articles

img

உரம் உன்னது ; விளம்பரம் என்னது! - ப.முருகன்

விவசாயிகளின் அடிப்படைக் கோரிக்கைகள் பற்றி எந்த விதமான சாதகமான முடிவுகளும் எடுக்காத மோடி இப்போது அவர்கள் பயன்படுத்தும் உரப்பைகள் தனக்கு ஆதரவு பெற்றுத் தரும் என்று  நம்புகிறார் போலும். 56 இன்ச் மார்பு கொண்ட மோடி இப்போது உரப்பைகளில் தஞ்சமடைவது விவசாயிகளின் ஆதரவைப் பெற்றுத் தராது.

ஒன்றிய பாஜக ஆட்சி கடந்த எட்டு ஆண்டுகளில் விவசாயிகளுக்கு பாதகமாகவும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சாதகமாகவும் எவ்வளவோ செய்திருக்கிறது. ஆனால் அவர்கள் கடந்த 2014 தேர்தலின்போது சொன்ன வாக்குறுதியை இதுவரை யிலும் நிறைவேற்றவே இல்லை. விவசாய விளைபொருட்களுக்கு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைப்படி ஒன் றரை மடங்கு விலை கிடைக்கச் செய்வோம் என்று முழங்கியதை மோடி நிறைவேற்றவில்லை. அது மட்டு மல்ல, அதை நிறைவேற்ற முடியாது என்றும் தேர்தல் கால வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்றும் உச்ச நீதிமன்றத் திலேயே அருண் ஜெட்லி நிதியமைச்சராக இருந்த போதே சொல்லிவிட்டது ஒன்றிய பாஜக அரசு. ஆனா லும் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக சிறுகுறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குவதாக அறிவித்தது.

இதென்ன திடீர் பாசம் என்று விவசாயிகள் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, ஒட்டுமொத்த விவசாயத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கத் தோதான மூன்று திருத்தச் சட்டங்களை மோடி அரசு கொண்டுவந்து, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி விவாதம் ஏதுமின்றி நிறைவேற்றி யது. அத்துடன் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விலை யில்லா மின்சாரத்தை பறித்துக்கொள்ளும் வகையில் மின்சாரத்திருத்தச் சட்டத்தையும் கொண்டுவந்து நிறைவேற்றியது.இவற்றை எதிர்க்கட்சிகள் மட்டு மின்றி, கேரளம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசு கள் பலவும் கடுமையாக எதிர்த்தன. குதிரை கீழே தள்ளியதுமல்லாமல் குழியும் பறித்த கதையாக வந்த இந்த 4 சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டுமென்று நாடு முழுதும் உள்ள விவசாயிக ள் கிளர்ந்தெழுந்தனர். அத்துடன் விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை சட்டம் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தி விவசாயி கள் போர்க்களம் புகுந்தனர். உலக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஓராண்டுக்கு மேலாக தலைநகர் தில்லியின் எல்லையில் விவசாயிகள் முகாம் அமைத்து வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்தினர். உலக நாடு கள் பலவும் ஆதரவு தெரிவித்தன.

இதைக் கண்டு அஞ்சிய மோடி அரசு பிரிட்டிஷ் ஆட்சியின்போது கையாண்டது போல் சதிச்செயல்க ளில் ஈடுபட்டது. சீர்குலைவு வேலைகளில் இறங்கியது. ஆயினும் அவர்களது பாச்சா பலிக்கவில்லை. அத னால் விவசாய விரோதச் சட்டங்கள் மூன்றையும் திரும்பப்பெறுவதாக அறிவித்தார் மோடி. அப்போ தும் விவசாயிகளுக்குப் புரியவைக்க முடியாததால் திரும்பப்பெறுவதாகவே சொன்னார். அதன்பிற கும்கூட விவசாயிகள், உபி மாநிலம் லக்கிம்பூர் கேரி யில் ஒன்றிய அமைச்சரின் மகன் கார் ஏற்றி படுகொலை செய்த குடும்பத்தினர்க்கு நிதியுதவியும், ஒன்றிய அமைச்சர் பதவிநீக்கமும் செய்யப்பட வேண்டும் என்றும் ஆதாரவிலை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி ஒரு மாதம் கழித்து தான் போராட்டத்தை நிறுத்தினர். மீண்டும் எந் நேரமும் போராட்டம் துவக்கப்படும் என்று எச்சரிக்கை செய்தனர். ஆனாலும் ஒன்றிய அரசு அவ்வப்போது பழைய சட்டங்களை நியாயப்படுத்தியே பேசிவந்தது.  இப்போது ஒரே நாடு ஒரே உரம் என்று அலறிக் கொண்டிருக்கிறது. பிஜேபியே இது என்ன புதுக் குழப்பம் என்று விவசாயிகள் யோசித்தனர். ஒரே உரம் என்றால் புதிதாக ஒரு உரத்தை தயாரித்து அதைத் தான் எல்லோரும் எல்லாப் பயிருக்கும் பயன்படுத்த வேண்டுமென்று சொல்லப் போகிறார்களோ என்று விவ சாயிகள் அஞ்சினார்கள். மோடி தலைமையில் ஒன்றிய பாஜக அரசு பதவி யேற்றபின் அதன் ஆதரவு சாமியார்கள் கூட மருந்து தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளில் ஈடுபட்ட னரல்லவா? கொரோனாவுக்குக் கூட ராம்தேவ் கம் பெனி கொரோனில் என்ற மருந்தை தயாரித்ததாகக் கூறி மக்களிடம் மோசடி பிரச்சாரம் செய்ததல்லவா? பஞ்ச கவ்யம் எனும் இயற்கை மருந்து பசுவின் சாணம், மூத்தி ரம், பால், தயிர் போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப் பட்டது; இதை பயிர்களின் வளர்ச்சிக்குப் பயன் படுத்தலாம் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது.அது போல் சர்வரோக நிவாரணியாக ஏதோ ஒரே ஒரு உரத்தை தயாரித்துள்ளார்களோ , தயாரிக்கப் போகி றார்களோ என்ற அச்சம் விவசாயிகளுக்கு ஏற்பட்டது. ஆனால் நல்லகாலம். அப்படி ஏதும் நடக்கவில்லை.

முன்னொட்டு பாரத்: பின்னொட்டு பிஜேபி

அப்படி என்றால், ஒரே உரம் என்பதன் அர்த்தம்  என்ன? ஏற்கனவே விவசாயிகள் அரசு நிறுவனங்கள்,  தனியார் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் உரங்க ளைப் பயன்படுத்தி வருகின்றனர். ஃபாக்ட், இஃப்கோ, எம்எஃப் நிறுவனம் மற்றும்  ஸ்பிக் போன்ற நிறுவனங்க ளின் தயாரிப்புகளையே விவசாயிகள் தங்கள் விவ சாயத்துக்குப் பயன்படுத்துகின்றனர். அத்துடன் மரபு ரீதியிலான இயற்கை உரங்களையும் பயன்படுத்தியே விவசாயம் செய்கின்றனர். தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து ஆகியவைதான் என்பிகே என்று  குறிப் பிடப்படுகிறது. இது தவிர யூரியா, பொட்டாஷ் ஆகி யவை தனியாகவும், டிஏபி., மற்றும் காம்ப்ளக்ஸ் எனப் படும் கலப்பு உரமாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதில் தான் ஏதோ மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறார்களோ என்று விவசாயிகள் மத்தியில் பயம் வந்து விட்டது. அப்படி என்றால், அது என்ன ஒரே உரம்? வேறொன்றுமில்லை. ஆர்எஸ்எஸ்-சின் வழக்கமான, பழைய பெயர்களுக்கு புதிய பெயர் வைப்பதுதான்.அது என்ன பெயர்? எல்லா உரங்களின் பெயருக்கு முன்னாலும் பாரத் என்கிற முன்னொட்டு சேர்த்து அழைக்கப்படும். அதாவது என் பிகே என்பது பாரத் என் பி கே என்றும் டி ஏ பி என்பது பாரத் டிஏபி என்றும் எம் ஒபி என்பது பாரத் எம் ஒபி என்றும் பொட்டாஷ் என்பது பாரத் பொட்டாஷ் என்றும் குறிப்பிடப்படும். வேறொன்றுமில்லை. மற்றபடி தனியார் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியைத் தொடரும். அரசுத்துறை அதன் தயாரிப்பையும் வழங்கும். இது ஒன்றும் புதிதில்லையே என்று நினைக்கிறீர்களா? இருக்கிறது.

உரங்களை தனியார் நிறுவனங்கள் தயாரித்தாலும் அந்த நிறுவனத்தின் வணிகப் பெயரை உரப்பை மீது போடக்கூடாது. அதற்குப்பதில் அரசு குறிப்பிடும் வகையில் “பாரத்........” என்ற பெயர் பொறித்த சாக்குப் பையையே பயன்படுத்த வேண்டும். அப்படி என்ன அதில் சிறப்பு இருக்கிறது? இந்த புதிய திட்டத்துக்குப் பெயர் “பிரதம மந்திரி பாரதிய ஜனூர்வாரக் பரியோஜனா - பிஎம் பிஜேபி”. இந்தப் பெயருடன் அதன் இலச்சினையும் இடம்பெற வேண்டும். இனிமேல் உரங்கள் எல்லாம் பிஎம் பிஜேபி உரங்கள்தான். இனி விவசாயிகள் பயன் படுத்தப்போகும் உரங்கள் எல்லாமே பிஜேபி உரங்கள்தான்.

உரம் உனது; உரப் பை எனது

இந்தப் பெயர், இலச்சினை உரச்சாக்குப்பையின் அளவில் மூன்றில் இரண்டு பங்கில் இடம்பெறும். உரத்தயாரிப்பு நிறுவனத்தின் வணிகப் பெயர், இலச்சினை, பொருள் தொடர்பானவை ஒரு பங்கு அளவில் இடம்பெறலாம். அதாவது பொருள் தனியா ருடையது. சாக்குப்பை அரசுடையது. அதாவது அரசு விளம்பரத்துக்கானது.இது எப்படி இருக்கிறது என்றால் படையப்பா திரைப்படத்தில் ரஜினிகாந்த், செந்திலைக்காட்டி மாப்பிள்ளை அவருதான், அவர் போட்டிருக்கும் சட்டை என்னோடது என்று கூறுவது போல் உள்ளது. படத்திலாவது சட்டை ரஜினியுடைய தாக இருக்கும். இங்கே அதுவும் இல்லை. எல்லாமே உரக் கம்பெனியுடையது. ஆனால் அதில்  விளம்பரம் அரசுடையது. கேட்டால் அரசு வழங்கும் மானியத்துடன் தயாரிக்கப்படும் உரங்கள் அவை என்று கூறுவார்கள். அண்மையில் தெலுங்கானாவில் ரேசன்கடையில் மோடி படம் ஏன் போடவில்லை என்று ஒன்றிய நிதியமைச் சர் நிர்மலா சீதாராமன் சண்டை போட்டது நாம் அறிந்தது தானே. அப்படித்தான் இந்த இலவச விளம்பரம். அதில் பிஎம் பிஜேபி என்று ஓசியாக. இவர்கள்தான் “இலவசம் கூடாது என்று” அரசு பணத்தில் பிரச்சாரம் செய்கிறார்கள்.

மானியம் வழங்கி தனியார் தயாரிக்கும் உரங்களை அரசே தயாரிக்கலாமே. இன்னும் குறைந்த விலை யில் விவசாயிகளுக்கு வழங்கலாமே. அப்போது சொல்லலாமே “ ஒரே நாடு, ஒரே உரம்”. ஆனால் ஒன்றிய பாஜக அரசு, பாசிச பாணியிலான ஒரே நாடு, ஒரே மொழி,ஒரே உணவு, ஒரே பண்பாடு, ஒரே மதம், ஒரே  தேர்தல், ஒரே தேர்வு, ஒரே கல்வி, ஒரே பதிவு என்று  அனைத்திலும் ஒன்றை திணிப்பது என்று வெறியுடன் செயல்படுகிறது. அதன் ஒரு பகுதிதான் இந்த ஒரே உரம் கோஷமும்.ஆனால் இதனால் விவசாயிகளுக்கு என்ன பயன்? ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த உர மானியம் படிப்படியாக குறைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது மோடி ஆட்சியில். இந்நிலையில் அவர்களது விளம்ப ரத்துக்காகத் தான் இந்த “ஒரே நாடு ஒரே உரம்”. அரசு செலவில் பாஜக விளம்பரம். வரும் அக்டோபர் 2 -காந்தி ஜெயந்தி முதல் புதிய பெயரில் புதிதாகத் தயாரிக்கப்பட்ட  உரப்பைகளில் விற்பனைக்கு வரும் என்று அதிரடியாக அறிவிக்கப்பட் டுள்ளது. அப்படியானால் பழைய இருப்புகளை காலி செய்வதற்கு இந்த ஆண்டு இறுதிவரை கால அவகாசம் வழங்கியிருக்கிறார்கள். ஆனால் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் பழைய முகப்புடனான உரப்பைகளை வாங்க வேண்டாம் என்றும் ஒன்றிய அரசு கூறியிருக்கிறது.

2014க்கு முன்பிருந்தே பில்டப் செய்யப்பட்டு - விளம்பர வெளிச்சம் பெற்ற “பாரத ராஜா” நரேந்திர மோடி இப்போது அவரது பிறந்த நாளான செப்டம்பர் 17 முதல் உரநாயகனாக அறிமுகமாக இருக்கிறார். விவசாயிகளின் அடிப்படைக் கோரிக்கைகள் பற்றி எந்த விதமான சாதகமான முடிவுகளும் எடுக்காத மோடி இப்போது அவர்கள் பயன்படுத்தும் உரப்பை கள் தனக்கு ஆதரவு பெற்றுத் தரும் என்று  நம்பு கிறார் போலும். 56 இன்ச் மார்பு கொண்ட மோடி இப்போது உரப்பைகளில் தஞ்சமடைவது விவசாயி களின் ஆதரவைப் பெற்றுத் தராது. விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாது என்ற திரைப்பாடல் தான் நினைவுக்கு வருகிறது.
 

 

;