articles

img

உலகப் போராட்ட வரலாற்றில் ...

“ஒருவரையுமே காணோம். அறவே துடைத்து எறியப்பட்டதாக கருதினர். ஏனெனில் யாரும் கண்ணுக்கு தெரியவே இல்லை..... திடீரென அவர்கள் தெரிந்தனர். கந்தல் உடைகளுடன் அவர்கள் இருந்தனர். மாவோவின் எஞ்சிய வீரர்கள் வடக்கு சீனாவில் சீன பெருஞ்சுவரின் நிழலில் ஏனானை நெருங்கியபோது அலையின் எழுச்சி எதிர்பாராது திரும்பியது” எனசீனாவில் ஒரு சிவப்பு நட்சத்திரம் என்ற நூலில் எட்வர்ட்ஸ்னோ எழுதினார். 1934ன் சீன நெடும்பயணத்தில் தீட்டப்பட்டசித்திரம் இதுவாகும். அநேகமாக அதே தட்பவெப்பம் தில்லியில் நிலவுகிறது. நடுக்கும் குளிரும் அடர் பனியும் ஜில்லிட்டு மனிதர்களை பனிக்கட்டிகளாக்குகிறது. 

தில்லி விவசாயிகள் திரள் முதலில் அலட்சியமாக கருதப்பட்டது. நவம்பர் இறுதியில் துவங்கிய விவசாயிகளின் அறவழிச் சமர் முதலில் மத்திய உள்துறை மந்திரிஅமித்ஷாவின் செவிகளில் சொல்லப்பட்டது. ஹைதராபாத் மேயர் தேர்தல் பிரச்சாரத்தில் அமித்ஷா கலந்து கொண்டிருந்தார். இந்த செய்தியை அமித்ஷா அலட்சியமாக காதில் வாங்கினார். கோட்டு சூட்டு டை கட்டாமல் வந்திருக்கிற இந்த எளிய உழவர்களை எளிதில் விரட்டலாம் என்பதுதான் அவரின் அணுகுமுறையாக இருந்தது. அமித்ஷா முதல் கட்டமாக போராடும் விவசாயப் பிரதிநிதிகளிடம் பேசினார். பேச்சுவார்த்தை நடக்கிற போதே பிரதிநிதிகள் நெளிந்தனர். சூடேறி வெளியில் வந்தனர். வெளியில் வந்த சில தப்படிகளிலேயே விவசாயிகள் கூறினர். அமித்ஷாவின் தலையீடு தேவையற்றது. அவர் எங்களை மறைமுகமாக மிரட்டுகிறார். விவசாயிகள் விவகாரத்திற்கும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் என்ன சம்பந்தம்? இவர் யார்? இவர் கூப்பிட்டால் இனி நாங்கள் வரமாட்டோம் என்றார்கள்.

அநேகமாக சமீபகாலத்தில் இந்த அரசின் ஆழ்மன திமிரை அடக்கக்கூடிய முதல் குரலாக இது அமைந்தது. வரலாறு காணாத வகையில் இந்த நூற்றாண்டின் இணையற்ற பெருந்திரள் தில்லியை வளைத்துள்ளது. 500க்கும் மேற்பட்ட சங்கங்கள் குழுமியுள்ளன. இந்த எழுச்சியை மத்திய உளவுத்துறைகூட அறிய முடியவில்லை. விவசாயிகளின் மனபுழுக்கம் அவர்களுக்கு உறைக்கவில்லை. கிளர்ச்சியின் சமிக்ஞைகள் ஜூலையிலேயே தெரிந்தன. ஒரு கட்டத்தில்  பஞ்சாபில் அவர்கள் 2 மாதம் இரயில் மறியல்நடத்தினர். பஞ்சாபின் முதலமைச்சர் அம்ரிந்திர்சிங், அவர்களை அழைத்து பேசினார். மத்திய அரசுடன் விவசாயிகளை பேச வைக்க பொறுப்பு ஏற்றுக்கொண்டார். எனினும் அந்த முயற்சியில் தோற்றார். 

தில்லியில் குவியும் கூட்டத் திரளை கலைக்க காவல்துறை கண்ணீர் புகை, தடியடி நடத்தியது. ஏற்கனவே குளிரிலே நடுங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது குளிர்ந்த நீரைபீய்ச்சியது. இவை எதுவும் விவசாயிகளிடம் பலிக்கவில்லை. நிமிர்ந்த மார்புடன் அவர்கள் முன்னேறி களம்ஏகினர். அமித்ஷா வழிக்கு வந்தார். தனது சகாக்களை பேச வைத்தார். தில்லியின் புராரி மைதானத்திலே அவர்களை போராடச் சொல்லுங்கள் என்று சொன்னார். உடனடியாக பதில் விவசாயிகளிடம் இருந்து வந்தது. நாங்கள் போக முடியாது புராரி மைதானம் ஒன்றும் பூங்கா அல்ல. அது ஒரு திறந்த வெளி சிறைச்சாலை. உத்தரகண்ட் விவசாயிகளை ஏற்கனவே புராரி மைதானத்தில் அடைத்துள்ளீர்கள். தில்லியின் நுழைவாயில்களை நாங்கள் அடைப்போம் என்றனர். ஆயிரக்கணக்கில் மேலும் உழவர்கள் டிராக்டர் லாரிகளில் வந்தனர். போர்வைகளோடு வந்தனர். உணவுதானியங்களோடு வந்தனர். கோரிக்கையை வெல்லாமல் திரும்ப மாட்டோம் என்ற மனதிட்பத்துடன் அவர்கள் நிறைந்தனர்.

திக்ரி, சிங்கு எல்லைகளை விவசாயிகள் முதலில் மூடவைத்தனர். மாநில அதிகாரங்களை பேய் போல பிடுங்கும்மத்திய பேரரசு ஆட்டம் காண ஆரம்பித்தது.இப்போது கொரோனாவில் தனிமைப்படுத்தப்பட்டவராக உள்ள பி.ஜே.பி. தலைவர் நட்டா அப்போது உஷாரானார். தன் வீட்டுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அழைத்தார். அடுத்த ரவுண்டில் இந்த விவசாயிகளுடன் பேச வேண்டியது வேளாண் துறை அமைச்சர் நரேந்திரசிங்தோமர், ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயல், வர்த்தக இணை அமைச்சர் ஓம் பிரகாஷ் என முடிவானது.

இந்நிலையில் சர்வதேச அரங்கில் முதல் குரல் கனடாபிரதமர் ஜஸ்டின் ட்ருமனிடமிருந்து வந்தது. இந்திய விவசாயிகளின் போராட்டம் சங்கடப்படுத்துவதாக ட்ரூமன் குறிப்பிட்டார். பேராளுமைமிக்க பாஜக அரசு சுண்டக்காய் கனடாவின் குறுக்கீட்டை விரும்புமா? உடனடியாக கனடா தூதரை அழைத்து தன் ஆட்சேபணையை தெரிவித்தது. ஆனால் அதே நேரம் இங்கிலாந்திலிருந்து இன்னொரு செய்தி வந்தது. அங்கே டிராக்டர் ஊர்வலத்தை விவசாயிகள் நடத்துகிறார்களாம். பிரசித்திபெற்ற ஸ்காட்லாந்துயார்டு போலீஸ்  ஊர்வலத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக அவர்கள் முழங்குகின்றனர் என்று லண்டன் செய்தி கூறியது. இங்கிலாந்தினுடைய 36 எம்பிகள் அவர்கள் நாட்டு வெளியுறவு செயலாளர் டொமினிக்ராக்கிற்கு உழவர்கள் கிளர்ச்சியை ஆதரித்து கடிதம் அனுப்புகின்றனர். 

அடுத்த தலையீடு ஐ.நா. பொதுச்செயலளார் அண்டோனியோ இட்டரஸிடமிருந்து வந்தது.  “இதுபோன்ற பிரச்சனைகள் உருவான போது மற்ற உலக நாடுகளுக்கு என்ன சொன்னோமோ அது இந்தியாவிற்கும் பொருந்தும். அமைதியான முறையில் போராட மக்களுக்கு உரிமை உள்ளது. அவர்கள் போராட அரசு அனுமதிக்க வேண்டும்” என்றார்.அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவின் ஆக்லாந்து போபாலத்தில் கற்களை நிறுத்தி மறியல் செய்து இந்திய விவசாயிகளுக்கு ஆதரவு தருகின்றனர். கார்களின் மேல் கதவுகளை திறந்து கொடி பதாகையுடன் அமெரிக்காவில் போராட்டம் நடந்தது. இந்தியாவிற்கு ஆதரவான அமெரிக்க போராட்டமானது ஓக்லாந்த், சிகாகோ, ஓகியோ, லாஸ் ஏஞ்சல்ஸ், வடக்கு கரோலினா, கலிபோர்னி
யா என பல ஊர்களில் விரிவு பெற்றது. 

ஆஸ்திரேலியாவின் மெல்பர்னில் தூதரகத்திலிருந்து நாடாளுமன்ற கட்டிடம் வரை உழவர்கள் போராட்டத்தை ஆதரித்து கார்கள் அணிவகுப்பு நடந்தது. வெளிநாடுகளில் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக மனிதச் சங்கிலி போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.  5 கட்டப் பேச்சுவார்த்தைகள் தோற்றன. 6ஆம் கட்டபேச்சு வார்த்தையை அரசே ரத்து செய்கிறது. பேச்சுவார்த்தைகளுக்கு புது இலக்கணத்தை விவசாயிகள் எழுதுகிறார்கள். தீர்ப்பை எழுதி விட்டு விசாரணையை நடத்தாதீர்கள். மொட்டை அடித்த தலைக்கு பூ அலங்காரம் ஏன்? என்றனர். முதலில் 3 சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற எங்களின் கோரிக்கை அப்படியே இருக்கிறது. அதன் பிறகே மற்றவை குறித்து பேச முடியும் என்றனர். மத்தியஅரசு விளக்கெண்ணெயும் கத்தாழை மடலுமாக வழவழவென பேசுகிறது எனக் கூறி 25 நிமிடம் விவசாயப் பிரதிநிதிகள் மௌனமாக இருந்து தங்கள் எதிர்ப்பை காட்டினர்.நீங்கள், உங்கள் சட்டங்களை விளக்குவது அல்ல பேச்சுவார்த்தை. அவற்றின் விளைவுகள் தெரிந்ததால்தான் போராடுகிறோம். அவற்றை திரும்பப் பெறுங்கள். நீங்கள் இயற்றிய சட்டம் விவசாயிகளை பாதுகாக்க அல்ல, வியாபாரிகளை பாதுகாக்க என்கின்றனர். அடுத்து பேச்சு நடத்தும் இடத்தையும் விவசாயிகள் தீர்மானிக்கின்றனர். அமித்ஷாவின் வீட்டுக்கு வரமுடியாது என்றனர். இந்தியவிவசாய ஆராய்ச்சிக் கவுன்சில் விருந்தினர் மாளிகையில்பேச்சுவார்த்தை நடந்தது. சட்டங்களை வாபஸ் பெற முடியுமா? முடியாதா? ஆம், இல்லை என்ற பதாகையுடன்தான் விவசாயப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்கு உள்ளேயே நுழைந்தனர். எங்களுக்கு தேவை ஒற்றை வரி பதில் என்கின்றனர்.

பேச்சுவார்த்தைக்கு வந்த விவசாயப் பிரதிநிதிகளுக்கு பரிமாற அரசு உணவு கொண்டு வந்தது. அதனை உண்ணவிவசாயிகள் மறுக்கின்றனர். ரோட்டிலே உட்கார்ந்து எங்கள் சகோதரர்கள் சாப்பிடும் போது இந்த மாளிகைகளில் உணவை உண்ணமாட்டோம். உங்களுக்காகவும் உணவை உற்பத்தி செய்யும் நாங்கள் சொந்தமாக சாப்பிட்டுக் கொள்கிறோம் என்றனர். மத்திய அரசு பதறியது. அவர்கள் தரும் தேநீரையும் பச்சைத் தண்ணீரையும் கூட உழவர்கள் பருக மறுத்தனர். எங்களுக்கு உணவு தந்து உபசரிக்க வேண்டாம். முடிந்தால் பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள் என்கின்றனர். அசாதாரணமான இந்தச் சூழலில் தில்லி அரண்மனையில் வசிக்கும் பிரதமருக்கு தூக்கம் வரலாமா? அவரோ தினமும் புத்தம்புது ஆடை அணிந்து உலாபோனார்.

விவசாயிகளுக்காக மருத்துவர்கள் இலவசமாக சேவை செய்கின்றனர். விவசாயிகள் அவர்களுக்கு கரும்புச்சாறு தருகின்றனர்.அவர்கள் அங்கேயே சமைக்கிறார்கள், அங்கேயே சாப்பிடுகின்றனர், அங்கேயே உறங்குகின்றனர், அங்கேயே இயற்கைக் கடனை கழிக்கின்றனர். செய்தித்தாள் வாசிப்பது, வழிபாடுகள் நடத்துவது என நடுச்சாலையிலே விவசாயிகள் இயங்குகின்றனர். ஆண்களோடு பெண்களும் சரி நிகர் சமானமாக போராட்டங்களில் பங்கேற்கின்றனர். கைப்பந்து விளையாட்டு உள்ளிட்ட உடற்பயிற்சிகளை அங்கேயே செய்கின்றனர். உலகத்தின் எங்கேயும் நடக்காத போராட்டமாக எந்த வன்முறையும் இன்றி போராட்டம் நடக்கிறது. போராட்டம் முன்னேறுகிறது! வரும் சனிக்கிழமை 30வது நாளை எட்டுகிறது.உலகப்போராட்ட வரலாற்றில் சரித்திரம் படைக்கிறார்கள் இந்திய விவசாயிகள்.

;