articles

img

கட்சி பிளவுபட்டதன் அடிப்படையும் ஆரம்பமும் - தமிழில் : அ. குமரேசன்

மதுரையில் 1953 டிசம்பரில் நடந்த மூன்றாவது அகில இந்திய மாநாட்டிற்கும் பாலக்காட்டில் 1956 ஏப்ரலில் நடந்த நான்காவது மாநாட்டிற்கும் இடையே அர சியல் நிலைமையில் அடிப்படையான மாறு தல்கள் நடந்திருந்தன. அவற்றை ஆதாரமாகக் கொண்டு நான்காவது மாநாட்டுப் பிரதிநிதிகளில் ஒரு பிரிவினர், காங்கிரசுடன் ஒத்துழைப்பு என்கிற அளவோடு மட்டுமல்லாமல் காங்கிரசும் கம்யூனிஸ்ட் கட்சியும் சேர்ந்து கூட்டணி அரசு அமைக்கிற அளவுக்கு கம்யூனிஸ்ட் கட்சி  தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று வாதிட்டனர். சூடான வாதப் பிரதிவாதங்களுக்குப் பிறகு தான் அந்தக் கருத்துக்கள் முறியடிக்கப்பட்டன. அப்போதும், இருந்த பிரதிநிதிகளில் மூன்றில் ஒரு பகுதியினர் அவற்றுக்கு ஆதரவாகவே வாக்களித்தனர். இங்கு ஒரு விஷயத்தை சிறப்பாகக் குறிப்பிட வேண்டும்:

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே அரசு மட்டத்திலும் சோவியத் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே சர்வ தேச மட்டத்திலும் சுமுக உறவுகள் இருந்தன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாகப் பிரிந்த எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு. மார்க்சிஸ்ட் கட்சியின் எதிர்ப்பாளர்கள் ஒரு பிரச்சாரத்தைப் பரவலாகக் கட்டவிழ்த்துவிட்டனர். கட்சி உடைந்த தற்கான காரணத்தின் வேர், சீன-இந்திய பிரச் சனையிலும் சோவியத்-சீன கட்சிகளிடையே ஏற்பட்ட பிணக்கிலும் தான் இருக்கிறது என்றார்கள் அவர்கள். அதன் அடிப்படையில் முதலாளித்துவ செய்தி நிறுவனங்களும் அர சியல் பார்வையாளர்களும் மார்க்சிஸ்ட் கட்சி யை “சீன ஏஜெண்டுகள்” என முத்திரைகுத்தினர். சோவியத் கட்சியும் சீனக் கட்சியும் தமது உலகப் பார்வையில் முரண்பட்ட போது, இந்திய அரசும் சீன அரசும் எல்லைப் பிரச்சனையில் மோதிக்கொண்டபோது, பிளவுபடாத இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இடதுசாரிப் பிரிவைச் சார்ந்த நாம் வலதுசாரிகளைப் போல ஒரு சீன எதிர்ப்பு நிலையை மேற்கொள்ள மறுத்தோம். எனவே மேற்கூறிய பிரச்சாரத்தில் விஷயம் இருக்கிறது என்று பெரும்பகுதி மக்கள் நம்ப ஆரம்பித்தனர்.

கூட்டணி அரசு கோஷம்

ஆனால், நான்காவது மாநாட்டில் வலது சாரி-இடதுசாரிப் பிரிவினர் மோதிக் கொண்ட போது, பிரச்சனை மூன்றாவது மாநாட்டில் விவாதிக்கப்பட்ட அதே பிரச்சனையாகவே இருந்தது. அயல்துறை விவகாரங்களில் ஏற் கனவே ஒரு முற்போக்கான நிலையை எடுத் திருந்த அரசு, உள்நாட்டு விஷயங்களிலும் அதேபோன்ற முற்போக்கான நடவடிக்கை களைத்தான் மேற்கொள்ளும் என்ற வாதம் மூன்றாவது மாநாட்டில் முன்னுக்குவந்தது.

நான்காவது மாநாட்டில் அந்தவாதம் மேலும் முன்னுக்குக் கொண்டு வரப்பட்டு காங்கிரஸ் ஏற்கெனவே முற்போக்குத் தன்மையுடன் செயல்பட்டுக் கொண்டிருந்ததாகக் கூறப்பட்டது. இந்தப் புதிய வாதத்தின் அடிப்படையில்தான் காங்கிரசுடன் சேர்ந்து கூட்டணி அரசு அமைப் பது என்ற கோஷத்தை வலதுசாரிகள் எழுப்பினர். அவர்களது வாதங்களை நியாயப்படுத்து வதற்காகப் பின்வரும் ஆதாரங்கள் வைக்கப்பட்டன.

 1) நேருவின் சோவியத் சீன பயணங்களும் சோவியத் மற்றும் சீனத் தலைவர்களின் இந்தியப் பயணங்களும் நேருவை சோசலிச முகாமின் நண்பனாக மாற்றியுள்ளன.

2) அது, அயல்துறை விவகாரங்களோடு மட்டும் சுருங்கி விடவில்லை. உண்மையில் சோவியத் பாணியில், கனரகத் தொழில்களுக்கு முன்னுரிமை அளித்து தொழில் மயமாக்கும் பாதையை இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. அந்த அடிப்படையில் புதிய ஐந்தாண்டுத் திட்டத்திற்கு சோவியத் மற்றும் இதர சோசலிச நாடுகளின் உதவியை இந்தியா நாடியது.

3) இந்தத் தொலைநோக்குடன் உரு வாக்கப்பட்ட ஐந்தாண்டுத் திட்டத்தை காங்கிர சுக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்த வலது சாரிகள் எதிர்த்தனர். அந்த எதிர்ப்பை முன்னெடுத்துச்                செல்வதற்காகவே சுதந்திரா கட்சி அமைக்கப்பட்டது.

4) எல்லாவற்றிற்கும் மேலாக, 1955இல் தமிழகத்தின் ஆவடியில் கூடிய காங்கிரஸ் மாநாடு சோசலிச பாணியே தேசிய லட்சியம் என அறிவித்தது.

பெரும்பான்மையோர் கருத்து

நேருவின் தலைமையில் காங்கிரஸ் இடதுசாரிப் பாதையை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருந்ததாகவும் அந்தப் போக்கி னை கம்யூனிஸ்டுகள் பலப்படுத்தியாக வேண்டு மென்றும் கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளிருந்த வலதுசாரி அணியினர் வாதிட்டனர். இதைப் பெரும்பாலான பிரதிநிதிகள் ஒப்புக் கொள்ளவில்லை. அயல்துறை விவகாரங்களி லும் திட்டமிடுதலிலும் அரசின் முற்போக்கான அணுகுமுறையை இவர்கள் வரவேற்றனர்.

(அந்த அணுகுமுறைக்கு எதிரான) சுதந்திரா  கட்சி உள்ளிட்ட வலதுசாரிகளின் தாக்குதல் களுக்கு பலத்த பதிலடி கொடுக்க கட்சி கடமைப் பட்டிருந்ததையும் இவர்கள் ஒப்புக்கொண்டனர். ஆனால், தொழிலாளிகள் மற்றும் விவசாயி கள் தொடர்பாக காங்கிரஸ் கடைப்பிடித்த கொள்கைகள் முதலாளித்துவ-நிலப் பிரபுத்துவ வர்க்கங்களின் நலன்களுக்கே தொண்டு செய்யும் என்று இவர்கள் சுட்டிக்காட்டினர். இந்தக் காரணத்தால், காங்கிரசின்பால் கம்யூ னிஸ்ட் கட்சி கடைப்பிடிக்க வேண்டிய அணுகு முறையும் பார்வையும் ஒரு புரட்சிகர எதிர்க்கட்சி யின் அணுகுமுறையாகவும் பார்வையாகவுமே இருக்க முடியும் என்று இவர்கள் முன்மொழிந்தனர்.

தீர்மானத்தில் ஒரு இணைப்பு

கனரகத் தொழில்களுக்கு முன்னுரிமை கொடுக்கிற, பொதுத்துறையை மேலும் சார்ந்திருக்கிற இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் இந்தியாவின் திட்டமிடும் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாகும் என்று கட்சியின் நான்காவது அகில இந்திய மாநாடு தனது அரசியல் தீர்மானத்தில் தெளிவாகக் கூறியது. ஆனால், வேகமான தொழில்மயமாக்கலுக்கு அவசியமான முன்தேவை அடிப்படையான நிலச்சீர்திருத்தமாகும். அத்துடன், தொழில் மயமாக்கும் முயற்சி நிறைவேற வேண்டு மானால் அரசு தொழிலாளி வர்க்கம் மற்றும் இதர  பிரிவுகளைச் சேர்ந்த உழைக்கும் மக்களின் ஒத்துழைப்பைப் பெற்றாக வேண்டும். தொழி லாளி வர்க்கம் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட மிகப்பெரும்பான்மையான மக்களின் ஆத ரவை உறுதிப்படுத்தக்கூடிய தொழிலாளர் -உறவுச் சட்டங்களை அமலாக்குவதற்கான நட வடிக்கைகளை அரசு மேற்கொள்ளவேண்டும். அதற்கேற்ற ஒரு வரி விதிப்புக் கொள்கை யைக் கடைப்பிடிக்க வேண்டும். கல்வி, சுகா தாரம் மற்றும் இதர துறைகளில் மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கான நடவடிக்கை களையும் எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்தத் தொலைநோக்குடன், இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் நோக்கங்கள் நிறை வேறுவதற்கு உதவிகரமாக இருக்கக் கூடிய ஆலோசனைகள் நான்காவது மாநாட்டு அர சியல் தீர்மானத்தில் ஒரு இணைப்பாகச் சேர்க்கப் பட்டிருந்தன.

இந்த மாற்றுக் கொள்கை ஆலோச னைகளுக்கு ஆதரவாக மக்களைத் திரட்டு வதற்காக இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் நோக்கங்களுக்குக் கட்சி தனது ஆதரவை அறிவித்தது. அதாவது இரண்டாம் ஐந்தாண்டுத் திட்ட நோக்கங்களுக்கான ஆதரவு, அரசின் சமூகப் பொருளாதாரக் கொள்கைகளுக்கான எதிர்ப்பு- இவை இரண்டும், முதலாளித்துவ-நிலப்  பிரபுத்துவ வர்க்கங்களும் காங்கிரஸ் அரசும் தமது நலன்களைப் பாதுகாப்பதற்காக கடைப் பிடிக்கும் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிரான கம்யூனிஸ்ட் கட்சிப் போராட்டத்தின் இரண்டு முகங்களாக இருந்தன.

நாடாளுமன்றப் பணி

இந்தக் காரணத்திற்காகத்தான், காங்கிரஸ் அரசின்பால் எதிர்க் கட்சி என்ற முறையிலேயே கம்யூனிஸ்ட் கட்சியின் அணுகுமுறை இருக்கும் என நான்காவது மாநாடு தெளிவுபடுத்தியது. ஆனால் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற அமைப்புகளுக்கு உள்ளேயே சுருங்கிக் கொள்கிற ஒரு சட்டப்பூர்வ எதிர்க்கட்சியாக மட்டும்  கம்யூனிஸ்ட் கட்சி செயல்படாது. முதலாளித் துவ-நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதி ராக தொழிலாளர்களையும், விவசாயிகளையும் திரட்டுவதற்கு சட்டப்பூர்வமாகவும் வேறு முறை களிலும் அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்திக் கொள்கிற ஒரு புரட்சிகர எதிர்க்கட்சி என்ற பாத்திரத்தை கம்யூனிஸ்ட் கட்சி வகிக்கிறது.

இந்தப் புரட்சிகரப் பணியை நாடாளுமன்றம் மற்றும் மாநிலங்களின் சட்டமன்ற அமைப்புகளுக்கு விரிவுபடுத்துவதே கட்சியின் நாடாளுமன்றப் பணியாகும். மக்களைத் திரட்டுவதற்கும் கிளர்ச்சிகள் மற்றும் போராட்டங்களை நடத்துவதற்குமான கருவிகளாக நாடாளுமன்றத்தையும் மாநில சட்ட மன்றங்களையும் பயன்படுத்துவது என்ற தொலை நோக்கினை வலதுசாரிகள் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால்தான், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணி அரசு அமைக்க வேண்டும் என்ற ஆலோ சனையை அவர்கள் கொண்டு வந்தனர். மாநாட்டின் பெரும்பாலான பிரதிநிதிகள் அதனை நிராகரித்தனர். வேறு பல பிரச்சனைகள் முளைவிட்டதைத் தொடர்ந்து (அவை என்ன என்பது பின்னர் விவரிக்கப்படும்), நான்காவது மாநாட்டில் சிறு பான்மையாக இருந்த வலதுசாரிகள் ஆறாவது மாநாட்டிற்குப் பிறகு சட்ட நுணுக்கங்களின்படி பெரும்பான்மையாகத் தங்களை மாற்றிக் கொண்டனர்.

காங்கிரசின் சோசலிசம் பற்றி...

இந்த இடத்தில், காங்கிரஸ் கட்சி தனது ஆவடி மாநாட்டில் சோசலிசமே தன் லட்சியம் என்று அறிவித்தது பற்றி சில சொற்கள் பொருத்தமாக இருக்கும். இந்த அறிவிப்புடன் காங்கிர சின் ஒட்டு மொத்தமான தன்மையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டு விட்டது என்று வலதுசாரிகள் வாதிட்டனர். அந்தக் கருத்தைக் கம்யூனிஸ்ட் கட்சியில் பெரும்பான்மையினர் ஒப்புக்கொள்ள வில்லை. பெரும் நிலப்பிரபுக்களும் முதலாளிகளும் கொள்ளை லாபம் அடிக்க உதவுவதையே நோக்கமாகக் கொண்ட சமூக-பொருளாதார கொள்கைகளைக் கடைப்பிடித்துக் கொண்டே இன்னொரு பக்கம் சோசலிசமே தனது லட்சிய மென காங்கிரஸ் அறிவித்துக் கொண்டது மக்க ளை ஏமாற்றுவதற்கான ஒரு முயற்சியே என்று கம்யூனிஸ்ட் கட்சி கருதியது.அதனால்தான் ஆவடி சோசலிசம் பற்றி அன்றைய பொதுச் செயலாளர் அஜாய் கோஷ் எழுதிய கட்டுரையின் தலைப்பே “ஆவடி சோசலிசம் - ஒரு ஏமாற்று வித்தை” என்று தரப்பட்டது. சோவியத் யூனியனின் சோசலிச கட்டுமான மும் சீனாவில் நில உறவுகளில் செய்யப்பட்ட முற்போக்கான மாறுதல்களும் இந்திய மக்களின் நன்மதிப்பைப் பெற்றன. இவ்வாறு இந்திய மக்கள் சோசலிசம் பற்றிய ஒரு தொலை நோக்குப் பார்வையை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தனர். முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ வர்க்கங்களுக்கு தாங்களும் இந்த உண்மை யை அங்கீகரிப்பதாக ஒரு தோற்றத்தை ஏற் படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இவ்வாறாக ஆளும் வர்க்கத்தினர் தாங்கள்  சோசலிச கட்டுமானத்தைத் தான் மேற்கொண்டி ருப்பதாக ஒரு பிரமையை மக்களிடையே உரு வாக்கவும் அதைப் பயன்படுத்தி மக்களின் ஆத ரவைப் பெறவும் முயன்றுகொண்டிருந்தனர். ஆனால் உண்மையில் முதலாளித்துவத்தைக் கட்டவும் பலப்படுத்தவுமே அவர்கள் அதைப் பயன்படுத்திக் கொண் டிருந்தனர். ஆவடி மாநாட்டில் ஆளும்கட்சி நிறைவேற்றிய தீர்மானமே இந்த உண்மைக்கு சாட்சியாகும்.

கம்யூனிஸ்ட் கட்சியில் பெரும்பான்மையா னோர் காங்கிரஸ் அரசின் அயல்துறை கொள்கைகளையும் அதன் சில உள்நாட்டுக் கொள்கைகளையும் ஒரு ஆக்கப்பூர்வமான முறையிலேயே அணுகினர் என்பது மூன்றா வது, நான்காவது மாநாடுகளில் வெளிப்பட்டது-ஏகாதிபத்தியத்துக்கும் நிலப்பிரபுத்துவத்துக்கும் காங்கிரஸ் அரசு ஓரளவு எதிர்ப்புக் காட்டும் போது அதற்கு ஒத்துழைப்பு என்பதே அந்த அணு குமுறை. ஆனால், காங்கிரஸ் அரசு, முதலாளி த்துவ-நிலப்பிரபுத்துவ ஆளும் வர்க்கங்களின் உண்மையான பிரதிநிதி என்பதால், சில பிரச்சனைகளில் அதற்கு ஆதரவளித்தாலும், ஒரு வலுவான எதிர்க்கட்சியாகவே கம்யூனிஸ்ட் கட்சி செயல்பட வேண்டும் என்பதும் அந்த அணுகுமுறையில் இருந்தது. இதுவே, மூன்றாவது மாநாட்டிலும் நான்காவது மாநாட்டிலும் கட்சியிலிருந்த வலதுசாரி களிடமிருந்து இடதுசாரிகளை வேறுபடுத்திக் காட்டிய அம்சமாகும்.