அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 16ஆவது தமிழ் மாநில மாநாடு செப்டம்பர் 29, 30, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் கடலூரில் எழுச்சியோடு நடைபெற்றது. திரும்பிய பக்கம் எல்லாம் பல்வேறு கருத்துக்களை எடுத்துரைக்கும் டிஜிட்டல் பேனர்கள், வழிநெடிகிலும் வெண்கொடி தோரணங்கள், சாலையின் இருபுறங்களிலும் நகரம் முழுவதும் பட்டொளி வீசி பறந்திட்ட வெண்கொடிகள். மறந்து விடுவோமோ என நினைத்த சுவர் விளம்பரங்களை திட்டமிட்டு நகரம் முழுவதும் எழுதியிருந்தது அபாரம். சாவடியிலிருந்து பல்லாயிரக்கணக்கான பெண்கள் மதவாத எதிர்ப்பு, விலை உயர்வு, வேலை யின்மை, குடும்ப வன்முறை எதிர்ப்பு, குழந்தைகள் மீதான வன்முறை எதிர்ப்பு, மக்கள் ஒற்றுமை வலி யுறுத்தல் என பல்வேறு பிரச்சனைகளை அடை யாளப்படுத்தும் அணிவகுப்பு பார்ப்பவர்களை ஈர்க்கும் விதத்தில் இருந்தது. மாவட்ட வாரியாக 42 மாவட்டத்தி லிருந்தும் வந்த பெண்களின் அணிவகுப்பு. விண்ணதி ரும் கோஷங்களுடன் மஞ்சக்குப்பம் மைதானம் நோக்கி புறப்பட்டது. பேரணியின் துவக்கத்தில் காதை துளைக்கும் பட்டாசு சத்தம், வாணவெடிகள். சீருடையுடன் 16ஆவது மாநாட்டை விளக்கும் வித மாக 16 கொடி தாங்கி இளம் பெண்கள்அணிவகுத்தனர்.
பேரணிக்கு ஆதரவு
இந்தப் பேரணிக்கு அகில இந்திய தலைவர்கள், மாநில தலைவர்கள் தலைமை ஏற்றனர். அலை அலை யாய் அரசின் தவறான கொள்கைகளை விமர்சித்து அவர்கள் கோஷங்கள் எழுப்பியது வீடுகளில் இருந்த வர்களை வீதிக்கு வரவழைத்தது. சாலையின் இரு புறங்களிலும் ஆண்களும் பெண்களும் கூடி நின்ற தும் கைபேசியில் நூற்றுக்கணக்கானவர்கள் வீடியோ எடுத்து பூரித்துப் பார்த்ததும் அலாதியானது. பேரணியை மாணவர் சங்கம், குடியிருப்போர் நல சங்கம், வாலிபர் சங்கம், தொழிற்சங்கம், விவசாய சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் ஆகியோர் வாழ்த்தியது வழிநெடுகிலும் நடந்து வந்த சிரமங்கள் தெரியாமல் நம்மோடு கரம் கோர்க்க, ஆதரவளிக்க இத்தனை அமைப்புகள் இருக்கிறதே என்ற பெரு மிதத்தோடு சகோதரிகள் மகிழ்ச்சி திளைப்பில் நடை போட்டனர். மஞ்சக்குப்பம் மைதானம் பொதுக்கூட்டத் திடல் முழுவதும் மின் விளக்குகள் பிரகாசித்துக் கொண்டிருந்தன.
எழுச்சியும் நெகிழ்ச்சியும்
மேடையின் பின்புற வடிவமைப்பு சிறுபான்மை மக்களை பாதுகாக்க புல்டோசரை தன்னந்தனியே எதிர்கொண்டு வீரசமர்புரிந்த மாதர் சங்கத்தின் அகில இந்திய புரவலர் பிருந்தா காரத் அவர்களின் போராட்டப் படம் ஒருபுறம்; இன்னொரு புறம் பெண்கள் ஓரணியாய் உற்சாகமாக உரிமைக்குரல் எழுப்பும் அணிவரிசை என கருத்து பிரதிபலிப்பு மிகவும் அபாரம். சக்தி கலைக் குழுவின் தப்பாட்டம், புதுகை பூபாளம் குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் எழுச்சியும் நெகிழ்ச்சியும் ஊட்டின. சென்னை காம்ரேட் கேங்ஸ்டா பாடல்கள் ஆடாத கால்களையும் ஆட வைத்தன. ஆட்டம், பாட்டம், கோரிக்கைகள், கோஷங்கள் என அனைத்தும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தலைவர்களின் பொதுக்கூட்ட உரை இடி முழக்கம் என அனைத்து பெண்களையும் கவர்ந்தது. எத்தனை சிரமங்கள் வந்த போதும் வெண்கொடி காக்கும் போராட்டத்தில் இறுதி மூச்சு வரை உறுதியோடு நிற்பதற்கான உற்சா கத்தை ஏற்படுத்தியது மதவெறி எதிர்ப்பு, மக்கள் ஒற்றுமை, பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வலுவாக எதிர்த்தது, பாதிக்கப்படும் பெண்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என ஆதரவு அளிப்பதற்கான அறைகூவல் என அனைத்தையும் எழுச்சியுடனும் கூர்மையுடனும் விமர்சனங்களை முன் வைத்ததும் வரும் காலம் பாஜக, ஆர்.எஸ்.எஸ்-ன் மனுவாத, மதவெறி அரசியலை எதிர்த்த தீவிரமான போராட்டங் களை முன்னெடுக்க வேண்டும் என்று போர்ப்பறை முழக்கங்கள் அப்பப்பா. கடலூர்அதிர்ந்தது. தமிழகம் முழுவதும் பலரும் பாராட்டும் விதத்தில்அமைந்தது.
கவனத்தை ஈர்த்த கண்காட்சி
சுப்புராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் பிரதிநிதிகள் மாநாடு. மண்டப அரங்கிற்குள் நுழைவதற்கு முன்னதாக இருபுறங்களிலும் வரலா ற்றுக் கண்காட்சி ஐந்து ஆண்டுகாலம் மாதர் சங்கம் நடத்திய போராட்டங்கள், அதனுடைய தாக்கங்கள் ஒரு புறமும் சுதந்திரப் போராட்ட பெண் தியாகி களுடைய நிஜ படமும் நிழல்படமும் (குடியிருப் போர் சங்கம் கண்டெடுத்த மனோகரன் அவரது மகன் அனுநித்திஷ் ஆகியோர் வரைந்தது) ஒரு புறமும் வைத்து அனைவரின் கவனத்தையும்ஈர்த்தது. 30ஆம் தேதி காலையில் தியாகிகளின் ஜோதி, கொடி பெறும் நிகழ்ச்சி. இக்கடலூர் மண்ணில் பிறந்து சுதந்திரப் போராட்டத்திற்காக போராடி மாதர் சங்க ஸ்தாபனத்தை தோற்றுவித்த போது முதல் நிர்வாக குழுவில் இடம் பெற்ற ஷாஜாதி கோவிந்தராஜன் அவர்களுடைய நினைவுக்கொடி நெல்லிக்குப்பத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் இருந்து கடலூர் சகோதரிகளால் எடுத்துவரப்பட்டு அது மாநாட்டில் ஏற்றப்பட்டது.
தூரிகை வண்ணம்
பாப்பா உமாநாத், கே.பி.ஜானகியம்மாள், மைதிலி சிவராமன், லீலாவதி, கஸ்தூரி, என்.எஸ். ருக்குமணியம்மாள், வீரம்மாள், எஸ்.ஞானம், பிருந்தா, டி. ஆர். மேரி, சந்திரா ஆகிய பெண்ணுரிமை காத்த போராட்டத் தியாகிகளின் ஜோதி பெறும் நிகழ்ச்சி விண்ணைப் பிளக்கும் கோஷங்களுடன் நடை பெற்றது. தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய இடம், அடிமை விலங்கொடித்து லட்சியத்தை அடைய நடை போட்டு பாலின சமத்துவ புறாவை பறக்க வைப்பதற்கு, சிகரம் நோக்கி நடைபோடும் கால்களாக தியாகிகளுக்கான அஞ்சலி செலுத்தும் இடம். அற்புதமான வடிவமைப்பு. தியாகிகளுக்கு தலைவர்கள் உட்பட அனைவரும் அஞ்சலி செலுத்திய பின் பிரதிநிதிகள் மாநாடு கூடியது. மாநாட்டு அரங்கின் பின்புறம் ஒரு சாமானிய பெண் உளி கொண்டு பூமியை செதுக்குகிறாள்.அச்சம், ஞானம், மடம், பயிர்ப்பு ஆகிய சொற்கள் வெறும் பசப்பு, இச்சைக் கிளியாய், போகப் பொருளாய் இருப்பது தானா நம் பொறுப்பு. இல்லை. ஆண் ஆதிக்க சமு தாயத்தையும் பிற்போக்கு கருத்தியலையும் முறி யடித்து பாலின சமத்துவம் படைப்போம் என பூமியை செதுக்குகிறாள் அந்தத் தாய். எங்கள் மாநாட்டின் தலையாய கடமையும் அதுவே என சபதம் ஏற்க வைக்கும் அடையாளம். மாநாட்டு அரங்க பின்புற வடிவமைப்பு, அஞ்சலி செலுத்தும் இடம் அனைத்தும் தூரிகைச் செல்வன் வெண்புறா சரவணன் கைவண்ணம் (கை தட்டதோனுமே).
சாதனையாளர்களுக்கு பாராட்டும் கவுரவிப்பும்
பொது மாநாடு காலையில், மேடையில் சாதனையாளர்களையும் போராளிகளையும் கௌரவிப்பு நிகழ்ச்சி. பல்வேறு வழக்குகளை சந்தித்த வர்கள் - பெண் குழந்தை பலாத்காரம், குழந்தை பலாத்கார படுகொலை, காவல்துறை வன்முறை, சுகாதாரத் துறையின் அவலம் என பல வன்முறை களை சந்தித்த போராளிகள். தேசமே திரும்பிப் பார்க்க வைத்த சிலம்பாட்ட சாதனையாளர் சிறுமி ஹரிணி. அனைவரும் கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வியின் அழுகையும் கண்ணீரும் அரங்கமே உறைந்து போனது. கடலூர் மேயரின் வாழ்த்துரை விசில் சத்தம் அதிர சிறப்பித்தது. இந்திய- தேசிய மாதர் சம்மேள னத்தின் மாநிலச் செயலாளர் வாழ்த்துரை, விவசாய சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகிய அமைப்புகளுடைய வாழ்த்துச் செய்திகள் அனைத்தும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. பொது மாநாட்டு நிகழ்வுகள் அனைத்தும் எழுச்சியோடு அமைந்தன. அறிக்கைகள் மீதான விவாதங்கள் கூர்மையான அரசியல், ஸ்தாபன விவாதங்களாய் அமைந்தன. வெறும் வார்த்தை களால் ஆர்ப்பரிப்பது மட்டும் அல்ல எங்கள் வேலை. சமூகத்தின் சரி பாதி பெண்களை பாதுகாப்பதே எங்கள் கடமை என ஆளும் அரசுகளின் முகத்திரையைக் கிழிப்போம்; நாம் வெல்வோம். ஒரு நாள், என உரைத்திடும் கூட்டம் என்பதை உணர்த்திடும் மாநாடாக இருந்தது. பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் எட்டும் அறிவினில் ஆண்களுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி என்றான் பாரதி. மண்ணின் விடுதலையுடன் பெண்ணின் விடுதலை வேண்டும் என்று பாப்பா அம்மா, கே.பி.ஜானகியம்மாள் - மைதிலி சிவராமன் போன்ற எண்ணற்ற தலைவர்கள் உதிரம் கொடுத்து போராடி கட்டியமைத்த அமைப்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம். ஒன்றுபட்ட போராட்டத்தால் லட்சியத்தை வென்றிடுவோம் என்று சிங்கப் பெண்களின் கர்ஜனையுடன் மாநாடு நிறைவுற்றது. புதிய மாநிலக் குழுவும் புதிய நிர்வாகக் குழுவும் தேர்வுசெய்யப்பட்டது.
வெற்றிக்கு வித்திட்ட உற்சாகமும் உழைப்பும்
றுக்கணக்கான மாதர் சங்க சகோதரிகள், ஆதரவு தந்து உதவ முன் வந்த தோழர்கள் ஒரு மாதத்திற்கும் மேல் இரவு பகல் பாராது நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டனர். கால்களின் வலி, உடல் சோர்வை யும் பொருட்படுத்தாமல் அயராது உழைத்தனர். மாநில தலைவர்களும் புதுச்சேரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, அரியலூர் மாவட்ட சகோதரிகள் இரண்டு நாட்கள் உண்டியல் வசூலில் மாவட்டம் முழுவதும் ஈடுபட்டதும் பல லட்சக்கணக் கான ரூபாய்களை இன்முகத்தோடு பொதுமக்கள் மாநாடு சிறக்க வாரி வழங்கியதும் உற்சாகத்தை ஏற்படுத்தியதாக அமைந்தது. மாநிலம் முழுவதும் அவரவர் மாவட்டத்தில் மாநாடு நடைபெறுவதைப் போல் விளம்பரம் செய்தது முதல் பேரணியில் பங்கேற்றது வரை சிறப்பாக செயல்படுத்தி யதே மாநாட்டின் வெற்றிக்கு வலுசேர்த்தது என்றால் மிகையாகாது. மாநாட்டுச் செய்திகளை பொது மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் விதமாக 16ஆவது மாநாட்டை குறிக்கும் வகையில் வழக்காடு மன்றம், பட்டிமன்றம், கருத்தரங்குகள், மாணவர் களுக்கான கட்டுரை, ஓவியம், பேச்சுப் போட்டிகள், செஸ் போட்டி, கடற்கரை சுத்தம் செய்யும் தூய்மைப் பணி, மினி மாரத்தான் என பல்வேறு வடிவங்களில் மாநாட்டுச் செய்தியை கொண்டு சென்றதே இந்த மாநாடு குறித்து அனைவராலும் பேசவைத்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்து ராஜ்யம் அமைப்போம் அதற்கு தடையாக இருக்கும் சிறுபான்மை மக்களை வீழ்த்த கூர்வாள் ஏந்த தயாராகுங்கள் என்று வெறிக்கூச்சலிடும் மதவெறி கூட்டங்களுக்கு மத்தியில் மதச்சார்பின்மையை பாதுகாப்போம், போராடிப் பெற்ற சுதந்திரத்தை பாது காப்போம், காந்தியை கொன்ற கூட்டத்தின் கையில் விடமாட்டோம் என சமரசமற்ற போருக்கு தமிழக பெண்களை அறைகூவல் விடுத்தது மாநாடு.
கட்டுரையாளர் : மாநிலத் தலைவர், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்.