articles

img

12 கோடி சிறு, குறு தொழில் முனைவோர் நலன் அவர்களுக்கானது மட்டுமல்ல! - ஜி.ராமகிருஷ்ணன்

அகில இந்திய சிறு, குறு தொழில் நிறுவனங்க ளின் (All India Council of Association of MSME) 170 கூட்டமைப்புகள் இணைந்து இன்று 20.12.2021 நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட் டத்துக்கு அறைகூவல் விடுத்துள்ளன.  நாடு முழுவதும் உள்ள சிறு, குறு தொழில் நிறுவனங் கள் மிகப் பெரிய நெருக்கடியை சந்தித்துக் கொண்டி ருக்கின்றன. கச்சா பொருள் விளை உயர்வு உள்ளிட்டு பல பிரச்சனைகளால் கணிசமான சிறு, குறு தொழில்கள் மூடப்படும் அபாயத்தில் உள்ளன. தங்களது கோரிக் கைகளை பிரதமரிடமும், பல மத்திய அமைச்சர்களிட மும் முறையிட்டு மனு அளித்து பயனில்லாத நிலையில், தாங்கள் வேலை நிறுத்தத்துக்குத் தள்ளப்பட்டுள்ளதாக இந்த அமைப்புகள் கூறுகின்றன. தேசப் பொருளாதாரத்தில் சிறு, குறு நிறுவனங்கள் முக்கியமான பங்கை ஆற்றி வருகின்றன. நாடு முழு வதும் 12 கோடி சிறுதொழில் நிறுவனங்கள் இயங்கி வரு கின்றன. தமிழகத்தில் மட்டும் 7 லட்சம் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் 8000 வகை பொ ருட்களை இந்நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன. சுமார் ஒரு கோடி 40 லட்சம் பேர் இத்துறையில் பணி யாற்றுகிறார்கள். நாடு முழுவதும் பல கோடிப் பேருக்கு சிறு, குறு நிறுவனங்கள் வேலைவாய்ப்பு அளிக்கின்றன.

நாட்டின் மொத்த தொழில் உற்பத்தியில் 45 சத விகிதமும், மொத்த ஏற்றுமதியில் 48 சதவிகிதமும், சிறு, குறு நிறுவனங்களின் பங்களிப்பு என்பது முக்கிய மானது.  ஒரு சிறு, குறு தொழில் நிறுவனம் ரூபாய் ஒரு கோடி முதலீடு செய்தால் 20 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், ஒரு கார்ப்பரேட் நிறுவனம் ஒரு கோடி ரூபாய் முதலீடு செய்தால், வெறும் 1.2 பேருக்கு (5 கோடி மூலதனம் போட்டால் 6 பேருக்கு வேலை தான் கிடைப்பது சாத்தியம்) தான் வேலை அளிக்கிறது. நாட்டின் உற்பத்தியிலும் வேலை வாய்ப்பிலும் முக்கியமான பங்காற்றி, நாட்டின் வளர்ச்சிக்கு மிகப் பெரும் பங்களிப்பை வழங்கக்கூடிய இந்த நிறுவனங்க ளைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை  எடுக்கக்கோரி, மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. 

ஏன் வேலைநிறுத்தம்?

சிறு,குறு தொழில் நிறுவனங்கள் தங்களுடைய உற்பத்திக்காக வாங்கும் கச்சா பொருட்களின் விலை கடந்த ஓராண்டில் கடுமையாக அதிகரித்துவிட்டது. மிடில் ஸ்டீல் பிளேட், அலுமினியம் அலாய், ஃபிக் இரும்பு, தாமிரம், எம்.எஸ் ஸ்கிராப், கிராஃப்ட் பேப்பர், என்ஜினியரிங் பிளாஸ்டிக் போன்ற பொருட்களின் விலை 37 சதத்தில் இருந்து 155 சதம் வரை உயர்ந்துள்ளது. 2020 ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு கிராஃட் பேப்பர் விலை 110 சதவிகிதமும், தாமிரத்தின் விலை 119 சதவிகித மும், அலுமினியம் அலாய் விலை 155 சதவிகிதமும் உயர்ந்துள்ளன. கடந்த ஏப்ரலுக்கு முந்தைய விலை அளவுக்கு விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய அரசாங்கத்திடம் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு கோரிக்கை வைக்கிறது. 

சந்தைப்படுத்துதல்

சிறு,குறுதொழில் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பதற்கு போதுமான சந்தை இல்லை. பெரிய நிறுவனங்களையே இவை நம்பியுள்ளதால், அவற்றின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இயங்க வேண்டி யுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் இத்தகைய நிறுவனங் கள் உற்பத்தி செய்யும் 8000 வகை பொருட்களின் சந்தை யை விரிவுபடுத்த மாநில அளவில் ஒரு ஆன்லைன் விற் பனைத் தளம் ஒன்றை உருவாக்க வேண்டும் என மாநில அரசிடம் இந்தக் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது. ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கான வரியை செலுத்தி விட்டு, பிறகு திரும்பப்பெறும் முறை உள்ளது. உரிய காலத்தில் வரியைத் திரும்பெறுவதில் காலதாமதம் போன்ற நடைமுறை சிக்கல்கள் உள்ளன. தலையைச்  சுற்றி மூக்கைத் தொடுவது போன்ற சிக்கல் இது. ஜி.எஸ்.டி வரித் திட்டம் அமலாக்கப்படுவதற்கு முன்பு, உற்பத்தி செய்பவர்களுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் வரிச்சலுகை அளிக்கப்பட்டது. எனவே ஏற்றுமதிக்குக் கொடுக்கும் சலுகையை நேரிடையாக வழங்க ஏற்பாடு செய்திட வேண்டும். 

உடனடி நிதி ஆதாரம் 

மூலப்பொருள் வாங்குவதற்கான (வொர்க்கிங் கேப்பிடல்) வட்டியில்லாமல் ஓராண்டுக்குக் கடன் வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக, ஏற்கனவே மூலப்பொருள் வாங்கிய கடனை மாதத் தவணையாக செலுத்துபவர்களுக்கு ஓராண்டு அவகாசம் வழங்க வேண்டும். புதிய இயந்திரம் வாங்குவதற்காக பெற்ற கடனுக்கும் தவணை செலுத்து வதற்கு ஓராண்டு அவகாசம் வழங்க வேண்டும். கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாராளமாக வங்கிகள் கடன் வழங்குகின்றன. ஆனால், சிறு, குறு தொழில் முனைவோரில் 13 சதவிகிதம் மட்டுமே வங்கிக் கடன் பெறும் நிலை உள்ளது. மீதமுள்ளோர் சொந்த நிதியிலும் தனியாரிடமும் கடன் வாங்கி முதலீடு செய்யும் நிலையே உள்ளது. இதனால், இந்நிறுவ னங்கள் நெருக்கடிக்கு உள்ளாகின்றன.  சிறு,குறு நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விற்பனை செய்கிறபோது 45-90 நாட்கள் கிரெடிட் கொடுத்து தான் தொகையைப் பெற முடிகிறது. ஆனால் விற்பனை செய்ததற்கு ஒரு மாதத்திற்குள் ஜி.எஸ்.டி வரி கட்ட வேண்டியுள்ளது. இதனால் சிறு, குறு தொழில்கள் தாக்குப் பிடிக்க முடியாமல் திணறுகின்றன.

வரி விலக்கு அவசியம்

எனவே, சிறு, குறு தொழிலுக்கு முன்பு வழங்கிய தைப் போலவே ஒன்றரை கோடி வரையிலான உற்பத்தி க்கு வரி விலக்கு அளிக்க வேண்டும். (மூலப்பொருட்க ளை ஜி.எஸ்.டி கொடுத்துதான் அவர்கள் வாங்குகி றார்கள்). ஜி.எஸ்.டி வரித் திட்டத்தில் மாற்றம் தேவை. ஜி.எஸ்.டி திட்டம் அமலாக்கம் செய்வதற்கு முன்பு 5 சதவிகித வாட் வரி மட்டுமே இந்நிறுவனங்கள் செலுத்தி  வந்துள்ளன. ஜி.எஸ்.டிக்கு முன்பு ஒன்றரை கோடிக்கு மேல் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு 12.5 சத விகிதம் கலால் வரி விதிக்கப்பட்டது. தற்போது ஜி.எஸ்.டி வரித் திட்டத்தின் அடிப்படையில் கார்ப்பரேட் கம்பெனி களுக்கும் சிறு, குறு நிறுவனங்களுக்கும் எந்த வித வேறுபாடும் இல்லாமல், ஒரே மாதிரியான ஜி.எஸ்.டி வரித் திட்டம் அமலாக்கப்படுகிறது.  

கார்ப்பரேட் நிறுவனங்களோ, அல்லது சிறு, குறு நிறுவனங்களோ வேறுபாடு இல்லாமல் அவர்கள் வாங்கும் கச்சா பொருட்களுக்கு 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி செலுத்த வேண்டியுள்ளது. விற்பனை பொருளுக்கு 12 சதவிகிதம் ஜி.எஸ்.டி செலுத்த வேண்டும். அந்த 12 சதவித ஜி.எஸ்.டியையும் ஒரே மாதத்தில் செலுத்த வேண்டும். 100 ரூபாய் கச்சா பொருள் வாங்குவதற்கு 18 ரூபாய் வரியைச் சேர்த்து 118 ரூபாய் செலவிட வேண்டும். 100 ரூபாய் மதிப்புள்ள பொருளுக்கு 12 ரூபாய் ஜி.எஸ்.டி சேர்த்து 112 ரூபாய்க்கு விற்பனை செய்து 12 ரூபாயை அரசுக்கு ஜி.எஸ்.டி செலுத்த வேண்டும். உற்பத்திக்கும் விற்பனைக்கும் இடையில் 6 ரூபாய் இழப்பை இந்நிறுவனங்கள் சந்திப்பதை உணர லாம். கார்ப்பரேட்களுக்கும், சிறு, குறு நிறுவனங்க ளுக்கும்  ஒரே மாதிரி வரி விதிப்பு இருப்பதால், சிறு, குறு நிறுவனங்கள் முன்பு கார்ப்பரேட் கம்பெனிகளின் பொருட்களைவிடக் குறைவாக விலை நிர்ணயித்து வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வாய்ப்பை இழக்கின் றன. இதனால், ஜி.எஸ்.டி முறையில் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் சிறு, குறு தொழில்நிறுவனங்களுக் குமான வரி விதிப்பில் வேறுபாடு இருக்க வேண்டும். ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை சிறு, குறு நிறுவனங்களுக்கு  எதிராகவும் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகவும் உள்ளது. 

2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் தொழில்துறை அமைச்சர் ஜி.எஸ்.டி வரித் திட்டத்தால் தமிழகத்தில் 50000 சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு 5 லட்சம் பேர் வேலை இழந்ததாக அறிக்கை சமர்ப்பித்தார். தமிழ்நாட்டுக்கு இதனால் 10 ஆயிரம் கோடி இழப்பு என்றார். தமிழ்நாட்டில் மட்டும் இந்த நிலை அல்ல. நாடு முழுவதும் இதே நிலைமை தான். நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் ஒரு கேள்வி க்குப் பதிலளிக்கிற போது நாடுமுழுவதும், 5 லட்சம் சிறு, குறு தொழில்கள் மூடப்பட்டு விட்டதாக மத்திய அமைச்சர் குறிப்பிட்டார். மூடப்பட்ட நிறுவனங்கள் 5 லட்சம் என்றால் வேலை இழந்தவர்களோ பல லட்சம்.  சிறு,குறு தொழில்களைப் பாதுகாப்பதற்கு நடவ டிக்கை எடுக்காத மத்திய அரசு, கார்ப்பரேட் கம்பெனிக ளுக்கு கோடிகோடியாக சலுகை அளிக்கிறது. பாஜக அரசு அதிகாரத்தில் உள்ள 7 ஆண்டுகளில் கார்ப்பரேட் கம்பெனிகள் பெற்ற கடனில் ரூபாய் 10 லட்சம் கோடி யைத் தள்ளுபடி செய்தது. கடந்த ஓராண்டில் 2019-2020ல் மட்டும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 8 சதவிகி தம் வரிச்சலுகை அளித்துள்ளது. 

750 சதவீதம் சொத்து அதிகரிப்பு

கடந்த 2016 முதல் 2020 வரையில் முகேஷ் அம்பா னியினுடைய சொத்து, 350 சதவிகிதம் அதிகரித்துள் ளது. இதே காலத்தில் அதானியின் சொத்து 750 சதவிகி தம் அதிகரித்துள்ளது. நாட்டின் மக்கள் தொகையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளிட்ட பணக்காரர்க ளாக இருக்கிற 10 சதவிகிதத்தினரிடம் நாட்டின் மொத்த சொத்தில் முக்கால் வாசி குவிந்துகிடக்கிறது. கீழே வறியோர்களாய் உள்ள 60 சதவிகித உழைக்கும் மக்களிடம் மொத்த சொத்தில் வெறும் 5 சதவிகிதம் மட்டுமே உள்ளது. இத்தகைய ஏற்றத்தாழ்வு அதிகரித்து  வருவதற்கு மத்திய அரசாங்கம் முழு வீச்சாகக் கடை பிடிக்கும் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கை தான் காரணம்.  மத்தியில் உள்ள மோடி அரசாங்கம் ஏழை, எளிய உழைக்கும் மக்களுக்கு எதிராக மட்டும் அல்ல, சிறு, குறு நிறுவனங்களுக்கும் எதிராக உள்ளது. தங்கள் அரசாங்கம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அதாரவாக மட்டுமே செயல்படும் என்று இவர்கள் கருவ தற்கு விளக்கம் அளிக்கத் தேவையில்லை. விவசாயிக ளையும், விவசாயத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களி டம் ஒப்படைப்பதற்காக மத்திய அரசாங்கம் எடுத்த நடவடிக்கையை வரலாற்றுச் சிறப்பு மிக்க ஓராண்டு போராட்டத்தால் விவசாயிகள் முறியடித்தார்கள். 

மத்திய அரசு அமலாக்கிய பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரித் திட்டம் சிறு, குறு தொழில்களைக் கடுமை யாகப் பாதித்தது. கொரோனா, ஊரடங்கால், சிறு, குறு நிறுவனங்கள் செயலிழந்து நின்றன. ஆனால், இக்காலத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை அளித்த அரசாங்கம், சிறு, குறு தொழில்களை வஞ்சித்துவிட்டது.  நாடு தழுவிய அளவில் 12 கோடி சிறு, குறு முனை வோர்கள் நடத்தும் போராட்டம் அவர்களுடைய நிறு வனங்களைப் பாதுகாப்பதற்காக மட்டும் நடத்தும் போராட்டமல்ல. அந்த நிறுவனங்களில் பணியாற்றும் பல கோடி தொழிலாளர்களின் வேலைவாய்ப்பைப் பாது காப்பதோடு, தேசப் பொருளாதாரத்தையும் பாதுகாப்ப தற்கான போராட்டமாகும். போராடும் சிறு, குறு தொழில்முனைவோருக்குத் தோள் கொடுப்போம். 

;