articles

img

“பொய்யை மீண்டும் மீண்டும் சொன்னால் உண்மையாகி விடாது” பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளின் பட்டியலில் மீண்டும் கியூபா இணைப்பு

“பொய்யை மீண்டும் மீண்டும் சொன்னால் உண்மையாகி விடாது” பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளின் பட்டியலில் மீண்டும் கியூபா இணைப்பு

டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, கியூபாவை மீண்டும் பயங்கரவாதத்தை ஆத ரிக்கும் நாடுகளின் பட்டியலில் இணைத்துள்ளது. இதற்கு கியூபா வெளியுறவுத்துறை அமைச்சகம் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது குறித்து கியூபா வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “பொய்யை மீண்டும் மீண்டும் சொன்னால் அது உண்மையாகிவிடாது” எனவும் விமர்சித்துள்ளது.

சர்வதேச சட்டத்திற்கு எதிரான நடவடிக்கை

இந்த சேர்ப்பு சர்வதேச சட்டத்திற்கு விரோத மானது; பல ஆண்டுகளாக ஐ.நா பொதுச்சபையில் ஏறக்குறைய ஒருமனதாக கண்டிக்கப்பட்டு வரும் அமெரிக்காவின் தொடர்ச்சியான பொருளாதாரத் தடையை மேலும் வலுப்படுத்தி விரிவுபடுத்தும் நோக்கம் கொண்டது; இது பல கடுமையான விளைவு களை ஏற்படுத்தும் என கியூபா கூறியுள்ளது. அமெரிக்க அரசாங்கம் மீண்டும் கியூபாவை ‘பயங்கரவாதத்தை ஒழிப்பு நடவடிக்கை முயற்சி களில் முழுமையாக ஒத்துழைக்காத’ நாடுகளின் பட்டியலில் அநியாயமான முறையில்  இணைத்து தன்னைத் தானே மதிப்பிழக்கச் செய்துகொள்கிறது என்றும் சாடியுள்ளது.

அரசியல் நோக்கம் கொண்ட முடிவு

கியூபாவின் அறிக்கையில் மேலும் கூறப் பட்டுள்ளதாவது: அமெரிக்க அரசு அதன் ஆதிக்க நலன்களுக்கு பணியாத நாடுகளுக்கு எதிராக ஒருதலைப்பட்சமான அரசியல் நடவடிக்கையாக சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தை மீண்டும் ஒருமுறை மாற்றியுள்ளது. சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு அமெரிக்கா வின் முந்தைய அரசு கியூபாவை இந்த பட்டிய லிலிருந்து நீக்கியது. அந்த செயல் சட்ட அமலாக்கம் மற்றும் இணக்கத்தில் இருதரப்பு ஒத்துழைப்பின் மதிப்பை அங்கீகரித்தது. இதில் பயங்கரவாதத்திற்கு எதிரான கூட்டு எதிர்ப்பும் அடங்கும்.

மாறியது அமெரிக்க அரசே, கியூபா அல்ல!

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் அப்போதிலிருந்து கியூபாவின் முன்மாதிரியான செயல்பாட்டில் எதுவும் மாறவில்லை. மாறி யிருப்பது அமெரிக்காவில் உள்ள அரசாங்கம் மற்றும் கியூபா அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாக உள்ளது என்ற கருத்தை திணிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் புதிய வெளியுறவு அமைச்சரின் நோக்கமும் தான். மேலும் இருதரப்பு உறவுகளை சீர்குலைக்கவும், இரு நாடுகளையும் நமது மக்களுக்கு விருப்பம் இல்லாத போதும் மோதல் சூழ்நிலைகளுக்குள் தள்ள  வேண்டும் என்ற நோக்கமும் உள்ளது.

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளின் இந்த பட்டியல் உறுதியான ஆதாரங்களை பற்றி பேசவில்லை. அமெரிக்காவின் புது அரசாங்கம் எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. கியூபாவை பயங்கரவாதத்திற்கு உதவி செய்யும் நாடுகளின் பட்டியலிலிருந்து நீக்க வழிவகுத்த சிறப்பு அமைப்புகளுக்கு இடையேயான ஆலோச னை செயல்முறையை மறந்து, பதவியேற்ற சில மணிநேரங்களுக்குப் பிறகு அந்த வழிமுறைகள் தலைகீழாக மாற்றப்பட்டுவிட்டன. “அதிகபட்ச அழுத்த” கொள்கையின் தொடர்ச்சி அமெரிக்காவின் இந்த நடவடிக்கை “அதிகபட்ச அழுத்தம்” மற்றும் பொருளாதார போர் கொள்கை வடிவமைப்பின் பகுதியாக உள்ளது. இந்த நடை முறையை ஊக்குவிப்பவர்கள், இந்த நடைமுறை யால் கியூபா மக்களுக்கு ஏற்படும் சேதத்தையும், பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாக முத்திரை குத்தப்படுகிற எந்தவொரு அரசுக்கும் எதிராக அவை ஏற்படுத்தும் பயங்கர விளைவையும் அறிவார்கள்.

கியூபாவின் உறுதியான நிலைப்பாடு

பயங்கரவாதத்திற்கு எதிரான தீவிர நடவடிக்கை யிலும், பயங்கரவாதத்தை கண்டிப்பதிலும் கியூபாவின் அர்ப்பணிப்பு முழுமையானது; என்றும் மாறாதது. இது பதவியில் இருக்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சரின் விருப்பங்களுக்கு ஏற்பச் செயல்படுவதல்ல. பயங்கரவாத செயல்களால் பாதிக்கப்பட்ட கியூபா, பயங்கரவாதத்திற்கு எதிரான  போராட்டத்தில் முன்மாதிரி செயல்திறன் கொண்டுள்ளது.

ஒத்துழைப்பு தராத அமெரிக்கா

ஆனால் அதற்கு மாறாக அமெரிக்க அரசாங்கம் இந்த பயங்கரவாதத்தை பொறுத்துக்கொள்கிறது அல்லது அதற்கு துணை போகிறது. லூயிஸ் போசாடா கரைல்ஸ் மற்றும் ஓர்லாண்டோ போஷ்  அவிலா போன்ற - கியூபாவுக்கு எதிரான பயங்கர வாதிகள் அமெரிக்காவின் பாதுகாப்பில் மியாமி நகரில் உல்லாசமாக வாழ்ந்தனர். 2023 செப்டம்பரில் கியூபா தூதரகத்தின் மீது  நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை நடத்திய நபரின் அடையாளம் குறித்த தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கும், கியூபாவுக்கு எதி ரான வன்முறை மற்றும் பயங்கரவாத செயல்களு டன் தொடர்புடைய அமெரிக்காவில் உள்ள 61 நபர்கள் மற்றும் 19 அமைப்புகள் தொடர்பான தகவல் பற்றிய கோரிக்கைகளுக்கும் கியூபா அரசு இன்னும் அமெரிக்காவின் பதில்களுக்காக காத்திருக்கிறது என்பதை நினைவூட்டுகிறோம்.

கியூபாவின் உறுதிமொழி

“எந்தவொரு நாட்டிற்கும் எதிரான பயங்கரவாத தாக்குதலை நடத்தவும், உருவாக்கவும், அதற்காக நிதியளிக்கவும் எங்கள் நாடு ஒருபோதும் உதவி செய்வதில்லை. மேலும் எங்கள் நாட்டின் நிலப்பரப்பு அந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்படவில்லை. ஒருபோதும் பயன்படுத்தவும் படாது.” “ஆனால் அமெரிக்காவால் நாங்கள் சொன்னதை சொல்லவே முடியாது. உண்மையை மதியுங்கள்”. இவ்வாறு கியூப வெளியுறவுத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.