articles

img

வியர்வைச் சாலைகளும் சுரண்டும் மோடி அரசும்! - ஏ.பி. அன்பழகன்

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய பாஜக அரசு குறைக்காதது நாடு முழுவதும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறையாமலேயே உள்ளது.  விலைகள் உயர்த்தப் படும்போதெல்லாம் சர்வதேச விலை நிலவரங்களின் அடிப்படையிலேயே பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுவதாக ஒன்றிய பாஜக அரசு கூறுவது வழக்கம்.  சென்னையில் பெட்ரோல் விலை  ரூ. 102.63 காசுகள், டீசல் விலை லிட்டர் ரூ. 94.24  காசுகள் என்ற நிலையில் விற்பனை செய்யப்படு கிறது.  சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை  குறைந்துவரும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையுமா என்ற கேள்விக்கு ஒன்றிய  அர  சின் பெட்ரோலியத் துறை அமைச்சர் பதிலளித்துள் ளார்.

அதில் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளபோதிலும், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் உள்ளதால், அவை மீண்டு வர இன்னும் கால அவகாசம் தேவைப்படுகிறது என பதிலளித்துள்ளார்.  அதாவது பெட்ரோல், டீசல் விலைகளை அரசு குறைக்கப்போவதில்லை. இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன்  மற்றும் இந்தி யன் ஆயில் கார்ப்பரேசன்  போன்ற எண்ணெய்யை சந்தைப்படுத்தும் நிறுவனங்களும் இப்போதைக்கு விலையைக் குறைக்கமாட்டாது என்பதையே மறை முகமாக அமைச்சர் ஹர்தீப்சிங்பூரி  குறிப்பிட்டுள்ளார். 2014-2015இல் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி வருவாய் ரூ. 1,72,065 கோடியாக இருந்தது.  அது  2021-2022 நிதியாண்டில் ரூ. 4,92,303 கோடியாக வரி வருவாய் அதிகரித்துள்ளது. கடந்த மே மாதம் 21ஆம் தேதி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ஒன்றிய அரசு பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ. 9.50 காசுகள் என்ற அளவிலும், டீச லுக்கு ரூ. 7 என்ற அளவிலும் ஒப்புக்காகக் குறைத்தது.  அது பெரிய நிவாரணமாக மக்களுக்கு அமைய வில்லை.  மேற்கண்டுள்ள அளவிற்கு கலால் வரி என்ற  பெயரில் மக்களிடம் கொள்ளையடித்த பிறகும்கூட எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இருக்கின்றன என்றால் அதற்கு யார் பொறுப்பு?  ஒன்றிய பாஜக அரசுதானே.

சுங்கச்சாவடி கட்டணக்கொள்ளை

தேசிய நெடுஞ்சாலைத் துறையின் முக்கியப் பணி அனைத்து மாநிலங்களையும் சாலைகள் மூலம் இணைப்பது மற்றும் அதனை மேம்படுத்துவது.  பயணிகள் போக்குவரத்து மட்டுமல்லாமல், சரக்குப் போக்குவரத்துக்கும் அத்தியாவசியமான தரமான சாலைகளை உருவாக்கும் பொறுப்பு ஒன்றிய அர சுக்கு உள்ளது.  இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அரசு 4 வழி அல்லது 6 வழிச் சாலைகளை ஏற்படுத்தி, சுங்கச் சாவடிகளை அமைத்து அவற்றை தனியார் ஒப்பந்த தாரர்களுக்கு குத்தகைக்கு கொடுத்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அதிகபட்சமாக 15 ஆண்டுகள்அல்லது அதற்காக செய்யப்பட்ட முத லீடைத் திரும்ப எடுக்கும் வரை மட்டுமே முழுமை யான சுங்க கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.  அதன் பின்னர் பராமரிப்புக்கான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்பதுதான் விதி. ஆனால் தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை களில் பெரும்பாலானவை அமைக்கப்பட்டு 15 ஆண்டு களுக்கு மேலாகிவிட்டன.  அதேபோல் பெரும்பாலான சாலைகளுக்கு செய்யப்பட்ட முதலீடும் எடுக்கப் பட்டுவிட்டது.  அத்தகைய சாலைகளில் பராமரிப்புக் காக 40 விழுக்காடு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும்.  ஆனால் அனைத்துச் சாலைகளிலும் முழுமையான சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுவது நியாயமற்றது.  இக்கட்டண உயர்வால் அத்தியாவசி யப் பொருட்களின் விலைகளும் மேலும் மேலும் அதிகரிக்கும்.

நமது மாநிலத்தைப் பொறுத்தவரை நெடுஞ்சாலை களில் 50 சுங்கச்சாவடிகள் உள்ளன.  இவற்றில் ஆண்டுதோறும் ஏப்ரல், செப்டம்பர் மாதங்களில் சுங்கக்கட்டணம்ஒன்றிய அரசால் உயர்த்துவது நடைமுறையில் இருந்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 22 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், எஞ்சியுள்ள 28 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.  இந்த கட்டண உயர்வு பொதுமக்கள் தலையில் வேறு வகையில் திணிக்கப்படுகிறது. வாகனங்களில் எடுத்துச் செல்லப்படும் சரக்கு மற்றும் கொரியர் கட்டணங்களை சம்பந்தப்பட்ட நிறு வனங்கள் 30 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை  உயர்த்தியுள்ளன. லாரிகள், சரக்கு ஆட்டோக் களுக்கான டீசல், உதிரிப்பாகங்கள், இரண்டாம் நபர்  காப்பீட்டுத் தொகை ஆகியவற்றை ஒன்றிய அரசு  ஏற்கனவே உயர்த்திவிட்டது.  இவற்றுடன் சுங்கக் கட்டண உயர்வும் சேர்ந்துவிடுவதால், அந்தந்த நிறு வனங்கள் சேவைக்கட்டணங்களை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.

தினமும் ரூ. 135 கோடி வசூல்

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப் பாட்டில் 1,51,019 கிலோ மீட்டர் நீளமுள்ள நெடுஞ்சா லைகள் உள்ளன.  இந்த நெடுஞ்சாலைகளில் 566 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.  தமிழ்நாட்டில் 5134 கிலோ மீட்டர் நீளமுள்ள நெடுஞ்சாலை இதில் அடங்கும்.  இந்த சுங்கச்சாவடி கள் வழியாக தினசரி சராசரியாக 64 லட்சம் வாக னங்கள் பயணித்து ரூ. 135 கோடி அளவிற்கு வாகன  உபயோகிப்பாளர்களிடமிருந்து கட்டணம் அன்றாடம் வசூலிக்கப்படுகிறது.  ஆண்டுதோறும் சுங்கச்சாவடி களில் வாகன உபயோகிப்பாளர் கட்டணங்களை உயர்த்திக்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணை யத்திற்கு பாஜக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

60 கிலோ மீட்டர் இடைவெளியில்

60 கிலோ மீட்டர் இடைவெளியில் சுங்கச்சாவடி அமைக்கக் கூடாது என தேசிய நெடுஞ்சாலைத்துறை யின் விதிகளில் உள்ளது.  ஆனால் தமிழகத்தில் 60 கிலோ மீட்டர் இடைவெளி தூரத்திற்குள் அமைக்கப் பட்டுள்ள 22 சுங்கச்சாவடிகள் ஒன்றிய தரைவழி போக்கு வரத்து அமைச்சகத்தால் அடையாளம் காணப்பட்டு 3 மாதகால அவகாசத்தில் இவைகள் அகற்றப்படும் என ஒன்றிய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறியிருந்தார்.  நாடாளுமன்றத்தில் அறிவிப்பு செய்து பல மாதங்கள் கடந்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.   உதாரணத்திற்கு மதுரையைச்சுற்றி சிட்டம்பட்டி, எலியார்பத்தி, கொடை ரோடு-கப்பலூர்-எட்டூர் விட்டம் (சாத்தூர்) - சாலைப்புதூர் (கயத்தார்) ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள டோல்கேட்டுகள் 60 கிலோ மீட்டர் தொலைவிற்குள்தான் அமைந்துள்ளன.

நெடுஞ்சாலைகளில் பயணத்தை மேற்கொள்ளும் போது, வாகன உபயோகிப்பாளர்களுக்கு தேவை யான கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள், சாலைகளை முறையாகப் பராமரித்தல், சாலையின் நடுவில் வெள்ளை மற்றும் மஞ்சள் பெயிண்ட் மற்றும் ஒளிரும் பட்டை பதித்தல், பாலங்கள் மற்றும் சாலை சந்திப்புகளில் போதிய விளக்குகள் அமைத்தல் போன்ற எந்த கட்டமைப்புகளும் முறையாக பெரும்பாலும் செய்யாமல்-கட்டணத்தை மட்டும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆண்டு தோறும் மேலும் மேலும் உயர்த்திக் கொண்டிருப்பது எந்த வகை நியாயம்?  ஒவ்வொரு புதிய வாக னத்திற்கும் ஆயுட்கால சாலை வரி அரசுக்கு செலுத்தப்படுகிறது.

சுங்கக் கட்டணம் 15% உயர்வு

கார், வேன், ஜீப் உள்ளிட்ட இலகுரக வாகனங் களுக்கு ஒரு நாளில் ஒரு முறை பயணிக்க ஏற்கனவே செலுத்தப்படும் கட்டணத்தைவிட கூடுத லாக ரூ. 10/-ம், பேருந்துக்கு ரூ. 20/-ம், லாரிகளுக்கு ரூ. 35/-ம் மற்றும் பல அச்சுகள் கொண்ட கனரக வாக னங்களுக்கு டோல்கேட் கட்டணம் ரூ. 150/- கூடுத லாக வசூலிக்கப்பட உள்ளது.  தமிழக அரசின் போக்குவரத்துக் கழகங்களில் சுமார் ரூ. 100 கோடி அளவிற்கு சுங்கக் கட்டணமாகச் செலுத்தி வரும் நிலையில், கட்டண உயர்வால் சுமார் ரூ. 115 கோடி அளவில் மாதத்திற்கு செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  சுங்கச்சாவடிகளில் வாகனத்திற்கு ஒவ்வொரு முறையும் கட்டணம் வசூலிப்பது நியாய மாகாது.  சாலைகள் அமைக்கப்பட்டு குறிப்பிட்ட கால வரம்பிற்குப்பின் சுங்கச்சாவடிகளை அகற்ற ஒன்றிய பாஜக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில்

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கை யின்படி கடந்த ஆண்டில் இரு சக்கர வாகன விபத்துக் களில் தமிழ்நாடு முதல் இடம் பெற்றுள்ளது.  2021ஆம் ஆண்டிற்கான குற்ற விவரங்கள் தொடர்பான அறிக்கையை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டில் நாடு முழுவதும் சாலை விபத்துக்களில் 1,55,622 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், அவற்றில் இருசக்கர வாகன விபத்துக் களால் ஏற்பட்ட மரணம்தான் அதிகம் எனவும் கூறப்பட்டுள்ளது.  இருசக்கர சாலை விபத்துக்களில் 69,240 பேர் இறந்துள்ளனர்.  தமிழகத்தில் 8259 பேர் இருசக்கர வாகன விபத்துக்களில் இறந்துள்ளனர்.  பேருந்து விபத்துக்களால் ஏற்பட்ட மரணங்களில் 1337 இறப்புகளுடன் உத்தரப்பிரதேசம் முதலிடத்திலும், 551 இறப்புகளுடன் தமிழகம் இரண்டாவது இடத்தி லும் உள்ளன. 2021 ஏப்ரல் கணக்கின்படி 2,61,45,113 இருசக்கர வாகனங்கள் தமிழகத்தில் மட்டும் உள்ளன.  சாலைகளிலும் இயக்கப்படுகின்றன.  இதுபோன்ற  உயிர்ப்பலி விபத்துக்கள் சுமார் ஒன்றரை லட்சம் பேர் இந்தியாவில் சாலை விபத்துக்களில் இறக்கின்றனர் என்று சொல்லித்தான் கடந்த 13.9.2014 அன்று உள்நோக்கத்துடன் சாலைப்போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு மசோதா-2014 என ஒன்றிய பாஜக அரசு இண்டர்நெட்டில் வெளியிட்டது.  

சாலைப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு மசோதா 2014ஐ தாக்கல்செய்து நிறைவேற்ற முடியா மல் தள்ளிப்போடும் நிலையினை உருவாக்க முடிந்த தற்கு CITU-AIRTWF அமைப்புகளின் தொடர் இயக்கங்கள்/வேலை நிறுத்தப் போராட்டங்களே காரணம்.  4, 5 ஆண்டுகள் காலம் கடந்து வந்த நிலையில், நடைமுறையில் இருந்துவந்த மோட்டார் வாகனச் சட்டம் 1988இல் கார்ப்பரேட் மற்றும் பெரு முதலாளிகளுக்கு சாதகமான வழியில், நடை முறையில் உள்ள சட்டத்தில் 92 திருத்தங்களை செய்து  2019இல் மீண்டும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து, மாநிலங்களவையிலும் ஒப்புதல் பெற்று சட்டமாக்கப்பட்டுவிட்டது. 1.4.2021இன் கணக்கின்படி தமிழகத்தில் மூன்று கோடியே ஒன்பது லட்சத்து நாற்பத்தி நான்காயிரத்து எண்ணூற்று பதினாறு (3,09,44,816) வாகனங்கள் சாலைகளில் இயக்கப்படுகின்றன.  அரசு பேருந்துகள் 20926, தனியார் பேருந்துகள் 7662, மினி பஸ் 4056. பேருந்துகளின் மூலம் மக்களின் பயணத்தேவையைப் பூர்த்தி செய்கின்ற விதத்தில் தமிழகத்தில் இயங்குகின்றன. அதேபோன்று ஆட்டோ 3,03,232, டாக்சி 4330, மோட்டார் கேப்ஸ், மேக்சிகேப், ஆம்னி பஸ் என 2,26,125 வாகனங்கள் மக்களின் பயணத் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றன.  தனியார் வாகனங்கள் பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகள், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் என 61,311 வாகனங்களும், சரக்கு போக்குவரத்திற்காக லாரி,  நேஷனல் பர்மிட் லாரி, டிராக்டர் மற்றும் டிரைலர், லைட் கமர்ஷியல் வாகனங்கள் போன்று 6,90,349 வாகனங்கள் சரக்கு போக்குவரத்துக்காக சாலை களில் இயக்கப்படுகின்றன.

தமிழகத்தில் மக்களின் பயணத்தேவைக்காகவும், சரக்கு ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு  செல்லுகிற சரக்கு போக்குவரத்து வாகனங்கள் என மொத்தம் 13,13,661 வாகனங்கள் மக்களின் பயன்பாட்டிற்காக சாலையில் இயக்கப்படுகின்றன. தனியாருக்குச் சொந்தமான இரு சக்கர வாகனம்,  கார், ஜீப், டிரை சைக்கிள், டிராக்டர் மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் என 2,96,31,155 வாகனங்கள் உள்ளன. தமிழகத்தில் சுமார் 3 கோடி வாகனங்களுக்கு மேல் சாலைகளில் செல்வதற்குரிய சாலை வசதிகள் போதுமான அளவிற்கு இருப்பதாகக் கூற முடியாது.  ஏராளமான குண்டும் குழியுமான சாலைகள் உள்ளதை கணக்கில் எடுத்து வாகனங்கள் இயக்கப்பட வேண்டிய நிலை உள்ளது.

வாழ்வாதாரத்தொழில்

சாலை விபத்துக்களை கட்டுப்படுத்தவும், புகை மண்டலத்தை தவிர்க்கவும் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்த மக்கள் முன்வர வேண்டும்.  அதிமுக ஆட்சியில் 2015-2016இல் 23,078 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.  2021-21இல் 19,488 பேருந்து களாக குறைக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு இயக்கும் நிலை ஒன்றிய பாஜக அரசின் கொள்கை யால் அதிமுக ஆட்சியிலேயே குறைக்கப்பட்டது.  25,716 பேருந்துகள் தமிழகத்தில் இயக்குவதற்கான அனுமதி 1990-91 ஆண்டுவாக்கில் தமிழக அரசால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  தற்போதைய திமுக அரசும் பொதுப்போக்கு வரத்தை பலப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  நாட்டின் முன்னேற்றத்திற்கும், பொருளா தார வளர்ச்சிக்கும் போக்குவரத்தே அடிப்படை யானது.  நவீன உலகில் மோட்டார் தொழில் முக்கிய பங்காற்றி வருகிறது.  நாட்டின் பொருளாதாரச் சுழற்சிக்கு  மட்டுமின்றி பல கோடி குடும்பங்களின் வாழ்வாதார மாக மோட்டார் தொழில் உள்ளது.

சாலைப்போக்குவரத்து தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சிஐடியு போராடும் நிலையில், பொதுப்போக்குவரத்தை ஒன்றிய பாஜக அரசு மோட்டார் வாகனச் சட்டத்தை திருத்தி,  கார்ப்பரேட்-பெருமுதலாளிகளிடம் ஒப்படைப்ப தற்கான நடவடிக்கை எடுத்துள்ளது.  இதன் காரண மாக மோட்டார் தொழிலும் அதில் பணிபுரியும் தொழிலாளர்கள் வாழ்வது என்பது பெரும் சவாலாக மாறியுள்ளது. ஒட்டுமொத்த தரைவழி போக்குவரத்துத் துறையை  பெருமுதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங் களுக்கும் வழங்கத் துடிக்கிறது பாஜக அரசு. ஒன்றிய அரசின் தரைவழி போக்குவரத்து அமைச்சகத்தின் மூலம் பிறப்பிக்கும் பல உத்தரவுகளால் பாதிக்கப் பட்டு, வாழ்வாதாரத்தை இழந்த போக்குவரத்து சார்ந்த தொழில்களை செய்யும் வாகன உரிமை யாளர்களும், பணியாளர்களும் உள்ளனர். இந்நிலை யில், ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்களும், பயிற்சியாளர்களின் பணியாளர்களும் பிரச்சனை களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

காவல்துறை மூலம் தொடுக்கும் தாக்குதல், ஆர்டிஓ அலுவலகங்களில் கொடுக்கப்படும் நெருக்கடி கள், சுங்கக் கட்டணம் உயர்வு கண்மூடித்தனமான அபராதங்கள், நஷ்ட ஈட்டிற்கான பிரிமியத்தை கூடுத லாக்கியது, கிரீன் டேக்ஸ், எப்சி கட்டண உயர்வு  போன்ற பல்வேறு இன்னல்களுக்கு சாலைப்போக்கு வரத்து தொழிலாளர்கள்   ஆளாக்கப்பட்டுள்ளனர். மேற்குறிப்பிட்டுள்ள அனைத்துப் பிரச்சனை களுக்கும் உரிய தீர்வுகாணவும், 2019 மோட்டார் வாகன சட்டத்தைக் கைவிடக்கோரியும், பெட்ரோல், டீசல், கேஸ் விலையைக் கட்டுப்படுத்தக்கோரியும், சுங்கக் கட்டண உயர்வை வாபஸ் பெறக் கோரியும், மோட்டார் தொழிலாளிக்கு சட்ட சமூகப்பாதுகாப்பு கிடைக்கக்கோரியும், சாலைப்போக்குவரத்து தொழிலை முறைப்படுத்துவதுடன் இதில் ஈடுபட்டுள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு வேண்டுமென அகில இந்திய சாலைப்போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் தொடர்ந்து போராடி வருகிறது.  

இச்சம்மேளனத்தில் இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சாலைப்போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனத்தின் 5ஆவது மாநில மாநாடு விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் 2022 அக்டோபர் 18 (இன்று)நடைபெற உள்ளது. மாநாட்டில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை வெற்றிகரமாக்க செயல்படுவதோடு, ஒன்றிய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத கொள்கைகளுக்கு எதிராக சாலைப்போக்குவரத்து தொழிலாளர்களையும், வாகன நடுத்தர உரிமை யாளர்களையும் அணி திரட்டுவோம், போராடுவோம், வெற்றி பெறுவோம்.

கட்டுரையாளர் : நிர்வாகக் குழு, அகில இந்திய சாலைப்போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு)



 

 


 

;