கார்ப்பரேட் வர்த்தக உலகம் தங்கள் பொருளை விற்பனை செய்ய நுகர்வோரை ஈர்க்கும் விளம்பரங்களும் எல்லாவற்றையும் வாங்கிக் குவி, அனுபவி என்கிற முதலாளித்துவ நுகர்வு கலாச்சாரமும் சாதாரண தொழிலாளிகளை இந்த ஆபத்தான வாழ்க்கையை நோக்கி தள்ளியுள்ளன.
இஎம்ஐ -எம் எல் எம் -எட்டு ரூபாய் வட்டி- கம்பெனி கோட்ரஸ்- ரம்மி- டீரீம் 11 -ஷேர் மார்க்கெட் -இப்படி விதவிதமான சொல்லாடல்கள் நவீன தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மத்தியில் ஆபத்தான வைரஸாக பரவிக் கொண்டிருக்கின்றன. மது, அபின் இவற்றைவிட ஆபத்தான பணம் குவிக்கும் விளை யாட்டுகளின் பெயர்தான் மேற்கண்ட சொல்லா டல்கள். வேகமாக பணம் குவிக்கும் இந்த மாயா உலகில் ஏறக்குறைய 80 சதவீதமான நிரந்தரத் தொழிலா ளிகள் சிக்கியுள்ளனர். தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்த ஐந்து ஆண்டுகள் எந்தக் கடனும் இல்லாத இந்த தொழிலாளிகள் ஆறாவது ஆண்டில் வேலை நிரந்தரம், ஊதிய உயர்வு, சம்பள உத்தரவாதம் என்ற நிலை அடைந்தவுடன், சொந்த வீடு, விலை உயர்ந்த பைக், கார், ஐபோன் என மாதாந்திர வருவாய்க்கு மீறிய செலவினங்களை ஏற்படுத்தும் உலகமயமாக்கல் பிரசவித்த முதலாளித்துவ நுகர்வு கலாச்சாரத்திற்குள் தள்ளப்படுகின்றனர்.
முதலில் கம்பெனியில் கொடுக்கிற கடன்களை பெறுகின்றனர். கடன் பிடித்தம் போக கிடைக்கக்கூடிய மாதாந்திரச் சம்பளம் குறைகிறது. மாதாந்திரச் சம்பளம் போதவில்லை என்றவுடன் தனியார் வங்கி களில் தன் சம்பளப் பட்டியலை வைத்து தனிநபர் கடன்களை பெறுகின்றனர் (பர்சனல் லோன்) இஎம்ஐ என்கிற சம அளவிலான மாதாந்திர தவணைக் கடனில் சிக்கிக்கொள்கின்றனர். ஏறக்குறைய தனது ஐம்பது சதமானம் சம்பளத்தை மாதாந்திரக் கடனுக்கு ஆட்படுத்துகின்றனர். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரி யும் நிரந்தரத் தொழிலாளர்களில் பெரும்பான்மை யோர் இந்த கடனில் சிக்கியுள்ளனர். உதாரணமாக ஃபோர்டு ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் அதிகபட்சம் ரூபாய் 30 லட்சம் வரை கடனில் அகப் பட்டவர்கள். இவர்களின் மாதாந்திரச் சம்பளத்தில் ரூபாய் 32 ஆயிரம் வரை இஎம்ஐ கடனுக்கு செலுத்து கின்றனர்.
பிரபல டயர் நிறுவனங்களில் ஒவ்வொரு தொழிலாளி யும் ரூபாய் 5 லட்சம் முதல் 15 லட்சம் வரை கடன் பெற்றுள்ளனர். இதுபோன்று எல்லா ஆலைகளி லும் குறைந்தபட்சக் கடனாக ஒவ்வொரு தொழிலா ளியும் ஐந்து லட்சம் ரூபாய் வரை கடன்காரராக மாற்றப்பட்டுள்ளார் என்கிற செய்தி வெளியுலகத்திற்கு அதிர்ச்சிக்குரிய ஒன்றுதான். ஒரு தொழிலாளி என்ற மனநிலைக்கு மாறாக வசதி யுள்ள குடும்பமாக தன்னை பாவித்துக் கொண்டு குடும்பச் செலவுகளை தீர்மானிக்கின்றனர். ஒவ்வொரு ஆலையிலும் குறைந்தது 200 பேர் முதல் ஆயிரம் பேர் வரை உள்ள நிறுவனங்களை பெரும் சூதாட்டக் கும்பல் திட்டமிட்டு இவர்கள் மத்தியில் இப்போது ஊடுருவியுள்ளது. வாழ்க்கைத் தேவை கூடுதலாக அதை ஈடு கட்டுவதற்கு பணத்தை தேடி அலைகி றார்கள். குவியலாக இருக்கிற இந்த தொழிலாளி களின் பெரும் கூட்டத்தை இந்த சூதாட்டக் கும்பல் லாவகமாக கவ்விப் பிடிக்கின்றது.
எம்எல்எம் என்கிற மல்டி லெவல் மார்க்கெட்டிங் சூதாட்டத்தில், ரூபாய் ஒரு லட்சம் கொடுத்தால் பைக் இன்னும் பல ஆடம்பரப் பொருட்களை தரு வார்கள். சம்பந்தப்பட்ட நபர் தனது கைபேசியில் இருக்கக்கூடிய முகநூல் -வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதள விளம்பரங்களில் தன்னை விளம்ப ரப்படுத்திக் கொள்வார். முதலில் ஒரு லட்சம் கொடுத்த நபர், அவர் ஒவ்வொருவரையும் புதிதாக பிடித்து கொடுக்கக்கூடிய வகையில் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு ரூ.2000 கமிஷன் கிடைக்கும். 5 பேர், 10 பேர், 50 பேர் என்று சம்பந்தப்பட்ட அந்த தொழி லாளி, வெறிபிடித்து அலைகிறார். ஆள் பிடிக்கும் ஏஜெண்டாகவே இந்த நிறுவனம் அவரை மாற்றுகிறது. தன்னால் ஆள்பிடிக்க முடியவில்லை என்றால் கொடுத்த ஒரு லட்சம் அவ்வளவுதான். பணம் இழந்து கடன்வலையில் சிக்கியவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் உண்டு.
கம்பெனி குடியிருப்பு என்கிற ஆசை வார்த்தை களை காட்டி ஒரு பெரும் ரியல் எஸ்டேட் கும்பல் தொழிலாளிகளை குறிவைக்கிறது. ஒரு நிறுவனத்தி னால் அவர்கள் ஆள்பிடித்துவிட்டால் ஏறக்குறைய 300 லிருந்து 500 பிளாட் விற்றுவிட முடியும். கம்பெனி கோட்ரஸ், அப்பார்ட்மெண்ட் என்ற நப்பாசைகளோடு வங்கிக்கடனுக்குள் தொழிலாளர்கள் சிக்க வைக்கப் படுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் தங்களிடமிருந்த நிலத்தை பணமாக்கி விடுகிறார்கள். தொழிலாளிகளோ புதிய கடன் உலகத்துக்குள் சென்று விடுகிறார்கள்.ரூபாய் ஒரு லட்சம் கொடுத்தால் மாதம் ரூ.7000 வட்டிகிடைக்கும். இப்படி ஒரு வட்டி வர்த்தகம் பெரும்பாலான ஆலை களில் பரவி வருகிறது. கைபேசி மூலம் பணம் புரட்டும் ரம்மி- ஷேர் மார்க்கெட்- ட்ரீம் 11 -போன்ற பணம் புரட்டும் விளை யாட்டுகளில் இளம் தொழிலாளர்கள் சிக்கி இருக்கிறார்கள். மேற்கண்ட இதுபோன்ற பணம் புரட்டும் தொழிலுக்கு ஆலைகளில் உள்ள முன்னணி மூத்த தொழிலாளிகளை குறிவைத்து ஏஜென்சியாக அவர்கள் மாற்றுகின்றனர்.
அவர்களுக்கு கூடுதல் பணச்சலுகை அளிப்பதன் மூலம் இவர்களின் திட்டத்திற்கு அவரை நிரந்தர ஏஜென்சியாக மாற்றுகின்றனர். இந்த விளையாட்டில் சிக்கிய பலர் ஏமாற்றம் அடைந்தவுடன் தற் கொலையை நோக்கிச் செல்கின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளில் தொழிற்சாலைகளில் நடைபெற்ற தற்கொலைச் சாவுகள் குறித்த ஆய்வுகள் இதை உறுதி செய்கின்றன. தற்போதைய வேலை நிரந்தரம் என்றபோதிலும் ஒரு தொழிற்சாலை 35 ஆண்டுகள் நிரந்தரமாக இருக்கும் என்பதற்கு எந்த ஒரு உறுதிப்பாடும் கிடை யாது. உதாரணமாக நோக்கியா, ஃபாக்ஸ்கான், டாங்சன் ஷோவல், பில்டுயுவர் ட்ரீம்ஸ் போன்ற லாபகரமாக இயங்கிய ஆலைகள் இக்காலத்தில் திடீரென மூடப்பட்டன.
இதனால் ஏற்பட்ட வேலைஇழப்பு,வருவாய் பறி போனது போன்ற நிகழ்வுகள் தொழிலாளர்களை இருண்ட வாழ்க்கைக்குள் தள்ளியது. சோவல்ஆலையில் இ எம் ஐ கடன் பெற்ற தொழிலா ளிகள் வருவாய் இழந்த நிலையில் அவர்களுக்கு கடன் கொடுத்த தனியார் வங்கிகள் கடன் பெற்ற தொழிலாளிகளை கைது செய்து சிறையில் அடைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். ஆலை மூடலில் பாதிக்கப்பட்ட தொழிலாளிகளில், மேற்கண்ட கடனில் சிக்கியவர்கள் செய்வதறியாது புலம்பி மன நோயாளிகளாக மாறியுள்ளனர். கார்ப்பரேட் வர்த்தக உலகம் தங்கள் பொருளை விற்பனை செய்ய நுகர்வோரை ஈர்க்கும்விளம்பரங்க ளும் எல்லாவற்றையும் வாங்கிக் குவி, அனுபவி என்கிற முதலாளித்துவ நுகர்வு கலாச்சாரமும் சாதாரண தொழிலாளிகளை இந்த ஆபத்தான வாழ்க்கையை நோக்கி தள்ளியுள்ளன.
ஃபோர்டு போன்ற நிறுவனங்கள் திடீரென மூடப் படும் சூழ்நிலைக்கு தள்ளப்படும் என்று அந்த நிறுவன தொழிலாளிகள் கடந்த 4 மாதத்துக்கு முன்பு வரை கற்பனை கூட செய்திருக்க மாட்டார்கள். தற்போதைய வேலை பறிபோகும் சூழலில் 2022 மார்ச்சுக்கு பிறகு அவர்கள் வாழ்க்கையை கடப்பது மிகவும் கடினமான ஒன்று. மாதம் ரூபாய் 60 ஆயிரத்தில் வாழ்க்கை நடத்திய ஒரு குடும்பம், இனி சம்பளம் இல்லை. வேலை இல்லை. மறுபக்கம் ரூ. 30 லட்சம் கடன் என்கிற இருண்ட வாழ்க்கையில் தள்ளப்படும். இந்தத் தொழிலா ளர்களுக்கு ஆலை நிர்வாகம் உயர்ந்தபட்ச நட்ட தொகை எவ்வளவு கொடுத்தாலும் தொழிலாளர்களின் தற்போதைய நிலையை ஒருபோதும் அவர்களால் தொடர முடியாது.
இந்த ஆபத்துகள் குறித்துதொழிலாளர்கள் மத்தி யில் செயல்படும் இடதுசாரிதொழிற்சங்க அமைப்பு கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன. தொழிலா ளர்களின் திடீர் வேலை இழப்பு, வேலை நிரந்தரத் தன்மையை கேள்விக்குறியாக்கும் புதிய தொழிலாளர் சட்டங்கள், போன்ற ஆபத்துக்களை சுட்டிக்காட்டி கடன் சார்ந்த திட்டங்கள் எதிலும் சிக்க வேண்டாம் என்று சிஐடியு போன்ற சங்கங்கள் தொழிலாளர் பேர வைகளில் தொடர்ந்து போதிக்கின்றன. இருந்த போதிலும் முதலாளித்துவ ஆடம்பரக் கலாச்சாரம் தொழிலாளர்களை தீவிரமாக தாக்கத்துக்குள்ளாக்கிக் கொண்டே இருக்கின்றது.
கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தப் பண விளையாட்டு வர்த்தகத்தை மறைமுகமாக ஊக்குவிக்கின்றன. கடன் வலையில் சிக்கும் தொழிலாளர்கள், தங்கள் பொருளாதார கோரிக்கைகளை மற்றும் கூட்டுபேர உரிமைகளை போராடும் உணர்வை இதுபோன்ற கடன் பிரச்சனைகள் நீர்த்துப் போகச் செய்கின்றன. இந்த மனநிலையை அறிந்த ஆலை நிறுவ னங்கள் அவற்றை கண்டும் காணாமல் இருப்பதற்கு இவைமிக முக்கியமான காரணமாக இருக்கின்றது. தொழிலாளர்களின் கூட்டு பேர உரிமை, தொழிற் சங்க உரிமைகள் என பல அடிப்படை பிரச்சனை களில் தலையிடுவதோடு நவீன முதலாளித்துவச் சீர்கேடுகளுக்கு எதிராக தொழிலாளி வர்க்க வாழ்க்கை கலாச்சாரத்தை முன்னெடுக்கும் பணியும் தொழிற் சங்க இயக்கத்தின் முதன்மைப் பணியாக இப்போது மாறியுள்ளது.
கட்டுரையாளர் : மாநிலச் செயலாளர், சிஐடியு