் இந்தியாவுக்கு வரும் என மனப்பால் குடிக்கின் றனர் ஆட்சியாளர்கள். இந்தியாவுக்கு பாதகம் விளை வித்தாலும் அமெரிக்காவை எதிர்த்து கொள்வது இல்லை என்பதில் நவீன கொலைகார பாசிசவாதி களும் நவீன நாசகர பொருளாதார கொள்கை ஆதர வாளர்களும் ஒரே அலைவரிசையில் உள்ளனர்.  அமெரிக்க ஆதரவு நிலை எந்த வகையிலும் இந்தியாவுக்கு பயன் அளிக்காது. இந்த கசப்பான உண்மையை இந்துத்துவா-கார்ப்பரேட் ஆதரவா ளர்கள் உணரும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை.