கிளை மாநாடு துவங்கி நிறைவாக நடக்க இருக்கின்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு வரையிலான நிகழ்வுகள் உட்கட்சி ஜனநாயகத்தின் உயர்ந்த வடிவமாக திகழ்கின்றன. தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் கிளை மற்றும் இடைக்குழுக்களின் மாநாடுகள் முடிந் துள்ளன. பெரும்பான்மையான மாவட்ட மாநாடுகள் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் நடைபெற உள்ளன. மாவட்ட மாநாடுகள் நிறைவுற்று 2022 பிப்ரவரி மாத இறுதியில் மதுரையில் கட்சியின் 23ஆவது மாநில மாநாடு நடைபெற உள்ளது.
நடைபெறும் இம்மாநாடுகள் இன்று நிலவும் அரசியல், சமூக, பொருளாதார சூழலில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை அலசி ஆராய்ந்து நாம் பயணிக்க வேண்டிய பாதையை முடிவு செய்திடும். மேலும் இம் மாநாடுகள் கட்சி மற்றும் வர்க்க வெகுஜன அரங்கங்க ளின் வளர்ச்சி குறித்து விவாதித்து எதிர்கால கடமை களை தீர்மானிக்க உள்ளன.
அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வு
2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி தலைமை யிலான ஆட்சி அமைந்தபோது தேசத்தின் மேல்தட்டில் உள்ள ஒரு சதவீத குடும்பங்கள் நாட்டின் மொத்த சொத்தில் 49 சதவீதத்திற்கு சொந்தக்காரர்களாக இருந்தார்கள். 2019 ஆம் ஆண்டில் நடந்த ஆய்வு நாட்டில் உள்ள 60 சதவீத சொத்துக்கள் மேல்தட்டில் உள்ள ஒரு சதவீதத்தினர் கையில் உள்ளது என குறிப்பிட்டுள் ளது. இந்த ஏற்றத்தாழ்வு ஆண்டுக்கு ஆண்டு மேலும் மேலும் அதிகரித்து வருகிறது. இதனால் தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், நடுத்தர மக்கள் ஆகிய பகுதியினரின் வாழ்க்கையும் வாழ்வாதாரமும் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளன; என்ன காரணம்; இதற்கு தீர்வு என்ன என்பதையெல்லாம் ஆய்வு செய்திட கட்சியின் மத்தியக்குழு அமைத்த மூன்று ஆய்வுக் குழுக்கள் சமர்ப்பித்த அறிக்கை சுட்டிக்காட்டும் கோரிக்கைகள் முழக்கங்கள் அடிப்படையில் மக்களை திரட்டிட வேண்டும் என கட்சியின் மத்தியக்குழு நமக்கு வழி காட்டியுள்ளது. இது குறித்து விவாதிப்பதற்கு சரியான தருணம், தற்போது நடைபெற்று வரும் மாநாடு கள்தான்.
மாவட்டக்குழுக்கள், இடைக்குழுக்கள், கிளைகள் ஆகிய அமைப்புகளின் செயல்பாடுகள் பற்றி விவாதிப்ப தோடு விவசாயம், தொழில், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நடுத்தர மக்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி கட்சியின் மாநாடுகள் விவாதிக்க வேண்டும். 1991 ஆம் ஆண்டிலிருந்து அமலாக்கப்பட்டு வரும் நவீன தாராளமய பொருளாதார கொள்கைகள் விவசாயம், தொழில், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் தொழிலாளர் கள், விவசாயிகள், நடுத்தர மக்கள் வாழ்வில் ஏற்படுத்தி யிருக்கும் தாக்கம் பற்றியும், மாற்றம் பற்றியும் மாநாடு கள் பரிசீலிக்க வேண்டும். மாவட்டங்களின் பிரத்யேக மான நிலைமைகளுக்கேற்ப ஏற்பட்டு வரும் மாற்றங்க ளை பரிசீலிக்க வேண்டியுள்ளது.
விவசாய வர்க்கங்கள்
நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக் கும், இந்திய கிராமப்புறங்களில் நமது கட்சியின் முன்னேற்றத்திற்கும் போராடுவதற்கு கிராமப்புற பகுதி யில் நிலவும் யதார்த்த நிலைமைகளைப் பற்றி ஒரு தெளிவான புரிதல் தேவைப்படுகிறது. கிராமப்புறத்தில் அரசு அதிகாரத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் நிலப்பிரபுக்கள், பெரிய முதலாளித்துவ விவசாயி கள்தான். சுதந்திரத்திற்கு பிறகு முதலாளித்துவ வளர்ச்சியில் பயன்பெற்றவர்கள்தான் இவர்கள். இவர்களின் வளர்ச்சிக்கு அடிப்படை நிலம் மட்டுமே அல்ல; கந்துவட்டி, வர்த்தகம், தனியார் கல்வி நிலை யம், கட்டுமானம், ரியல் எஸ்டேட் போன்ற பொரு ளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருமானத்தை ஈட்டு கிறார்கள். மேலும், உள்ளாட்சி, கூட்டுறவு அமைப்புக்களை தங்களுக்கு சாதகமாக வளைத்துப்போட்டு ஆதிக்கம் செலுத்துகிறார்கள். பொதுவாக இவர்களில் பெரும்பகு தியினர் முதலாளித்துவ அரசியல் கட்சிகளின் ஸ்தல தலைவர்களாகவும் ஆதிக்கம் செய்கிறார்கள். இவர்களை ‘கிராமப்புற பணக்காரர்கள்’ என்று கட்சி யின் ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. இத்தகைய கிரா மப்புற பணக்காரர்களால் சுரண்டப்படுகின்ற இதர கிராமப்புற மக்களை திரட்டிட திட்டமிட வேண்டும்.
கிராமங்களில் வர்க்கங்களை வகைப்படுத்து கிறபோது - குறிப்பாக ஏழை, நடுத்தர விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களாக மாறி வருவது தற்போது முக்கியமான அம்சமாக இருக்கிறது. கிராமப்புற பணக்காரர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆகியோர் விளைநிலங்களை கையகப்படுத்தும் விதத்திலான அரசின் கொள்கையினாலும் விவசாயிகள் வெளி யேற்றப்படுவது அதிகரித்து வருகிறது. நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள், விவசாயம் சார்ந்த - விவசாயம் சாராத கூலி உழைப்பு தொழிலாளர்கள் உள்ளிட்ட கிராமப்புற விவசாயத் தொழிலாளர்கள் மிகப்பெரும் வர்க்கமாக இருக்கிறார்கள். கிராமப் புறங்களில் இருந்துகொண்டு விவசாயம் அல்லாத வேறு வேலைகளில் ஈடுபட்டு வரும் கிராமப்புற தொழி லாளர்களை கிராமப்புற தொழிலாளர் சங்கம் ஒன்றை அமைத்து அந்த அமைப்பில் அவர்களை திரட்டிட வேண்டுமென்று ஆய்வறிக்கை பரிந்துரைக்கிறது.
மூன்று வேளாண் சட்டங்களை மோடி அரசு ரத்து செய்ய வேண்டுமென்று விவசாயிகள் நடத்திய வெற்றி கரமான போராட்டம் குறித்தும், எதிர்கால கடமைகள் குறித்தும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளதை இங்கு குறிப்பிடு வது பொருத்தமாக இருக்கும்:
“கிராமப்புறங்களில் வர்க்கப் போராட்டம் தற்போ தைய விவசாயிகளின் போராட்டத்துடன் முடிவுக்கு வரவில்லை. வர்க்கப் போராட்டம் ஒரு உண்மை என்பதை வலியுறுத்த வேண்டும்; வர்க்க வேறுபாடு கிராமப்புறங்களில் ஒரு யதார்த்தம்; இந்த விவ சாயிகளின் போராட்டத்தை ஒரு பிரச்சனை அடிப்படை யிலான கூட்டணியாகவே பார்க்கிறோம்.எனவே, தற்போதைய போராட்டத்துடன் நமது இயக்கம் வளர நமது அடிப்படை வர்க்கப் பிரச்சனைகளிலும் நாம் தொடர்ந்து போராட வேண்டும். நிலம், ஊதியம், வீட்டு மனைகள், வீடுகள், வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், கிராமப்புற வேலை உறுதித் திட்டம், பொது விநியோக முறை போன்ற பிரச்சனைகள் மற்றும் சாதி, பாலினம் தொடர்பான பிரச்சனைகள் உள்ளிட்டு அனைத்து கோரிக்கைகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். நவீன தாராளமய தாக்குதலையும் கொள்கைகளையும் எதிர்த்துப் போராட வேண்டும்”.
தொழிலாளி வர்க்கம்
நவீன தாராளமய கொள்கை நடைமுறைக்கு வந்தபிறகு வேலை சார்ந்த உறவுகள் பெருமளவு மாறி யுள்ளன. வேலை தருபவருக்கும், செய்பவருக்குமான உறவு என்பது தெளிவாக வரையறை செய்ய முடியாத அளவுக்கு மாறியுள்ளது. தனியார்த்துறையில் மட்டு மின்றி பொதுத்துறை மற்றும் அரசுத்துறையிலும் கூட ஏராளமான தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் தங்க ளுக்கு வேலை வழங்குபவரை அடையாளம் காண முடி யாத அளவுக்கு நிலைமை பெருமளவு மாறியுள்ளது. அமைப்புசார் துறையில் (Organised Sector) - அரசுத்துறையாக இருந்தாலும் அல்லது தனியார் துறையாக இருந்தாலும் நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து ஒப்பந்த தொழி லாளர்கள், பயிற்சி பெறுவோர், நீண்டகால பயிற்சி பெறுவோர் போன்ற நிரந்தரமற்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை பெரும்பான்மையாக உள்ளது.
நிச்சயமற்ற பணிச்சூழல், நிச்சயமற்ற வருமானம், சமூக பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் இல்லாத நிலை, சட்டப்பாதுகாப்பின்மை - இத்தகைய நிலையில் பணி புரியும் அமைப்புசாரா உடலுழைப்புத் தொழிலாளர்க ளின் விகிதம் அதிகரித்துள்ளது. வியாபாரச் சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களின் விளைவாக ஏற்படும் பொருளாதாரச் சுமைகள், உழைக்கும் மக்களின் மீது சுமத்தப்படுகின்றன. இதற்குப் பல்வேறு உத்திகள் கையாளப்படுகின்றன. ஒப்பந்த முறையைக் கையாண்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்து வது, ஒருசில பணிகளை வெளியிடங்களில் செய்ய ஏற்பாடு செய்வது, நிரந்தரமற்ற “கேசுவல்” தொழிலா ளர்கள் என்ற ‘பகுதித்’ தொழிலாளர்களை அதிகப் படுத்துவது, வேலைகளை ஒப்பந்த அடிப்படையில் வெளியாருக்கு கொடுப்பது ; ஒரே வேலையைத் தற்கா லிகப் பணியாளர்கள் - அன்றாடக் கூலிக்கு வேலை செய்பவர்கள், பயிற்சியாளர்கள், வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள் - இவர்களைக் கொண்டு செய்ய வைப்பது - இவைதான் அந்த உத்திகள் என ஆய்வறிக்கை கூறுகிறது.
“இந்த உழைப்பாளர்கள் கல்வி, ஆரோக்கியம் இவற்றிற்காக செய்யும் செலவு மிகவும் அதிகமாகி யுள்ளது. இதனால் அந்த உழைப்பாளிகள் கடனாளியா கிறார்கள்”. எனவே இத்தகைய முறைசாரா தொழி லாளர்களின் “உடல்நலம், கல்வி, வீட்டுவசதி, அவர்க ளது குடியிருப்பு பகுதிகளில் உள்ள பொது வசதிகள்” போன்ற பிரச்சனைகளை தொழிற்சங்கங்கள் கையிலெ டுக்க வேண்டியுள்ளது. தொழிற்சங்க அரங்கம் சார்பாக தொழிலாளர்க ளைத் திரட்டும் பணியை செய்கிறபோது ஒவ்வொரு மாவட்டத்திலும் மேற்கண்ட ஆய்வறிக்கை சுட்டிக் காட்டும் பிரத்யேக அம்சங்களை கணக்கில் எடுத்துக் கொண்டு மாநாடுகள் எதிர்கால கடமைகளை தீர்மா னிக்க வேண்டும்.
நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் நகர்மயம்
“1951க்கும் 2001க்கும் இடைப்பட்ட காலக்கட்டத் தில், அதிகரித்த நகர்கள் மற்றும் பெருநகர்களின் எண்ணிக்கை 2125 ஆகும். 2001க்கும் 2011க்கும் இடை யில் இப்படி அதிகரித்த நகர்கள் மற்றும் பெரு நகர்க ளின் எண்ணிக்கை 2771 ஆகும்” என ஆய்வறிக்கை கூறு கிறது. வேகமாக நகர்மயமாகக்கூடிய மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளது.
நகர்மயமாதல் அதிகரிப்பதற்கான காரணங்கள்
- விவசாயத்தினால் கிடைக்கும் வருமானம் குறைந்து கொண்டே வருவதால் கிராமப்புறங்களில் உள்ள இளைய தலைமுறையினர் நகர்ப்புறங்களை நோக்கி தங்களுக்கான நல்ல வாய்ப்புகளைத் தேடி புலம் பெயர்கின்றனர். வசதி வாய்ப்புகளுடன் செல்வந்தர்களாக உள்ள விவசாயிகளில் ஒரு பகுதியினரும் நகர்ப்புறங்களில் வியாபாரம் செய்வ தற்காக கிராமப்புறங்களை விட்டு புலம் பெயர்கின்ற னர். கிராமப்புறங்களில் உள்ள செல்வந்தர்களின் குடும்ப உறுப்பினர்கள் தங்களுடைய குழந்தைக ளுக்கு நகர்ப்புறங்களில் கிடைக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக நகர்ப்புறங்களில் குடியேறுகின்றனர்.
- கிராமப்புற பணக்காரர் மற்றும் மத்தியதர மக்கள் பிரிவினரின் குழந்தைகள் நகர்ப்புறங்களில் உள்ள ஆங்கில மொழிப் பள்ளிகளில் கல்வி பயில்கின்ற னர். இதன் காரணமாக அவர்கள் சிறு வயது முதலே நகர்ப்புற வாழ்க்கை முறைக்கு பழக்கப்பட்டு விடுகின்றனர்.
- விவசாயத் துறையில் வேலை வாய்ப்புகள் சுருங்கி வருவதன் காரணமாக விவசாயத் தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக நகர்ப்புறங்களை நோக்கி புலம் பெயர்கின்றனர்.
- கிராமப்புறங்களில் உள்ள தீண்டாமைக் கொடு மைகள் மற்றும் பாரபட்சங்களில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக பட்டியலின மக்கள் கொஞ்சமாவது பாதுகாப்பாக உள்ள நகர்ப்புறங்களை நோக்கி இடம் பெயர்கின்றனர்”
என ஆய்வறிக்கை கூறுகிறது.
அரசுகள் மேற்கொள்ளும் நகர்ப்புற மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கான திட்டங்கள் அனைத்தும் நகர்ப்புற ஏழைகளை, நடுத்தர வர்க்கத்தினரை மற்றும் சமூகத்தில் பின்தங்கியுள்ள பகுதியினரை புறக் கணித்துவிடுகின்றன. குடிசைப்பகுதிகளை மேம் படுத்துகிறோம் என்ற பெயரில் பல குடிசை வாசிகள் பெரும் அளவில் அப்புறப்படுத்தப்படுகின்றனர். இடம் பெயரச் செய்யப்படுகின்றனர். இதனால் இத்தகைய பகுதியை சார்ந்த ஏழை மக்களின் வாழ்க்கையும், வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகின்றது. மாவட்டங்களில் நகரங்களில் மேற்கண்ட ஆய்வ றிக்கை சுட்டிக்காட்டிய பிரச்சனைகளை கையிலெடுத்து சம்பந்தப்பட்ட பகுதி மக்களை திரட்டுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
நடுத்தர வர்க்கம்
நவீன தாராளமயமாக்கல் கொள்கைகளின் அம லாக்கம் என்பது குறிப்பிடத்தக்க வகையில் நடுத்தர வர்க்கத்தின் பல்வேறு பிரிவினரின் வளர்ச்சிக்கு கணிசமாக வழிவகை செய்துள்ளது. நடுத்தர வர்க்கம் என்பதே முதலாளித்துவத்தின் விளைவாக உருவானது தான். ஆங்கிலேயர் காலத்தில் உயர்சாதிகளை சார்ந்த விவசாயிகள் அல்லாத பிரிவு மக்கள் மத்தியில் நடுத்தர வர்க்கம் உருவானது. சுதந்திரத்திற்கு பிறகு முதலா ளித்துவ வளர்ச்சி, விவசாய சீர்திருத்தங்கள், இட ஒதுக்கீட்டு கொள்கை அமலாக்கம் போன்ற காரணங்க ளால் நடுத்தர வர்க்கம் உருவானது. மேலும் நவீன தாராளமயக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு புதிய நடுத்தர வர்க்க மக்கள் பிரிவு உருவாகி வளரத் துவங்கியது. “ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி மற்றும் இன்சூரன்ஸ் ஊழியர் கள், மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், பொறியாளர் கள் மற்றும் அறிவாளிகள் சமூகம் என்று சொல்லப்படு பவர்கள், இவர்களெல்லாம் பாரம்பரிய நடுத்தர வர்க்கத் தின் பகுதியினர் ஆவார்கள். புதிய மத்திய தர வர்க்கத் தின் இளைஞர்கள் சுறுசுறுப்பானவர்களாக துடிப்பான வர்களாக இருக்கிறார்கள்” என ஆய்வறிக்கை கூறு கிறது. இவர்கள் கையில் உள்ள ஸ்மார்ட் போன்கள் முக்கியமான ஆயுதங்களாக உள்ளன. இவர்களை அணுகுவதற்கு நமது எழுத்துநடை, சொல்லும் விதம் உட்பட அனைத்தும் மாற்றப்பட வேண்டும். இவர்கள் மத்தியில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நமது சித்தாந்தத்தினை பரப்புவதற்கு முயற்சிக்க வேண்டும்.
மத்தியதர வர்க்கத்தினர் எதிர்கொள்ளும் பொரு ளாதார, சமூக மற்றும் கலாச்சார பிரச்சனைகளில் நாம் தலையிடுவதால் மட்டுமே அவர்களது போக்கு களை எதிர்த்துப் போராடி அவர்களையும் முற்போக்கு நீரோட்டத்தில் ஒன்றிணைக்க முடியும். தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழி லாளர்கள், நடுத்தர வர்க்க ஊழியர்கள் உள்ளிட்டவர்க ளை இன்றைய சூழலில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனை கள் மீது வலுவான இயக்கங்களை உருவாக்கி திரட்டு வதற்கு திட்டமிட வேண்டும். வர்க்க வெகுஜன அமைப்புகளை பலப்படுத்துவதோடு அவ்வமைப்புகள் நடத்தும் போராட்டங்களில் முன்னணிப் பாத்திரம் வகிப்போரை கட்சிக்குள் கொண்டுவர வேண்டும். இத்த கைய கடமையை நிறைவேற்றிட 2015ல் கொல்கத்தா வில் நடைபெற்ற ஸ்தாபன சிறப்பு மாநாடு நமது அன்றாட செயல்பாட்டில் “வெகுஜன உயிர்ப்புமிக்க புரட்சிக் கட்சி” என்ற புதிய அணுகுமுறையை கடைப் பிடிக்க வேண்டுமென்று வழிகாட்டியுள்ளது. தியாகமும், அர்ப்பணிப்பும் நிறைந்த பெருமைமிகு பாரம்பரியத்திற்கு சொந்தக்காரர்கள் நாம். புரட்சிகர சக்திகளின் முன்னேற்றம் தவிர்க்க முடியாதது என்ற மார்க்சியப் புரிதலோடு களம் காண மாநாடுகளில் விவாதிப்போம், முன்னேறுவோம்.