“நாங்கள் விவசாயிகளின் பிள்ளைகள், அவர்கள் கடந்த பல மாதங்களாக அமைதியான போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஒரு வன்முறைச் சம்பவம்கூட நடக்கவில்லை. ஆனால், அவர்கள் தில்லிக்குச் செல்லும்போது அவர்களுக்கு எதிராக தண்ணீர் பீரங்கிகள் மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. எங்கள் பெரியவர்கள் மற்றும் சகோதரர்களின் தலைப்பாகைகள் தூக்கி எறியப்பட்டால், எங்கள் விருதுகள் மற்றும் கவுரவத்துடன் நாங்கள் என்ன செய்யப்போகிறோம்? நாங்கள் எங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கிறோம். அதனால்தான் விருதுகளை திருப்பித் தருகிறோம்”என்று சஜ்ஜன் சிங் சீமா கூறினார்.மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பத்மஸ்ரீ மற்றும் அர்ஜுனா விருது பெற்ற மல்யுத்த வீரர் கர்தார்சிங், அர்ஜுனா விருது பெற்ற கூடைப்பந்து வீரர் சஜ்ஜன் சிங்சீமா மற்றும் அர்ஜுனா விருது பெற்ற ஹாக்கி வீரர் ராஜ்பீர் கவுர் உள்ளிட்ட பல விளையாட்டு வீரர்களும் டிசம்பர் 5 ஆம் தேதி தில்லிக்குச் சென்று தங்கள் விருதுகளை ராஷ்டிரபதி பவனுக்கு வெளியே வைப்பதாக தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியும் அவரது பாஜகவும் செப்டம்பர் மாதம் நாடாளுமன்றம் மூலமாக வேகவேகமாக கொண்டுவந்த மூன்று சட்டங்களை விவசாயிகள் எதிர்த்து வருகின்றனர்.கடந்த வாரம் பிற்பகுதியில் தில்லி, தேசிய தலைநகர் பகுதிக்குள் நுழைவதற்கும், தங்கள் கோரிக்கைகளை இந்தியஅரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதற்கும் சென்று, காவல்துறையினரால் தடுக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த ஆறு நாட்களாக தில்லியின்எல்லைகளில் முகாமிட்டுள்ளனர். அவர்களின் டிராக்டர்களும் லாரிகளும் அண்டை மாநிலங்களான ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்திலிருந்து தில்லிக்கு செல்லும் பல முக்கிய சாலைகளைத் தடுக்கின்றன. மேலும் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தங்கப்போவதாக கூறியுள்ளனர்.
இதுவும் ஒரு சுதந்திரப் போராட்டம் தான்
இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஒரு 95 வயதுவிவசாயி, “நான் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளேன். இது மக்களுக்காக நடத்தப்படும் போராட்டம். இதுவும்ஒரு சுதந்திரப் போராட்டம் தான். இதில் கலந்து கொள்ளாமல் இருந்து நான் என்ன செய்யப் போகிறேன்” என்று கூறிஇந்த வீரம் செறிந்த போராட்டத்தில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டுள்ளார்.சிங்குவில் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இன்னொரு 70 வயது விவசாயி, ”நான் 5-6 வயது முதல் என்பெற்றோர்களுடன் விவசாயம் செய்து வருகிறேன். எங்கள் குடும்பம் வாழ்வதே விவசாயத்தை நம்பித்தான். எங்கள் குழந்தைகளை பரம்பரை பரம்பரையாக விவசாயத்தை நம்பித் தான் வளர்த்து வந்திருக்கிறோம். இன்னும் விவசாயம் செய்து கொண்டிருக்கிறேன். பிரதம மந்திரி சாப்பிடும் உணவும் பஞ்சாபில் விளைந்ததுதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்” என்று கூறும் அவர், “போராட்டத்தில் எண்ணிக்கை முக்கியம். இந்த வயதிலும் நான் பலவீனப்படவில்லை. தனியார்மயமும் கார்ப்பரேட்மயமும் நல்லதல்ல,நீங்கள் செய்வது புத்திசாலித்தனமல்ல” என்று கோஷமிட்டுக் கொண்டிருக்கிறார். இவர் மட்டுமல்ல, இவரைப் போன்று பல முதியவர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
பெண்கள் மோசமாக பாதிக்கப்படுவார்கள்
ஆயிரக்கணக்கில் பெண்களும் டிராக்டர்களில் இந்தபோராட்டத்தில் பங்கேற்பதைப் பார்க்கிறோம். பஞ்சாபின்14 மாவட்டங்களில் இருந்து ஒரு பெண் விவசாயியின்தலைமையில் குறைந்தபட்சம் 10,000 எண்ணிக்கையிலான பெண்கள் தில்லியை நோக்கிப் பயணப்பட்டு போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளனர். ஹரிந்தர் பிந்து கடந்த30 வருடங்களுக்கும் மேலாக ஒரு விவசாயியாக தன்னுடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பவர். படித்திருப்பது உயர்நிலை பள்ளியில். ஆனால் சிறு வயது முதலே விவசாயத்தில் ஈடுபாடு உடைய பிந்து விவசாயிகளின் மீது பாய்ந்துள்ள இந்த மூன்று வேளாண் சட்டங்கள் தன் மீதேபாய்ந்துள்ளதாக உணர்கிறார். சந்தை தனியார் கம்பெனிகளின் ஆதிக்கத்துக்கு உள்ளானால் நாங்கள் மேலும் சுரண்டப்படுவோம் என்கிறார்.
பிந்து சொல்வது இது தான். “பெண்கள் மிக அதிகமாகவெளியில் வர வேண்டிய நேரம். இந்திய மக்கள் இந்த வேளாண் சட்டங்களால் மிகவும் பாதிக்கப்படுவார்கள். அதிலும் பெண்கள் மிக அதிகம் பாதிக்கப்படுவார்கள். அவர்களின் சமையல் அறைகளின் வேலைகளே நின்று போகும் இந்த சட்டங்களால். விவசாயிகள் பாதிக்கப்படும்போது குடும்பங்களை நடத்தப் போதுமான வருமானம் கிடைக்காது. இதனால் பொதுவாகவே இறுதியாக மிஞ்சுகிற உணவினை உண்டு வாழும் வழக்கமுடைய பெண்கள் மிக மோசமாக பாதிக்கப்படுவார்கள். குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடுடையவர்களாக மாறுவார்கள். அதுமட்டுமல்ல, போதுமான வருமானம் இல்லையென்றால் பெண்கள் பாதுகாப்பற்ற வேலைகளுக்குத் தள்ளப்படுவதை யாராலும் தடுக்க முடியாது. எனவே, இந்த சட்டங்கள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டியவை. இந்த புரிதலுடன் பெண்கள் அதிக அளவில் அணி திரள வேண்டிய நேரம் இது” என்கிறார். பஞ்சாப் - ஹரியானா பார்டரில் ஆயிரக்கணக்கான பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குழிபறிக்கும் ஆட்சியாளர்கள்
போராட்டக்காரர்கள் சில நேரங்களில் தங்கள் கோரிக்கைகளின் வீச்சினை ஆட்சியாளர்கள் உணர வேண்டும் என்பதற்காக, ஒரு பகுதிக்குள் நுழைவதைத் தடுக்க மிகப்பெரிய தடுப்புகளை இடுவதையும், முள் வேலிகளை இடுவதையும், சாலைகளில் பள்ளங்கள் தோண்டுவதையும் பார்த்திருக்கிறோம். இன்றைக்கு ஆட்சியாளர்கள் தில்லிக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்து விடக் கூடாது என்பதற்காக இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள். மக்கள் படையை சந்திக்கும் அரசியல் தைரியம் இல்லாதவர்களாக இன்றைக்கு ஆளும் வர்க்கம் மாறிப் போயுள்ளது.தில்லிக்குள் மாற்று இடம் கொடுத்து உங்கள் போராட்டங்களை நடத்துங்கள் என்று கூறும் போது, “ஒரு மைதானத்திற்குள் அடைபட்டால் எங்களை இந்த அரசாங்கம் கண்டு கொள்ளாது. நாங்கள் தில்லிக்குள் நுழைய முடியாமல் எல்லைகளில் தடுக்கப்பட்டாலும் பல மைல் தூரத்திற்கு எங்கள் படை திரண்டு நடத்தும் இந்த போராட்டத்திற்கு இந்த அரசாங்கம் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். எனவே, நாங்கள் இங்கேயே இருக்கிறோம்” என்று கூறி, மாற்று இடத்துக்குப் போக மறுத்து சாலைகளில் தங்கியதற்கான காரணத்தை ஒரு இளம் விவசாயி கூறியுள்ளார். அவர் கூறியதில்எதுவும் மிகையல்ல. காரணம் இந்த அரசாங்கம் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான அரசாங்கம். பெரு முதலாளிகளால் நிலப்பிரபுக்களால் தலைமை தாங்கி நடத்தப்படும் அரசாங்கம். அதனால் தான் அது சாமானிய மக்களின் குரல்களுக்கு செவி சாய்ப்பதில்லை.
நெடுங்காலம் சுரண்டப்பட்டு விட்டோம். இனியும் சுரண்டலுக்கு அனுமதிக்க மாட்டோம் என்று எழுந்துள்ள இந்த போராட்டங்களுக்கு மதச் சாயம் பூசுவதை, வகுப்புவாதச் சாயம் பூசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது அரசு. பஞ்சாப் விவசாயிகளின் வீரம் செறிந்த தன்னெழுச்சியை காலிஸ்தானிகள் என்ற சாயம் பூசி, பிரிவினைவாதப் போராட்டமாக சித்தரிக்கும் முயற்சியில் இன்று ஆளும் வர்க்கம் இறங்கியுள்ளது.
ஆறு வயதுச் சிறுவனும்...
தன்னிச்சையாக, தான்தோன்றித்தனமாக, மக்கள் விரோத மற்றும் விவசாயிகள் விரோத மனப்பான்மையுடன் கேள்வி நேரங்களோ, விவாதங்களோ எதுவுமில்லாமல் கொண்டு வரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்துபஞ்சாப், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து தில்லியை நோக்கி விவசாயிகள் “தில்லி சலோ” என்று வந்து குவிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய கோரிக்கை குறைந்தபட்ச ஆதார விலை மட்டுமல்ல. இந்திய விவசாயத்தை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்காதே என்பதும் தான்.
6 வயது சிறுவனும் டெமோ அடித்து கொடி பிடித்து இதற்கெதிரான போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறான். இதுவரையில் இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மூன்று விவசாயிகள் கடும் குளிருக்கு பலியாகியுள்ளனர். கேரளத்தில் எரி தழல் ஏந்தி விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பெண்கள் வீதிகளில் இறங்கியுள்ளனர். தமிழகத்தில் பலமாவட்டங்களில் ஆதரவு ஆர்ப்பாட்டங்கள், மறியல்கள்,தொடர் முற்றுகை போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.விவசாயிகளுக்கு மோட்டார் வாகன சங்கங்கள் ஆதரவுதெரிவித்துள்ளன. 8ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்திற்கான அறிவிப்பினை செய்துள்ளன. நவம்பர் 26 அன்று வேலை நிறுத்தம் செய்த 25 கோடி தொழிலாளர்கள், அவர்களை நவீன கொத்தடிமைகளாக மாற்றும் சட்டங்களை எதிர்த்து விவசாயிகளும் தொழிலாளர்களும் நடத்திய போராட்டங்கள். இவையெல்லாம் வெறும் தற்காப்பு போராட்டங்களாக மாறக் கூடாது. மாறாக ஒரு கொள்கை மாற்றத்தைஉருவாக்கக் கூடிய போராட்டங்களாக மாற வேண்டியுள்ளது.
இரண்டு முக்கிய அம்சங்கள்
பேராசிரியர் பிரபாத் பட்நாயக் இந்திய விவசாயம் குறித்துகூறும் இரண்டு முக்கிய அம்சங்களை நாம் மனதில் கொள்ளவேண்டியுள்ளது. 1. நவீன தாராளவாதக் கொள்கைகளின் அமலாக்கத்திற்குப் பிறகு பொருளாதாரம் வளர்ந்துள்ளது என்று தம்பட்டம் அடித்த அளவிற்கு விவசாயம் பெரிய அளவில் வளரவில்லை. 2. உற்பத்தி செய்யப்பட்ட உணவு தானியங்கள் பெரிய அளவில் கையிருப்பில் உள்ளன. இதன் பொருள் இந்த உணவு தானியங்களுக்கான கிராக்கிஇல்லை என்பதாகும். அதாவது அந்த உணவு தானியங்களை வாங்கும் அளவிற்கான வாங்கும் சக்தி மக்களிடம் இல்லை என்பது தான். அதனால் பொது முதலீடு என்பது விவசாயத்தில் குறைந்து வருகிறது; இதனால் கிராமப்புற மக்கள் வருமானப் பற்றாக்குறையின் காரணமாக வறுமை நிலைக்குத் தள்ளப்படுகின்றனர் என்பது கவலையுடன் பரிசீலிக்கப்பட வேண்டிய அம்சம் என்கிறார்.
அதே போல டாட்டா இன்ஸ்ட்டிட்யூட்டின் பேராசிரியர் ஆர்.ராமகுமார் 1997ல் காபி, டீ, ரப்பர் மற்றும் வாசனைப் பொருட்களுக்கு குறுகிய கால விவசாயக் கடன் வழங்கப்பட்டு வந்தது என்பது 2007க்குப் பிறகு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விவசாயக்கடன் என்ற பெயரில், தேனீ வளர்ப்பு,பன்றி இறைச்சி, கோழி மற்றும் மீன்வளர்ப்பு ஆகியவற்றிற்கான கடனாக மாற்றப்பட்டது. அதே போல நகர்ப்புற மற்றும்பெருநகர வங்கிகளின் மூலம் அதிகக் கடன் வழங்கப்பட்டது. எனவே, இந்த விவசாயக் கடன்களால் பயன் பெற்றது விவசாயிகள் அல்ல என்பதையும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.
மூலதனத்தின் அந்நியப்படுத்தும் அநியாயம்
நிதி மூலதனம் லாபத்தையே பிரதானமாகக் கொண்டுஇயங்குகிறது. அதற்கு சிறு முதலாளிகள் சிறு உடமையாளர்கள் யாரையும் பிடிப்பதில்லை. சிறு சிறு உடைமைகளையும் பறித்துக் கொண்டு அனைவரையும் கூலிப்பாட்டாளிகளாக மாற்றவே முயல்கிறது. மாற்றிக் கொண்டிருக்கிறது. காரல் மார்க்ஸ் இந்த உடமைகள் பறிப்பை முதலாளித்துவத்தின் குணாம்சம் என்கிறார். முதலாளித்துவம் ஒரு சிலரதுகைகளில் மூலதனம் குவியவும், மையப்படவும் இட்டுச் செல்கிறது என்கிறார். இலாபத்தையே பிரதானமாகக் கொண்டு இயங்கும் இந்த மூலதனம் இலாபத்தைத் தேடி ஓரிடம் விட்டு இன்னொரு இடத்திற்கு நகர்ந்து கொண்டே இருக்கிறது.
புயல் அடிக்கும் வழியெங்கும் சின்னாபின்னப்படுத்திவிட்டு போவதைப் போல தான் காலடி வைத்த நாடுகளில் உள்ள அத்தனை இயற்கை வளங்களையும் தனதாக்கிக் கொண்டு, அத்தனை உழைப்பாளி மக்களையும் ஏதுமற்றவர்களாக்கிவிட்டு, அவர்களின் வாழ்நிலையையும் இருத்தலையும் கேள்விக் குறியாக்கிவிட்டு நகர்ந்து கொண்டே இருக்கும் இந்த நிதி மூலதனம் அந்த ஏழை எளிய மக்களைஅவர்களுடைய உற்பத்திப் பொருட்களில் இருந்து, உற்பத்தி முறைகளில் இருந்து, சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பின் அபிலாஷைகளில் இருந்து, உடன் பணிபுரியும் பிற உழைப்பாளிகளிடம் இருந்து அந்நியப்படுத்தி ஒரு இயந்திரம் போன்று, இயந்திரத்தின் அங்கம் போன்று மாற்றிவிடுகிறது.மார்க்ஸ் இதைத்தான் தன்னுடைய அந்நியமயமாதல் கோட்பாட்டில் கூறுகிறார். ஏழை, நடுத்தர விவசாயிகளை அவர்களது நிலத்திலிருந்து அந்நியப்படுத்தவும், அப்புறப்படுத்தவும் வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.தோழர் லெனின் தன்னுடைய ஏப்ரல் கோட்பாட்டில் கூறியதைப் போல, இரண்டு வர்க்கங்களுக்கிடையே மோதல்கள் நடக்கும்போது ஆதிக்கம் செலுத்தும் ஆளும் வர்க்கம்தான் அடக்கியாளும் வர்க்கத்தை இருக்கவிடாது. இரண்டுவர்க்கங்களும் வெகு காலத்திற்கு ஒன்றாக இருக்க முடியாது.ஒன்று தனக்கு எதிரான மற்றொன்றை அழித்துவிடும். எனவே, இன்றைக்கு இந்த நாட்டின் 99 சதமான மக்களை சுரண்டிக் கொழுக்கும் கார்ப்பரேட் ஆதரவு ஆளும் வர்க்கத்தை பாட்டாளி வர்க்கம் தன்னுடைய தலைமையில் அழித்தொழிக்க வேண்டிய மிகப் பெரிய கடமை நம் முன் உள்ளது. புரட்சிகள் தானாக வருவதில்லை. பொருத்தமான நேரத்தில்சரியான தலைமையின் கீழ் தத்துவார்த்தப் புரிதலுடன் அதற்கான நெடும் பயணத்தில் ஈடுபட வேண்டிய பொறுப்பு அனைவருக்குமானது. இன்றைக்கு விவசாயிகளும், தொழிலாளர்களும் ஓரணியில் திரள வேண்டிய அவசியம் உள்ளது.உற்பத்தியையும், உற்பத்தி செய்த பொருட்களையும், அவற்றின் பகிர்மானத்தையும் அனைவருக்குமானதாக மாற்ற வேண்டியுள்ளது.
கட்டுரையாளர்: ஆர்.எஸ்.செண்பகம், மாநில துணைத் தலைவர், சிஐடியு