ஒப்பந்த முறை என்ற நவீன சுரண்டலை தமிழக அரசு கைவிட வேண்டும் - கே.ஆறுமுகநயினார்
“அரசாலும், அதன் கைகளாலும் மக்கள் சுரண்டப்படுவதற்கு முடிவுகட்டும் நேரம் வந்து விட்டது என உணர்கிறோம்.” -சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கியுள்ள தீர்ப்பில் தான் இப்படி சொல்லப்பட்டுள்ளது. கடந்த 2002ஆம் ஆண்டு வேலூரில் துவங் கப்பட்ட திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த 66 தினக்கூலி தொழிலாளர்களின் பணி நீக்கம் சம்பந்தமான வழக்கில் தினக் கூலி, ஒப்பந்தமுறை என்ற பெயரால் அரசுத் துறையில் நடைபெறும் அநீதிகளை படம் பிடித்துக் காட்டியுள்ளது சென்னை உயர்நீதி மன்றம்.
அடிப்படை கட்டமைப்பின்றி துவங்கப்பட்ட பல்கலைக்கழகம்
2002ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த பல்கலைக்கழகத்திற்கு அரசு அனு மதித்த ஊழியர்கள் எண்ணிக்கை மொத்தம் 22 பேர் மட்டுமே. பதிவாளர், துணை வேந்தரின் நேர்முக உதவியாளர், ஆய்வக தொழில்நுட்ப ஊழியர், கணினி ஊழியர் போன்ற பதவிக ளுக்கு மட்டுமே அரசு அனுமதி அளித்துள்ளது. போதுமான கட்டமைப்பு வசதிகள் இன்றி அரசு ஒரு பல்கலைக்கழகத்தை எப்படி துவங்கியது? அடிப்படைக் கட்டமைப்பு என்பது வெறும் கட்டிடங்கள், உபகரணங்கள் மட்டும் அல்ல. “போதுமான பணியாளர்களை நிய மனம் செய்வதுதான் அடிப்படைக் கட்டமைப்பு” எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். அலுவலக பணி, துப்புரவு பணி, காவல் பணி போன்ற அடிப்படைப் பணிகளை பார்க்க ஒரு ஊழியர் கூட இல்லை. இதுபோன்ற பணி களுக்கு துணைவேந்தர் தினக்கூலி தொழிலா ளர்களை நியமித்து வருடக்கணக்கில் வேலை வாங்கிவிட்டு எந்தவித காரணமும் இன்றி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
உமாதேவி வழக்கும் அரசின் தவறான வாதமும்
நீண்டகாலம் பணிபுரிந்த தங்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என நீதிமன்றத்தை நாடினால், “இந்த தொழிலாளர்கள் முறையாக நியமனம் செய்யப்படவில்லை; பின்வாசல் வழியாக பணிக்கு வந்துள்ளனர். பின்வாசல் வழியாக பணிக்கு வந்தவர்களை நிரந்தரம் செய்ய முடியாது” என கர்நாடக அரசுக்கு எதி ராக உமாதேவி என்பவர் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி இவர்களை நிரந்தரம் செய்ய முடியாது என அரசுத்தரப்பு வாதாடுகிறது. இது சரியல்ல என்று கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், “அரசுத்தரப்பில் சொல்லப் பட்ட உமாதேவி வழக்கில் உச்சநீதிமன்றம் பல்வேறு விஷயங்களைக் கூறியுள்ளது. பின் வாசல் வழியாக பணிக்கு வந்தவர்களை நிரந்தரம் செய்ய முடியாது என்பதை மட்டும் வாதத்தில் முன்வைக்கும் தமிழக அரசு, இந்தத் தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ள இதர விஷயங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டு வழக்கில் சொல்லப் பட்டுள்ள இதர விஷயங்களை நீதிமன்றம் தமிழக அரசுக்கு சுட்டிக்காண்பித்துள்ளது.
அரசுத்துறையில் பன்முகச் சுரண்டல்
அரசுத்துறையில் நிரந்தரமற்ற பணியா ளர்கள் பன்முகச் சுரண்டலை எதிர்கொள்கின் றார்கள்: H குறுகிய காலம் அல்லது பருவகால வேலை களில் மட்டுமே தினக்கூலி ஒப்பந்த தொழி லாளர்களை நியமிக்க முடியும். நிரந்தரமற்ற தொழிலாளர்களை நியமிப்பதன் அடிப்ப டையே இதுதான். H அத்தியாவசியமான பணிகள் என தெளி வாகத் தெரிந்த பின்பும், தற்காலிக அல்லது ஒப்பந்த தொழிலாளர்களை நியமிப்பது, கண்ணியமான வேலைப் பாதுகாப்பு என்ற நிரந்தர தொழிலாளர்களுக்கு உரிய சலுகைக ளைப் பறிக்கும் நோக்கம் கொண்டது. H தற்காலிக தொழிலாளர்கள் முறை நீண்ட கால சேவையை கணக்கில் கொள்ளாமல் எப்போது வேண்டுமானாலும் பணிநீக்கம் செய்ய முடியும் என்ற பாதுகாப்பற்ற சூழ்நிலை யிலேயே உள்ளது. H தற்காலிக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு, திறமையை வளர்ப்பதற்கான வாய்ப்புகள் போன்றவை மறுக்கப்படுகிறது. நிரந்தர தொழிலாளர்கள் செய்யும் பணியை செய்தாலும், சேவை செய்தாலும் அவர்களு க்கு பாகுபாடு காட்டப்படுகிறது. H தற்காலிக பணி நியமனம் என்பதன் மூலம் தொழிலாளர்கள் கடுமையாக சுரண்டப்படு கின்றனர். இந்த சுரண்டலை நிலைநிறுத்துவ தற்கும், நிரந்தரத்தன்மை உள்ள வேலை களை ஒழிப்பதற்கும் வெளி முகமை நியமனம் என்பது கேடயமாக பயன்படுத்தப்படுகிறது. H தற்காலிக ஊழியர்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதுடன் நிரந்தர தொ ழிலாளர்களின் சலுகைகளான ஓய்வூதியம், வருங்கால வைப்புநிதி, சுகாதார காப்பீடு, சம்பளத்துடன் கூடிய விடுப்பு போன்ற சமூகப் பாதுகாப்பு அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் மறுக்கப்படுகிறது. நோய் பாதிப்பு போன்றவற்றால் ஓய்வு காலத்தில் குடும்பமே துயரத்திற்கு உள்ளாகும் சூழ் நிலை உருவாக்கப்படுகிறது. இவற்றையெல்லாம் கூறி அரசுத்துறைக ளில் நிரந்தரப்படுத்தாமல், ஒப்பந்தமுறை, தற்காலிக வேலைக்கு ஆட்கள் எடுப்பது போன்றவை தவறானது என சுட்டிக்காண்பித் துள்ளது நீதிமன்றம்.
அரசுகள் மதிக்காத நீதிமன்ற தீர்ப்புகள்
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை சுட்டிக்காட்டியுள்ள நீதிபதிகள் இத்தீர்ப்பின் நோக்கத்தை சீர்குலைக்கக் கூடாது எனவும் அரசுக்கு தெளிவுபடுத்தியுள்ளனர். இத்துடன் இதே தன்மையுடைய வேறு சில வழக்குகளை யும் மேற்கோள் காட்டி பாதிக்கப்பட்ட தொழிலா ளர்களை நிரந்தரப்படுத்தி பணியில் சேர்க்கவும் உத்தரவிட்டுள்ளது. உமாதேவி வழக்கில் 2006ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் சொல்லப்பட்ட தீர்ப்பை சுட்டிக்காண்பித்துதான் சென்னை உயர்நீதி மன்றம் இந்த தீர்ப்பை அளித்துள்ளது. இந்த தீர்ப்பு வெளிவந்து 20 ஆண்டுகள் ஆகும் நிலையிலும், இந்த தீர்ப்பை பற்றி மத்திய, மாநில அரசுகள் கவலைப்படவில்லை. நீதிமன்றங்கள் தெளிவாக தீர்ப்புகளை சொன்னாலும், அரசுகளே அதை மதிப்பது கிடையாது. தமிழகத்தில் அனைத்து துறைகளி லும் இப்போது ஒப்பந்த முறை மூலம் தொழி லாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
நிரந்தரப் பணியிடங்களில் ஒப்பந்தப் பணியாளர்கள்
போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுனர், நடத்துனர் பணி என்பது நிரந்தரத்தன்மை உள்ள பணியாகும். இதற்கு ஒப்பந்த ஊழியர்க ளை நியமித்து வருகிறது தமிழக அரசு. இது சம்பந்தமாக சிஐடியு வழக்கு தொடர்ந்தது. இது அரசின் கொள்கை முடிவு என அரசு வழக்கறி ஞர் நீதிமன்றத்தில் வாதாடுகிறார். சுமார் ரூ. 60,000 கோடி மதிப்பீட்டில் சென் னையில் மெட்ரோ ரயிலின் இரண்டாவது கட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு முழுமையாக ஒப்பந்த பணியாளர்களை நிய மிக்க தில்லி மெட்ரோவிற்கு காண்ட்ராக்ட் விடப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் மக்களின் வரிப்பணத்தை செலவு செய்து ஆரம்பிக்கப் படும் திட்டத்தில் ஒரு நிரந்தர தொழிலாளி கூட நியமிக்கப்படவில்லை. கண்ணியமற்ற சமூகப் பாதுகாப்பற்ற முறையில் தான் தொழி லாளர்களை நியமிக்க வேண்டுமா? 12 ஆண்டுக்கு 6000 கோடி ரூபாய்க்கு ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்க தில்லி மெட்ரோ காண்ட்ராக்ட் எடுத்துள்ள நிலையில், தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்குமா என்பதும் கேள்விக்குறியே? அனைத்து மாநகராட்சிகள், உள்ளாட்சிகள், அரசு மருத்துவமனைகள் பெரும்பகுதியான அரசுத்துறைகள் அனைத்திலும் ஒப்பந்தமுறை நியமனம் சர்வசாதாரணமாகிவிட்டது.
கேள்விக்குறியாகும் சமூக நீதி
சமூக நீதியின் அடிப்படைகளில் ஒன்று இட ஒதுக்கீடு. குறிப்பிட்ட பிரிவு மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் அளிக்கும் இட ஒதுக்கீட்டின் மூலம் அவர்களது பொருளாதார நிலையை உயர்த்துவது மட்டுமல்ல; அரசு அதிகாரத்தில் ஒரு பங்களிப்பை வழங்குவது; இதன் மூலம் சமூக மாற்றத்திற்கு வழி செய்வது என இட ஒதுக்கீடு சம்பந்தமாக மண்டல் கமிஷன் கூறியுள்ளது. தமிழகத்தில் இட ஒதுக்கீட்டிற்கு நீண்ட வரலாறு உள்ளது. இந்தியாவில் தமிழகத்தில் மட்டும்தான் 69 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. இந்த இட ஒதுக்கீடு அரசுத்துறையில் மட்டுமே உண்டு. அரசுத்துறை வேலைகளை எல்லாம் ஒப்பந்த முறையில் தனியார் நிறுவனத்திற்கு வழங்கிவிட்டு சமூக நீதி, இட ஒதுக்கீடு பற்றி பேசுவது ஏட்டுச் சுரைக்காய் போன்றது; இது கறிக்கு உதவாது. வேலைவாய்ப்பற்ற இட ஒதுக்கீட்டால் என்ன பயன்? கண்ணியமான, சமூகப் பாதுகாப்புடன் கூடிய வேலை வாய்ப்பை வழங்கி தனியார் நிறு வனத்திற்கு முன் மாதிரியாக இருக்க வேண்டிய அரசே ஒப்பந்த முறையில் பணியாளர்களை நியமனம் செய்வது சமூக நீதிக்கு எதிரானது.
தமிழக அரசுக்கு வேண்டுகோள்
தமிழ்நாட்டில் அனைத்து அரசுத் துறைக ளில் உள்ள காலிப்பணியிடங்களைப் பூர்த்தி செய்து ஒப்பந்த முறைக்கு தமிழக அரசு முடிவு கட்ட வேண்டும். நீதிமன்ற தீர்ப்பு மட்டுமல்ல; நூற்றாண்டுகால போராட்டத்தின் பலன்களை உறுதிப்படுத்துவதாகும். ஒப்பந்த முறைக்கு முடிவு கட்டுவது காலத்தின் கட்டாயம் என்பதே தமிழக அரசுக்கு நாம் விடுக்கும் வேண்டு கோள். கட்டுரையாளர்: துணைப் பொதுச் செயலாளர்,சிஐடியு