articles

img

ஆர்எஸ்எஸ் - பாஜகவின் கனவுக்கு பலத்த அடி கொடுத்த மக்கள்.... ஜி.ராமகிருஷ்ணன் நேர்காணல்....

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடந்து முடிந்து புதிய அரசுகள் பதவியேற்றுள்ள நிலையில், இத்தேர்தல்கள் குறித்த பல்வேறு ஆய்வுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நக்கீரன் யு டியூப் சேனலுக்கு, தேர்தல் முடிவுகள் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் அளித்த நேர்காணல் இது. (நேர்காணலின் முதல் பகுதி இங்கு தரப்படுகிறது. மேற்குவங்க தேர்தல் முடிவுகள் தொடர்பான அடுத்த பகுதி நாளை இடம் பெறும்)

$ தமிழக அரசியலில் மாற்றம் – பரபரப்பான சூழல் – இந்நிலையில் திமுக கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின்அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.  அவரோடு திமுகஅமைச்சர்களும் பதவியேற்றிருக்கிறார்கள்.  திமுக அணியின் வெற்றி – அதிமுக அணியின் தோல்வி – இதைப்பற்றி உங்களது கருத்துக்கள் …

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராகவும், அவரையும் சேர்த்து 34 அமைச்சர்கள் பதவி ஏற்றிருக்கிறார்கள்.  அவர்களுக்கு என் சார்பாகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாகவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  தமிழ்நாட்டில் வரவேற்கத்தக்க ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.  கடந்த 10 ஆண்டு காலமாக அதிமுக ஆட்சியில் நீதி நிர்வாகம் மிகவும்மோசமாகிவிட்டது.  மாநில அரசுக்கு 5லட்சம் கோடிக்கு மேல் கடன் உள்ளது. ஒருவருடத்திற்கு வட்டியாக மட்டும் ரூ.53,000கோடி செலுத்த வேண்டியுள்ளது.  தொழில்வளர்ச்சி மிகுந்த வீழ்ச்சியை அடைந்துள்ளது.  சிறு குறு தொழில்கள் கடுமையானபாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன.  வேலைவாய்ப்பு, வேலை செய்யத் தகுதி உள்ளஇளைஞர்களுக்கு வேலை கிடைக்காமல் இருப்பது என்பது அநேகமாக இதர பல மாநிலங்களை விட இங்கு கூடுதலாக உள்ளது.  ஊழல், முறைகேடு எல்லா துறைகளிலும் நிறைந்திருக்கின்றது.  எல்லாவற்றிற்கும் மேலாக மத்தியில் ஆளக்கூடிய பாஜக-மோடி அரசு, அந்த அரசின் பலதிட்டங்கள் தமிழக மக்களையும், நாட்டுமக்களையும் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாக்கின.  எனினும், அதிமுக அரசாங்கம் அக்கொள்கைகளை அப்படியே ஆதரித்தது, அமலாக்கியது.  ஒட்டுமொத்தமாக, மாநில அதிமுக அரசு மத்திய பாஜக அரசாங்கத்தின் ஒரு எடுபிடி அரசாக செயல்படக் கூடிய மோசமான நிலை உருவானது.  இந்த ஆட்சியைப் பயன்படுத்தி பாஜக தமிழ்நாட்டில் காலூன்றுவதற்கு மிகப் பெரும் முயற்சியை மேற்கொண்டது.  மதவாத, சாதிய சக்திகள் வலுப் பெறுவதற்கும். ஒரு மோசமான அரசு உருவாவதற்கும் இடமளித்து விடக் கூடாது என்ற காரணத்திற்காகத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், மதிமுக போன்றகட்சிகள் உடன்பாடு வைத்து போட்டியிட்டோம்.  அந்த அடிப்படையில் மக்கள் மகத்தான தீர்ப்பை அளித்திருக்கிறார்கள்.  திமுகவிற்கு 125 தொகுதிகள், கூட்டணி கட்சிகளை சேர்த்தால் 159 தொகுதிகள் என  மகத்தான ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.  அதிமுக தோல்வி அடைந்துள்ளது.  இன்னும் சொல்லப் போனால், அதிமுக அணிக்கு இந்த அளவிற்குக் கூட வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை.  சிலஇடங்களில் சாதிய பின்புலத்தாலும் அதிமுக சற்று கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார்கள்.  தமிழகத்தில் ஆட்சி மாற்றம் என்பது வரவேற்கத்தக்கது.  மக்கள் மிகப் பெரிய நல்ல தீர்ப்பை அளித்திருக்கிறார்கள் என்பதைத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கூற விரும்புகிறேன்.

                                              ******************

$  தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் – இந்த மூன்று மாநில தேர்தல்களிலும் பாஜக மிக மோசமான தோல்வியை அடைந்துள்ளது.  இந்தத் தோல்விகள் குறித்து உங்களது கருத்து என்ன?அதே போன்று குறிப்பாக கேரளாவில்பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரிகள் ஆட்சி மீண்டும் அமைந்துள்ளது.  அவருடைய அந்த அமோக வெற்றி குறித்தும் சொல்லுங்கள்...

பாஜகவின் திட்டமென்பது மத்தியிலும் மாநிலத்திலும் அதிகாரத்திற்கு வருவது மட்டுமல்ல.  ஆர்எஸ்எஸ் அமைப்பின் 100 ஆண்டு கால நிகழ்ச்சி நிரலான இந்துத்துவா – இந்துராஷ்டிரமாக இந்தியாவை மாற்றுவது என்பதே அவர்களது அடிப்படை நோக்கமாகும்.  ஆகவே, மத்தியில் ஆட்சியில் இருக்கக் கூடிய பாஜக, மாநிலங்களிலும் அதிகாரத்திற்கு வருவதற்கு பெரிய முயற்சியை எடுத்து வருகிறார்கள்.  எதிர்கட்சி ஆட்சியதிகாரத்தில் இருந்தால் அந்த ஆட்சியைக் கவிழ்த்து, தங்களது தலைமையில் ஆட்சியை அமைக்க முயற்சிக்கிறார்கள்.  கர்நாடகம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் செய்தார்கள்.  தற்போது பாண்டிச்சேரி ஆட்சியைக் கவிழ்த்துதான் தேர்தல் என்பது நடந்தது.  இது ஒரு வகை என்றால், மாநிலக் கட்சியோடு உடன்பாடு வைத்து எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க முயற்சிப்பது மற்றொரு வகையாகும்.  அந்த அடிப்படையில்தான், தமிழகத்தில் பாஜக முயற்சி செய்தது, படுதோல்வியை அடைந்துள்ளது.  

கேரளாவைப் பொறுத்தவரை, அநேகமாக 1980க்குப் பிறகு ஒரு முறை ஒரு கூட்டணி ஆட்சிக்கு வந்ததென்றால், 5 வருடங்களுக்குப் பிறகு இரண்டாவது முறையாக அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வர முடிவதில்லை.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான அணிஆட்சியிலிருக்கும்.  அடுத்து இந்த அணிதோல்வியடைந்து காங்கிரஸ் தலைமையிலான அணி ஆட்சியை அமைக்கும்.  இதுதான் கடந்த காலத்தில் இருந்து வந்த நிலைமையாகும்.  ஆனால், தற்போது 2016ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - தோழர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநயாக முன்னணி வெற்றி பெற்று ஆட்சியில் இருந்தது.  தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக அங்கு இந்த அணி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. சொல்லப் போனால், ஏற்கனவே திருவனந்தபுரத்தில் சென்ற தேர்தலில் ஒரு தொகுதியில் வெற்றிபெற்ற பாஜக அந்த தொகுதியில் தற்போது தோல்வியடைந்துள்ளது.  கேரளாவில் பாஜக ஒரு தொகுதியில் கூடவெற்றி பெற இயலவில்லை என்பது மட்டுமின்றி, பாஜக பெற்ற வாக்குகள் 2016 ஆம் ஆண்டை விட தற்போது குறைந்துள்ளது.  அதே போன்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றதோடு வாக்கு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.  

2016ல் 91 தொகுதிகளில் வெற்றி பெற்ற இடது ஜனநாயக முன்னணி தற்போது 99 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.  வாக்கு சதவிகிதமும் கூடியுள்ளது.  இது ஒட்டுமொத்தமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடைப்பிடிக்கக் கூடிய மாற்றுக் கொள்கைக்கு கிடைத்த வெற்றியாகும்.  உதாரணமாக, இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்டு பல மாநிலங்களில் அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன.  கேரளாவில் 2016ல் இடது ஜனநாயக முன்னணி– பினராயி விஜயன் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அரசுப் பள்ளிகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்திட நடவடிக்கைகள் எடுத்தது.  இதன் காரணமாக தனியார் பள்ளிகளில் படித்து வந்த மாணவர்களில் கிட்டத்தட்ட 6 லட்சம் பேர் அரசுப் பள்ளிகளுக்கு வந்திருக்கிறார்கள்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரையில் கல்வி என்பது இலவசமாக இருக்க வேண்டும்.  கல்வியை அரசுதான் அளிக்க வேண்டும்.  இரண்டாவதாக, மற்ற மாநிலங்களில் மாநில பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்படுகின்றன அல்லது மூடப்படுகின்றன.  கேரளாவில் மூடிக்கிடந்த மாநிலபொதுத்துறை நிறுவனங்களைத் திறந்து, அவற்றை லாபகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மூன்றாவதாக, சுகாதாரமென்பது இலவசமாக இருப்பதுமட்டுமின்றி, மக்களை பாதுகாக்கக் கூடியமுக்கியமான மக்கள் நல்வாழ்வு நடவடிக்கையில் கூடுதலாக கவனம் செலுத்தினார்கள். இதன் காரணமாக, 5 ஆண்டு காலத்தில் நிபா வைரஸ் வந்தபொழுது மாநில அரசு முழு முயற்சிகளை எடுத்து மக்களை பாதுகாத்தது. தற்போது கொரோனா இரண்டாவது அலை வீசிக்கொண்டுள்ளது.  முதல் அலை வந்தபோதும், இரண்டாவது அலை வந்தபோதும், கேரளாவில் பொது சுகாதாரம் பிரதானமாக இருக்கிறது.  அரசு மருத்துவமனைகள், அரசு சுகாதாரத் திட்டங்கள் என்ற அடிப்படையில் கொரோனா முதல்அலை, இரண்டாவது அலை வந்தபோதும் மக்களைப் பாதுகாப்பதில், கொரோனாவைத் தடுத்து நிறுத்துவதில் மகத்தான சாதனையை கேரள அரசாங்கம் செய்துள்ளது.  இரண்டு முறை மோசமான வெள்ளம் வந்தபோதும் மக்களை பாதுகாத்துள்ளார்கள்.  கேரள அரசாங்கம் என்பது இன்றைய சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சொல்லக் கூடிய ஒரு மாற்றுக் கொள்கையை அமலாக்குவதில் மிகவும் அக்கறையுடன் இருந்தது. அந்தக் கொள்கைகள் வெற்றி பெற்றதால்தான் இரண்டாவது முறையாக அம்மாநிலத்து மக்கள் இடது ஜனநாயக முன்னணிக்கு வெற்றியை அளித்துள்ளார்கள்.  

மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரையில், பாஜக பகீரதப் பிரயத்தனம் செய்தது.  அம்மாநிலத்திற்கு பிரதமர் எத்தனை முறை சென்றார், உள்துறை அமைச்சர் எத்தனை முறை சென்றார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.  மேற்கு வங்கத்தில் 8 கட்டமாகத் தேர்தலைநடத்தியதே இவர்கள் இருவரும் அங்குசென்று வரவேண்டும் என்பதற்காகத்தான்.  எனினும், அங்கு பாஜக தோற்கடிக்கப்பட்டு, மம்தா பானர்ஜி ஆட்சிக்கு வந்துள்ளார்.  இந்துத்துவா ராஷ்டிரம் என்ற தனது கனவிற்கு, அனைத்து மாநிலங்களையும் கைப்பற்ற வேண்டும் என்ற ஆர்எஸ்எஸ் - பாஜகவின் முயற்சிக்கு இந்த தேர்தல்களில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் ஆகியவற்றில் மிகப் பெரிய தோல்வி  கிடைத்துள்ளது.  வரவேற்கத் தக்க தீர்ப்பைமக்கள் அளித்துள்ளார்கள்.  இன்னும் சொல்லப் போனால், உத்திரப் பிரதேசத்தில்சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் அயோத்தி உள்ளிட்ட மாவட்டங்களில் பாஜக தோற்றுள்ளது.  பிரதமர் மோடி வெற்றி பெற்ற வாரணாசி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட தொகுதிகளில் கூட பாஜக தோல்வியை அடைந்துள்ளது.  ஆகவே, இந்தியாவை ஒரு மதச்சார்புள்ள நாடாக மாற்றும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் பாஜகவிற்கு கேரள, தமிழக, மேற்கு வங்க மக்கள் ஒரு மிகப் பெரிய அடியைக் கொடுத்துள்ளார்கள்.  மக்களது இத்தகைய தீர்ப்பு வரவேற்க வேண்டிய ஒன்றாகும். 

                                              ******************

$  கேரளா, தமிழ்நாடு இரண்டு மாநிலங்களிலும் பாஜக இல்லாத நிலைதான் உள்ளது.  கேரளாவில் முழுமையாகத் துடைத்தெறியப்பட்டுள்ளது.  ஆனால், தமிழகத்தில் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தினுள் நுழைகிறார்கள்.  இது பாஜகவின் வளர்ச்சிக்கான பாதை என்று சொல்லமுடியுமா?

இதை பாஜகவின் வளர்ச்சிக்கான பாதையாக நாம் பார்க்க முடியாது.  பாஜக அதிமுகவுடன் உடன்பாடு கொண்டு20 தொகுதிகளில் போட்டியிட்டது.  முதலாவதாக, வெற்றி பெற்ற இந்த நான்குதொகுதிகளைத் தவிர மற்றவற்றிலெல்லாம் மிகவும் குறைவான வாக்குகளையே பாஜக வேட்பாளார்கள் பெற்றிருக்கிறார்கள்.  இரண்டாவதாக அதிமுக, பாமக, பாஜக உடன்பாடு வைத்து போட்டியிடுகிறபோது, அதிமுகவின் செல்வாக்கு, அதன் வாக்கு பலம் ஆகியவற்றின் அடிப்படையில் பாஜக வெற்றி பெற்றதே தவிர அதை பாஜகவின் வெற்றி என நாம் பார்க்க முடியாது.  ஏற்கனவே தமிழக சட்டமன்றத்தில் இப்படி மாநிலக் கட்சியோடு உடன்பாடு வைத்து சட்டமன்றத்திற்கு சென்றிருக்கிறார்கள்.  பாஜகவின் வெற்றி அதிமுகவின் பலத்தால் பெற்ற வெற்றியே அன்றி அதன் கொள்கைக்கு கிடைத்த வெற்றியாக பார்க்க முடியாது.  எனவே, இந்த தேர்தல் முடிவுகள் பாஜகவின் வளர்ச்சிப் பாதையைக் காட்டுகிறது என பார்க்கத் தேவையில்லை.

                                              ******************

$ கொங்கு மண்டலம் வெற்றி … அதிமுகவின் வெற்றி பலத்தினையும் இதே போன்று விமர்சனத்துக்கு உள்ளாக்குகிறார்கள். அங்கு சாதி ஓட்டுக்களாக மாறி யாருக்கோ என்று சொல்லும்போது அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பொதுவாக தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் காலத்தில் நிலவும் அரசியல் சூழல்தான் தேர்தல் முடிவை தீர்மானிக்கும். ஆனால், நடந்து முடிந்த இந்த சட்டமன்ற தேர்தல்களில் மாநில முதலமைச்சர், அவர் சார்ந்த சமூகம் என்ற அப்படிப்பட்ட கட்டமைப்பை, எண்ணத்தை உருவாக்கியதும், அடுத்து ஆளுங்கட்சி, ஆளும் அமைச்சர்கள் என்றும் இல்லாத அளவிற்கு அதிகமாக பணப்பட்டுவாடா செய்ததும் என இவை இரண்டும் சேர்ந்து மேற்குமாவட்டங்களில் அதிமுக அணி கூடுதலாக வெற்றி பெற்றதற்கு முக்கியமான காரணமாக அமைந்தது என்பதைத்தான் பல ஆய்வுகள் சொல்கின்றன.

                                              ******************

$    தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கட்சி 6 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களில் வெற்றி பெற்றீர்கள்.  இது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 6 இடங்களில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளில் மட்டுமேவெற்றி பெற்றது.  இது சம்பந்தமாக கட்சியின் சம்பந்தப்பட்ட மாவட்ட குழுக்களும், மாநிலக் குழுவும் பரிசீலிக்க உள்ளோம்.  இருந்தாலும் இதன் பின்னணியை கொஞ்சம் விளக்க வேண்டியுள்ளது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை, தமிழகம் முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் பரவலான அமைப்புகளைக் கொண்ட கட்சியாகும்.  ஆனாலும், சில மாவட்டங்களில் மட்டும்தான் கட்சிக்கு வாக்கு பலம் இருக்கிறது.  கன்னியாகுமரி, சென்னை போன்ற மாவட்டங்கள் ஒப்பீட்டளவில் கட்சிக்கு வாக்கு பலமுள்ள மாவட்டங்கள் ஆகும்.இந்தப் பின்னணியில், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு தொகுதியிலும், சென்னை மாவட்டத்தில் ஒரு தொகுதியிலும் நாங்கள் போட்டியிட வாய்ப்பு கிடைத்திருந்தால் இன்னமும் கூடுதலாக இரண்டு தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெற்றிருக்க முடியும் என்பதையும் நான் குறிப்பிட விரும்புகிறேன்.  

                                              ******************

$  கேரளாவில் பாஜக துடைத்தெறியப்பட்டுள்ளது.  சென்றமுறை வென்ற ஒரு தொகுதியில் கூட இந்த முறைவெற்றி பெறவில்லை என்ற நிலையேபாஜகவிற்கு ஏற்பட்டுள்ளது.  அதே நேரத்தில் வரலாற்றில் முதன் முறையாக இடது ஜனநாயக முன்னணி இரண்டாவது முறையாக வெற்றி பெற்றிருக்கிறது.  இந்த சூழலை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

கடந்த 5 ஆண்டுகளில் கேரளாவில் எப்படியாவது இடதுசாரி ஆட்சியை சீர்குலைத்திட மத்திய பாஜக அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியது.  கேரள மாநில அரசுக்கு பெரிய அளவில் தொல்லை கொடுத்தது.  குறிப்பாக மத்திய அரசின் அமலாக்கத் துறை மூலம் விசாரணை, இந்த மந்திரி ஊழல் செய்தார் என்றெல்லாம் செய்தியை வரச் செய்து, அந்த அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொல்வது என்பதெல்லாம் நடந்தது.  தங்கக் கடத்தல் பிரச்சனையில் விமான நிலையம் என்பது மத்திய அரசின் சுங்க இலாகாவின் கீழ் வருகிறது.  மாநில அரசுக்கு இதில் எந்த தொடர்பும் கிடையாது.  கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தங்கக்கடத்தல் பிரச்சனை வெளியில் வந்த உடனே கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றைஎழுதினார்.  இப்பிரச்சனையில் மத்திய அரசுஉடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்திடுமாறு அதில் கோரியிருந்தார்.

ஆனால், இந்த வழக்கில் எப்படியாவது முதலமைச்சரை தொடர்புபடுத்திட பகீரத முயற்சியை மேற்கொண்டார்கள்.  சம்பந்தப்பட்ட பெண்மணியை முதலமைச்சருக்கு எதிராக வாக்குமூலம் கொடுக்கும்படி நிர்ப்பந்தித்தார்கள்.  ஆனால், இதில் முதலமைச்சருக்கோ, கட்சிக்கோ எந்த தொடர்பும் கிடையாது. இப்படி எல்லா பிரச்சனைகளிலும் முதலமைச்சர் மீதும், அம்மாநில அமைச்சர்கள் மீதும் ஏதாவது குற்றச்சாட்டுக்களை சுமத்தி, அவர்கள் மீது வழக்கு போட்டு அவர்களது நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கக் கூடிய முயற்சியை மத்தியில் இருக்கும் மோடி அரசாங்கம் செய்தது.  அப்படி செய்கிற போதெல்லாம், திடீரென முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும், இன்னொரு அமைச்சர் ராஜினாமா செய்யவேண்டும் என்பார்கள்.  இப்படி ஒரு அறிக்கையை காலையில் பாஜக வெளியிட்டால், அன்று மாலையே இவர்களது ராஜினாமாவைக் கோரி கேரள காங்கிரஸ் அறிக்கை வெளியிடும்.  ஆனால், இதையெல்லாம் கேரள மாநில மக்கள் ஏற்கவில்லை.  இதைத்தான் பினராயி விஜயன்மிக அழகாகக் குறிப்பிட்டார்:  “இதுவரையில் மோடியோ, மத்திய அரசோ சந்தித்த, எதிர்கொண்ட தலைவர்கள் வேறு – நாங்கள் வேறு.  எங்களது வாழ்க்கை என்பதுதிறந்த புத்தகம் ஆகும்.  உங்களது தவறான பிரச்சாரத்தை கேரள மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்” என்றார்.  இவ்வாறு உறுதியாக, அந்த மக்களைச் சார்ந்து இருந்ததால், மக்களுக்காக பாடுபட்டதால், வெளிப்படைத் தன்மையோடு அரசு நடந்து கொண்ட காரணத்தால் அம்மாநில மக்கள் இடது ஜனநாயக முன்னணிஅரசை இரண்டாவது முறையாக தேர்ந்தெடுத்துள்ளார்கள்.  இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுத்ததோடு மட்டுமின்றி, 2016ஐ விட எண்ணிக்கையிலும், வாக்கு சதவிகிதத்திலும் கூடுதலாகப் பெற்று அந்தஅணி வெற்றி பெற்றுள்ளது. 

 ஜி.ராமகிருஷ்ணன் நேர்காணல்

தொகுப்பு: எம்.கிரிஜா