articles

img

என்றும் வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக... - என்.சிவகுரு

செங்கொடி இயக்கத்தின் தியாகிகளின் வரலாறு ஒவ்வொன்றும் போற்றப்பட வேண்டிய, பின்பற்ற வேண்டிய பொது வாழ்க்கை நெறியாக அமைந்துள்ளது. அத்தகைய பொருள் பொதிந்த வாழ்வைத் தான் தியாகி என்.வெங்க டாசலம் நமக்கு விட்டுச் சென்றுள்ளார். அமைப்பின் மீது மாறாப் பற்றும், கொண்ட கொள்கையின் மீது தடுமாற்றமில்லாத உறுதியும் தான் அவர் விட்டுச் சென்ற தடங்கள். அந்தத் தடங்களின் வழியே இன்று உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகவும், சமூ கத்தால் புறக்கணிக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட, வஞ்சிக் கப்பட்ட விளிம்பு நிலை மக்களுக்காக களம் காண வேண்டிய தேவை அதிகமாகியுள்ளது.

மேற்கு தஞ்சை எனும் வித்தியாசமான பரப்பு

ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் இன்றைய நாகை, திருவாரூர் பகுதிகளில் இருந்தது போல அல்லா மல், மேற்கு தஞ்சை எனப்படும் இன்றைய தஞ்சை மாவட்டத்தில் சமூக உறவுகள் சற்றே வித்தியாசமா னவை. அதுவும் குறிப்பாக தோழர் என்.வெங்கடா சலம் களமாடிய பகுதிகள் பெரும்பாலும் வறண்ட மேட்டுப் பகுதி. இன்றும் அவரின் சொந்த ஊரான இராய முண்டான்பட்டியும் அதைச் சுற்றியுள்ள பகுதிக ளுக்கும் விவசாயம் என்பது பெரும் பாடாகவே உள்ளது. அதனாலேயே சமூக உறவு நிலைகள் கிழக்கு தஞ்சையில் இருந்தது போல் இல்லை. மேற்கு தஞ்சையின் ஒரு சில பகுதிகளில் மட்டுமே பெரும் நிலக்குவியல் (பண்ணைகளின் ஆதிக்கத்தில்) இருந்தது. அந்தப் பகுதிகளிலும் செங்கொடி இயக்கம் மகத்தான பல போராட்டங்களை நடத்தியுள்ளது. அதன் வழியே பலமான இயக்கமும், கம்பீரமான தலைவர்க ளும் இருந்தனர். 

தோழர் என். வெங்கடாசலம் துவக்க காலத்தில் திராவிட இயக்கத்தின் தீவிரப் பற்றாளராகவும், அதன் கொள்கை மீது தீரா பிடிப்பும் கொண்டிருந்தார். அக் காலத்தின் முக்கியத் தலைவராகவும் பணியாற்றி வந்தார். ஆனாலும் அந்த அமைப்பு கடைக்கோடி மனிதருக்கு ஏற்படும் சிக்கல்களை தீர்த்து வைப்ப தில் குறிப்பிட்டு சொல்லும்படியான பங்களிப்பை செய்வதில்லை; அதில் ஒரு பெரும் போதாமை இருப்பதாகவே உணர்ந்தார். அதனால் மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை, சுயமரியாதையை காப்பாற்றுவதில், உரிமைகளைப் பெற்றுத் தருவதில் இருக்கும் இடைவெளியை நிரப்புவதில் செங்கொடி இயக்கத்தின் கொள்கைகளே பொருத்தமாக இருக்கும் எனும் திடமான நம்பிக்கை கொண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொள்கிறார். அதிலும் விவசாயிகள் சங்கத்தின் முன்னோடி தலைவராக களம் இறங்குகிறார்.  சமூக முரண்களை ஏற்கெனவே தன் அனுப வத்தால் புரிந்து கொண்ட தோழர் என். வெங்கடா சலம் அந்த ஏற்ற தாழ்வுகளை சமன் செய்வதில் தன்னு டைய திறன் மிக்க முயற்சிகளால் வெற்றி கண்டார். 

வர்க்க, சாதியப் பிணைப்பு 

இந்திய சமூக அமைப்பில் பின்னிப் பிணைந்தி ருக்கும் வர்க்கமும், சாதியும் ஒரு சேர எதிர்க்கப்பட வேண்டியவை, இவைகளுக்கு தனித்தனியே தீர்வு காண்பது எளிதல்ல, ஒன்றை விட்டு இன்னொன்றை எதிர் கொள்ள முடியாது என்பதில் அவர் தீர்க்கமாக இருந்தார். அந்த அடிப்படையில் சமூக கொடுமைக ளான தீண்டாமை, சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக தன் போராட்டக் கூர் முனையை தீட்டினார்.  நாம் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை  நாம் தீர்மானிப்பதில்லை, எதிரிகள் தான் முடிவு செய்கிறார்கள் என்று மாவோ சொன்னார். அதைத் தான் தோழர் என்.வி செய்தார். சாகச முயற்சிகள் எதுவும் கிடையாது. மக்களைத் திரட்டுதல், கூட்டுப் போராட்ட வகையே அவர் வழிகாட்டல்.  தீண்டாமையின் சகல வடிவங்களும் உச்சத்தில் இருந்த அந்நாட்களில் சமரசமின்றி எதிர்த்தார். இன்றும் கூட சமூக ஊடகங்களில், பொது வெளியில் கம்யூனிஸ்ட்கள் சாதி ஒழிப்பு- தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கைகளில் என்ன சாதித்தார்கள் என சர்வ சாதாரணமாக கேட்கும் பலரை பார்க்க முடிகிறது. ஊருக்குள் செருப்பணிந்து வரமுடியாது என சொன்ன போது, செயலில் இறங்கி அந்த மனிதனை கம்பீரமாக செருப்பணிய வைத்து, எல்லா தெருக்களிலும் நடக்க வைத்து,  அந்த எளிய மனிதனோடு தானும் நடந்து உரி மையை நிலைநாட்டியவர்.  வெறும் வார்த்தைகளால் அல்ல, செயலால் செய்து காட்டியவர் 

கூலி கொடுப்பதில் சாதியப் பாகுபாடு நிலவுகி றது என தெரிகிறது. களத்தில் நேரிடையாக சென்று மக்களிடம் கேட்கிறார். உண்மை என தெரிய வரு கிறது. விவசாயத் தொழிலாளர்களை ஏற்கெனவே உழைப்பால் சுரண்டுகிறார்கள், அதிலும் சாதியப் பிரிவினையா? எல்லோருமே ஒரே மாதிரி தான் உழைக்கிறோம். உழைக்கும் நேரத்திலும் வித்தியாச மில்லை. பின்னர் கூலியில் ஏன் பாகுபாடு? விளக்கமாக மக்கள் மொழியில் பேசுகிறார். நாம் எல் லோரும் தொழிலாளர்கள்- ஆனாலும் சாதியை கார ணம் காட்டி கூலியை குறைக்கலாமா என கேள்வி யின் நியாயத்தை உணர்த்தினார். அனைத்துப் பகுதி மக்களையும் திரட்டினார். புதுமையான போராட்ட வடிவம். கோரிக்கை நிறைவேறியது.  உழைப்பை மூலதனமாக்கி பணியாற்றும் மக்களிடத்தில் வர்க்க உணர்வையும், அதே சமயம் சாதியால் தாழ்ந்தவர்கள் என்பதால் வஞ்சிக்கப்படு கிறோம் என்பதையும் ஒரு சேர உணர்த்தி அவர் முன்நின்றார். 

உரிமை மீட்டெடுப்பு 

இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆன பின்னும், உலகம் முன்னேறி வருகிறது, பழைய மாதிரி யெல்லாம் இப்ப நெலம இல்ல, ஒரு பிரச்சனையும் கெளம்பறதே இல்லன்னு சிலர் மேலோட்டமாக பேசுவதை கேட்க முடிகிறது.  சமூக நீதியில் ஓரளவுக்கு முன்னேறிய தமிழகத்தி லேயே தலித் ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்கள் ஜன நாயகக் கடமையைக் கூட நிறைவேற்ற முடியாமல் (சுதந்திர தின கொடியேற்றுதல்) புறக்கணிக்கப்படு வதை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கள ஆய்வு செய்து சொன்ன பிறகே இன்று அரசு இயந்தி ரம் மெல்ல நகர்கிறது.  இதுவே 50-60 ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி இருந்திருக்கும்? குரலற்றவர்களின் குரலாக தோழர் என். வெங்கடாசலம்  தலித் மக்களின் உரிமைக ளுக்காக இயக்கம் கண்டுள்ளார். 

ஊரும் சேரியும் இன்னும் சேராமல் தான் இருக்கின்றது. அதுவும் சேரியில் இறப்பு ஏற்பட்டால் அவர்கள் அனுபவிக்கும் துன்பங்களுக்கு அளவே இல்லை. ஊர் வழியாக செல்ல அனுமதி இல்லை. பல மைல் சுற்றிக் கொண்டு தான் போக வேண்டும். ஒழுங்கமைக்கப்பட்ட சாலைகள் இருக்காது, வாய்க்கா லில் இறங்கி மார்பளவு தண்ணீரில் இறந்தவரின் பாடையை தூக்கிச் செல்வது பெருங்கொடுமை. ஆட்சி யாளர்களோ அன்றும், இன்றும் ஆதிக்கம் செலுத்து பவர்கள் பக்கம்.  அப்போது தோழர் என்.வி., மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையிலிருந்தார். ஆனா லும் உரிமை மறுப்பு (ஊரின் வழியே சடலத்தை எடுத்துச் செல்ல அனுமதி மறுப்பு) பற்றி தகவல் தெரிந்ததும் சிறைச்சாலையிலிருந்தே வழிகாட்டினார். அழுத்தமாக, சமரசமின்றி செய்யப்பட்ட போராட்டத் தின் விளைவாக உரிமை பெறப்பட்டது. ஒரு சாமானிய மனிதனின் தனி மனித உரிமை துவங்கி, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்டு, பெற்றுத் தருவதில் கம்யூனிஸ்ட்டுகளின் பங்களிப்பை தெரிந்து கொள்ள வேண்டுமா? தஞ்சை மாவட்டத் தின் திருவையாறு, பூதலூர், தஞ்சை ஒன்றிய பகுதிக ளில் தோழர் என். வெங்கடாசலத்தின் தடங்கள் இன்றும் தெரியும். வந்து பாருங்கள்.

சமூகச் சமநிலை 

தோழர் என். வெங்கடாசலம் முன்னெடுத்த போராட்டங்களின் பட்டியலை மீண்டும் மீண்டும் பதிவிட தேவையில்லை. ஆனாலும் அவர் செய்த போராட்டங்கள் இன்றும் தேவைப்படுகிறது என்பதே  உண்மை. சாதியை முதன்மைப்படுத்தும் அடையாள அரசியல் மேலோங்கி நிற்கும் காலமிது. ஒடுக்கப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை தன்னுடைய “மத வெறி-பிளவுவாத” அரசியலுக்கு பயன்படுத்தும் பிஜேபி மற்றும் இந்துத்துவா சக்திகள், என ஒரு சிக்கலான அரசியல் காலகட்டத்தில் களமாடும் நாம் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பதை தோழர் வெங்கடாசலம் சொல்கிறார். பிரச்சனைகள் உங்களை  தேடி வரும் போது தலையிட்டு வழிகாட்டுவது ஒரு  வகை. நீங்களே பிரச்சனைகளைத் தேடிப் போகும் போது ஏராளம் உங்களுக்கு தெரிய வரும். துணிச்ச லாக நின்று வழி நடத்துங்கள். மக்கள் திரள் உங்கள் பின்னால் வருவார்கள்.  ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான தீண்டாமை நவீன வடிவங்களை எடுத்து சாதிய மேலாதிக்க இருப்பை தக்க வைக்கிறது. அதே போல உழைப்புச் சுரண்டலும் புது வடிவங்களில் உருவெடுத்துள்ளது.  இதை புரிந்து கொண்டுள்ள நாமே அதற்கான தீர்வை தரமுடியும். 

தன்னுயிருக்கு ஆபத்து இருக்கிறது என்பதை தெரிந்துதான் தோழர் என். வெங்கடாசலம் களமாடி னார். பயந்து, ஒளிந்து கொண்டு இருக்கவில்லை. சுயசாதி பெருமை பேசும் ஆதிக்க வெறியர்களிடம் கிஞ்சிற்றும் சமரசமின்றி களமாடினார். அவரிடம் வர்க்க பாசமே மேலோங்கியிருந்தது. சகமனிதனின் வலியே அவருக்கு பிரதானமாக இருந்தது. அவர் ஏற்றுக் கொண்ட கம்யூனிசக் கொள்கையின்படி தன் சுயசாதி  அடையாளங்களை விட்டொழித்து நின்றதால் தான் வீரமரணம் எய்தினார்.  அந்த தடங்களின் வழி நடப்போம். சமூக சமநிலை பெறுவோம்.

கட்டுரையாளர்: சி.பி.எம் 
தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினர் 

;