articles

img

அச்சமற்ற மனங்களுடன் தலை நிமிர்த்தி நிற்போம் - விஜூ கிருஷ்ணன் , இணைச்செயலாளர், அகில இந்திய விவசாயிகள் சங்கம்

எதுவுமே நிகழாத தசாப்தங்களும் உள்ளன; தசாப்தங்களை நிகழ்த்துகின்ற வாரங்களும் உள்ளன

 - இந்த முதுமொழிக்கு ஏற்ப தவிர்க்க இயலாத தோல்வி குறித்த அனைத்து தீர்க்கதரிசனங்களையும், ஒன்றுபட்ட விவசாயிகள் இயக்கம் இனிமேல் மீளப் போவதில்லை என்பதாகப் பரப்பப்பட்ட அனைத்து வதந்திகளையும் - வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ள இந்திய விவசாயிகள் போராட்டம்  முறியடித்துள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசாங்கத்தை மண்டியிட வைத்ததுடன், விவசாயிகளிடம் மன்னிப்புக் கேட்க வைத்து, மூன்று விவசாயிகள் விரோதச் சட்டங்களை ரத்து செய்யும் முடிவை அறிவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு அவர்களை உள்ளாக்கியிருக்கிறது.இதன் மூலம் தொழிலாளர் வர்க்கம் மற்றும் வெகுஜனங்களின் முன்னெப்போதுமில்லாத ஆதரவுடன் நடைபெற்ற ஒன்றுபட்ட விவசாயிகள் போராட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது. மிகப்பெரிய அளவிலான மனித இழப்பின் மூலமே இந்த வெற்றி எட்டப்பட்டுள்ளது. நடைபெற்ற போராட்டத்தில் எழுநூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தியாகிகளாகியுள்ளனர்.  கோடிக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள், அவர்களுடைய குடும்பத்தினரின் தியாகத்தாலேயே இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது. பிரதமரும், பாஜக அரசுமே விலைமதிப்பற்ற உயிர்களின் இழப்பிற்கான நேரடிக் காரணமாக இருந்துள்ளனர். அந்த முதுமொழிக்கேற்ப  கிடைத்திருக்கும் இந்த வெற்றி நாட்டின் அரசியல் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது; வெல்லவே முடியாதவர்கள் என்று கருதப்பட்ட ஆளுமைகளின் பலவீனம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது; பொய்களால் கட்டப்பட்ட அரண்மனைகள் இடிந்து வீழ்ந்திருக்கின்றன.       

யார் மூல காரணம்?

உணவு மானியங்களைக் குறைக்கவும், அரசின் பங்களிப்பை விலக்கிக் கொள்ளவும் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கிற உலக வங்கி - சர்வதேச நாணய நிதியம் - உலக வர்த்தக நிறுவனம் (WB-IMF-WTO) என்ற உலக ஏகாதிபத்தியக் கட்டமைப்பின்  கட்டளைகளின்படியே பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட  மூன்று வேளாண் சட்டங்களும் இருந்தன. தாராளமயமாக்கல், பங்குகளைத் தனியார்மயமாக்குதல், பயிர்களுக்கான ஆதார விலை முறையை நீக்குவதற்கான வெளிப்படையான அழைப்பு - தற்போதைய அரசாங்கத்தால் 2014ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சாந்தகுமார் குழுவின் மூலமாகவே விடுக்கப்பட்டது. எட்டு மணி நேர வேலை நாட்கள், தொழிற்சங்கமயமாதல் என்பது உள்ளிட்ட தொழிலாளர்கள் கடினமாகப் போராடி வென்ற உரிமைகளைப் பறிக்கின்ற தொழிலாளர் சட்டங்கள் கொண்டு வரப்பட்ட அதேநேரத்தில் இந்த மூன்று வேளாண் சட்டங்களும் கொண்டு வரப்பட்டன.

விவசாயிகள், தொழிலாளர்கள், உழைக்கும் மக்கள் என்று அனைவரும் பொதுமுடக்கத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், பெருநிறுவனங்களின் கொள்ளைக்கான கதவுகளை பாஜக அரசாங்கம் அகலத் திறந்து வைத்தது. சுரண்டுகின்ற வியாபாரிகளிடமிருந்து விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட  வேளாண் ஒழுங்குமுறை விற்பனைச் சந்தைகளை இல்லாமல் செய்வதற்கே  அந்த மூன்று சட்டங்களும் வழிவகுப்பதாக இருந்தன. அவை அரிசி, கோதுமை, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களின் வரம்பற்ற பெருநிறுவனப் பதுக்கலுக்கும், கறுப்புச் சந்தைக்குமே கதவுகளைத் திறந்து வைப்பதாக இருந்தன. எண்ணெய் வித்துக்கள், உருளைக்கிழங்கு, வெங்காயம் பற்றாக்குறை, பஞ்சம் அல்லது பிற நெருக்கடியான நிலைகள் இருக்கும்போது கூட. சமமற்ற பெருநிறுவன ஒப்பந்த விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையிலேயே அவை இருந்தன. அவற்றின் மூலம் தங்கள் சொந்த நிலத்திலேயே தொழிலாளர்களாக மாற வேண்டிய நிலை ஏழை விவசாயிகளுக்கு ஏற்பட இருந்தது. சர்ச்சைகள் எழும் போது, சட்டப்பூர்வமான உதவிக்கான வாய்ப்பு எதுவும் விவசாயிகளுக்கு இருக்காது. உண்மையில் அவை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், பட்டினி கிடக்கும் கோடிக்கணக்கான மக்களுடைய இழப்பில் பெருநிறுவனங்கள் லாபம் ஈட்டுவதை அனுமதிப்பதாக மட்டுமே இருந்தன. ‘செய் அல்லது செத்து மடி’ என்பதை உணர்ந்து கொள்வதற்கான காலம் இது என்பதை புரிந்து கொள்ள விவசாயிகளுக்கு அதிக காலம் ஆகவில்லை.      

எதையும் மறக்க மாட்டோம்!

வேளாண் அவசரச் சட்டங்கள் கொண்டு வரப்பட்ட உடனேயே - 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் விவசாயிகளின் போராட்டம் தொடங்கப்பட்டது. 

'பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, வேளாண்துறை அமைச்சர் நரேந்திர தோமர் ஆகியோர் தலைமையில் பாஜக-ஆர்எஸ்எஸ், அரசின் பிரச்சார இயந்திரம், பெருநிறுவன ஊடகங்கள் போன்றவை விவசாயிகளுக்கு எதிராக தீங்கிழைக்கும் பிரச்சாரத்தை முன்னெடுத்துச் சென்றன. விவசாயிகளை பயங்கரவாதிகள் என்று சித்தரித்த காழ்ப்புணர்ச்சிகளுக்கும், போராட்டத்தை காலிஸ்தானிகள் ஆதரிக்கிறார்கள் அல்லது பாகிஸ்தான் அல்லது சீனாவின் உத்தரவின் பேரிலேயே போராட்டம் நடைபெறுகிறது என்று சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கும் நம் நாட்டு மக்கள் தகுந்த மறுப்பை வழங்கினர். மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள், கைதுகள் என்று எதனாலும் விவசாயிகளைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. இணையம், மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட வசதிகளை நிறுத்தி வைத்தது, சங்கி குண்டர்கள் நடத்திய நேரடித் தாக்குதல்கள், போராட்டம் நடைபெற்ற இடங்களைச் சுற்றி முள்கம்பி வேலியுடன் கான்கிரீட் சுவர்களைக் கட்டியெழுப்பி, கூர்மையான இரும்புக் கம்பிகளை நட்டு அந்த இடங்களைத் திறந்தவெளிச் சிறைச்சாலைகளாக மாற்றியது என்று விவசாயிகளைத் தடுத்து நிறுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகள் அனைத்தும் தோல்வியையே கண்டன.

போராட்டத்தை நடத்திய விவசாயிகளை ‘அந்தோலன் ஜீவிகள்’ என்றும், ஒட்டுண்ணிகள் என்றும் பிரதமர் கேலி செய்தார். போராட்டத்தை தேச விரோதம் என்று சிறுமைப்படுத்தியதோடு, அதை இழிவுபடுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் அவரது கட்சியினர் மேற்கொண்டனர். விவசாயிகளுக்கு இப்போது கிடைத்துள்ள வெற்றி இத்தகைய தாக்குதல்கள் அனைத்தையும் தாண்டியே கிடைத்துள்ளது. அந்த தீவிரமான அடக்குமுறைகளை, கொடூரமான தாக்குதல்களை, நமது தோழர்கள் கொல்லப்பட்டதை,  வீசப்பட்ட அவமானங்களை இந்திய விவசாயிகளும், பொதுமக்களும் ஒருபோதும் மறக்கப் போவதில்லை. கட்டப்பட்ட கான்கிரீட் சுவர்கள், நட்டு வைக்கப்பட்ட முள்கம்பிகள், தடுப்புகள், தோண்டப்பட்ட பள்ளங்கள்,  தண்ணீர் பீரங்கி, கண்ணீர்ப் புகைக் குண்டுகள், இணைய முடக்கம், பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள் போன்றவற்றை நாம் ஒருபோதும் மறந்து விட மாட்டோம். அனைத்தும் நினைவில் வைத்துக் கொள்ளப்படும்.     

மகத்தான ஒற்றுமை

இந்த மகாஎழுச்சியில் பல்வேறு பிரிவு உழைக்கும் மக்களிடையே ஏற்பட்ட ஒற்றுமையின் அளவு வரலாறு இதுவரையிலும் அறியாதது. அடக்குமுறைகளையும், மிகவும் மோசமான வானிலை நிலைமைகளையும் விவசாயிகள் தைரியமாக எதிர்கொண்ட விதம் பலரின் இதயங்களை வென்றெடுத்துள்ளது. உழைக்கும் மக்களின் பிற பிரிவுகள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடமிருந்து விவசாயிகளுக்கான ஆதரவு திரண்டது. பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசத்தின் அண்டைப் பகுதிகளைச் சார்ந்த கிராமங்கள் போராட்டத்தளங்களில் தேவைப்பட்ட உணவுப் பொருட்கள் தட்டுப்பாடுகளின்றி கிடைப்பதை உறுதி செய்து கொடுத்தன. நிதி ரீதியாக ஆதரவளிப்பதற்கும், போர்வைகள் மற்றும் கூடாரங்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்கும் தொழிலாளர் வர்க்கம் பெருமளவிலே முன்வந்தது. டிராக்டர்களை வீடுகளாக மாற்றி, முகாம்களை உருவாக்கி, மிகப் பெரிய லாங்கர்களை (சமூக உணவுக் கூடங்கள்) அமைத்து, அடிப்படை வசதிகளைப் பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்ட விவசாயிகள் தங்களிடமிருந்த நிறுவனத் திறனை வெளிப்படுத்திக் காட்டினர்.

பிரம்மாண்டமான  டிராக்டர் அணிவகுப்பு

ஆளும் வர்க்கத்தின் மீது தாக்குதலைத் தொடுத்த விவசாயிகளின் பலம் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக இருந்தது. ஜனவரி 26 அன்று நாடு முழுவதும் நடைபெற்ற மிகப் பெரிய  தொழிலாளர்-விவசாயிகளின் அணிவகுப்பில் கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். தேசியக் கொடியை ஏற்றி, தேசிய கீதம் பாடி, தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு, தேசியத் தலைநகரைச் சுற்றி நடந்த அணிவகுப்பில் லட்சக்கணக்கான டிராக்டர்களும், பிற வாகனங்களும் கலந்து கொண்டன. 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குப் பிறகு குடியரசு தினத்தை முதன்முறையாக விவசாயிகள் தலைமையில் இந்தியக் குடிமக்கள் கொண்டாடியது அதுவே முதல்முறையாகும். 

பஞ்சாப்பில் மட்டுமே போராட்டம் நடைபெறுகிறது என்று பிரதமரும் பாஜக அரசும் கூறி வந்தபோதிலும், நாடு முழுவதும் போராட்டம் பரவியதையும், தில்லி எல்லைகளில் இந்தியா முழுவதிலும் இருந்து வந்திருந்தவர்கள் கூடிய போது விரிவான, பரந்த அளவிலான பிரதிநிதித்துவம் இருந்ததையும் நாம் கண்டோம். மாநிலம் சார்ந்து அணிதிரட்டப்பட்டிருந்தவர்களைக் காட்டிலும் கூடுதலான எண்ணிக்கையில் மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, பீகார், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, அசாம், குஜராத், ஜம்மு காஷ்மீர், வங்காளம், ஒடிசா மற்றும் பிற மாநிலங்களில் இருந்து விவசாயிகள் போராட்டத்தில் இணைந்து கொண்டிருந்தனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக, விவசாயிகள் மீது நடத்தப்பட்ட ஒவ்வொரு தாக்குதலுக்கும் எதிராக - இந்த தொற்றுநோய்க்கு மத்தியிலும்கூட - விவசாயிகளும், தொழிலாளர்களும் தொடர்ந்து வீதிகளில் இறங்கிப் போராடினர். உழைக்கும் வர்க்கம், அங்கன்வாடி, ஆஷா, மதிய உணவுப் பணியாளர்கள், பெண்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போன்ற திட்டப் பணியாளர்களும் அதிக அளவிலே வந்திருந்தனர்.  

பல்வேறு வெகுஜன அமைப்புகளுடன் இணைந்து இயக்கத்தை விரிவுபடுத்துவதற்காக அகில இந்திய விவசாயிகள் சங்கம், இந்திய தொழிற்சங்க மையம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம்  போன்ற அமைப்புகள் கடுமையாக உழைத்தன. ‘அதானி-அம்பானியைப் புறக்கணிப்போம்; பெருநிறுவன கூட்டுக்களவாணிகளை புறக்கணிப்போம்’ போன்ற பிரச்சாரங்கள், சுங்கக் கட்டணமில்லாமல் வாகனங்களை இயக்குவது என்று விவசாயிகள் பல்வேறு மாநிலங்களில் புதியபுதிய இயக்கங்களைக் கட்டமைத்தனர். உண்மையான மக்கள் இயக்கமாக மாறிய அந்தப் போராட்டம் இந்தியா முழுமைக்குமான எழுச்சியாக மாறியது.  

‘பாஜகவிற்கு வாக்களிக்காதீர் ’

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது, பாஜகவின் பெருநிறுவனம் சார்ந்த விவசாயிகள் - மக்கள் விரோத அராஜக அணுகுமுறையை அம்பலப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டை ஐக்கிய விவசாயிகள் முன்னணி எடுத்தது. அத்துடன் ‘விவசாயிகளுக்கு எதிரான பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டாம்’ என்ற பிரச்சாரத்தையும் அது மேற்கொண்டது. அந்த நிலைபாடு விவசாயத்தை பெருநிறுவனங்கள் கையகப்படுத்துவதை அனுமதிக்கும் முயற்சிகளை எதிர்ப்பதற்கும், பெருநிறுவனக் கொள்ளையை ஊக்குவிக்கும் கொள்கைகளை எதிர்ப்பதற்கும் பாஜகவின் அரசியல் தோல்வி முக்கியமானது என்ற கருத்துடன் இருந்தது.  வகுப்புவாத பதட்டத்தைத் தூண்டி, சமூகத்தை துருவப்படுத்துவதற்கான பாஜகவின் திட்டமிட்ட முயற்சிகளுக்கு எதிரான வலுவான செய்தியாகவும் அது அமைந்தது. தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தின. 

முசாபர்நகர் மகா பஞ்சாயத்து

விவசாயிகள் விரோத, மக்கள் விரோத பாஜகவை வரும் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக 2021 செப்டம்பர் 5 அன்று முசாபர்நகரில் லட்சக்கணக்கில் மக்கள் கலந்து கொண்ட மாபெரும் கிசான் மஸ்தூர் மகாபஞ்சாயத்து, மிஷன் உத்தரப்பிரதேசம், மிஷன் பஞ்சாப், மிஷன் உத்தரகண்ட் என்ற அழைப்பை விடுத்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு வகுப்புவாதப் படுகொலையைக் கண்டிருந்த அதே இடத்திலிருந்து மதநல்லிணக்கத்திற்கான உறுதியான செய்தியை முசாபர் நகர் மகாபஞ்சாயத்து விடுத்தது குறிப்பிடத்தக்கது. அந்த அழைப்பு நுணுக்கமான, தன்னுணர்வுடனான தலையீட்டின் விளைவாகவே விடுக்கப்பட்டது. பல்வேறு அமைப்புகளின் பிரச்சனை அடிப்படையிலான ஒற்றுமையை ஒருங்கிணைத்து, பாஜக பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பெருநிறுவனச் சார்பு, வகுப்புவாத, எதேச்சதிகார அரசியலுக்கு எதிரான மாற்று அரசியல் திசையை அது சுட்டிக்காட்டுவதாக இருந்தது. அந்த மகாபஞ்சாயத்துக்காக இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை அகில இந்திய விவசாயிகள் சங்கமும், அதன் சகோதர அமைப்புகளும் இணைந்து திரட்டியிருந்தன. மிஷன் உத்தரப்பிரதேசம், மிஷன் உத்தரகண்ட், மிஷன் பஞ்சாப் ஆகியவற்றின் வெற்றி பாஜகவிற்கு பின்னடைவைக் கொடுக்கவும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கத்தை வற்புறுத்துவதற்கும் மிகவும் முக்கியமானவையாகும். பாஜகவின் தோல்வி நிச்சயம் இந்திய அரசியலின் போக்கை நிர்ணயிப்பதாகவே இருக்கும். இந்திய அரசியலமைப்பு, ஜனநாயகம், மதச்சார்பின்மை ஆகியவற்றின் பாதுகாப்பின் மீது அது தாக்கத்தை ஏற்படுத்தும். அரசியல் தோல்வி குறித்த பயமே இன்றைக்கு நரேந்திர மோடியை மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் என்பதை அறிவிக்குமாறு கட்டாயப்படுத்தியிருக்கிறது.  

பாரதி வழியில்...

‘உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை, அச்சமில்லை, அச்சம் என்பதில்லையே’ என்று மகாகவி பாரதி முழங்கியதைப் போல், தங்களிடம் உருவாக்கப்பட்ட அச்சத்தை இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் போராட்டத்தில் தொழிலாளர்களும் விவசாயிகளும் தூக்கியெறிந்துவிட்டு வந்திருக்கிறார்கள். இப்போது தொழிலாளர்களும் விவசாயிகளும் ஆளும் வர்க்கத்தின் மனதில் அச்சத்தை விதைத்திருக்கின்றனர்.  

போராடுவோம். வெற்றி பெறுவோம். ‘வரும் வாரங்களில் சகாப்தங்கள் நிகழும்’. மக்கள் சார்பான மாற்று நோக்கிய நமது போராட்டம் நிச்சயம் வெல்லும். அச்சமற்ற மனங்களுடன், தலை நிமிர்த்தி நின்று  மக்களின் எதிரிகளுக்கு இன்னும் பல தோல்விகளை அளிப்போம்!       

தமிழில்: பேரா. தா.சந்திரகுரு


 


 

;