articles

img

ஸ்கேன் இந்தியா

மோசடி
வாக்குகளைப் பெறுவதற்காக பாஜக எதையும் செய்யும் என்பதற்கு மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் சான்றாக மாறியிருக்கிறது. அண்மையில்தான் உருது கற்பிக்கும் மையத்தை மூடியே ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து பாஜகவினர் இழுத்து மூட வைத்தார்கள். உருதுக்கு எதிராக மோசமான வார்த்தைகளையும் அவர்கள் பயன்படுத்தினார்கள். உருது பேசுபவர்களை இழிவுபடுத்தினார்கள். தற்போது தேர்தல் நடக்கப் போகிறது. சில நகராட்சிகளில் தேர்தல் பிரச்சாரத்திற்கான துண்டுப்பிரசுரங்களை முழுமையாக உருது மொழியில் அடித்து பாஜகவினர் விநியோகித்துக் கொண்டிருக்கிறார்கள். பாஜகவின் இந்த மோசடியை எதிர்க்கட்சிகள் அம்பலப்படுத்தியுள்ளன. உருது மையத்திற்கு எதிராகக் குரல் கொடுத்த சில அமைச்சர்கள் இப்போது மவுனம் காக்கிறார்கள்.
கள்ளத்தனம்


பீகாரில்

10 ஆயிரம் ரூபாய் தந்து வாக்குகளைக் கவர்ந்த ஜனநாயக விரோத செயல் அடுத்தபடியாக அசாமில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களோடு அசாமிலும் அடுத்த ஆண்டில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. பீகாரில் 10 ஆயிரம் ரூபாயை வங்கிக் கணக்குகளில் தேர்தல் நேரத்தில் போடுவது என்ற ஆலோசனையைத் தந்ததே அசாம் முதல்வர் ஹேமந்த் பிஸ்வா சர்மா என்று பீகார் பாஜக தலைவர்கள் சொல்கிறார்கள். குறிப்பாக, இந்தப் பத்தாயிரம் ரூபாய் என்பது திருப்பித் தர வேண்டியதல்ல என்பதும் அவர் கொடுத்த ஆலோசனைதான் என்கிறார்கள். அதிருப்தி அதிகரித்துள்ள நிலையில் இதுபோன்றதை விட பெரிய அதிரடியை தனது மாநிலத்தில் செய்வார் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள். 


மீளுமா..?
பொதுத்துறை நிறுவனமான எச்.எம்.டி.(Hindustan Machine Tools) நெருக்கடியில் தள்ளப்பட்டிருக்கிறது. ஒன்றிய அரசின் கொள்கைகள் இந்த நெருக்கடியை அதிகமாக்கியுள்ளது. பணிகள் முடங்கியுள்ளன. லாபத்தை ஈட்டும் நிறுவனமான இந்த எச்.எம்.டி, கடந்த இரண்டு ஆண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக தொழிலாளர்களுக்கு ஊதியம் தரவில்லை. பணிகள் முடங்கியுள்ளதற்கு போதிய நிதி இல்லாததே காரணமாகும். நெருக்கடியைத் தடுக்கும் வகையில் நிதி வழங்கப்படும் என்று ஒன்றிய அமைச்சர் குமாரசுவாமி வெளியிட்ட அறிவிப்பு நடைமுறைக்கு வரவில்லை. எந்திரக் கருவிகளுக்கு நாட்டில் 16 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான சந்தை உள்ளது. இதில் அனுபவமும், திறனும் வாய்ந்த எச்.எம்.டி. நன்கு இயங்க முடியும். தெரிந்தேதான் அரசு பொதுத்துறை நிறுவனத்தை பலவீனப்படுத்துகிறது என்று சிஐடியு தலைமையிலான நிறுவன பாதுகாப்புக்குழு கூறியுள்ளது.


காணோம்..!
காணாமல் போன டிராக்டர்கள் பிரச்சனை பஞ்சாப்பில் பெரிதாகி இருக்கிறது. ஷம்பு எல்லையில் விவசாயிகள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் ஒன்றிய அரசு மற்றும் அரியானா பாஜக அரசு ஆகியவை நடவடிக்கை எடுத்தன. இவற்றிற்கு மறைமுக ஆதரவை பஞ்சாப்பில் ஆளும் ஆம் ஆத்மி அரசு தந்தது. போராட்டத்தில் முழு கவனம் செலுத்தி வந்த விவசாயிகள், அதை நிறைவு செய்யும் நேரத்தில்தான் தங்கள் டிராக்டர்களை காவல்துறையினர் பறிமுதல் செய்திருந்ததை நினைவு கூர்ந்தனர். சுமார் 20 முதல் 25 டிராக்டர்களை அவர்கள் எடுத்துச் சென்று விட்டார்கள். இவை ஆளுங்கட்சி
யினர் வசம் இருப்பதாகத் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, டிராக்டர்கள் ஒப்படைக்கப்பட வேண்டும் என விவசாயிகள் சங்கங்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.