articles

img

பாஜகவின் தோல்வி : எச்சரிக்கையும் அவசியம் -அ. அன்வர் உசேன்

“ஜெய் ஜெகந்நாத்”. -  இது தேர்தல் முடிவுகள் வெளி வந்து நீண்ட நேரம் மவுனமாக இருந்த நரேந்திரமோடி பாஜக தலைமை அலு வலகத்தில் முன்வைத்த முழக்கம். ஏன் “ஜெய் ஸ்ரீ ராம்” இல்லை?ராமர் மோடியை கைவிட்டுவிட்டாரா? உத்தரப்பிரதேசத்தில் பெரும் தோல்வியை சந்தித்த மோடி ஒடிசா வில் எதிர்பாராத வகையில் வென்றதால் ராமரைவிட பூரி ஜெகநாதரின் கூடுதல் பக்த ராகிவிட்டாரா? இது அரசியல் வட்டாரங் களில் விவாதிக்கும் பொருளாக மாறி யுள்ளது. 

நொறுங்கிய பிம்பம்

2024 தேர்தல்கள் தொடங்கிய பொழுது கூட மோடி தலைமையில் பாஜக வெல்ல முடியாத சக்திஎன்றுதான் பரவலாக மதிப்பீடு செய்யப்பட்டது. ஊடகங்கள் அத்தகைய பிம்பத்தை உருவாக்கின. ஆனால் களத்தில் செயல்படும் அரசியல் செயற்பாட்டாளர்கள் நிலைமை அப்படிஇல்லை என மதிப்பிட்டனர். 

இந்த தேர்தல் முடிவுகளின் மிக முக்கிய செய்தி என்னவெனில் “வெல்ல முடியாத சக்தி” எனக் கருதப்பட்ட மோடியின் பிம்பம்  சுக்கு நூறாக உடைந்ததுதான்! குஜராத் முதல்வராக இருந்த 12ஆண்டுகளிலும் பின்னர் பிரதமராக இருந்த 10 ஆண்டுகளி லும் தோல்வியை சந்திக்காதவர் மோடி.தனக்கு நிகர் எவருமே இல்லை என்ற இறுமாப்பில் இருந்தவர்.

அவரைச் சுற்றி ஒருவிதமான மாயப் பிம்பம் உருவாக்கப்பட்டது. இறுதியில் தன்னைத் தானே கடவுளின் அவதாரம் என மோடி கூறிக்கொண்டார். இந்த பிம்பம்தான்  இன்று மக்களின் மகத்தான தீர்ப்பால் உடைக்கப்பட்டுள்ளது.

‘வெற்றியில் தோல்வி’

பாஜக தனிப்பட்ட முறையில் பெரும் பான்மை பெற இயலவில்லை. தங்களது கணிப்புகள் பொய்யானது குறித்து ‘கோடி  மீடியா’ எனும் பொய்ப் பிரச்சார ஊடகங்கள்  சிறிது கூட “ஆத்ம பரிசோதனை” செய்து கொள்வதாக தெரியவில்லை. இந்தியா அணியின் அனைத்துக் கட்சிகளின்தொகுதி களைவிட பாஜக தனியாக வென்ற தொகுதி கள் அதிகம் என்று இப்பொழுதும் கூறிவரு கின்றன. ஆனால் எத்தகைய பின்னணியில் இந்தியா அணி வெற்றிகளை ஈட்டியது என்பதை மறைக்கின்றன. 

எதிர்க்கட்சிகளின் முதல்வர்கள் உட்பட  பலர் சிறையில்; எதிர்க்கட்சிகளின் நிதி  முடக்கம்; தேர்தல் பத்திரங்கள் மூலம்  பல்லாயிரக்கணக்கான கோடி நிதி தன்கை யில்; மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் கைதுகள் - மிரட்டல்கள்; எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்துதல்- விலைக்கு வாங்குதல்; ஊடகங்களின் வெட்கமற்ற ஆதரவு/ சூரத் மற்றும்இந்தூர் தொகுதிகளில் தேர்தலை கேலிக்கூத்தாக்கியது; வரலாறு காணாத அளவுக்கு மோடியும்பாஜக தலைவர்களும் மதப்பிளவுவாதத்தை முன்வைத்த பொழுதும் கள்ள மவுனம் காத்ததேர்தல் ஆணையம்; நீதித்துறையின் பாராமுகம் - இவையெல்லாம் பாஜகவுக்கு மிகப்பெரிய சாதகமான சூழலை உருவாக்கின. இத்த கைய பெரும் தடைகளை சந்தித்துதான் இந்தியா அணி பாஜகவுக்கு தோல்வியைத் தந்துள்ளது. இந்தியா அணி பெரும்பான்மை  பெறாமல் இருக்கலாம். ஆனால் பாஜக கூட்டணி ‘வெற்றியில்’ தோல்வியை சந்தித் துள்ளது. எனவேதான் சங்பரிவாரத்தினரும் மோடியும் களையிழந்து காணப்படு கின்றனர்.

வெற்றியின் வரையறைகள்:

பாஜகவின் தோல்வியை உள்வாங்கும் அதே சமயத்தில் இந்த தோல்வி முழுமை யானது அல்ல என்பதையும் இதன் வரை யறைகளையும் கவனத்தில் கொள்வது மிக அவசியம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச் செயலாளர் சீத்தாராம்யெச்சூரி அவர்கள் குறிப்பிடுவது போல, “இந்திய அரசியல் சட்டத்தின் மீதும் மதச்சார்பற்ற ஜன நாயக விழுமியங்கள் மீதும் தாக்குதல் கள் தொடுக்கப்பட்டால் அவற்றை எதிர்த்து  எதிர்வினையாற்ற நாடாளுமன்றத்துக் குள்ளும் வெளியேயும் கூடுதல் வாய்ப்புகள்  உருவாகியுள்ளன. இது தேர்தல் முடிவு களின் சிறப்பான அம்சம். அதே சமயம் இத்த கைய தாக்குதல்கள் முற்றிலும் தொடுக்கப் படாமல் இருக்கும் சூழல்கள் உருவாக வில்லை”.

 இதே கருத்தை சுபாஷ் பலிஷ்கர் எனும்  சமூக அரசியல் ஆய்வாளரும் குறிப்பிடு கிறார்:

“தேர்தல் முடிவுகளை மிகவும் எச்சரிக்கையுடன் எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். பொருளாதார துன்பங் கள் உருவாக்கிய மக்களின் ஏமாற்றம் பாஜகவை பின்னுக்கு தள்ளியிருக்கலாம். ஆனால் வாக்காளர்கள் பாஜகவை முற்றி லும் நிராகரித்துவிட்டனர் எனமுடிவு செய்து கொள்வது தவறாக அமைந்துவிடும்..”

மேலும் கடந்த 10 ஆண்டுகளில் உரு வாக்கப்பட்ட மத அடிப்படையிலான வாக்கு  வங்கி அப்படியே உள்ளது என்பதை மறக்கக் கூடாது எனவும் அவர் குறிப்பிடுகிறார்.

பல மாநிலங்களில் பாஜகவுக்கு பின்ன டைவு ஏற்பட்டிருந்தாலும் சில மாநிலங்களில் கிடைத்த வெற்றியும் கவலையுடன் கவனிக்கப்பட வேண்டியது ஆகும். ஒடிசா, தெலுங்கானாவில் பெற்ற வெற்றி, ஆந்திராவில் கால்பதித்தது, கேரளாவில் பாஜகவுக்கு சென்ற சுமார் 93,000 காங்கிரஸ் வாக்குகள் காரணமாக திருச்சூரில் பெற்ற வெற்றி,குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தர்கண்ட்,தில்லி, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் அனைத்து தொகு திகள் அல்லது ஒன்றிரண்டு தவிர அனைத்து  தொகுதிகளிலும் வென்றது ஆகியவற்றை கவலையுடன் கவனிக்க வேண்டும். கூட்டணி மூலம் பாஜக ஆட்சியை தக்கவைத்துக் கொண்டால் அதிகாரம்/ பண வலிமை/ சூழ்ச்சிகள் மூலம்பெரும்பான்மையைப் பெற அனைத்தையும் செய்யும்.

இந்தச் சூழலில் இடதுசாரிகள் சிறிய முன்னேற்றம் கண்டுள்ளனர். தமிழ்நாட்டில் பெற்றவெற்றிகளுடன் சுமார் 34 ஆண்டு களுக்கு பின்னர் வட மாநிலமான ராஜஸ்தா னில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதே போல சிபிஐ(எம்எல்)  பீகாரில் பெற்ற வெற்றியும்குறிப்பிடத் தக்கது. சங் பரிவாரத்துக்கு எதிராக அரசியல் தளத்தில் மட்டுமல்லாது சித்தாந்தத் தளத்திலும் பண்பாட்டுத் தளத்திலும்  இடதுசாரிகள் வலுவாக செயல்பட்டு வருகிறார்கள்.

மொத்தத்தில் பாஜகவின் மூர்க்கத் தனத்துக்கு மக்கள் தமது தீர்ப்பின் மூலம் கடிவாளம் போட்டுள்ளனர். அந்த தீர்ப்பை பிரதிபலிப்பதிலும் பாஜகவை மேலும் தனிமைப்படுத்துவதிலும் இந்தியா அணி தனது கவனத்தை கூடுதலாக செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அதே சமயம் பாஜக உட்பட சங்பரிவாரத்தை பின்னுக்குத் தள்ள இடதுசாரிகளின் அர சியல் வலுவை அதிகரிப்பது காலத்தின் கட்டாயம் ஆகும்.

விவசாயத்துறை அமைச்சரை தோற்கடித்து மோடி அரசுக்கு பாடம் புகட்டிய விவசாயிகள்!

ஐந்து மாநிலங்களில் 38 இடங்களை பறிகொடுத்தது பாஜக

மூன்று விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில் ஒரு ஆண்டுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம்  நடத்தினர். இதையடுத்தும் எதிர்க்கட்சிகளின் தொடர் வலியுறுத்த லாலும் 17-ஆவது மக்களவையில் பிரதமராக இருந்த நரேந்திரமோடி வேறு வழியின்றி அந்தச் சட்டங்களை திரும்பப்பெற்றார்.

விவசாயிகளுக்கு விரோதமாக செயல்பட்ட மோடி, அமித்ஷா கூடாரம் 18-ஆவது மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுப்பதற்குக் கூட வழியின்றி “ஆட்சியமைப்பதற்கு சில கூட்டாளிகளை தன் வசப்படுத்தி வைத்துள்ளது.

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையின்படி விளைபொருட்களுக்கு சட்டப்பூர்வ விலை உத்தரவாதம் வழங்கக் கோரி கடந்த  நான்காண்டுகளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், கடன் தள்ளுபடி, மின்துறையை தனியார் மயமாக்குவதை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

விவசாயிகள் தில்லியை நோக்கி பேரணியாக பிப்ரவரியில் தங்கள் போராட்டத்தை மீண்டும் தொடங்கினர். ஆனால் அவை பஞ்சாப்-ஹரியானா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டது. ஹரியானா மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகர் தில்லிக்குள் நுழைய அனுமதிக்கப்பட வில்லை. எனவே விவசாயிகள் போராட்டத்தின் தாக்கம்  மற்ற மாநிலங்களிலும் பாஜகவின் வெற்றிவாய்ப்பை பறித்துவிட்டது.

மேலும், மேற்கு உத்தரப்பிரதேசத்தில், முசாபர்நகர்,  சஹாரன்பூர், கைரானா, நாகினா, மொராதாபாத், சம்பல், ராம்பூர் ஆகிய இடங்களில் பாஜக தோல்வி யுற்றது. மேலும் பாஜக அமைச்சர் அஜய் மிஸ்ரா தெனியின் மகன் விவசாயிகளை கார் ஏற்றி கொலை செய்த லக்கிம்பூர் கெரி தொகுதியிலும் பாஜக படுதோல்வியடைந்தது.

18-ஆவது மக்களவைத் தேர்தலில் விவசாயிகளின் குரல் எதிரொலித்துள்ளது. குறிப்பாக மாநிலங்களில் பாஜக படுதோல்வியைச் சந்தித்துள்ளது.

நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் விவசாயிகளின் கோரிக்கைகளை புறக்கணித்ததால் பாஜக 2019-ஆம் ஆண்டு பல மாநிலங்களில் வென்ற இடங்களை தற்போது இழந்துவிட்டது. குறிப்பாக, ஒன்றிய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா ஜார்க்கண்டில் அதிக வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

மேற்கு உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, வடக்கு இராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவில் வெங்காயம் அதிகளவு உற்பத்தியாகும் பகுதிகள் ஆகிய வற்றில் மொத்தம் 38 இடங்களை பாஜக இழந்து விட்டது. 

இராஜஸ்தானில் 11 இடங்கள், ஹரியானாவில் ஐந்து இடங்கள்,  பஞ்சாபில் இரண்டு இடங்களை பாஜக இழந்துவிட்டது. வெங்காய விளைச்சல் அதிகமுள்ள  மகாராஷ்டிராவில் 13 இடங்களில் 12 இடங்களை பாஜக பறிகொடுத்துள்ளது.

மகாராஷ்டிராவில், முதலில் வெங்காய ஏற்றுமதி கட்டுப்படுத்தப்பட்டது, பின்னர் 2023-ஆம் ஆண்டு உள்நாட்டு விலையைக் கட்டுப்படுத்த வெங்காய ஏற்று மதிக்கு தடை விதித்தது. இந்த நடவடிக்கைக்கு வெங்காய விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால் விவசாயிகளின் கோரிக்கையை பாஜக அரசு  புறக்கணித்தது.

வெங்காய விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் நலனுக்கு எதிரான பல முடிவுகளை அரசு எடுத்துள் ளது. இது வியாபாரிகளையும் விவசாயிகளையும் பெரியஅளவில் பாதித்துள்ளது என்று நாசிக் மாவட்ட வெங்காய வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் கந்து காக்கா தேவ்ரே கூறினார்.

18-ஆவது மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காமல் போகச் செய்த விவசாயி களுக்கு விவசாயிகள் அமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) வாழ்த்து தெரிவித்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் குந்தி-II தொகுதியில் போட்டியிட்ட ஒன்றிய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டாவை காங்கிரஸ் வேட்பாளர் காளிசரண் முண்டா 1,49675 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

மக்கள் தீர்ப்பின் சில அம்சங்கள்

n    மொத்த கிராமப்புற நாடாளுமன்ற தொகுதிகள் 398. இவற்றில் 236 தொகுதிகளை பாஜக 2019இல் வென்றது. ஆனால் 2024இல் இது 165ஆக அதாவது 71 தொகுதி
களை பாஜக இழந்துள்ளது. விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் கிராமப்புற மக்களும் பாஜகவை நிராகரித்துள்ளனர்.
n    மோடி உரையாற்றிய 164 தொகுதிகளில் 77இல் பாஜக தோல்வி. மோடி மேஜிக் எடுபடவில்லை!
n     பழங்குடி இன மக்கள் நிறைந்துள்ள ராஜஸ்தான் பன்ஸ்வாரா தொகுதியில்தான் மோடி
முஸ்லிம்களுக்கு எதிராக “ஆக்கிரமிப்பாளர்கள்” எனவும் “அதிகம் குழந்தை பெறுபவர்கள்”எனவும் நஞ்சு கக்கினார்.  இந்த தொகுதியில் இந்தியா அணியில் அங்கம் வகிக்கும்பாரத் ஆதிவாசி கட்சியின் வேட்பாளர் 2.47 லட்சத்துக்கும் அதிகமான வாக்குவித்தியாசத்தில் பாஜகவை தோற்கடித்தார். அதுமட்டுமல்ல; இந்த கட்சி பழங்குடி இனமக்கள் இந்து மதத்தை சார்ந்தவர்கள் அல்ல; அவர்களின் மதமும் 
பண்பாடும் வேறு என வலுவாக பிரச்சாரம் செய்யும் இயக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
n    மகாராஷ்டிராவில் மட்டும் 18 கூட்டங்களையும் ரோடு ஷோக்களையும் மோடி 
நடத்தினார். இவற்றில் பெரும்பாலான இடங்களில் பாஜக கூட்டணி தோல்வியை சந்தித்தது. மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் உண்மையான சிவசேனா/ தேசியவாத காங்கிரஸ் யார் என்பதையும் தீர்மானித்துள்ளன. மோடியும் அமித்ஷாவும் இந்தகட்சிகளை பிளவுபடுத்தியதை மக்கள் நிராகரித்துள்ளனர்.
n    ஸ்மிருதி இரானி/ எல்.முருகன் உட்பட 13 ஒன்றிய அமைச்சர்கள் தோல்வியை சந்தித்தனர்.
n    வாரணாசி தொகுதியில் மோடி 2014இல் 3.71 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் 2019இல் 4.79 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் வென்றார். ஆனால் 2024இல் வாக்குஎண்ணிக்கையில் முதல் மூன்று சுற்றுகளில் மோடி பின்தங்கினார். அவரது வாக்குவித்தியாசம் 1.5 லட்சமாக (9.32%) சரிந்தது. மிகவும் அறியப்படாத கிஷோரிலால் ஷர்மா அமேதியில் ஸ்மிருதி இரானியை தோற்கடித்த வாக்கு வித்தியாசம் மோடியைவிட அதிகம்.
n    ராமர் கோவில் உள்ள பைசாபாத் தொகுதியில் பாஜகவின் லல்லு சிங் தோற்றார். இவர் தான், பாஜக 400 தொகுதிகளில் வென்றால் மனுவாத அமைப்புச் சட்டம் கொண்டு 
வருவோம் என பேசியவர். வெற்றி பெற்றவர் தலித் வேட்பாளர். ஆனால் இந்த தொகுதி பொதுதொகுதி.
n    அயோத்தியில் ராமர் கோவில் வளாகம் கட்ட பல ஏழைகளின் இடங்கள் பறிக்கப்பட்டன.
இது கடும் அதிருப்தியை தோற்றுவித்துள்ளது என கள ஆய்வாளர்கள் மீண்டும் மீண்டும்கூறினர். ராமர் கோவில் எனும் பெரும் பக்தி இந்த அதிருப்தியை பின்னுக்கு தள்ளிவிடும் என பாஜக மனப்பால் குடித்தது. ராமர் கோவிலை வரவேற்ற அயோத்தி மக்கள் வாழ்வாதாரம் மிகவும் முக்கியம் என முடிவு செய்துள்ளதையே இதுகாட்டுகிறது.
n     அயோத்தியில் பாஜகவுக்கு வாக்களிக்காதவர்கள் இந்துக்களே அல்ல என சங்கிகள் தற்போது சமூக ஊடகங்களில் புலம்பிக்கொண்டுள்ளனர்.
n     உத்தரப்பிரதேசம் பலத்த அடியை மோடிக்கும் பாஜகவுக்கும் தந்துள்ளது. 2014இல் 71தொகுதிகளையும் 2019இல் 64 தொகுதிகளையும் வென்ற பாஜக கூட்டணி 2024இல் 33தொகுதிகளையே வென்றுள்ளது. பாஜகவின் வாக்கு 51%லிருந்து 42%ஆக சரிந்தது.பிற்படுத்தப்பட்டோர்/ தலித்/ சிறுபான்மையினர் எனும் சமூக “மண்டல்” கூட்டணியை எதிர்க்கட்சிகள் உருவாக்கின. அது பாஜகவின் “கமண்டல்” அரசியலை பின்னுக்குத்தள்ளியது. எதிர்கட்சிகள் 44% வாக்குகளை பெற்றனர்.

விவசாயிகளின் கோபாவேசம்

n    விவசாயிகளை வாகனம் ஏற்றி கொன்றவனின் தந்தையான பாஜக அமைச்சர் அஜய் மிஸ்ரா டேனிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுத்து தனது ஆணவத்தை 
வெளிப்படுத்திய பாஜகவின் செயல் உ.பி.யில் மட்டுமல்ல பஞ்சாப்/ ஹரியானாவிலும் விவசாயிகளிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது. லக்கிம்பூர் கேரி மக்கள் அஜய்மிஸ்ராவை தோற்கடித்தனர். கொல்லப்பட்ட விவசாயிகள் மற்றும் பத்திரிகையாளர்களின் மரணத்துக்கு ஓரளவு நீதி கிடைத்தது.
n    தமிழ்நாட்டைப் போலவே பஞ்சாபிலும் பாஜக பூஜ்யத்தை சந்தித்தது. பாஜகவின் வேட்பாளர்கள் பல இடங்களில் கிராமங்களுக்குள் அனுமதிக்கப்படவில்லை. தில்லிக்குள் வரவிடாமல் தடுக்கப்பட்ட விவசாயிகள், பாஜகவினரை நுழையவிடாமல் பதிலடி தந்தனர். விவசாயிகள் சங்கங்கள் பாஜகவை தோற்கடிக்குமாறு பஞ்சாப் மக்களிடையே வலுவான பிரச்சாரம் செய்தன.
n     இதே நிலைதான் ஹரியானாவிலும்! அங்கு சென்றமுறை அனைத்து 10 தொகுதிகளிலும்வென்ற பாஜக இந்த முறை விவசாயிகளின் கோபம் காரணமாக 5 தொகுதிகளை இழந்தது.

அசாமில் பதிலடி...

n     அசாமில் ஏஐடியுஎஃப் (AIDUF) எனும் இஸ்லாமிய அமைப்பை எதிரியாக கட்டமைத்து அசாம் பாஜகமுதல்வர் ஹிமாந்த் பிஸ்வா சர்மா மதப்பிளவுவாதத்தை தீவிரமாகப் 
பரப்பினார். ஆனால் இந்த தேர்தலில் துப்ரி தொகுதியில் ஏஐடியுஎஃப் தலைவர் பத்ரூதின் அஜ்மலை காங்கிரஸ் வேட்பாளர் ரகிபுல் உசேன் 10.12 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் (அனேகமாகஇதுதான் இந்தியாவிலேயே அதிக வித்தியாசமாக இருக்கலாம்) தோற்கடித்து சிறுபான்மை மக்கள் பொருத்தமான மாற்று இருந்தால் மத அமைப்புகளின் பக்கம் சாய மாட்டார்கள் என்று மதவாத நஞ்சைக் கக்கும் அசாம் முதல்வருக்கு பதிலடிகொடுத்தனர்.
n     அசாமிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் பாஜகவின் வாக்குகள் சரிந்தன. இதனைபொறுத்துக் கொள்ள முடியாத அசாம் முதல்வர் கிறித்துவர்கள் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

இப்படி பாஜகவின் தோல்வி பல பரிணாமங்களை வெளிப்படுத்துகிறது. மோடி-அமித்ஷா உட்பட பாஜகவினர் பெரும் ஏமாற்றம் கொண்டுள்ளனர் என்பது தெளிவு. 

;