பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025 - நடந்தது என்ன?
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) முக்கிய வெற்றி
1. தனிப் பெரும் வெற்றி : 2025 பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) அதன் வரலாற்றில் முக்கிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 243 தொகுதிகளில் இக்கூட்டணி 202 இடங்களைக் கடந்து தனிப் பெரும் வெற்றியை உறுதி செய்தது.
2. கணிப்புகளையும் மீறி …: தேர்தல் முடிந்தவுடன் நடந்த கணக்கெடுப்புகள் (Exit Polls) என் டி ஏ மீண்டும் ஆட்சி அமைக்கும் எனக் கணித்தாலும், அதன் வெற்றியின் அதிகபட்சமான (202+ இடங்களின்) அளவை அவை முற்றிலும் தவறாக மதிப்பிட்டன. இது அரசியல் நிபுணர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது
. 3. எதிர்பாராத 60 இடங்கள் கூடுதல் வெற்றி: பெரும்பாலான கணிப்புகளின் சராசரி என்டிஏ -வுக்குச் சுமார் 148 இடங்களை மட்டுமே எதிர்பார்த்தது. ஆனால், உண்மையான வெற்றி எண்ணிக்கை இந்த எதிர்பார்ப்பைவிடச் சுமார் 60 இடங்கள் அதிகமாகக் கிடைத்தது, இது அரசியல் வரலாற்றில் எதிர்பாராத திருப்பமாகும்.
4. பீகாரின் அரசியல் நிலநடுக்கம்: இந்த அளவு பிழை, தேர்தல் முடிவை வெறுமனே வெற்றியின் ஒரு பகுதியாகப் பார்க்காமல், வாக்காளர் மனநிலையைப் புரிந்துகொள்வதில் ஏற்பட்ட ஆழமான தோல்வியை யும், ஒரு ‘அரசியல் நிலநடுக்கத்தையும்’ தெளிவாகக் குறிக்கிறது என ஏடுகள் எழுதியுள்ளன.
5. பீகாரில் பாஜகவின் முதல் வெற்றி: பாரதிய ஜனதா கட்சி (BJP) 89 இடங்களைப் பெற்று, மாநிலத்திலேயே அதிக இடங்களை வென்ற தனிப்பெரும் கட்சியாக முதன்முறையாக உருவெடுத்தது. இது கடந்த 2020ஆம் ஆண்டுத் தேர்தலைவிட 15 இடங்கள் அதிகம்.
6. நிதிஷ் குமாரின் வலுவான நிலை: நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (JD(U)) கட்சி 85 இடங்களைப் பெற்று, 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு தனது வலுவான முடிவைப் பதிவு செய்தது. நிதிஷ் குமார் சாதனை அளவாகப் பத்தாவது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்க வாய்ப்பு உள்ளது. ஆனால் பாஜக அதைத் தடுக்கக்கூடும்.
7. வாக்குப் பங்கில் என்டிஏ-வின் ஆதிக்கம்: ஒருங்கிணைந்த சூழ்ச்சிகள் மற்றும் உத்திகளின் விளைவாக, தேசிய ஜனநாயகக் கூட்டணி சுமார் 49% வாக்குப் பங்கைப் பெற்றது. இது எதிர்க்கட்சிக் கூட்டணி யைவிட 11% அதிகமாகும். 8. சிராக் பஸ்வானின் எழுச்சி: சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) [LJP(RV)] 29 இடங்களில் போட்டியிட்டு அதிக வெற்றி விகிதத்தைப் (20 இடங்கள்) பதிவு செய்தது. அவர் என்டிஏ-வுக்கு 5% முதல் 6% வரை பஸ்வான்/தலித் வாக்குகளைச் சேர்த்தார். மகா கூட்டணியின் தோல்வி
9. மகா கூட்டணியின் சரிவு: ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) தலைமையிலான மகா கூட்டணி (MGB), வெறும் 40 இடங்களுக்குள் சுருங்கி, ஒரு சரிவைச் சந்தித்துள்ளது. இது எதிர்க்கட்சிகளுக்குப் பெரும் பின்னடைவாகும்.
10. ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் மோசமான சரிவு: தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) கடந்த தேர்தலில் பெற்ற 75 இடங்களில் இருந்து 25 இடங்களாகக் குறைந்தது. இதன் மூலம் 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக ஆர்ஜேடி மாநிலத்தில் மூன்றாவது கட்சியாகத் தள்ளப்பட்டது.
11. காங்கிரஸின் பலவீனமான செயல்பாடு: மகா கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சமாக 61 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், அதன் தேர்தல் இயந்திரம் மிகவும் பலவீனமாகச் செயல்பட்டதால், இது ஒரு உத்திசார்ந்த பிழையாக அமைந்தது என ஊடகங்கள் எழுதியுள்ளன.
12. வீணான 55 தொகுதிகளின் தாக்கம்: காங்கிரஸ் கட்சி தான் போட்டியிட்ட 61 தொகுதி களில் வெறும் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 2020ஆம் ஆண்டுத் தேர்தலில் 19 இடங்களைப் பெற்றிருந்த நிலையில், இந்தச் சரிவு பேரழிவை ஏற்படுத்தியது. இதன் மூலம், மகா கூட்டணியின் வெற்றி வாய்ப்புக்காகக் கிடைத்த 55 தொகுதிகள் வீணடிக்கப் பட்டன என்றும் அரசியல் பார்வையாளர்கள் கூறி யுள்ளனர்.
13. காங்கிரஸின் வெற்றிக் குறியீடு: 2025ஆம் ஆண்டுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பலம் வெறும் 9.8% ஆகக் குறைந்தது. இது, கூட்டணித் தொகுதி எண்ணிக்கை பங்கீடு ஒரு உத்திசார்ந்த பிழை என்றும் அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
14. யாத்திரை சென்ற பாதையில் பாஜக வெற்றி: காங்கிரஸ் கட்சி மேற்கொண்ட ‘வாக்காளர் அதிகார யாத்திரை’ சென்ற 31 சட்டமன்றத் தொகுதி களில் அதன் செயல்திறன் சோதிக்கப்பட்டது. ஆச்சரி யமாக, இந்தத் தொகுதிகளில் பாஜக 18 இடங்களிலும் வென்றது.
15. யாத்திரைக்குப் பலன் இல்லை: மேலும், காங்கிரஸ் யாத்திரை சென்ற வழித்தடத்தில் மகா கூட்டணியைச் சேர்ந்த ஆர்ஜேடி மற்றும் இடதுசாரிக் கட்சிகள் ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. காங்கிரஸ் வெறும் ஒரு இடத்தில் மட்டுமே முன்னிலை வகித்தது. இது அதன் கள அமைப்பு பலவீனமாக இருந்ததைக் காட்டியுள்ளது.
16. தோல்விக்குக் காரணமான குழப்பம்: தேர்தலுக்கு முன்னதாக, மகா கூட்டணியில் நிலவிய தொகுதிப் பங்கீடு குறித்த குழப்பம், அதன் தோல்விக்கு மிக முக்கியக் காரணியாக அமைந்தது. இந்த நிர்வாகக் குழப்பம், கூட்டணியின் நம்பகத்தன்மையைச் சிதைத்தது.
17. வெளிப்படையான பேச்சுவார்த்தை இழுபறி: ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையேயான பதற்றமான பேச்சு வார்த்தைகள் வெளிப்படையான ஊடக கவனத்தை ஈர்த்தன. இதனால் வேட்பு மனு தாக்கல் செய்வதில் குறிப்பிடத்தக்க தாமதம் ஏற்பட்டது.
18. வேட்புமனு காலக்கெடுவில் தாமதம்: வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிவடையவிருந்த போதும், மகா கூட்டணியால் தனது தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடியவில்லை. இது அணியை பலவீனமாக காட்டியது.
19. விஐபி-யின் திடீர் செய்தியாளர் ரத்து: விகாஸ்ஷீல் இன்சான் கட்சியின் (VIP) தலைவர் முகேஷ் சஹானி, வேட்புமனு தாக்கல் செய்ய மிகக் குறைந்த கால அவகாசமே இருந்த நிலையில், ஒரு செய்தியாளர் சந்திப்பைத் திடீரென ரத்து செய்தது, கூட்டணியின் குழப்ப நிலை என்ற கருத்தை ஏற்படுத்தியது.
20. ஒற்றுமையின்மை என்ற தோற்றம்: தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒழுக்கமாகவும், கட்டுக் கோப்பாகவும் செயல்படுவதாகவும், அதே நேரத்தில், மகா கூட்டணியின் வெளிப்படையாக சீர்குலைவு மற்றும் ஒற்றுமையின்மையுடன் இருப்பதாகவும் அமைந்த தோற்றம் மகா கூட்டணியின் தோல்விக்கு ஒரு பலவீனமான அடித்தளத்தை அமைத்தது. எஸ் ஐ ஆர் மற்றும் ‘வாக்குத் திருட்டு’
21. ‘வாக்குத் திருட்டு’ என்ற குற்றச்சாட்டு: மகா கூட்டணியின் படுதோல்விக்குப் பிறகு, காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ், தோல்விக்கு ‘வாக்குத் திருட்டையே’ (Vote Chori) காரணம் காட்டினார். தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை என்று அவர் தெரி வித்துள்ளார்.
22. சூத்திரதாரிகள் யார்?: பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியோரை இந்தத் ‘திருட்டுக்கு’ப் பின்னால் உள்ள ‘சூத்திரதாரிகள்’ என்று ஜெய்ராம் ரமேஷ், வெளிப்படையாகவே குற்றம் சாட்டியுள்ளார்.
23. SIR-ஆல் குறிவைக்கப்பட்டவர்கள்: சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR - Special Intensive Revision of Electoral Rolls) என்ற சர்ச்சைக்குரிய நடைமுறையின் மூலம், எதிர்க்கட்சி களின் முக்கிய வாக்கு வங்கியாக உள்ள ஏழை மற்றும் பாதிக்கப்பட்ட வாக்காளர்களை நீக்குவதே நோக்கம் என்று எதிர்க்கட்சிகள் வாதிட்டன.
24. புலம்பெயர்ந்தோர் நீக்க அபாயம்: வேலை தேடி மாநிலத்தை விட்டு வெளியேறிய லட்சக்க ணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், எஸ்ஐஆர் (SIR) செயல்முறையின் போது ஆவணங்களைச் சமர்ப்பிப்பதில் சிரமப்பட்டனர். இதனால், அவர்கள் நீக்கப்படும் அபாயத்தை எதிர்கொண்டனர். கணிசமானவர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
25. சட்டவிரோதக் குடியேறிகள் நீக்கப்பட வில்லை: எஸ்ஐஆர் (SIR)- இன் முதன்மை நோக்கம் சட்டவிரோதக் குடியேறிகளை நீக்குவதாகக் கூறப்பட்டாலும், தேர்தல் ஆணையம் வெளியிட்ட தரவுகளில் ‘ஒரு சட்டவிரோதக் குடியேறியவர் கூட’ கண்டுபிடிக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
26. தேர்தல் ஆணையத்தின் பாராட்டு: பீகார் தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம், எஸ்ஐஆர் (SIR) (சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்) கணக்கெடுப்பு கட்டம் வெற்றி கரமாக முடிக்கப்பட்டதாகப் பாராட்டியது.எஸ்ஐஆர் (SIR) காலத்தின்போது, 98.2% வாக்காளர்களின் ஆவ ணங்கள் பெறப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.
27. ஜனநாயகத்தின் மீதான விவாதம்: இந்தத் தேர்தல் முடிவு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அரசியல் வெற்றியை அளித்தாலும், ‘எஸ்ஐஆர்’ சர்ச்சை, ‘வாக்குத் திருட்டு’ மற்றும் மகா கூட்டணியின் படுதோல்வி ஆகியவை தேர்தல் ஆணையத்தின் நியாயத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளன. வாக்குப்பதிவு மற்றும் கள உண்மைகள் 28. வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்குப்பதிவு: ஒட்டுமொத்தமாக, பீகார் சட்டமன்றத் தேர்தலில் 67.13% வாக்குகள் பதிவாகியுள்ளன. இது பீகார் வரலாற்றில் ஒரு சாதனை அளவாகும்.
29. முதல் கட்டத்தில் அதிர்ச்சி: தேர்தல் ஆணையத்தின் அறிக்கையின்படி, முதல் கட்டத்தில் 121 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு 64.66% வாக்குகள் பதிவாகி யுள்ளன. இது மக்கள் மத்தியில் இருந்த உற்சாகத்தைக் காட்டியது.
30. அதிக வாக்குப்பதிவும் என்டிஏ-வுக்கு சாதக மும்: பொதுவாக அதிக வாக்குப்பதிவு ஆளும் கட்சிக்கு எதிராக அமையக்கூடும் என்ற பொதுவான கருத்து, பீகாரில் தலைகீழாக மாறியது. இந்த அதி கரிப்பானது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பெரும் வெற்றிக்கு வழிவகுத்தது.
31. பெண் வாக்காளர்களின் ஆதிக்கம்: பீகார் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில் பெண் வாக்காளர்கள் ஒரு தீர்க்கமான பங்கை வகித்தனர். அவர்களின் உறுதியான ஆதரவு என்டிஏ-வின் வெற்றி க்கு அடித்தளமிட்டது.
32. நிதிஷ் மீது தனிப்பட்ட நல்லெண்ணம்: மதுவிலக்கு, காவல்துறை சீர்திருத்தங்கள் மற்றும் பெண்கள் சார்ந்த நலத்திட்டங்கள் ஆகியவை நிதிஷ் குமாரின் மீதான தனிப்பட்ட நல்லெண்ணத்தையும், அரசியல் ஆயுளையும் தக்கவைத்தன.
33. இபிசி மற்றும் ஓபிசி-களின் ஒருங்கிணைப்பு: பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் (EBCs), மகா தலித்துகள் மற்றும் யாதவர் அல்லாத பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBCs) ஆகியோர் நிதிஷ் குமார் பின்னால் உறுதியாகத் திரண்டனர்.
34. பிரதமர் மோடியின் பிரச்சாரம் : ஓபிசி மற்றும் இபிசி வாக்காளர்கள் நிதிஷ் குமார் பின்னால் ஒருங்கிணைந்த நிலையில், பிரதமர் மோடியின் தீவிரப் பிரச்சாரம் ஊசலாடும் வாக்காளர்களை (Swing Voters) ஒருங்கிணைத்தது என்கின்றனர் ஆய்வாளர்கள் .
35. கணிப்பாளர்களின் தவறான புரிதல்: கணிப்பு நிறுவனங்கள் பெரும்பாலும் நகர்ப்புற அல்லது எளிதில் அணுகக்கூடிய வாக்காளர்களை மட்டுமே மையமாகக் கொண்டிருந்ததால், கிராமப்புறங்களில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் பெண்களின் உறுதியான ஆதரவு கவனிக்கப்பட வில்லை. நலத்திட்டங்களும் ‘பணப் பரிமாற்ற’ உத்தியும்
36. ₹20,000 கோடி செலவு: தேர்தல் அறி விப்புக்கு முன்னதாக, நிதிஷ் குமார் தலைமை யிலான அரசு, புதிய நலத்திட்டங்களுக்காகச் சுமார் ₹20,000 கோடிக்கு மேல் செலவிட்டது. இது பீகாரின் வரி வருவாயில் ஒரு பெரிய பகுதியாகும்.
37. பெண்களை இலக்காகக் கொண்ட உதவி: இந்த முக்கிய நலத்திட்டங்கள் குறிப்பாகப் பெண்கள், முதியவர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளை இலக்காகக் கொண்டே தொடங்கப்பட்டன. மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களை இது முன்மாதிரியாகக் கொண்டிருந்தது.
38. 75 லட்சம் பெண்களுக்கு ₹10,000 நேரடிப் பரிமாற்றம்: முதல்வர் நிதிஷ் குமார், முதல்வர் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 75 லட்சம் பெண் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் தலா ₹10,000 பணத்தை நேரடியாகப் பரிமாற்றம் செய்தார்.
39. வாக்குப்பதிவு மத்தியில் அடுத்த தவணை: இந்தப் பணப் பரிமாற்றத்தின் அடுத்த தவணை, தேர்தலுக்கு ஒரு மாதத்திற்குப் பிறகு, நவம்பர் 7 அன்று, வாக்குப்பதிவு நடந்து கொண்டிருக்கும்போதே வழங்கப்பட்டது. இது தேர்தல் உத்தியின் உச்சமாகப் பார்க்கப்படுகிறது.
40. பெரிய பொருளாதார நிகழ்வு: கிராமப்புற ஏழைக் குடும்பங்களுக்கு ₹10,000 என்பது ஒரு பெரிய பொருளாதார நிகழ்வாகும். ஏனெனில் 2022 பீகார் சாதி கணக்கெடுப்பில், 34% க்கும் அதிக மான குடும்பங்கள் மாதத்திற்கு ₹6,000 அல்லது அதற்கும் குறைவாகவே வருமானம் ஈட்டி பிழைக்கின்றன என்று தெரியவந்திருந்தது. இந்த ஏழைக் குழுக்க ளுக்கு, குறிப்பாக பட்டியல் சாதிகள் (SCs) மற்றும் பொரு ளாதாரத்தில் நலிந்த பிரிவினரிடையே (EBCs), ₹10,000/- தொகையை அளிப்பதுஎன்பது ஒரு மாதத்திற் கும் மேலான வருமானத்திற்கு சமமாகும். இது என்டிஏ- வுக்குச் சாதகமாக மாறியது.
41. இலவச மின்சார வாக்குறுதி: பெண்கள் நலத் திட்டங்கள் மட்டுமின்றி, 125 யூனிட் வரை அனைவருக்கும் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தையும் அரசு அறிமுகப்படுத்தியது.
42. முதியோர் ஓய்வூதியம் உயர்வு: முதியோர் ஓய்வூதியம் ₹400-ல் இருந்து திடீரென ₹1,100 ஆக உயர்த்தப்பட்டது. இது முதியவர்கள் மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவான உணர்வை உருவாக்கியது.
43. ‘வாக்குறுதியா - செயல்பாடா’ என்ற சவால்: நிதிஷ் குமார் அரசின் திடீர் நலத்திட்டங்கள், மகா கூட்டணிக்கு எதிராக ‘வாக்குறுதியா -செயல்பாடா - என்ற சவாலை ஆளும் கூட்டணி தரப்பில் முன்வைக்க உதவியது.
44. மகா கூட்டணியின் வாக்குறுதி மங்கியது: நிதிஷ் குமாரின் அரசு, தேர்தலுக்குச் சற்று முன் பெரிய அளவிலான பணப் பரிமாற்றம் மற்றும் நலத்திட்டங்களைச் செயல்படுத்தியதால், மகா கூட்டணியின் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளின் (மாதந்தோறும் ₹2,500) ஈர்ப்பு மங்கியது. மகா கூட்டணியின் தாமதமான வாக்குறுதிகள் மற்றும் இளைஞர் மனநிலை
45. பொருளாதாரத்தில் நலிந்த மக்களுக்கான நீதிக்கான தீர்மானம்: காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி தலைமையிலான மகா கூட்டணி, பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினரை (EBCs) இலக்காகக் கொண்ட ‘அதி-பிச்சாடா நியாய் சங்கல்ப்’ என்ற தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.
46. உள்ளாட்சியில் 30% இடஒதுக்கீடு: இந்தத் தீர்மானத்தின்படி, நகராட்சி அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்து நிறுவனங்களில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவு மக்களுக்கு 30% இடஒதுக்கீட்டை வழங்குவதாக மகா கூட்டணி உறுதியளித்தது.
47. இடஒதுக்கீடு வரம்பு அதிகரிப்பு: இடஒதுக்கீடு வரம்பை 50%க்கும் மேல் அதிகரித்து, அதை அரசியலமைப்பின் 9ஆவது அட்டவணையில் சேர்க்க மத்திய அரசுக்கு முன்மொழியப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
48. தேஜஸ்வியின் வேலைவாய்ப்புச் சவால்: மகா கூட்டணியின் பிரச்சாரம் இளைஞர்கள் மத்தியில் நிலவிய வேலைவாய்ப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வு குறித்த அதிருப்தியைப் பயன்படுத்த முனைந்தது. தேஜஸ்வி யாதவ் வேலைவாய்ப்பை மையப்படுத்தினார்.
49. டிஜிட்டல் சத்தம் வாக்காக மாறவில்லை: இவை முக்கிய பேசு பொருளாகின. சமூக ஊடகங்களில் தீவிர விவாதங்களும் நடந்தன. ஆனால் அவை, நகர்ப்புற வாக்காளர்களை மையமாகக் கொண்டி ருந்ததால், களத்தில் என்டிஏ-வுக்கு ஆதரவாகத் திரண்ட வெகுஜன வாக்குகளில் அது தாக்கம் செலுத்தவில்லை.
50. நலத்திட்ட அரசியலின் பலம்: சமூக ஊடகங்களில் டிரெண்டிங் செய்யப்பட்ட பொருளா தாரப் பிரச்சனைகளைவிட, கிராமப்புற வாக்காளர்கள் தங்கள் வாழ்வாதாரப் பாதுகாப்பை உறுதியளித்த நிதிஷ் குமாரின் திடீர் நலத் திட்டங்களையே நம்பினர்.
