வெளியுறவுக் கொள்கையை சீர்குலைக்கும் மோடி அரசு!
சமீபகாலமாக, மோடி அரசின் வெளியுற வுக் கொள்கை உலக அரங்கில் சம்பா தித்துள்ள அவப்பெயரை குறைத்து மதிப்பிட முடியாது. ஜூன் 13 அன்று, ஐ.நா பொது அவை காசாவில் உடனடியாகவும் நிபந்தனையற்ற முறை யிலும் போர்நிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்து ஸ்பெயின் கொண்டு வந்த ஒரு தீர்மானத்தை நிறை வேற்றியது. மேலும், “பொதுமக்களை படுகொலை செய்ய பட்டினியை ஒரு ஆயுதமாக இஸ்ரேல் பயன் படுத்துகிறது” என்றும் அத்தீர்மானம் இஸ்ரேலைக் குற்றம்சாட்டியது. 193 உறுப்பு நாடுகளில் 149 நாடுகள் அந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. 12 நாடுகள் எதிராக வாக்களித்தன. 19 நாடுகள் வாக்க ளிக்காமல் புறக்கணித்தன. இந்தியா இத்தீர்மானத்தி ற்கு ஆதரவாக வாக்களிக்காமல்,
வாக்களிப்பதில் இருந்து விலகியே இருந்தது. வஞ்சகம் நிறைந்த பதில் காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொ லைத் தாக்குதல்களும், 20 லட்சம் மக்கள் மீது பட்டினி எனும் பேரழிவு ஆயுதத்தைப் பயன்படுத்தி யதும் வெளிப்படையாகத் தெரிந்தும், போர்நிறுத்தப் படவேண்டிய அவசரமான சூழல் கண்கூடாகத் தெரிந்தும், இந்தியா வாக்களிப்பில் இருந்து விலகி நின்றது மிகவும் வெட்கக்கேடானது. தீர்மானத்திற்கு வாக்களிக்காமல் விலகியதை நியாயப்படுத்தும் வகையில் “நீடித்த அமைதி என்பது நேரடி பேச்சு வார்த்தை மூலமாக மட்டுமே உருவாகும்” என்று இந்தியத் தரப்பில் கூறப்பட்டது. இது சப்பைக்கட்டு கட்டுகிற மற்றும் வஞ்சகம் நிறைந்த பதில். இது ஏன் வஞ்சகம் நிறைந்த பதில் என்றால், கடந்த முறை ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்தத்தை இஸ்ரேல் தான் மீறியது. காசாவுக்குச் செல்லும் அனைத்து நிவாரணப் பொருட்களுக்கும் முழுத் தடையை விதித்தது. ஆறு மாதங்களுக்கு முன்பு, அதாவது 2024 டிசம்பர் இல் ஐ.நா. பொது அவையில் போர் நிறுத்தத்திற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, இந்தியா அதற்கு ஆதரவாக வாக்களித்தது. ஆனால், இப்போது எடுத்த நிலைப்பாடு அதற்கு நேர்மாறாக உள்ளது. ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற அமெரிக்காவின் தீவிர நட்பு நாடுகள் கூட இத்தீர்மா னத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. ஆசிய நாடுக ளில் இந்தியா, கிழக்கு திமோர் ஆகிய இரண்டு நாடுகள் மட்டுமே தீர்மானத்தின் மீது வாக்க ளிக்காமல் விலகி இருந்தன. அமெரிக்க - இஸ்ரேல் கூட்டணியிடம்
அடகு வைக்கும் இந்தியா டிரம்ப் நிர்வாகம் பாலஸ்தீனர்களை அழித்தொ ழிக்கும் நேதன்யாகுவின் திட்டத்திற்கு முழு ஆதரவு அளித்ததையடுத்து, மோடி அரசு இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படையாக எடுக்கத் துணிந்துள்ளது. இரு நாடுகளின் தீர்விற்கு இனி ஆதரவளிக்கப் போவதில்லை என்றும் டிரம்ப் நிர்வாகம் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது. எந்த விலையையும் கொடுத்து டிரம்ப்புடன் கைகோர்க்க வேண்டும் என்ற அடிமை மனப்பான்மை, பாலஸ்தீனர்களின் உரிமைக்கான இந்தியாவின் கொள்கை ரீதியான ஆதரவை முழுமையாகக் கைவிட்டு, இஸ்ரேல் ஆட்சியின் காலனித்துவ-இனப்படுகொலை கொள்கைகளுக்கு ஆதரவாக நிற்க வழிவகுத்துள்ளது. ஈரான் மீதான இஸ்ரேலின் ராணுவத் தாக்கு தல்களை சர்வதேசச் சட்டம் மற்றும் ஐ.நா அவை சாசனத்தை மீறிய செயல் என்று கண்டித்து ஜூன் 14 அன்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) வெளியிட்ட கூட்டறிக்கையில் இணையாமல் அதிலிருந்து இந்தியா தன்னை விலக்கிக் கொண்டது. இதன் மூலமாக இந்தியாவின் வெளியு றவுக் கொள்கை அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணிக்கு அடகு வைக்கப்பட்டுள்ளது என்பது மீண்டும் ஒரு முறை தெளிவாகத் தெரிந்தது. ஆனால் இந்த அறிக்கை வெளியிடுவதற்கு இந்தியாவுடன் கலந்தா லோசிக்கப்படவில்லை என்று இந்திய அரசு உட னடியாக அறிவித்தது. அமெரிக்காவின் நட்பு நாடான ஜப்பான் கூட கண்டித்தது அக்கூட்டமைப்பில் ஈரான் சக உறுப்பினராக இருப்பதும், இஸ்ரேலின் தாக்குதலுக்கு
உள்ளான தும் கூட இந்திய அரசுக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. ஈரான் மீதான இஸ்ரேலின் ராணுவ ஆக்கிரமிப்பை மோடி அரசு கண்டிக்கவோ அல்லது கண்டனம் தெரிவிக்கவோ இல்லை. ஈரான் இந்தியா வுக்கு ஒரு நட்பு நாடு, அதனுடன் இந்தியா ஒரு கேந்திர மான உறவையும் கொண்டுள்ளது. அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாகவும், குவாட் அமைப்பின் உறுப்பினராகவும் இருக்கும் ஜப்பானின் எதிர்வினை யுடன் இந்த நிலைப்பாட்டை ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஜப்பான் அரசு ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்கு தலை கடுமையாகக் கண்டித்து, அதை சர்வதேசச் சட்டம் மற்றும் ஈரானின் இறையாண்மையை அப்பட்டமாக மீறுவதாகும் என்று கூறியது. தாக்குதலுக்குள்ளான நாடு தற்காத்துக் கொள்ள வேண்டாம் என்பதா? ஜூன் 22 அன்று ஈரானில் உள்ள மூன்று அணு சக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா வெளிப்படை யாக அனைத்து சர்வதேசச் சட்டங்கள் மற்றும் விதி முறைகளையும் மீறி குண்டு வீசியபோது இந்தியா அமைதி காத்தது. பிரதமர் மோடி, ஈரான் ஜனாதிபதி யுடன் தொலைபேசியில் பேசியபோது கவலை தெரி வித்ததுடன் பதற்றத்தைக் குறைக்குமாறு அழைப்பு விடுத்தார். இது ஆக்கிரமிப்புக்கு (தாக்குதலுக்கு) உள்ளான ஒரு நாடு தன்னைத் தற்காத்துக்
கொள்ள எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்துவது போன்றதாகும். ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பிரிக்ஸ் தலை வர்கள் உச்சி மாநாட்டில் பேசிய மோடி தனது உரையில் ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் மற்றும் அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்காவின் குண்டுவீச்சு பற்றி எந்த விமர்சனமும் கூறாமல் தவிர்த்தார். ஆனால் அந்த உச்சி மாநாட்டில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கை ஈரான் மீதான ஆக்கிரமிப்பை மிகக் கடுமையாகக் கண்டித்தது. பிரிக்ஸ் அமைப்பின் பிற பத்து உறுப்பு நாடுகளும் இந்த விஷயத்தில் மிக வெளிப்படையாக இந்தி யாவின் கருத்துக்களை ஏற்கவில்லை. டிரம்ப்பிடம் நல்ல பெயரெடுக்க... வெளியுறவுக் கொள்கையில் மேலும் வலதுசாரித் தன்மைக்கு மாறுவது, டிரம்பிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்திலிருந்தும், அவரது நியாயமற்ற கோரிக்கைகளைச் சமாதானப்படுத்த வேண்டும் என்பதிலிருந்தும் உருவாகிறது. ஜூலை 1 அன்று வாஷிங்டனில் நடைபெற்ற குவாட் கூட்ட மைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில், சீனாவை தங்கள் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் எனவும் சீனாவின் வளர்ந்து வரும் பொரு ளாதாரத்தை எதிர்கொள்வது பற்றியும் கூர்மையான கவனம் செலுத்தப்பட்டது. இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறவுள்ள குவாட் கூட்டமைப்பு உச்சி மாநாட்டில் டிரம்ப் கலந்துகொள்வதை உறுதி செய்ய இந்தியா தீவிரமாக உள்ளது. டிரம்ப்பின் வர்த்தகம் மற்றும் வரிகளையும் இந்தியா சமாளிக்க வேண்டியுள்ளது. இங்கும், மோடி அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுக்க முடிய வில்லை. ஜூலை 9 காலக்கெடுவுக்கு முன், அதாவது டிரம்ப் அறிவித்த பரஸ்பர வர்த்தக வரிகளில் 90 நாள் இடைநிறுத்தம் முடிவடைய இருக்கும் தேதிக்கு முன், இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய இந்தியா பெரிய சலுகைகளை வழங்கத் தயா ராக இருந்தது என்பதை அனைத்து அறிகுறிகளும் காட்டுகின்றன. இருப்பினும், இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் திருப்திகரமான முடிவுக்கு வரவில்லை. ‘ஆபரேசன் சிந்தூர்’ நடைபெற்றதற்குப் பிறகு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சீர்குலைந் துள்ளது என்பது தெளிவாகிவிட்டது. இந்தியா மற்றும் பாகிஸ்தானை
இணைத்து இந்தியா-பாகிஸ்தான் உறவுகளில் அமெரிக்காவை ஒரு மத்தியஸ்தராக முன்னிறுத்துவதில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இந்திய நலனை விட்டுக் கொடுப்பது... அமெரிக்காவுடனான தனது இளைய பங்காளி உறவை வலுப்படுத்த மோடி அரசின் உறுதியான முயற்சியே இந்தத் தோல்விக்கு அடிப்படைக் காரணம் ஆகும். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது அடுத்த முறை பயணத்தில் அமெரிக்கப் பிரதிநிதியை சந்திக்கும்போது பத்து ஆண்டு காலத்திற்கான ஒரு புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெ ழுத்திடப்பட உள்ளது. ஏற்கெனவே பிப்ரவரி மாதம் மோடி அமெரிக்கா சென்ற போது , அமெரிக்காவின் ராணுவ ஆயுத உபகரணங்களை அதிகளவில் வாங்க இந்தியா ஒப்புக்கொண்டது. ஆனால் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்குவது குறித்து ஜூன் மாதம் அமெரிக்க வர்த்தகச் செயலர் ஹோவர்ட் லுட்னிக் மீண்டும் அதிருப்தி தெரிவித்தார். ஆனால், “இந்தக் கவலை கள் தீர்க்கப்பட்டுவிட்டன; அமெரிக்காவிடம் இருந்து இந்தியா ராணுவ ஆயுத உபகரணங்களை வாங்கத் துவங்கியுள்ளது” என்ற முக்கிய விசயத்தையும் குறிப்பிட்டார். இவை அனைத்தும் இந்தியாவின் முக்கிய நலன்களான பொருளாதார இறையாண்மை, வெளி யுறவுக் கொள்கை அல்லது யுக்திசார்ந்த சுயாட்சி ஆகியவற்றை விட்டுக் கொடுப்பதற்கு ஒப்பான தாகும். பீப்பிள்ஸ் டெமாக்ரசி ஜூலை 13 தமிழில்: சேதுசிவன்