இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றிற்கு இரண்டு தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒன்று ‘கோவி ஷீல்ட்’ இதனை சீரம் என்ற நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கிறது. இந்த தடுப்பூசியை கண்டுபிடித்தது இங்கிலாந்தைச் சேர்ந்த நிறுவனம். மற்றொரு தடுப்பூசி ‘கோவேக்சின்’, இதனை தயாரிப்பது பாரத் பயோடெக். இந்த தடுப்பு மருந்து நாசிக்கில் உள்ள இந்திய அரசுக்குச் சொந்தமான நிறுவனத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுவரையிலும், இந்த இரண்டு நிறுவனங்களும்தான் தடுப்பூசிகளை தயாரித்து இந்தியா முழுவதும் விநியோகிக்கின்றன. இன்னும் சில நாட்களில் ரஷ்ய கண்டுபிடிப்பான ஸ்புட்னிக் 5 என்ற தடுப்பூசி புழக்கத்திற்கு வரலாம் என மத்திய அரசு சொல்லியுள்ளது. இந்தியாவில் மட்டும் உற்பத்தி செய்யப்படும் கோவி ஷீல்ட் தடுப்பூசி தற்போது ஒரு மாதத்திற்கு 6 கோடி டோஸ்கள் என்ற அளவில் உற்பத்தியாகிறது. விரைவில், இந்த உற்பத்தி 10 கோடி என்ற அளவில் உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 10 கோடி டோஸ்களும் இந்தியாவிற்குள்ளேயே பயன்படுத்தப்படும் என்ற உத்திரவாதம் கிடையாது. ஏனென்றால், இதில் ஒரு பகுதியை இந்த மருந்தைக் கண்டுபிடித்த இங்கிலாந்து நிறுவனத்திற்கு தரவேண்டி இருக்கும். இதன்படிதான் முதலில் உற்பத்தி செய்யப்பட்ட 16 கோடி டோஸ்களில் 10 கோடியை அந்த நிறுவனத்திற்கு கொடுத்துவிட்டு, 6 கோடியை இந்தியாவிற்குள் விநியோகித்துள்ளனர்.
பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த பிரச்சனை இல்லை. ஆனால் அதனுடைய உற்பத்தி திறன் அதிகபட்சமாகவே மாதத்திற்கு 6 கோடி டோஸ்கள் என்ற அளவிலேயே இருக்க வாய்ப்புண்டு. சீரம் மற்றும் பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்கள் தயாரிப்பு மற்றும் வெளிநாட்டு இறக்குமதி என அனைத்தும் மொத்தமாக ஒரு மாதத்திற்கு 20 கோடி டோஸ்கள் (அப்படி நடக்க வாய்ப்பே இல்லை) என்று தடுப்பூசி கைவசம் கிடைப்பதாக கணக்கிட்டாலும் கூட, 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசிகள் செலுத்தி முடிக்க (78 கோடி * 2 = 156 கோடி/20 = 7. 8 மாதங்களாவது ஆகும். இதுவே இப்போதுள்ள நிலைமையில் 15 கோடி டோஸ் ஒரு மாதத்திற்கு உற்பத்தி செய்கிறோம் என்றால் 11 மாதங்கள் ஆகும். இந்த நிலையில் மே 1 ஆம் தேதி முதல், 18 வயது நிரம்பியவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. அதாவது, இன்னும் ஒரு வருடம் ஆனாலும், 18 வயது நிரம்பிய அனைவருக்கும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுவது சாத்தியம் இல்லை என்ற நிலைமைதான் ஏற்படும்.
இதுதான் நிலைமை என்றால், 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி என்பதை அரசு ஏன் அறிவித்தது?. கொரோனா தடுப்பூசிக்கான தேவையை பன்மடங்கு அதிகரித்து, அதன் மூலம் கொள்ளை லாபம் பார்ப்பதற்காகவே இந்த அறிவிப்பு பயன்படும் என்பதுதான் அதற்கான பதிலாகும்.
மோடி அரசு செய்த அறிவிப்புடன், அரசின் இன்ன பிற அறிவிப்புகளையும் இணைத்துப் பார்த்தால், நோய் தடுப்பு நடவடிக்கையை முன்வைத்து கொள்ளை லாபத்திற்கு கதவைத் திறந்துவிடும் ஏற்பாடு என்பது புரிந்துவிடும். இப்படிச் சொன்னதும், நியாய உள்ளங்களைப் போல சிலர், அரசை எப்போது பார்த்தாலும் குறை சொல்லலாமா? என்று சிலர் கொக்கரிப்பது கேட்கிறது. இந்த அரசாங்கம்தான் ரெம்டெசிவர் மற்றும் அதன் கச்சாப்பொருட்கள் மீது சுங்க வரி மற்றும் ஜி.எஸ்.டி வரியாக 26.5% வரி போட்டு வசூலிக்கிறது. உயிர் காக்கும் மருந்து தன்னிடம் வசம் இல்லாதபோது, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தால், அதற்கு வரிச் சலுகை தருவதும், இந்தியாவில் அதிகமாக உற்பத்தியாகும் ஒரு பொருள், இறக்குமதி செய்யப்பட்டால், அதன் மீது கூடுதல் வரி விதிப்பதுமே இயல்பான நடைமுறை. ஆனால் 56 இன்ச் மார்பு உள்ள இந்த அரசாங்கத்திற்கு 7 ½ கிலோ மூளை இருப்பதால் சற்று வித்தியாசமாக சிந்தித்து, பகல் கொள்ளை அடிக்கிறார்கள்.
18 வயது நிரம்பியவர்களுக்கும் தடுப்பூசி என்று சொன்னதோடு மட்டுமில்லாமல் வேறு சில விசயங்களையும் அரசாங்கம் அறிவித்தது.
1) 50% தடுப்பூசி உற்பத்தியை மட்டும் மத்திய அரசுக்கு தர வேண்டும்.
2) மாநில அரசுகளுக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும், தனியார் மருந்து வியாபாரிகளுக்கும் 50% தடுப்பூசிகளை தரலாம் என்றும்.
3) மத்திய அரசு தவிர மற்றவர்களுக்கு தருகிற மருந்திற்கு விலையை அந்த நிறுவனம் தீர்மானித்து அறிவிக்கலாம் என்றும் சொல்லியுள்ளார்கள். இதன்படி, சீரம் நிறுவனம் தன்னுடைய தடுப்பூசிக்கான விலையை ரூ. 150 ரூபாயிலிருந்து, மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் ரூ.400 என்றும் (2.67 மடங்கு உயர்வு), தனியாருக்கு ஒரு டோஸ் விலையை 4 மடங்கு உயர்த்தி ரூ.600 என்றும் அறிவித்திருக்கிறது.
இப்போது எழும் கேள்வி இதுதான். கோவி ஷீல்ட் இதுவரை நட்டத்தில் தயாரித்து விற்கப்பட்டதா? சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி திரு. ஆடெர் பூனேவாலா சமீபத்தில் கொடுத்த பேட்டியில், ரூ.150 என்ற விலை, லாபத்தை அடக்கியதுதான் என்றார் (ஏப்ரல் 7, என்.டி.டி.வி) ஆனால், இந்த தடுப்பூசியை சர்வதேச சந்தை விலையில் விற்றால் ரூ.1470 என்ற அளவில் விற்க முடியும் என்றும் குறைந்தபட்சம் ரூ.1000 என்ற அளவிலாவது விற்க அனுமதிக்க வேண்டும் என்றும், ஒரு தொழில் செய்வதற்கு லாபம் மட்டுமே போதாது, அதிக லாபம் வேண்டும் என்றும் அதே பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். (லாபம் மட்டுமே போதாது, கொள்ளை லாபம் வேண்டும் என வெளிப்படையாகவே கேட்கிறார்)
இங்கே எழக்கூடிய கேள்வி என்னவென்றால் ரூ.150 அளவிலேயே லாபமும் சேர்த்து விற்க முடிகிற ஒரு தடுப்பூசியை என்ன காரணத்திற்காக கொள்ளை லாபத்தில் விற்பதற்கு மத்திய அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்? ஏறத்தாள 100 கோடி டோஸ்கள் இந்த நிறுவனம் உற்பத்தி செய்கிறதென்றால் ஒரு டோசுக்கு ரூ.1 லாபம் என்றால் கூட 100 கோடி ரூபாய்கள் லாபமாக கிடைக்கும். இப்போது மாநில அரசுகளுக்கு உயர்த்தப்பட்டிருக்கும் விலையை லாபமாக வைத்துக்கொண்டால், மோடி அரசின் ஒரே அறிவிப்பின் மூலம், தடுப்பூசி நிறுவனம் பெறக்கூடிய லாபம் குறைந்தபட்சம் ரூ. 25000 கோடிகள் ஆகும். தனியார் மருத்துவமனைகளுக்கு தரப்படும் விலையோடு கணக்கிட்டால் ரூ.45 ஆயிரம் கோடிகள் ஆகும். இந்த முறையில்தான் கொள்ளை நடக்கும் என்பது அவசியமில்லை. ஏனென்றால், நாம் பேசியிருப்பது மொத்த விற்பனை விலை குறித்த கணக்கீடுதான்.
தடுப்பூசி உற்பத்தி படிப்படியாகத்தான் அதிகரிக்கவுள்ளது. தனியார் மருந்து நிறுவனங்களும், மருத்துவமனைகளும் ரூ.600 கொடுத்து வாங்கவிருக்கும் ஊசிகளை அதே விலையில் பொதுமக்களுக்கு போடப்பாவதில்லை. இப்போதே ரூ.150 என கொள்முதல் செய்யப்படும் தடுப்பூசி ரூ.250 என்ற கட்டணத்தில்தான் போடப்படுகிறது. மே.1 முதல், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி என்ற அறிவிப்பும், கொரோனா இரண்டாவது அலையில் அதி தீவிரமான பரவலும் தடுப்பூசிக்கான தேவையை பல மடங்கு அதிகரிக்கும் பின்னணியில் கொள்ளை லாப நோக்கில் சுரண்டலே நடக்கும். ரூ.600 விலை கொடுத்து வாங்க ஒருவர் தாயாராக இருக்கும்போது, தயாரிப்பு அந்த கொள்ளை லாபத்தை நோக்கியதாகவே இருக்கும்.
100 கோடி மக்களுக்கு ரூ.150 விலையில் தடுப்பூசி செலுத்தினோம் என்றால் ரூ. 15 ஆயிரம் கோடிகள் செலவாகலாம். 2 டோஸ்கள் செலுத்த மொத்த செலவு 30 ஆயிரம் கோடிகள் அத்துடன் நிர்வாகச் செலவுகளாக சில கோடி ஏற்படலாம். அதுவே ரூ.1000 என்ற அளவில் விலை உயர்ந்தால், லாபம் எத்தனை மடங்கு உயரும்?. ஒரு கணக்கிற்காக, மொத்த தடுப்பூசி விநியோகத்தில் 3 இல் ஒரு பகுதி தனியாரால் செய்யப்படுவதாக வைத்துக்கொண்டால், 30 கோடிப்பேருக்கு ரூ. 1000 என்ற விலையில் தடுப்பூசி செலுத்த 2 டோஸ்களுக்கு ரூ. 60 ஆயிரம் கோடி. இந்த தொகையில் ஆகப்பெரிய பகுதி கொள்ளை லாபமே ஆகும். இதற்கு வழி அமைத்துக் கொடுத்திருக்கும் மோடியும், அவர் சார்ந்தவர்களும் தனக்கு சிறு பகுதியை தேர்தல் பத்திரங்கள் வழியாக பெற்றுக் கொண்டால், அந்தத் தொகை பல ஆயிரம் கோடிகளாக இருக்கக் கூடும். இந்த நோக்கத்தில்தான், மோடி அரசாங்கத்தில் சமீபத்திய அறிவிப்பை பார்க்க வேண்டியுள்ளது. கழுத்தில் கத்தி வைத்து கொள்ளை லாபத்தை சுரண்டிக் கொள்வதுதான் மோடியின் காலத்து முதலாளித்துவம்.
இப்படி கொள்ளை லாபத்திற்கு வழி ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், மக்கள் வரிப்பணத்தில் இருந்து சீரம் நிறுவனத்திற்கு ரூ.3 ஆயிரம் கோடிகளும், பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு ரூ.1500 கோடிகளும், கொரோனா சுரக்சா நிதியத்திலிருந்து இரண்டு நிறுவனங்களுக்கும் ரூ. 900 கோடியும் தரப்படலாம் என்பதையும் செய்திகள் தெரிவிக்கின்றன. பொதுத்துறை தடுப்பூசி நிறுவனங்களோ, அரசின் அனுமதியையும், நிதியையும் எதிர்பார்த்து காத்திருக்கிறன. இதுவரை அந்த 4 நிறுவனங்களும் அவற்றின் கட்டமைப்பும் பயன்படுத்தப்படவே இல்லை.
நாம் கொரோனா பெருந்தொற்று என்ற பேரிடருக்கு நடுவில் இருக்கிறோம். இந்த நெருக்கடியில் இருந்து மீள நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசிதான். தடுப்பூசி அனைவருக்கும் கிடைத்தால் மட்டுமே கொரோனா ஆபத்தும், ஊரடங்கு நெருக்கடியும் இல்லாத பொருளாதார நடவடிக்கைகள் சாத்தியம். இந்த இயல்பு நிலை பல வணிக நடவடிக்கைகளுக்கு அவசியம். இயல்பு நிலை திரும்பாதா என்று முதலாளிகள் உட்பட திணறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், கொள்ளை லாப வேட்டையானது, தீர்வை சாத்தியமற்றதாக்கிக் கொண்டுள்ளது.
மோடி அரசின் தடுப்பூசிக் கொள்கை, வலுத்தாவர்களுக்கே முன்னுரிமை என்ற நிலையை ஏற்படுத்துகிறது. இதனால், தடுப்பூசி தேவை இருப்பவர்களுக்கு ஊசி, உடல் நலிந்தோருக்கு பாதுகாப்பு என்ற இலக்கு பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஒருவேளை இந்த நெருக்கடிக்கு நடுவில், பாதுகாப்போடு பணியாற்ற நினைத்து ஒரு எளிய தொழிலாளியோ, சிறு வணிகரோ தடுப்பூசி செலுத்த நினைத்தால் 4 பேர் உள்ள குடும்பத்திற்கு ரூ. 8 ஆயிரம் வரை செலவாகக் கூடும். அரசு செலவில், ரூ. 1200 மட்டுமே ஆகக் கூடிய ஒரு தடுப்பூசிக்கு, ரூ.8 ஆயிரம், தனது கையில் இருந்து செலவளிக்க வேண்டிய நிலைமையும் இனி வரும் நாட்களில் ஏற்படவுள்ளது.
பெருந்தொற்று நோயை எதிர்கொள்ள, குறிப்பிட்ட கால அளவில் அனைவரும் தடுப்பூசி செலுத்தச் செய்து அதன் மூலம் கொரோனாவை முற்றாக ஒழிக்க முடியும் என்ற இலக்கு, குழிதோண்டி புதைக்கப்பட்டுவிட்டது. இப்போது மோடி அரசு உருவாக்கியிருக்கும் தடுப்பூசி விநியோகக் கொள்கை, தடுப்பூசி வியாபாரம் என்ற புதிய கொள்ளை நோயை மக்கள் மீது ஏவியதன்றி வேறில்லை. இதனால், குறுகிய கால லாபங்கள் கிடைக்கக் கூடும். ஆனால் நீண்ட கால நோக்கில், புதிய நெருக்கடிகளே உருவாகும்.
மோடி அரசு தனது தடுப்பூசிக் கொள்கையை உடனடியாக மாற்றியமைத்திட வேண்டும். அனைவருக்கும் தடுப்பூசி, அரசே விநியோகிப்பது, இலவசமாக விநியோகிப்பது என்ற பழைய கொள்கையே சரியானதும், தீர்வை நோக்கியதும் ஆகும்.