articles

img

கிராமப்புற ஏழை வாழ்க்கையை கிழித்தெறியும் மோடி அரசு - வீ.அமிர்தலிங்கம்

விவசாயத்தை மட்டுமே சார்ந்துள்ள முதன்மை உற்பத்தியாளர்களாக விவசாயத் தொழி லாளர்களும், விவசாயிகளும், குத்தகை விவசாயி களும் நேரடியாகவும், மறைமுகமாகவும்  உள்ளனர். 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி விவசாயிகள் 11,86,69,264 ஆகவும்,  விவசாயக் கூலி  தொழிலாளர்கள் 14,43,29,833 ஆகவும் உள்ளனர்.  இந்திய நாட்டின் விவசாயத்தில் கூலித் தொழி லாளர்கள் அதிகம் இருந்தும், அவர்களுக்கென்று ஒரு தனிச்சட்டம் இல்லாததால், அவர்கள் அரசின் முழு கொள்கை செயல்முறையிலிருந்தும்விடுபட்டுள்ள நிலை தொடர்கிறது. விவசாயத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், இடுபொருட்கள் விலையேற்றம், கடன் வசதி கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களால் விவ சாயத்தை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து, விவசாயத்தைச் சார்ந்திருப்பதை விட கூலி உழைப்பை சார்ந்திருப்ப வர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது. 2001-2011 ஆண்டுகளில் மட்டும் 3 கோடிப் பேர் விவசாயிகளாக இருந்து விவசாயத் தொழிலாளர்களாக மாறியுள்ளனர். 

வேலையின்மை உருவாக்கிய புதிய பிரிவினர்

விவசாயம் நவீனமயமாக்கப்பட்டப் பின்னணியில், நிலத்தில் காலங்காலமாக கூலி உழைப்பை மட்டுமே  சார்ந்திருந்த கூலித் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அரிதாகி வருகிறது. நாற்று விடுவது முதல் அறு வடை வரை அனைத்தும் எந்திரமயமாகிவிட்டது. 1990 களில் குறைந்தபட்சம் 100 நாட்களுக்கு விவசாயத்தின் மூலம் கிடைத்து வந்த வேலை தற்போதைய சூழலில் பெண் விவசாயத் தொழிலாளர்களுக்கு மட்டும் அதுவும் 20 முதல் 40 நாட்கள் மட்டுமே கிடைக்கும் என்ற நிலை உருவாகிவிட்டது.  உள்ளூரில் வசித்துக் கொண்டு அருகாமை நகரங் களுக்கு ஆண் தொழிலாளர்களும் - பெண் தொழி லாளர்களும் சென்று வந்த நிலையில், கடந்த 30 ஆண்டுகளாக அமல்படுத்தப்பட்டு வரும் நாசகர தாராளமய கொள்கைகளால் சிறு- குறு தொழில்களும் பின்னடைவைச் சந்திப்பதால் அந்த வேலை வாய்ப்பும் பறிபோகிறது.  விவசாயக் கூலி வேலைகளை இழந்த கணிச மான பிரிவினர் குறிப்பாக மேற்குவங்கம், பீகார், ஒடிசா,  மகாராஷ்டிரா உள்ளிட்ட வடஇந்திய மாநிலத்தவரும், தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநி லங்களில் ஒரு பகுதியினரும் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு கட்டிடத் தொழிலாளியாக, உணவு விடுதி தொழிலாளியாக லட்சக்கணக்கில் “புலம் பெயரும் தொழிலாளர்” களாக மாறியுள்ளனர். கோவிட் தொற்று நோய் காலத்தில் இவர்களை பாஜக அரசு நாடு முழுவதும் துயரத்தில் தள்ளியதை உலகமே பார்த்தது. 

நூறுநாள் வேலைத்திட்டத்தையும் - தொழிலாளர்களையும் பந்தாடும் பாஜக அரசு

மகாத்மா காந்தி பெயரில் இருப்பதாலும் - இடதுசாரிகள் முன்மொழிந்து நிறைவேற்றியத் திட்டம்  என்பதாலும் என்னவோ ஒன்றிய பாஜக அரசு பொறுப் பேற்றது முதல் திட்டத்தைப் பல்வேறு வகைகளில் சிதைத்து ஒழிப்பதையே நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. கிராமப்புற ஏழைகளுக்கென்று அரிதிலும் அரிதாக இருக்கும் ஒரே திட்டம் இதுவாகும். தினக்கூலியும் - வேலை செய்வோரின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ள நிலையில் பாஜக அரசு ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கீட்டை வெட்டிக் குறைக்கிறது. கடந்த 2021-22ம் ஆண்டில் 98000 கோடி இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலையில், 2022-23ம் ஆண்டிற்கு 73000 கோடி மட்டுமே ஒதுக்கியது. அதிலும் கொடுமை என்னவென்றால் முந்தைய ஆண்டில் சம்பள பாக்கி இருந்த 18350 கோடியை இந்த ஒதுக்கீட்டில் இருந்த எடுத்துக் கொடுத்தது. மீதமிருக்கும் 54650 கோடி தான் நடப்பு ஆண்டிற்கான உண்மை ஒதுக்கீடு. மார்க்சிஸ்ட் கட்சி யின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி குறிப் பிட்டது போல, இந்த நிதியை வைத்து 100 நாள் அல்ல 16 நாள் தான் வேலை கொடுக்க முடியும். 

நிலைமை மேலும் மோசமாக்கும் வகையில் இந்த 16 நாள் வேலையும் கிடைக்குமா என்ற கேள்வி யை ஒன்றிய பாஜக அரசு ஏற்படுத்தியுள்ளது. வேலை  தளங்களில் தொழிலாளர்களை தேசிய மொபைல் கண்காணிப்பு அமைப்பு மூலம் - வருகைப் பதிவை தொழிலாளர்களின் புகைப்படம் - புவி குறியிடப்பட்ட இடம் ஆகியவற்றை கண்காணிக்கிறோம் என்ற பெயரில் மேலும் ஒரு தாக்குதலை பயனாளிகள் மீது  ஒன்றிய அரசு தொடுத்துள்ளது. ஒரு நாளைக்கு 2 முறை அதாவது காலை 11 மணிக்கும், 2 மணிக்கும் வேலைத் தளத்தில் தொழிலாளர்களை புகைப்படம் எடுக்க வேண்டுமென்ற தேவையற்ற நடவடிக்கை. ஒன்றிய அரசின் இந்த உத்தரவை வைத்துக் கொண்டு காலை 7, 8 மணிக்கு வேலைத்தளத்திற்குப் பயனாளிகள் வரவேண்டுமென்று அலைக்கழிக்கப்படுகின்றனர். புகைப்படம் சரியாக எடுக்கப்படாவிட்டாலோ இணைய வசதி குறிப்பிட்ட நேரத்தில் கிடைக்காமல் போய்விட்டாலோ வருகைப்பதிவு ரத்தாகி விடும் நிலை ஆங்காங்கே நடக்கிறது. இத்திட்டத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு வேலைநாட்களையும் - தினக்கூலியையும் உயர்த்திட வேண்டுமென பரிந்துரை செய்து ஓராண்டைக் கடந்தும் ஒன்றிய பாஜக அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளது. 

குறைந்தபட்சக் கூலி நடைமுறைப்படுத்துவதில் தேக்கம்

ஊரக வேலைத்திட்டத்தில் உயர்த்திய கூலி - விவ சாய பணிகளுக்கான கூலி உயர்விற்கு வழிவகுத்தது உண்மைதான். ஆனால் குறிப்பிட்ட காலங்களை கடந்தும் கூலி உயராமல் இருப்பதும் நடக்கிறது. பல மாநிலங்களில் வேளாண் தொழிலாளர்களின் குறைந்தபட்சக் கூலியை உரிய காலத்தில் ஆட்சி யாளர்கள் மாற்றியமைப்பதுமில்லை. உயர்த்தப்பட்ட கூலியை நடைமுறைப்படுத்திடவும் முன்வருவ தில்லை. இதனால் வருவாய் குறைந்த கிராமப்புற மக்கள் குடும்பம் நடத்திட சிரமப்பட்டு கடன் வலையில் தள்ளப்பட்டுள்ளனர். 

வீடு, வீட்டுமனையற்றவர்களின் கதி

நாடு சுதந்திரத்தின் 75வது ஆண்டைக் கொண்டா டும் இந்த வேளையில், குருவிக்குக் கூட கூடு கட்ட மரமுண்டு, பாம்புக்குக் கூட அடைவதற்கு ஒரு பொந்து ண்டு, ஆனால் இந்தியாவில் வீடு கட்டக்கூட சிறிது நிலமில்லை என்ற நிலையில் கோடிக்கணக்கானோர் தள்ளப்பட்டுள்ளனர். இவர்களில் கணிசமான பிரிவினர் விவசாயக் கூலித் தொழிலாளர்களாக உள்ள னர். நீர்நிலை உள்ளிட்ட பல்வேறு வகையான புறம்போக்கு இடங்களில் குடியிருப்போரை மாற்று ஏற்பாடுகள் ஏதுமின்றி நீதிமன்ற உத்தரவுகளைக் காட்டி நாடு முழுவதும் புல்டோசர் கொண்டு இடித்துத் தள்ளி நிர்க்கதியாய் தெருவில் நிற்க வைக்கும் வேலையை ஒன்றிய பாஜக அரசும், சில மாநில அரசுகளும் செய்து வருகின்றன. 

இன்று - 500 மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகங்களில் போராட்டம்

கிராமப்புற ஏழை உழைப்பாளிகள் நாளுக்கு நாள் ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத  கொடூர  நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டு அல்லல்படும் வேளையில், 5 இடதுசாரி விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் இணைந்து நாடு முழுவதும் 500 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் தர்ணா, மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்டப் போராட்டங்களை நடத்திட  அழைப்பு விடுத்துள்ளன. போராட்டத்தை வெற்றிகர மாக்கிட நாடு முழுவதும் உள்ள விவசாயத் தொழி லாளர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் இரண்டு மாத கள தயாரிப்பில் - மக்களைச் சந்தித்து பிரச்சாரம், செய்துள்ளது. 

சிஐடியு, விவசாயிகள் சங்கம் பங்கேற்பு

கிராமப்பற மக்கள் சந்திக்கும் வேலையின்மை, வறுமை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனை களுக்கு எதிராக ஒன்றிய பாஜக அரசு மற்றும் மாநில  அரசுகள் நிறைவேற்றிட வேண்டிய 28 அம்ச கோரிக்கை களை முன்னிறுத்தி ஆகஸ்ட் 1 அன்று நடைபெறும் போராட்டத்தினை இந்திய தொழிற்சங்க மையம், அகில இந்திய விவசாயிகள் சங்கம் ஆகிய அமைப்பு கள் ஆதரித்தும், போராட்டத்தில் தொழிலாளர்களும், விவசாயிகளும் பங்கேற்க அறைகூவல் விடுத்திருப் பது போராட்டத்தை மேலும் வலுவாக்கியுள்ளது. 

“அவன் ஏழைகளுக்காக எதையும் செய்வான் - ஏழையின் 
முதுகில் இருக்கும் சுமைகளை இறக்குவதைத் தவிர”

                              - என்ற லியோ டால்ஸ்டாயின்

வரிகளுக்கு ஏற்ப ஒன்றிய பாஜக அரசு கிராமப்புற ஏழைகளின் துயரங்களைப் போக்குவோம் என  சொல்லியது; ஆனால் நடைமுறையில் அவர்களுக்கு தாங்க முடியாத சுமைகளையே நாளும் ஏற்றிக் கொண்டிருக்கிறது. இந்த கொடூர ஆட்சிக்கு எதிராக ஆகஸ்ட் 1ல் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் ஆயிரமாயிரமாய் அணிதிரள்வோம்!

கட்டுரையாளர் : மாநில பொதுச்செயலாளர்,  அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம்

 

;