சமீபத்தில் ஹைதராபாத் மாநகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக மிகவும் தீவிரமான முறையில் மதவெறிப் பிரச்சாரத்தை மேற்கொண்டது. தபக்கா சட்டமன்ற இடைத் தேர்தலில் அது, வெற்றி பெற்றபின்னர் (இதனை அது தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியிடமிருந்து பறித்துக் கொண்டது), பாஜக மிகவும் வெறித்தனமான முறையில் மதவெறிப் பிரச்சாரத்தில் இறங்கியது. இதற்காக அமித் ஷா, ஆதித்யநாத் ஆகிய தேசிய அளவிலான தலைவர்கள் களம் இறக்கப்பட்டார்கள்.
\டிஆர்எஸ் - வீழ்ச்சிக்கு காரணம்
இப்பிரச்சாரத்தின்போது, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி மற்றும் அதன் முதல்வர் கே. சந்திரசேகர் ராவ்ஆகியவர்களுக்கு எதிராக பாஜக, கடுமையாக பிரச்சாரத்தை மேற்கொண்டது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியும்,கே.சந்திரசேகர் ராவும் குடும்ப ஆட்சியை நடத்துவதாகவும், ஊழலில் திளைப்பதாகவும், இதற்கு முன் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, முஸ்லீம்களை முகஸ்துதி செய்வதாகவும் குற்றஞ்சாட்டியது. இவர்களின் நோக்கம் மிகவும்தெளிவானதாகும். மாநகராட்சிக்கான தேர்தலைப் பயன்படுத்திக்கொண்டு, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியையும், அதன் தலைவர் சந்திரசேகர ராவையும் பாஜக, குறிவைத்துத் தாக்குவதன் மூலம் தாங்கள் மட்டும்தான் மாற்று என்று சித்தரிப்பதே அதன் நோக்கமாகும். இவ்வாறுபாஜக தங்களைத் தாக்குவது, தெலுங்கானா ராஷ்டிரியசமிதிக்கும் அதன் தலைமைக்கும் அதிர்ச்சியளித்தபோதிலும், இதற்கு முழுமையான பொறுப்பு இக்கட்சியும் அதன் தலைமையுமேயாகும்.
மோடி அரசாங்கம் 2014இல் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, பாஜக-வை எதிர்ப்பதில்லை என்ற நிலைபாட்டைப் பின்பற்றிக் கொண்டிருந்தது. நாடாளுமன்றத்தில் அது கொண்டுவந்துநிறைவேற்றிய ஜனநாயக விரோத சட்டங்கள் அனைத்தையும் அநேகமாக ஆதரித்தது. அதுமட்டுமல்ல, பாஜக-வின் இந்துத்துவா நிகழ்ச்சிநிரல் குறித்தும் எதுவும் கூறாமல்வெளிப்படையாகவே மவுனம் கடைப்பிடித்தது. இது அதற்கெதிராக எதிர்ப்பைக் காட்டிய ஒன்றே ஒன்று, குடியுரிமைத் திருத்தச் சட்டமுன்வடிவு மட்டுமேயாகும். தெலுங்கானா ராஷ்டிரிய சமிதிக் கட்சி, தன் தாக்குதலை வீழ்ச்சியடைந்துகொண்டிருக்கும் காங்கிரசுக்கு எதிராக மட்டுமே இதுவரை மேற்கொண்டுவந்ததன் காரணமாக, பாஜக, தெலுங்கானாவில் வளர்வதற்கு அனுமதித்தது. 2019 மக்களவைத் தேர்தல் ஓர் எச்சரிக்கை மணியை அடித்தது. அத் தேர்தலின்போது பாஜக நான்கு இடங்களில் வெற்றி பெற்றதுடன், மாநிலத்தில் சுமார் 20 சதவீத வாக்குகளையும் பெற்றது.
சமாஜ்வாதி, ஆர்ஜேடி மட்டுமே
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதிக்கு ஏற்பட்டுள்ள இத்தகைய இக்கட்டான நிலை அல்லது பாஜக-வின் கோரப்பிடியிலிருந்து தப்பிக்க இயலா நிலை என்பது அநேகமாக இதர மாநிலக் கட்சிகளுக்கும் பொருந்தும். அநேகமாக அனைத்து மாநிலக் கட்சிகளுமே - அவை ஆட்சியில் இருந்தாலும் சரி அல்லது இல்லாவிட்டாலும் சரி - வெறிபிடித்த பாஜக, தங்கள் ஆதரவு தளங்களை அரித்து வீழ்த்திடக்கூடிய விதத்தில் அல்லது இந்துத்துவா சக்திகளுக்கு அடிமைச் சேவகம் செய்திடும் கூட்டாளிகளாக மாற்றிய
மைத்திடும் விதத்தில் ஏவியுள்ள தாக்குதல்களுக்குள்ளாகி இருக்கின்றன.
மாநிலக் கட்சிகளில் பெரும்பாலானவை மதச்சார்பின்மையையே தங்கள் கொள்கையாக இயற்கையில் கொண்டிருக்கின்றன. எனினும், கடந்த இருபது ஆண்டுகளாக அவை கடைப்பிடித்துவந்த சந்தர்ப்பவாத அரசியல்காரணமாக, அவை சில சமயங்களில் பாஜகவுடனோ அல்லது இதர கட்சிகளுடனோ கூட்டணி வைத்துக்கொண்டு வந்திருக்கின்றன. சமாஜ்வாதி மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் தவிர இதர கட்சிகள் அனைத்துமே பாஜகவுடன் பல சமயங்களில் கூட்டணி வைத்து போட்டியிட்டிருக்கின்றன.
ஏஜிபிக்கு நேர்ந்த கதி
இந்தக் கட்சிகள் எல்லாம் என்னவாயின என்பதற்கு அசாம் கண பரிஷத் (ஏஜிபி) கட்சிக்கு ஏற்பட்ட கதி சரியான எடுத்துக்காட்டாகும். அசாம் கண பரிஷத் ஆரம்பத்தில் பாஜகவுடன் 2001 சட்டமன்றத் தேர்தலின்போது கூட்டணி வைத்துக்கொண்டது. அதிலிருந்தே அதன் தளம் கொஞ்சம்கொஞ்சமாக வீழ்ச்சியடைந்து, பாஜக-வின் பக்கம் சென்றுவிட்டது. தற்போதைய பாஜக தலைமையிலான அரசாங்கத்தின் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால், முன்பு அசாம் கண பரிஷத்தின் தலைவர்களில் ஒருவராக இருந்தவர். அவர் 2011இல் பாஜகவிற்கு தாவினார். அசாம் கண பரிஷத்தின் இன்றைய நிலை என்ன? பாஜக-வின் அரசாங்கத்தில் ஓரங்கட்டப்பட்ட கூட்டாளியாக மிகவும் வெளுத்துப்போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறது.ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியும், உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியும் இதேபோன்று பாஜக-வுடன் கூட்டணி வைத்திருந்து, தற்போது பரிதாபமான நிலைக்குத்தள்ளப்பட்டிருக்கின்றன. சென்ற மக்களவைத் தேர்தலுக்கு முன்பு, தெலுங்கு தேசம் கட்சி, பாஜகவுடனான உறவை முறித்துக்கொண்டபோது, அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த சிலர், பாஜக-விற்குத் தாவிவிட்டார்கள். பகுஜன் சமாஜ் கட்சி, பாஜகவுடன் வைத்திருந்த கூட்டின் காரணமாக, அக்கட்சியானது தலித்துகள் மற்றும் பெரும்பன்மை மக்களின் கட்சி என்கிற சித்திரத்தை கொஞ்சம் கொஞ்சமாக அரித்து, அழித்துவிட்டது.
திரிணாமுல், பிஜூ ஜனதாதளம்...
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, வாஜ்பாய் அரசாங்கத்தில் ஒரு கூட்டாளியாக இருந்தது. 1999 மக்களவைத் தேர்தலின்போது பாஜக-வுடன் கூட்டணிவைத்துக்கொண்டது. இடதுசாரிகளின்மீது அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிட்டதன் மூலமும், இடதுசாரி ஊழியர்களை ஒடுக்கியதன் மூலமும் அது, பாஜக தலைதூக்குவதற்கு வசதி செய்து கொடுத்தது. வங்க அரசியலில் மதவெறிஅரக்கனை வளர்த்துவிட்டதன் விளைவாக இன்றையதினம் மம்தா பானர்ஜியே பாஜக-வின் மதவெறி அரசியலை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.
ஒடிசாவில் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தள அரசாங்கமும், ஆந்திராவில் உள்ள ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர்பி அரசாங்கமும் மத்திய மோடி அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பை அளித்து வருகின்றன. வேளாண் சட்டங்கள் உட்பட மத்திய மோடி அரசாங்கம் கொண்டுவந்த அனைத்து சட்டங்களையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரித்து வந்துள்ளன.ஒடிசாவில் ஏற்கனவே பாஜக பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்துவிட்டது. இப்போது அது, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பிஜு ஜனதா தளத்தை தோற்கடித்திட அனைத்துவிதமான முயற்சிகளிலும் இறங்கிடும். ஆந்திராவில், இத்தகைய நேர்மையற்ற அரசியலுக்கு தாங்கள் என்ன விலை கொடுக்கப் போகிறோம் என்பதை அறியாமலேயே, பாஜக-வின் கருணை கடாட்சத்தைப் பெறுவதற்காக ஒய்எஸ்ஆர்பி கட்சியும், தெலுங்கு தேசம் கட்சியும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்தக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர், மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்தாலும், அமலாக்கத்துறையினராலும் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக,மத்திய மோடி அரசாங்கம், மாநிலங்களின் உரிமைகளையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் பறித்து, எதேச்சதிகார மத்தியத்துவத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் இந்த சமயத்திலும்கூட, இக்கட்சிகள் கைகளைக் கட்டிக்கொண்டு, வாயைப் பொத்திக் கொண்டு மவுனமாக இருந்து வருகின்றன.
மாற்றியமைத்துக் கொள்ளாமல்...
பாஜக-வின் ஒருகட்சி ஆதிக்கத்தின் புதிய சகாப்தத்தால் ஏவப்பட்டுள்ள சவாலிலிருந்து எழுந்துள்ள நெருக்கடியிலிருந்து விடுபட முடியாமல் மாநிலக் கட்சிகள் திண்டாடிக்கொண்டிருக்கின்றன. மாநிலக் கட்சிகளில் பெரும்பாலானவை காங்கிரஸ் கட்சிக்கு எதிரான போராட்டத்தின் மூலமாக வளர்ந்தவைகளாகும். தங்கள் மாநிலங்களில் ஆட்சியிலிருந்த காங்கிரசை வீழ்த்தி, ஆட்சிக்கு வந்தவைகளாகும். திமுக, தெலுங்கு தேசம், அசாம் கண பரிஷத், பிஜு ஜனதா தளம், அகாலிகள் என அனைத்துமே இந்தவகையில் வரக்கூடியவைகள்தான். இப்போது பாஜக ஒருமேலாதிக்கம் செலுத்தக்கூடிய சக்தியாக உருவெடுத்த பின்பும், இந்தக்கட்சிகளில் திமுக தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும், இன்றைய எதார்த்த நிலைமையைச் சரியானமுறையில் புரிந்துகொண்டு தங்களை மாற்றியமைத்துக்கொள்ள இயலாதவைகளாக இருக்கின்றன. பழைய அரசியல் கட்டமைப்பிலேயே செயல்படுவதைத் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. இதன் விளைவாக, காங்கிரஸ் கட்சி பல மாநிலங்களில் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், அந்த மாநிலங்களில் உள்ள பிரதான மாநிலக் கட்சிகளிடமிருந்து பெரிய அளவில் எதிர்ப்பு ஏதுமின்றி, பாஜக அந்த இடத்தை நிரப்புவது எளிதாகிக் கொண்டிருக்கிறது. பாஜக தங்கள் பிரதான எதிர்க்கட்சி என்பதை அங்கீகரித்து அதற்கு எதிராகச் செயல்பட மாநிலக் கட்சிகள் தயாராக வேண்டும்.
வெளியேறிய அகாலிதளம், சிவசேனா
மத்திய எதேச்சதிகார பாஜக அரசாங்கத்தை எதிர்ப்பதில்லை என்கிற நிலைபாட்டின் காரணமாக, அவர்கள் பாஜக-வால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை எதிர்கொள்ளமுடியாமல் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். மோடி அரசாங்கத்துடன் சமரசம் செய்துகொண்டு, அதன் இந்துத்துவா அரசியலை எதிர்க்க மறுப்பதன் காரணமாக, பாஜக-வுடன் அணிசேர்ந்து இன்றையதினம் காணாமல் போய்விட்ட மாநிலக் கட்சிகளின் நிலைமையினை எண்ணிப்பார்க்க வேண்டும். வெகுகாலமாக பாஜக-வுடன் கூட்டணி வைத்திருந்த அகாலி தளமும், சிவ சேனாவும் இப்போது அதனிடமிருந்து வெளியேறிவிட்டன. ஐக்கிய ஜனதா தளத்தையும், நிதிஷ் குமாரையும் பாஜக, லோக் ஜனசக்தி கட்சியைப் பயன்படுத்தி, நடந்துமுடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் மிகச்சிறிய அளவிற்கு வெட்டிக் குறைத்துவிட்டது.
பாஜக தன்னுடைய முழுமையான மேலாதிக்க நிலையை நிறுவ முடிவு செய்திருக்கிறது. இதற்காக அதுதன்னுடைய கூட்டணிக்கட்சிகளை தன் சொற்படி கேட்கும் நிலைக்குத் தள்ளிவிட அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துக்கொண்டிருக்கிறது. தங்கள் சொற்படி கேட்கக்கூடிய ஒரு சமூகத்தை உருவாக்குவதே ஆர்எஸ்எஸ்-இன் நோக்கமாகும். தங்கள் இந்துத்துவா கொள்கைக்கு எதிரான அனைத்து சமூக, கலாச்சார மற்றும் மாநில அடையாளங்களும் நசுக்கப்பட வேண்டும் என்பதே அதன் குறிக்கோள். இது, மாநிலக் கட்சிகளின் இருப்பையே அச்சுறுத்தலுக்குள்ளாக்கி இருக்கிறது. மாநிலக்கட்சிகளுக்கு முன் உள்ள தெரிவு தெளிவான ஒன்று. ஒன்று, பாஜக/ஆர்எஸ்எஸ் கும்பலை அரசியல் ரீதியாகவும், சித்தாந்த ரீதியாகவும் எதிர்த்துப் போராட முன்வர வேண்டும் அல்லது அதன் சொற்படி கேட்டு, கைகட்டி, வாய்பொத்தி நின்று, நாளடைவில் இல்லாமல் போய்விட வேண்டும்.
டிசம்பர் 2, 2020, தமிழில்: ச.வீரமணி