articles

img

விரிந்து பரந்து கொண்டிருக்கும் பேரெழுச்சி.....

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்கள் மற்றும் மின்சார திருத்த மசோதா 2020 ஆகியவற்றுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள விவசாயிகள் 2020 நவம்பர் 26 முதல் தில்லியில் உள்ள திக்ரி, சிங்கு, காஜிப்பூர், ஷாஜகான்பூர், பல்வால் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்புடன் போராட்டத்தை ஆரம்பித்தனர். பின்னர் போராட்டத்தில் மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், பீகார், ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா மற்றும் நாடு முழுவதும் உள்ள எல்லா மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டு போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இன்று (2.3.21) 97ஆவது நாளாகபோராட்டம் நடைபெற்று வருகிறது. இதுவரை மத்திய அரசின் வேளாண் துறை அமைச்சர் உள்ளிட்ட குழுவினர்விவசாயிகள் சங்க தலைவர்களுடன் 11 முறை பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் பேச்சுவார்த்தை முற்றுபெற்றுள்ள சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.  சுமார் 500க்கும் அதிகமான விவசாய சங்கங்கள் ஒன்றாக இணைந்து அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புகுழு (AIKSCC) மற்றும் சம்யுத்த கிசான் மோர்ச்சா (SKM) என்ற போராட்ட ஒருங்கிணைப்பு குழுக்கள் மூலம் போராட்டம் வழி நடத்தப்படுகிறது.

மத்திய அரசு
மத்திய பிஜேபி அரசு தாங்கள் நிறைவேற்றியுள்ள சட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு  இருமடங்கு வருவாய் கிடைக்கும், விவசாயிகளுக்கு பயனுள்ளது என்கிறது.கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு அதாவது “காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு” என்று கூறுவார்கள். இவர்கள் (பிஜேபி) நிறைவேற்றியுள்ள சட்டம் அவர்களுக்கு பொன்னானது. ஆனால் இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு இச்சட்டம் எதிரானது. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டம் பொன்முட்டையிடும் வாத்தாகலாம். ஆனால் அச்சட்டம் விவசாயிகளுக்கு கூமுட்டைகளாகத்தான் உள்ளது. எனவே தான் தில்லியில் மட்டுமல்ல நாடு முழுவதும் மிகப்பெரிய போராட்டங்களை விவசாயிகள் கிராமங்கள், நகரங்கள் என்று எல்லா இடங்களிலும்  முன்னெடுத்துச் செல்கிறார்கள். 

பந்த் முதலிய போராட்டங்கள்
அகில இந்திய போராட்ட ஒருங்கிணைப்புகுழு மற்றும்சம்யுக்த கிசான் மோர்ச்சா சார்பில் தினம் தினம் ஒரு போராட்டம் என்கிற வகையில் போராட்டங்கள் நடந்துவருகின்றன. லட்சக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் பெருந்திரளாக கலந்து கொள்கிறார்கள். கடந்த டிசம்பர் 8ஆம் தேதி நாடு தழுவிய பாரத் பந்த் போராட்டம் நடைபெற்றது. பஞ்சாப், மே.வங்கம், ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, குஜராத், அசாம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, ஹரியானா, மத்தியப்பிரதேசம், பீகார், கேரளா உள்ளிட்ட எல்லா மாநிலங்களிலும் பந்த் போராட்டம் முழுமையாக நடைபெற்றது. 20 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள், விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். தமிழகத்தில் டிசம்பர் 9 முதல் மூன்று நாட்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தில் சங்கத்தலை
வர்களிடம் மோசமான முறையில் காவல்துறையினர் நடந்து கொண்டனர்.

மோடி, அதானி, அம்பானி, அமித்ஷா உருவபொம்மை எரிப்பு போராட்டம் நாடு முழுவதும் பல மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கான இடங்களில்  நடைபெற்றது. அம்பானி,அதானி உற்பத்தி செய்யும் பொருட்களை வாங்குவதில்லை என்று போராட்டக்குழு முடிவு செய்தது. இதனால் ஜியோசிம், ரிலையன்ஸ் மால்களுக்கு செல்வது, பெட்ரோல் பங்க்செல்வது உள்ளிட்டவைகளை மக்கள் புறக்கணித்தனர். ஜனவரி 7 முதல் 20 வரை நாடு முழுவதும் நோட்டீஸ் வீடுவீடாக கொடுத்து வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் உணவு உள்ளிட்ட பெரிய பாதிப்புகள் உள்ளது என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. கிராமஅளவில் கூட்டங்கள் லட்சக்கணக்கில் நடத்தப்பட்டன. டோல்கேட்களில் கட்டணமில்லாத இயக்கத்தை போராட்டக்குழு அறிவித்தது. இப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நாடு முழுவதுமுள்ள டோல்பிளாசாக்களில் கூடியிருந்தனர். வாகனங்களுக்கு கட்டணம் இல்லாத இயக்கத்தை உறுதி செய்தனர். பஞ்சாப் மாநிலத்தில் டோல்களில் கட்டணமில்லா இயக்கம் 2020 ஜுன் மாதம் முதல் நடந்து வருகிறது. ஹரியானா மாநில நெடுஞ்சாலையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் கட்டணமில்லா இயக்கம் ஆயிரக்கணக்கானோருடன் உறுதி செய்யப்பட்டது. பிவானி, ரோஹ்தக், ஹிசார், சோனேபட், ஃபதேஹாபாத் மற்றும் பல இடங்களில் பெரும் பங்கேற்புடன் போராட்டம் நடைபெற்றது. ஒடிசா மாநிலத்தில்புவனேஸ்வர், கஞ்சம், கட்டாக் பகுதிகளில் வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் சென்றன. ஆந்திராவில் 31 இடங்களில் போராட்டம் நடைபெற்றது. 25 மையங்களில் கட்டணம் செலுத்தாமல் வாகனங்கள் சென்றன. தெலுங்கானாவில் 18 மையங்களில் கட்டணம் செலுத்தாமல் சென்றன. தமிழ்நாடு, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத்,ஜார்க்கண்ட், பீகார் ஆகிய இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன. 450 சுங்கச்சாவடிகளில் சுமார் 165க்கும்அதிகமான சுங்கச்சாவடிகளில் வெற்றிகரமாக போராட்டங்கள் நடைபெற்றன.

குறுக்கு வழியில் சென்று  குழப்பம் விளைவிப்பு  
ஜனவரி 26 குடியரசு தினத்தன்று அரசின் குடியரசுதின நிகழ்வுகள் முடித்த பின் தில்லி மற்றும் நாடு முழுவதும் டிராக்டர் பேரணி நடைபெற்றது. தில்லியில் மட்டும் 2 லட்சத்திற்கும் அதிகமான டிராக்டர்கள் அணிவகுப்பு, போராட்டம் நடைபெற்ற இடங்களிலிருந்து பேரணியாக சென்றது. இந்த போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ், பிஜேபி குண்டர்கள் உள்ளே புகுந்து தனியாக ஒரு டிராக்டர் பேரணியை அதாவது அனுமதிக்கப்பட்ட வழியில் செல்லாமல் புதிய வழியில் சென்று செங்கோட்டையில் கொடியை ஏற்றி குழப்பம் விளைவித்தனர். இதனால் விவசாயிகள் டிராக்டர் பேரணியில் காவல்துறை தடியடி, கண்ணீர்ப் புகை வீசி, தண்ணீர் பீச்சியடித்து மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒரு விவசாயி இறந்து போனார். மத்திய அரசு டிராக்டர் பேரணியில் குழப்பம் விளைவிக்க திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர். கொடியேற்றிய நடிகர் தீப்சித்து பிரதமர்நரேந்திரமோடியுடன் இருக்கும் படங்கள் பின்னர் எல்லா பத்திரிகைகளிலும், சமூக வலைத்தளங்களிலும் வந்ததை நாட்டு மக்கள் அறிவார்கள்.
ஜனவரி 26ல் நடந்த டிராக்டர் பேரணியில் அத்துமீறிநடந்த அரசையும், காவல்துறையையும் கண்டித்து ஜனவரி 30 ஆம் தேதி நாடு முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

பிப்ரவரி 6ஆம் தேதி பகல் 12 மணி முதல்  மாலை 3 மணி வரை சாலை மறியல்போராட்டம் நடைபெற்றது. அதே போல் பிப்ரவரி-18ல் ரயில் மறியல் போராட்டம் பகல் 12 மணி முதல் மாலை4 மணி வரை நடைபெற்றது. தில்லியில் முற்றுகைப் போராட்டம் நாடு முழுவதும் எல்லா மாநிலங்களிலும் போராட்டக்குழுவின் சார்பில் தொய்வில்லாமல் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஜனவரி 26 டிராக்டர்பேரணிக்கு பின்பு இரண்டு அமைப்புகள் அரசுக்கு ஆதரவாக போராட்டத்திலிருந்து வெளியேறியுள்ளன. இதனால் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கோ அல்லது மக்களை திரட்டுவதற்கோ எந்தவித பாதிப்புகளும் இல்லை என்பதை அதன்பின் நடைபெற்ற போராட்டங்களே சாட்சியாக உள்ளது. நாடாளுமன்றத்தில் பிரதமர் ஆற்றிய உரை விவசாயிகளுக்கு எதிரானது. இதற்கு கண்டனம் தெரிவித்து அரசுக்கு  போராட்டக்குழுவினர் கடிதம் எழுதியுள்ளனர். பிரதமர், வேளாண்துறை அமைச்சர்உள்ளிட்டவர்கள் மக்களிடம், போராடும் விவசாயிகளை தீவிரவாதிகளாக சித்தரித்து வருகிறார்கள். இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டக்குழு நடவடிக்கை எடுத்து வருகிறது. பிரதமரின் பிரச்சாரம் மக்களிடம் எடுபடவில்லை என்பதை தற்போது நடைபெற்றுவரும் போராட்டங்களில் மக்கள் பங்கேற்பு மூலமாக நாம் பார்க்க முடிகிறது.

தலித் மக்கள் பங்கேற்பு
தில்லியில் நடைபெற்று வரும் முற்றுகைப் போராட்டத்தில் பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்த ஜாட் (சீக்கியர்), உத்தரப்பிரதேசத்தை சார்ந்த ஜாட் (இந்து) உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பிரிவினரும் இப்போராட்டத்
தில் கலந்து கொண்டு இணைந்து போராடி வருகிறார்கள். பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் தலித்துகளுக்கும், இதர ஜாதியினருக்கும் நிலம் சம்பந்தமான பிரச்சனைகள் தற்போதும் இருந்து வருகிறது. ஆனாலும் இந்த சட்டம் இருதரப்பினருக்கும் எதிரானது. எனவே இருவரும் இணைந்து போராடி வருகின்றனர். பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டத்திலுள்ள ஜமீன் பிரப்தி சர்கர்ஷ் கமிட்டி (ZPSC) மற்றும் கிராந்திகாரி பெண்டுமஸ்தூர் யூனியன் (KPMU) ஆகிய அமைப்புகள் மூலம்பாலத்கலான், ஜலூர் மற்றும் தண்டிவால், ஷெர்பூர், லாங்கோவால், கெரி, நமோல் மற்றும் பிற கிராமங்களைச் சேர்ந்த தலித் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் சிங்கு எல்லையில் உள்ள போராட்டக் களத்தில் பங்கேற்றுள்ளனர். பஞ்சாப் கேத் மஜ்தூர் யூனியன் (PKMU) அமைப்பைச் சார்ந்த தொழிலாளர்கள் பஞ்சாபின் தப்வாலியில் இருந்து ஹரியானா மற்றும் தில்லிக்கு திக்ரி எல்லை வரை புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பிரச்சாரம் செய்து வந்து போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.குஜராத் மாநில சட்டமன்ற உறுப்பினரும் தலித் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி தில்லியில் போராடி வரும்விவசாயிகளை திக்ரி, சிங்கு பார்டரில் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதே போல மேற்கு உத்தரப்பிரதேச தலித் அமைப்பான பீம் ஆர்மியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் காசியாபாத், சிங்கு எல்லைக்கு சென்று விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். விவசாயிகள் போராட்டத்திற்கு பீம் ஆர்மியினர் வெளியிலிருந்து அரணாக செயல்படுவார்கள் என்று சந்திரசேகர் ஆசாத் மேலும் தெரிவித்துள்ளார்.

தலித் விவசாயிகளுக்கும் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் இதர பகுதி விவசாயிகளோடு ஆயிரம் பிரச்சனைகள் இருந்த போதிலும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் விரோத சட்டங்களை எதிர்ப்பதற்காக தங்களுடைய பகைமையை மறந்து ஒன்றாக இணைந்து போராடுகிறார்கள். உதாரணமாக பஞ்சாபின் தலித் சமூகங்களான மசாபி அல்லது ராம்தாசியா, மாநில மக்கள் தொகையில் 32 சதவீதம் ஆகும். ஆனால் 3 சதவீதம் நிலத்தைகூட சொந்தமாக வைத்திருக்கவில்லை. இங்கு பாகுபாடுகள் இருந்தாலும் புதிய வேளாண் சட்டங்கள் அமல்படுத்தினால் விவசாயத் தொழிலாளர்களின் தேவை குறையும் மற்றும் அவர்களுக்கான ஊதியம் குறையும் எனவும், இதனால் பேரழிவிற்கு ஆளாக நேரிடும். எனவே, நாங்கள் அவர்களுடன் இணைந்து போராடுகிறோம் என்கின்றனர். இதே போல் இந்தியா முழுவதும் தலித் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் இதர பகுதி மக்களோடு இணைந்து இந்தப் போராட்டங்களில் பங்கேற்று வருகின்றனர். 

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களையும் மின்சார திருத்த மசோத 2020யையும் திரும்பப் பெறவேண்டும் என்று இந்திய நாடு முழுவதும் ஜாதி, மதம், மொழி, இனம் இவைகளுக்கு அப்பாற்பட்டு, நிலம் உள்ளவர்கள், நிலம் இல்லாதவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் மக்கள் போராடி வருகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் இந்தியாவிற்கு வெளியே உலக அளவில் விவசாயிகளுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சினிமா நடிகர்கள், நடிகைகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் வெளிநாடுகளின் பிரதமர், அமைச்சர் பெருமக்கள் மற்றும் இந்தியாவில் பிஜேபி, அதிமுக அல்லாத அனைத்து எதிர்க்கட்சிகளும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். போராட்டத்திற்கு மேலும் ஆதரவு திரட்டிட போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர்கள் நாடு முழுவதும் மகா பஞ்சாயத்து கூட்டங்கள் நடத்திட தற்போது சுற்றுப்பயணம் செய்து வருகிறார்கள். இந்த மகா பஞ்சாயத்துக்களில் பெரும் திரளாக மக்கள் பங்கேற்று வருகிறார்கள்.

இந்நிலையில் போராட்டம் 100 நாட்களை கடக்க சில நாட்களே எஞ்சியுள்ளன. சுதந்திர போராட்டக் காலத்தில் கூட இந்த மாதிரியான போராட்டம் வெள்ளையர்களுக்கு எதிராக நடந்ததாக நாம் அறிய முடியவில்லை. ஆனால்இன்று கார்ப்பரேட்டுகளுடன் சேர்ந்த கொள்ளையர்களுக்கு எதிராக மக்களின் பேராதரவுடன் போராட்டம் நடந்துவருகிறது. ஆனால் நரேந்திரமோடி அரசோ, கேளாக் காதில்ஊதிய சங்காக செயல்படுகிறது. எனவே போராட்டம் இன்னும் வலிமையாக நடத்தப்பட வேண்டும். இது விவசாயிகளுக்கான போராட்டம்  அல்ல. இந்தியாவில் உள்ள 136 கோடி மக்களின் உணவுத் தேவைக்கான போராட்டமாக முன்னெடுக்கப்பட வேண்டும். அனைவரையும் ஒரே குடையின் கீழ் திரட்ட வேண்டும். பஞ்சாப் மக்கள் சமீபத்தில் அளித்த உள்ளாட்சி தேர்தல் தீர்ப்பு போல எதிர்காலத்தில் வடமாநிலங்கள் மட்டும் அல்ல, இந்தியா முழுவதும் பிஜேபிஅதன் கூட்டணி கட்சிகளை துடைத்தெறிந்திட வேண்டும். அப்போது தான் நமது அடுத்த தலைமுறைக்கு விவசாயத்தையும் உணவையும் நாம் வழங்க முடியும். எனவே விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாத்திட மத்திய அரசு கொண்டு வந்துள்ள கருப்பு வேளாண் சட்டங்களை தூக்கி எறியும் வரை தியாகம் நிறைந்த போராட்டங்களை முன்னெடுக்க சபதம் ஏற்போம்.

கட்டுரையாளர் : கே.பி.பெருமாள், மாநில பொருளாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

;