articles

img

அறிவியல் விரோதச் சிந்தனைக்கு பிரதமரே தலைமை தாங்கும் போது...

நவீன மருத்துவ விஞ்ஞானத்தையும், அதுசார்ந்த மருந்துகளையும், ‘முட்டாள்தனமானவை’ என்று ஆர்எஸ்எஸ் - பாஜக ஆதரவு போலிச் சாமியார் பாபா ராம்தேவ் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மருத்துவ சங்கம் உள்பட மருத்துவ விஞ்ஞானிகள் ராம்தேவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் ராம்தேவுக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் ராம்தேவின் கருத்துக்கள் மிகவும் துரதிருஷ்டவசமானது என்றும், அதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் மெல்லியமயிலிறகால் அடிப்பது போல அடித்து வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து ராம்தேவும்தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக அறிவித்தார்.

மேற்படி ராம்தேவ், ஆர்எஸ்எஸ் - பாஜகவுக்கு மிகவும் நெருக்கமானவர். ஆயுஷ் என்ற துறையை, பாஜக அரசு முழுக்க முழுக்க பாபாராம்தேவின் ஆயுர்வேத கார்ப்பரேட் மருந்து தயாரிப்புகளுக்கென்றே குத்தகைக்கு விட்டுவிட்டது.ராம்தேவின் நிறுவனங்களுக்கு ஆயுஷ் துறையின் சார்பில் இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளை மேம்படுத்துவது என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாய்களை ஒதுக்கீடு செய்து தாரைவார்த்துள்ளது. இப்படி ஒரு வணிக உறவு பாஜகஅரசுக்கும், மேற்படி பாபாவுக்கும் இருக்கிறது. உண்மையில் ஆயுஷ் துறையை பாரம்பரியமருத்துவப் பிரிவுகளுக்கான ஆராய்ச்சிக்காக எந்தவிதத்திலும் மோடி அரசு பயன்படுத்தவில்லை என்பது தனிக்கதை.

அறிவியல் விரோதச் சிந்தனையின் தொடர்ச்சி
தற்போதைய பிரச்சனையில் பாபா ராம்தேவ்,மன்னிப்பு கேட்டுவிட்டார் என்பதோடு முடிந்துவிட்டது என்று கருத முடியாது. ஏனென்றால் அவர் வெளிப்படுத்திய கருத்து, பிரதமர் உள்ளிட்டஆர்எஸ்எஸ் - பாஜக தலைவர்களின் அறிவியல் விரோதச் சிந்தனையின் ஒரு தொடர்ச்சியே ஆகும். இந்திய நாட்டை கொரோனா தொற்று பாதிப்பு உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், மோடி அரசு அறிவியல்பூர்வமான அணுகுமுறைகளை மேற்கொள்வதற்கு பதிலாக மதரீதியாகவும், அறிவியல் விரோதமானமுறையிலும் நடவடிக்கைகளை மேற்கொண்டதால் தொற்று பாதிப்பை முறையாக கட்டுப்படுத்த முடியாமல் மிகப் பெரும் விலையை நாட்டு மக்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.இந்திய அறிவியல் மாநாட்டில் பிரதமரே அறிவியலுக்கு விரோதமாக பேசிய காட்சியை இந்தநாடு கண்டது. அறிவியல் விரோத சிந்தனைக்கு பிரதமரே தலைமையேற்கும் போது, அவரது கட்சியின் மற்ற தலைவர்கள் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் அத்தகைய சிந்தனைகளை பரப்புவதில் முனைப்பாக இருக்கிறார்கள். 

குஜராத்தை சேர்ந்த பாஜக எம்.பி. சங்கர்பாய்வேகாத், ‘‘பசுவின் சாணமும், சிறுநீரும் புற்றுநோயை குணப்படுத்தும்’’ என்று பேசினார். குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி, ‘‘இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் சேது பாலத்தை கட்டிய ராமர் எப்பேர்ப்பட்ட பொறியாளராக இருந்திருப்பார் என்று எண்ணிப் பாருங்கள்’’ எனநம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். குஜராத் கல்வித் துறை அமைச்சராக இருந்த சத்யபால்சிங், ‘‘டார்வின் கோட்பாடு அறிவியல் பூர்வமானது அல்ல, நமது மூதாதையர்கள் யாரும் குரங்கிலிருந்துதான் மனிதன் தோன்றினான் என்பதை பார்த்ததாக எழுதி வைக்கவில்லை’’ என்று பேசினார். ராஜஸ்தானில் பாஜக அரசு இருந்தபோது, அதன் கல்வித்துறை அமைச்சராக இருந்த வசுதேவ் தேவ்னானி, ‘‘பசுக்கள் ஆக்சிஜனை வெளியிடுகின்றன’’ என்று பேசினார். 

இப்போதைய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், இப்பொறுப்புக்கு வருவதற்கு முன்பு, ‘‘மகரிஷி கனாடு அவரது காலத்தில் அணுசக்தி சோதனையை நடத்தியவர்’’ என்று பேசி விஞ்ஞானிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அதோடு அவர் நிற்கவில்லை, ‘‘ஜோதிடம்தான் உலகின் மிகப் பெரிய அறிவியல். இன்னும் சொல்லப் போனால் இன்றைய அறிவியல்களை விட அது மேலானது. அதை நாம் அவசியம் வளர்த்திட வேண்டும்’’ என்று கூறியவர். விவசாயத் துறை அமைச்சராக இருந்த ராதாமோகன் சிங், ‘‘நாம்விதைக்கும் விதைகளின் வீரியத்தை பரமாத்மா சக்தியின் கதிர்களை உட்செலுத்துவதன் மூலம் அதிகரிக்க முடியும். அதற்கு விதைகளைக் கொண்டு யாகம் நடத்த வேண்டும்’’ என்று கூறியவர்.

இவர்கள் எல்லோரையும் தூக்கிச் சாப்பிடுகிறார் நரேந்திரமோடி. இந்திய அறிவியல் மாநாட்டில், ‘‘நாம் விநாயகரை போற்ற வேண்டும். அந்தகாலகட்டத்திலேயே உருவான ஒரு பிளாஸ்டிக்அறுவை சிகிச்சை நிபுணர் விநாயகர். மனித உடலில் யானையின் தலையை பொருத்திக் கொண்டவர். அவர் மூலமாகத்தான் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை என்ற நடைமுறை துவங்கியது’’ என்று கூறி மொத்த அறிவியல் சமூகத்தையும் அதிரச் செய்தவர். இதுபோன்ற கருத்துக்களை அவ்வப்போது அவர் உதிர்ப்பது வழக்கம். காலநிலை மாற்றத்தைப் பற்றிய ஒரு உரையில், ‘‘காலநிலை மாற்றம் என்பது உண்மையில்நடக்கவில்லை. நாம்தான் மாறிக் கொண்டிருக்கிறோம். நமது பழக்கவழக்கங்கள் மாறிவிட்டன. நமது பாரம்பரிய பழக்கவழக்கங்கள் சிதைக்கப்பட்டதால்தான் காலநிலை மாறுவது போல தெரிகிறது’’ என்று கூறி, இன்றைய உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் காலநிலை மாற்றப் பிரச்சனையையே ஒன்றுமில்லை என்று ஆக்கியவர்.

பிரதமரும், அமைச்சர்களும் இந்த வேகத்தில்செல்லும்போது, பல்வேறு மாநில பாஜக எம்.பி.கள், எம்எல்ஏக்கள், ஆர்எஸ்எஸ் - பாஜக ஊழியர்கள், அவர்களை பின்பற்றுகிற ஆதரவாளர்கள் என நாடு முழுவதும் இந்த காவிக் கூட்டம் நாட்டு மக்களிடையே அறிவியல் விரோதச் சிந்தனைகளை விதைப்பதிலும், பரப்புவதிலும் அதிவேகம் காட்டுவது வியப்புக்குரியது அல்ல! மோடி அரசு கொண்டு வந்துள்ள புதியகல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மேற்கண்ட விஷயங்கள் தான் பாடமாக குழந்தைகளுக்கு கற்றுத் தரப்படும். எதிர்கால இந்திய சமூகமே இதனால் சிதைந்து போகும் ஆபத்து உள்ளது.

அறிவியலை அவமானப்படுத்தும் சுகாதார அமைச்சர்
கொரோனா பாதிப்புக்கு தடுப்பூசியும், இதர பல மருந்துகளும் அவசியம் என்ற நிலை இருக்கிறது. நாட்டின் சுகாதார கட்டமைப்பை போர்க்கால அடிப்படையில் வலுப்படுத்த வேண்டிய தேவை முன்னுரிமையாக நிற்கிறது. இத்தகைய தருணத்திலும் கூட இந்தக் கும்பல் அறிவியலைப் பற்றி நிற்காமல், நவீன மருத்துவ விஞ்ஞானம் வழங்கியுள்ள வாய்ப்புகளை மக்களுக்கு கொண்டு போய்ச் சேர்க்காமல் பசுவின் சாணத்தையும், கோமியத்தையும் பயன்படுத்தி கொரோனாவை விரட்டுங்கள் என்று மக்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கிறார்கள். இதன் உச்சகட்டமாக பசுவின் சாணத்தையும், சிறுநீரையும் ஆய்வு செய்து அதன் ‘மருத்துவப் பயன்பாடுகளை’ வெளிக் கொண்டு வருவதற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து, இந்த நாட்டின் அறிவியல் பாரம்பரியத்திற்கே அவமானத்தை தேடி தந்திருக்கிறார் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன். இதுபற்றி பீப்பிள்ஸ் டெமாக்ரசி ஏடு தனது தலையங்கத்தில் கடுமையாக சாடியிருக்கிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் மக்களிடையே மூட நம்பிக்கைகளை அகற்றுவதற்கும், அறிவியல் சிந்தனைகளையும் பகுத்தறிவையும் பரப்புவதற்கும் பாடுபட வேண்டும், அது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமைகளில் ஒன்று என்றுகூறுகிறது. அரசியலமைப்புச் சட்டத்தையே எள்ளி நகையாடுகிற, அவமதிக்கிற கூட்டம்தான்மத்தியில் ஆட்சியில் இருக்கிறது. எனவே அவர்கள் அறிவியலுக்கு விரோதமாக செயல்படுவதிலும், பேசுவதிலும் ஆச்சரியமில்லை. அதனொரு பகுதியாகத்தான் பாபா ராம்தேவும் நவீனமருத்துவ அறிவியலை முட்டாள்தனம் என இழிவுபடுத்தியிருக்கிறார்.ஆனால் இவர்களது பேச்சும் செயல்பாடுகளும் ஒட்டுமொத்த நாட்டு மக்களின் நலன்களை சிதைப்பவை. இத்தகைய சிந்தனை கொண்டவர்கள் ஆட்சியில் இருக்கும் நாடு, எந்த பிணியிலிருந்தும் நிரந்தரமாக மீள முடியாது. எனவே, பிணியை அகற்ற நம்மைப் பீடித்திருக்கும் ஆர்எஸ்எஸ் - பாஜக என்கிற பிணியை முதலில்அகற்ற வேண்டியுள்ளது.

கார்ட்டூன் : நன்றி சதீஷ் ஆச்சார்யா 

கட்டுரையாளர் : ஜி.ராமகிருஷ்ணன்