articles

img

நூற்றாண்டு மாமனிதர் சந்திரசேகர போஸ் - க.சுவாமிநாதன்

மன்னிப்பு கேட்டால் பழிவாங்கல் நடவடிக்கைகள் கைவிடப்படும் என்ற அச்சுறுத்தலை ஏற்காமல் பல ஆண்டுகள் வறுமையையும், குடும்ப இன்னல்களையும் எதிர் கொண்ட தொழிலாளர்களின் வீர காவியம் அது. 

இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஒவ்வொருவரின் இல்லத்தில் இருந்தும் வாழ்த்து பிறக்கிறது. டிசம்பர் 14 - 2021 செவ்வாயன்று அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் உருவாக்கத் தலை வர்களில் ஒருவரான சந்திர சேகர போஸ் அவர்களின் 100ஆவது பிறந்த நாளைக் கொண்டாடி இருக்கிறோம். 

ஐந்து தலைமுறைகளின் வாழ்த்து

அவரின் உழைப்பை, அர்ப்பணிப்பை, தியாகத்தை தங்களின் வாழ்க்கையில் உணர்கிற ஒவ்வொருவரின் உள்ளமும் எப்படி மகிழ்வோடு அவரை வாழ்த்தா மல் இருக்க முடியும்! அவரின் பிறந்த நாள் நூற்றாண்டை கொண்டாடாமல் இருக்க முடியும்! ஐந்து தலைமுறைகளின் வாழ்த்து இது.  நெடிதுயர்ந்த உருவம், ஈர்க்கிற முகம், மலர்ந்த புன்னகை, நெருங்கச் செய்யும் தோழமை, வாஞ்சை மிக்க உடல் மொழி, காலச் சக்கரத்தை உருட்டி நம்மை அழைத்துச் சென்று வரலாற்றை தரிசிக்க செய்யும் பகிர்வுகள்... அவரை மாநாடுகளில் சந்தித்த ஒவ்வொரு வரின் கண்களிலும் நிற்கிற காட்சிகள் இவை. அவர் மேடைக்கு அழைக்கப்படுகிறார் என்றால் அரங்கம் கரவொலியால் அதிரும். அவர் உரையை துவங்கியவு டன் கூட்டம் மௌனத்தில் உறைந்து உன்னிப்பாய் செவி மடுக்கும். அலங்காரமே இல்லாமல் வெளி வரும் வார்த்தைகள் ஆயிரம் கதைகளை சொல்லும். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பிதாமகர் அவர். அவரின் சுண்டு விரலைப் பற்றிக் கொண்டு துள்ளி நடை பயில பல்லாயிரக்கணக்கான பேரக் குழந்தைகள்.

1951 - அவர் தூவிய விதை

அவரின் வாழ்க்கை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் வரலாறு. 1951 இல் மும்பையில் துரு என்கிற இடத்தில் முதன் முதலில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் துவக்கப்பட்ட நிகழ்விற்கு கொல்கத்தாவில் இருந்து ரயிலில் சென்ற சில தோழர்க ளில் ஒருவர் அவர். ஒரு மாபெரும் தொழிற்சங்க இயக்கத் தலைவரை சுமந்து செல்கிறோம் என்று அந்த ரயில் பெட்டி அறிந்திருக்கவில்லை. அன்று விரல் விட்டு எண்ணக் கூடிய இன்சூரன்ஸ் ஊழியர்களையே அப்பெட்டி அழைத்து சென்றது. ஆனால் இன்றோ  சிறப்பு ரயில்கள் செல்கிற அளவிற்கு வளர்ந்திருக்கி றது அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம். ஒரு கவிஞர் வார்த்தைகளில்   -”ஒரு பெரிய ஆலமரம் சிறிய விதைக்குள் உறங்குகிறது.”  - அந்த விதையை தூவிய துவக்க காலத் தலைவர் அவர். இன்று அது பரந்து, விரிந்து, விழுது பரப்பி அடர்ந்த நிழலை, அதன் அற்புதமான குளுமையை நமக்கு தந்து கொண்டிருக்கிறது. தாங்குகிற விழுது களைக் கண்டு மகிழ்கிற தனயனாய், தந்தையாய், தாத்தாவாய் நம் மத்தியில் வாழ்கிறார் அவர். இப்படி யொரு உணர்ச்சிப் பூர்வமான அனுபவம் நம் காலத்தில் நமக்கு கிடைப்பது பெரும் பேறு.

முழுமையான மனிதர்

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மூத்த தலைவர் சரோஜ் சவுத்ரியின் வார்த்தைகளில் அவர் “முழுமையான மனிதர்” (Complete Man). _”அவ ரைப் பற்றி எழுத வேண்டுமெனில் எழுகின்ற தடை, எதைக் குறிப்பிடுவது, எதற்கு முன்னுரிமை தருவது” என்பதுதான்.  இதோ இன்னொரு முன்னோடி சுனில் மொய்த்ரா வின் வார்த்தைகளில் “சந்திரசேகர போஸ் என்றால் உண்மை. பொய் அவரை நெருங்காது. நான் அவரை அச்சாக கொண்டு இயக்கத்தில் சுற்றி வந்த 35 ஆண்டு காலத்தில் அவரிடமிருந்து ஒரு முறை கூட பொய் வந்ததே இல்லை.”  மற்றொரு  மகத்தான தலைவர் தோழர் என்.எம். சுந்தரம் வரிகளில்  “ஒரு அமைப்பை ஒரு தனி மனிதரோடு அடையாளப்படுத்துவது சித்தாந்த தூய்மைக்கு மாறானது. ஆனால் விதி விலக்குகள் உண்டு. ஒரு தனி நபரின் பேராளுமை, பெரும் பங்களிப்பு அந்த நிர்ப்பந்தத்தை நமக்கு உரு வாக்கும்.  அப்படியொரு விதி விலக்கு சந்திரசேகர போஸ்.”  சரோஜ், சுனில், என். எம்.சுந்தரம் ஆகிய முப்பெரும் தலைவர்களின் வார்த்தைகளை விட வேறு எந்த புகழ் வார்த்தைகள் இந்த  மாமனிதரை வர்ணிக்க இயலும்! 

வரலாற்று நூல்கள்

அவரின் எழுத்துக்கள் நமக்கு வரலாற்றுப் பொக்கி சம். அவர் எழுதிய இரண்டு நூல்கள் மிக முக்கியமா னவை. “அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின்  சுருக்கமான வரலாறு” (Short History of All India Insurance Employees Association), “கடந்த காலத்தை பேசுகிறேன்” (Talking about Times Past)- இரண்டும் தொழிற்சங்க இயக்கத்தின் ஒவ்வொரு முன்னணி ஊழியரும் வாசிக்க வேண்டிய வரலாற்று ஆவணங்கள். எப்படி அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் என்ற பெருங் கோட்டையின் கற்கள்  ஒவ்வொன்றாக அடுக்கப்பட்டன என்பதை அவை விவரிக்கின்றன. இப் பெரும் பணியில் சிந்தப்பட்ட இரத்தத்தின் நெடியையும், வியர்வையின் வாசத்தை யும் அவற்றின் வாசிப்பில் நம்மால் நுகர முடியும். மெட்ரோ பாலிடன் இன்சூரன்ஸ் கம்பெனியின் தியா கத்தை அவர் வர்ணிக்கும் போது நாம் நெக்குருகிப் போய் விடுவோம். மன்னிப்பு கேட்டால் பழிவாங்கல் நடவடிக்கைகள் கைவிடப்படும் என்ற அச்சுறுத்தலை ஏற்காமல் பல ஆண்டுகள் வறுமையையும், குடும்ப இன்னல்களையும் எதிர் கொண்ட தொழிலாளர்களின் வீர காவியம் அது.  

அத்தகைய பெரும் தியாக வரலாற்றில் அவரது பங்கு முதன்மையானது. இவர் தனியார் இன்சூரன்ஸ் நிர்வாகங்களின் அடக்குமுறைகளை மீறி சங்கம் வளர்த்தவர். இவர் தலைமை தாங்கிய இந்துஸ்தான் கோ ஆபரேடிவ் கம்பெனிதான் தோழர்கள் சரோஜ், சுனில் ஆகியோர் உருவான பட்டறையாகவும் இருந்தது. அன்று இந்தியாவின் இரண்டாம் பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமாக இருந்த அக்கம்பெனியின் நிர்வாகம் கட்டவிழ்த்த அடக்குமுறைகளை தீரமுடன் எதிர் கொண்டவர். தேசிய மயத்திற்கான அரசியல் கருத்தை ஒருங்கிணைத்ததில் 1950 களில் அவர் ஆற்றிய பணி, கொல்கத்தாவின் வீதிகளில் “இயந்திர மயம்- பணிகள் மையமாதலை” எதிர்த்து பல மாதங் கள் நடந்த “இலாக்கோ விஜில்” போராட்டத்தில் அவரது தலைமை, பொது இன்சூரன்ஸ் தேசிய மயத்திற்கான கருத்தாக்கம், போனஸ் போராட்டம், காலவரையற்ற வேலை நிறுத்தம், எல்.ஐ.சி பிரிப்பு மசோதாவை எதிர்த்த பிரச்சாரம், தனியார் மய முனைப்புகளுக்கு எதிராக மக்கள் கருத்தை திரட்டியது... என அவரின் சீரிய தலை மையின் கீழ் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் நடை போட்டது. 

இழப்பிற்கு வருந்தா வாழ்க்கை

அலுவலகப் பணி ஓய்வை அவர் 1983 இல் பெற்றார். அவர் பென்சன் பயனை பெறவில்லை. அது போன்ற இழப்புகளுக்காக வருந்துகிற வாழ்க்கையல்ல அவருடையது. ஏனெனில் அவர் பண மதிப்பில்  இழந்தவை ஏராளம். ஆனால் அவர் ஈட்டி இருப்பது லட்சக்கணக்கான இன்சூரன்ஸ் ஊழியர்களின் அன்பை... அவர்களின் மனதில் பெரும் உயரத்தை....! அலுவலகப் பணி ஓய்வுக்குப் பின்னரும் அவர் மாநாடுகளுக்கு வருகிறார். இவ்வியக்கத்தின் பெருமை மிகு வரலாறை நம் கண் முன் கொண்டு வருவார். அவரது நடையில் வயதின் காரணமாக தளர்ச்சி இருக்கலாம். ஆனால் இலக்கை நோக்கிய அவரது  பயணத்தில், சித்தாந்த உறுதியில் சிறு தளர்ச்சியும் காண இயலாது. அவர் மேடை ஏறியவுடன் அரங்கமே எழுந்து நின்று கரவொலி எழுப்பும் போது வரலாறு மகிழும், தனது பக்கங்களுக்குள் ஓர் அரிய மனிதர் குடியிருக்கிறார் என்று...!

அவரின் “கடந்த காலத்தை பேசுகிறேன்” என்ற நூலின் உள் அட்டையில் இருக்கிற வாசகம் இது. 

 ”இது வரலாறு அல்ல. சுய சரிதையும் அல்ல. குழந்தைப் பருவம் இனிமையாக இல்லாத, மாணவப் பருவம் நிச்சயமற்ற எதிர்காலத்தை உடையதாக இருந்த, பணிக் காலம் முழுக்க போராட்டமாக இருந்த ஒரு மனிதரின் நினைவுகள் இது. உழைக்கும் மக்களின் தோழனாக அவர் மேற்கொண்ட நெடும் பயணம். வாழ்க்கையே போராட்டமாக அமைந்திருந்த தனிப்பட்ட சூழலை கடந்து  போராட்டங்களுக்காகவே தன்னை அர்ப்பணித்த மகத்தான வாழ்க்கை அது” - தோழர் சந்திரசேகர போஸ்! உங்களின் குழந்தைகள் நாங்கள். அளவற்ற மகிழ்ச்சியோடு நாங்கள் இருக்கிற தருணம் இது. உங்களின் போராட்டம், அர்ப்பணிப்பு, தியாகம் எங்களை வார்த்திருக்கிறது.  வளர்த்திருக்கிறது. நீங்கள் ஒரு வழி காட்டும் நட்சத்திரம். உங்களின் உயரத்தை எங்களால் எட்டிப் பிடிக்க முடியாமல் போகலாம். ஆனால் நீங்கள் காட்டிய திசை வழியில் செல்வோம். வெல்வோம்.

நூற்றாண்டு மாமனிதரே! உங்களை வணங்குகி றோம். இன்னும் பல்லாண்டு வாழ்ந்து வழிகாட்ட வேண்டுகிறோம்.

கட்டுரையாளர் : துணைத் தலைவர்,  தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு