articles

img

அப்படியே உறைந்து நிற்கட்டும்....

கடந்த நவம்பர் கடைசி வாரத்தில் தினமலரில் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக என்கிற புனைபெயரில் வெளிவந்துள்ள தரம் தாழ்ந்த பாணியில் சொல்லப்பட்டுள்ள விமர்சனப் பகுதிகளின் மையமானஅம்சம் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடனான கூட்டணியை கம்யூனிஸ்டுகள் உறுதிப்படுத்தியிருப்பது தான். திமுக கூட்டணியில் கம்யூனிஸ்டுகள் இடம் பெற்றிருப்பது  தினமலருக்கு ஜீரணிக்க முடியாமல் போனதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

சமீபத்தில் பீகாரின் 243 தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் (ஜேடியு) பாஜக-வும் இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியானது 125 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் நிதிஷ்குமார் முதல்வராகப் பொறுப்பேற்றிருந்தாலும் அந்த வெற்றியானது மகிழ்ச்சியோடு கொண்டாட முடியாத வெற்றியாக ஜேடியு - பாஜக - அணிக்கு அமைந்துவிட்டது. அதற்கு காரணம் எதிர்கட்சிகளான ராஷ்டிரிய ஜனதாதளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் ‘மகாகத்பந்தன்’ கூட்டணி 110 இடங்களில் வெற்றி பெற்று ஜேடியு - பாஜக - கூட்டணியை தப்பித்தோம் பிழைத்தோம் என பயம் கொள்ளச் செய்துவிட்டன. பீகாரின் இந்த தேர்தல் முடிவு தான் ‘தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டுச்சாம்” என்கிற கிராமத்து சொலவடை யைப் போல் தமிழகத்தில் இடதுசாரிகள் இடம்பெற்றுள்ள திமுக - அணியைப் பார்த்தவுடனே தினமலரைப் பதற்றமடையச் செய்கிறது. அந்தப் பதற்றத்தின் ஒவ்வாமையிலிருந்து தான் தினமலரின் வயிற்றெரிச்சல் வார்த்தைகள் வன்மமாக வெளிப்பட்டு நிற்கிறது!  

பீகாரில் நடந்தது என்ன?
சரி அப்படி என்ன தான் பீகாரில் நடந்துவிட்டது?கடந்த அக்டோபர், நவம்பரில் பீகாரில் 3 கட்டமாக நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளமும் - பாஜக உள்ளிட்ட கட்சிகளும் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியும், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகாகத்பந்தன் (எம்ஜிபி) கூட்டணியும் போட்டியிட்டன. அதில் தேஜகூ - 125 இடங்களிலும், எம்ஜிபி கூட்டணி - 110 இடங்களையும் கைப்பற்றின. தேஜகூ ஆட்சி அமைக்க பெரும்பான்மை உள்ள காரணத்தால், கடந்த  முறை முதல்வராக இருந்த நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றுள்ளார்.

பீகாரின் தேர்தல் முடிவின் மூலம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருந்தாலும் ஜேடியூ - பாஜக அணிக்கு பாடம் புகட்டுவதாகவும், ஆட்சி அமைக்க முடியாமல் போயிருந்தாலும் எம்ஜிபி அணிக்கு, அளித்துள்ள அங்கீகாரம் மூலம் காங்கிரஸ் தவிர இதர மதச்சார்பற்ற சக்திகளுக்கும் மற்றும் இடதுசாரிகளுக்கும் எழுச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும் வண்ணம் அம்மாநில மக்கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். இது நிச்சயம் ஒரு சிறப்பு வாய்ந்த தீர்ப்பாகும். 
பாஜக அணியில் ஜேடியு கடந்த 2015-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 71 இடங்களில் வெற்றி பெற்றது!  இது அக்கட்சி போட்டியிட்ட இடங்களில் வெற்றி பெற்ற எண்ணிக்கை அடிப்படையில் 70.3 சதமானமாகும். அக்கட்சி தற்சமயம் 2020-ல் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கை 43. இது 37.4 சதமாகக் குறைந்துள்ளது. பாஜக 2015ல் போட்டியிட்டதில் வெற்றி பெற்ற இடங்கள் 53.  இது 33.8 சதமாகும். அதுவே 2020ல் போட்டியிட்ட இடங்களில் வெற்றி பெற்றது. 74.  இது 66.4 சதமாகும்.ஆர்ஜேடி 2015-ல் போட்டியிட்டதில் வெற்றி பெற்ற இடங்கள் 80.  இது 79.2 சதமாகும். அதுவே 2020-ல் போட்டியிட்டதில் வெற்றி பெற்ற இடங்கள் 75.  இது 52.8 சதமாகும்.  காங்கிரஸ் 2015-ல் 27 இடங்களில் வெற்றிபெற்றது. இது அக்கட்சி போட்டியிட்ட இடங்களின் எண்ணிக்கையில் 65.9 சதமாகும். அதுவோ 2020-ல் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இது போட்டியிட்ட இடங்களின் எண்ணிக்கையில்  27.1 சதமாகக் குறைந்துள்ளது. இடதுசாரிகளைப் பொறுத்தமட்டிலும் 2015-ல் வெறும் 3 இடங்களில் மட்டுமே வென்றனர். இது போட்டியிட்ட இடங்களின் எண்ணிக்கையில் வெறும் 1.3 சதம் மட்டுமே. அதே நேரத்தில் 2020-ல் போட்டியிட்ட இடங்களில் 16-யை வென்றுள்ளனர். இது அவர்கள் போட்டி யிட்ட இடங்களின் எண்ணிக்கையில் 55.2 சதமாகும்.
ஆக, மேற்கண்ட விபரங்களிலிருந்து தெரிய வருவது என்னவென்றால், பாஜக 2015-யைக் காட்டிலும் 2020-ல் இரு மடங்கு வெற்றி பெற்றுள்ளது. ஜேடியு பலத்த பின்னடைவையும், காங்கிரஸ் சரிவையும் கண்டுள்ளன. இதில் ஆர்ஜேடி தனது பலத்தை தக்க வைத்துள்ளது மட்டுமின்றி தனிப்பெரும் கட்சியாகவும் மீண்டுள்ளது. உண்மையில் இடதுசாரிகள் தான் ஒப்பீட்டளவில் போட்டியிட்ட இடங்களின் எண்ணிக்கையில் 2015-யை விட    2020-ல் 50 மடங்கு கூடுதலாக வெற்றியில் கோலோச்சியுள்ளனர் என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது.

இடதுசாரிகள் பெற்ற வாக்கு
அதேபோல வாக்கு சதவீதத்தைப் பார்த்தால் பாஜக - தான் போட்டியிட்ட இடங்களில் உள்ள மொத்த வாக்கு எண்ணிக்கையில் 2015-ல் 37.5 சதம், 2020-ல் 42.5 சதமும் பெற்றுள்ளது. ஜேடியு 2015-ல் 40.7 சதமும், 2020-ல் 32.81 சதம் பெற்றுள்ளது. ஆர்ஜேடி 2015-ல் 44.4 சதமும், 2020-ல் 38.98 சதமும் பெற்றுள்ளது. காங்கிரஸ் 2015-ல் 39.5 சதம், 2020-ல்  32.89 சதமும், இடதுசாரிகள் குறிப்பாக சிபிஐ 2015-ல் 3.4 சதம், 2020-ல் 33.29சதமும், சிபிஎம் 2015-ல் 3.3 சதம், 2020-ல் 37.23 சதமும்,சிபிஐஎம்எல் 2015-ல் 3.8 சதமும், 2020-ல் 41.33 சதம் வாக்குகளையும் ஒப்பீட்டளவில் பெற்றுள்ளனர்.

கட்சிகள் வாங்கியுள்ள மேற்கூறிய வாக்கு விபரங்களிலிருந்து ஜேடியு-வும், காங்கிரசும் தலா 7 சதவீதம் வாக்குகளை இழந்துள்ளன. ஆர்ஜேடி 5 சதவீதம் வாக்குகளை இழந்துள்ளது. பாஜக 2015 -யோடு ஒப்பிடும் போது 2020-ல் வெறும் 5 சதவீதம் வாக்குகளையே கூடுதலாகப் பெற்றுள்ளது. ஆனால், சிபிஐ 30 சதவீதமும், சிபிஐ(எம்) 34 சதவீதமும், சிபிஐ(எம்எல்) 38 சதவீதமும் கூடுதலான வாக்குகளை அள்ளி உள்ளனர்.இதுமட்டுமன்றி போட்டியிட்டதில் பாஜகவும், காங்கிரசும் நேரடியாக 37 தொகுதியில் மோதியுள்ளன. அதில் பாஜக 20-லும், காங்கிரஸ் 7-லும், வெற்றி பெற்றுள்ளன. ஒப்பீட்டளவில் பாஜக 78.4 சதம் இடங்களிலும், காங்கிரஸ் 18.9 சதம் இடங்களிலும் வெற்றி பெற்றுள்து.

பாஜக-வும், ஆர்ஜேடி-யும் மோதிய 61 இடங்களில் பாஜக 37-லும், ஆர்ஜேடி 22-லும் வெற்றி பெற்றுள்ளன. ஒப்பீட்டளவில் பாஜக 60.7 சதமும், ஆர்ஜேடி 36.1 சதமும்  வெற்றி பெற்றுள்ளன. ஜேடியு-வும், ஆர்ஜேடி-யும் மோதிய 71 இடங்களில் ஜேடியு 21-லும், ஆர்ஜேடி - 48 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒப்பீட்டளவில் ஜேடியு 29.6 சதமும், ஆர்ஜேடி 67.6 சதம் இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஜேடியு-வும் காங்கிரசும் மோதிய 28 இடங்களில் ஜேடியு 28-லும், காங்கிரஸ் 17-லும் வெற்றி பெற்றுள்ளன. ஒப்பீட்டளவில் ஜேடியு 60.7 சதமும், காங்கிரஸ் 35.7 சதம் இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பாஜக-வும், இடதுசாரிகளும் மோதிய 12 இடங்களில் பாஜக 6-லும்,இடதுசாரிகள் 6-லும் வெற்றி பெற்றுள்ளனர். ஒப்பீட்டளவில் பாஜக 50.0 சதமும், இடதுசாரிகள் 50.0 சதம் இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். அதே போல ஜேடியுவும், இடதுசாரிகளும் மோதிய 16 இடங்களில் ஜேடியு 6-லும், இடதுசாரிகள் 10-லும் வெற்றி பெற்றுள்ளனர். ஒப்பீட்டளவில் ஜேடியு 31.3 சதமும் இடதுசாரிகள் 62.5 சதம் இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

(ஆதாரம் - ஆங்கிலம் இந்து, நவ -11, 2020)

ஆக, இங்கும் கூட போட்டியிட்ட இடங்களில் கூட பாஜக ஜேடியு-வுக்கு எதிராகவும் அதே நேரத்தில் மக்கள் இடதுசாரிகளின் பக்கம் கூடுதல் சாய்மானத்துடன் வாக்களித்துள்ளனர் என்பதும் தெளிவாகத் தெரிகிறது.

அதிசயித்துப் போன ஊடகங்கள்
எல்லாவற்றையும் விட பீகாரின் தேர்தல் முடிவுகள் குறித்து தேசிய ஊடகங்களும், பத்திரிக்கைகளும் ஜேடியு - பாஜக - அணியின் வெற்றியைப் பற்றி எழுதுவதைவிட ஆர்ஜேடி - காங்கிரஸ், இடதுசாரிகளின் மகாகத்பந்தன்கூட்டணியில் உள்ள காங்கிரசைத் தவிர்த்து ஆர்ஜேடி மற்றும் இடதுசாரிகள் பெற்ற வெற்றியைப் பற்றியே அதிசயித்து எழுதின. மட்டுமின்றி அதற்கான காரணங்களைப் பற்றிக் குறிப்பிடும் போது;  ஆர்ஜேடி-யின் தேர்தல் அறிக்கையில் முன் வைத்த மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் குறித்த தேர்தல் வாக்குறுதிகளையும், அவ்வாறு முன்வைப்பதற்கு கடந்த காலங்களில் இடதுசாரிகள் நடத்திய போராட்டங்கள் மற்றும் பங்களிப்பையுமே சுட்டிக் காட்டின.குறிப்பாக நவம்பர் 26, 2020-ல் வெளிவந்துள்ள பிரண்ட்லைன் ஆங்கில ஏடு இவ்வாறு கூறியுள்ளது:“பீகாரில் ஆர்ஜேடி தலைமையிலான மகாகத்பந்தன் அணியானது ஜேடியு - பாஜக-வின் என்டிஏ அணிக்கு சவாலான முறையில் வெற்றி பெற்றிருப்பதற்கு அடிப்படையான காரணம் ஆர்ஜேடியின் தேர்தல் வாக்குறுதிகளும் அதனை முன்வைத்து நடத்திய பிரச்சாரங்களுமாகும். ஆர்ஜேடியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற  பெரும்பாலான வாக்குறுதிகள் மக்கள் பிரச்சனைகளை மையமாக கொண்டுள்ள பொருளாதாரம் சம்பந்தப்பட்டவையாகும். குறிப்பாக 10 இலட்சம் வேலைவாய்ப்புகள், கல்வி, சுகாதாரம் தனியார் மய எதிர்ப்பு, இட ஒதுக்கீடு, நிலமறு விநியோகம், புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இப்பிரச்சனைகளை முன் வைத்து தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியவர்கள் இடதுசாரிகளே. ஏனென்றால், அவர்கள் கடந்த பல ஆண்டுகளாக மேற்கண்ட பிரச்சனைகளுக்காக விவசாய அமைப்புகள் நடத்திய வீரியமிக்க நிலப்போராட்டங்களும் மற்றும்  தொழிற்சங்கங்கள், மாணவர், அமைப்புகள் முன்னெடுத்தபோராட்டங்களும் தான்  மத, சாதி அடையாள அரசியலைத் தாண்டி மக்கள் பிரச்சனைகளை முன் வைக்கும் களமாக பீகாரின் தேர்தலை மாற்றியது எனவும் தெரிவித்துள்ளது. 

தினமலரின் வயிற்றெரிச்சலுக்கு காரணம் இப்போது புரிகிறதல்லவா? கம்யனிஸ்டுகள் மீது வன்மத்துடன் வார்த்தைகளால் அர்ச்சிப்பதன் மூலம், தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் கம்யூனிஸ்டுகள் பங்கேற்றிருப்பதானது - எங்கே   2021-ல் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் பீகாரைப் போல தமிழகமும் அதிமுக - பாஜக-வுக்கு எதிரான சுனாமியாக மாறி விடுமோ என்கிற பீதியில் தினமலர் உறைந்து போயிருப்பது நன்றாகவேத் தெரிகிறது.!இப்போது அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின்தலைமையிலான விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு தான், “சம்யுக்த கிஷான் மோர்ச்சா” (ஒன்றுபட்ட விவசாயி கள் விடுதலை) என்ற எழுச்சிமிகு முழக்கத்துடன் ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளையும் களத்தில் இறக்கியிருக்கிறது. இடதுசாரி கட்சிகளும் பல்வேறு மாநிலங்களில் மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகளும் விவசாயிகளின் பந்த் உள்ளிட்ட போராட்டங்களுக்கு ஆதரவாக களமிறங்கிஉள்ளனர். பாஜக உள்ளிட்ட ஆளும் வர்க்க ஆட்சியாளர்களின் மாநிலங்களிலும் மத்தியிலும் இந்தப் பேரெழுச்சியை அரசியல் மாற்றத்திற்கு வித்திடும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறுதியிட்டு கூறியிருக்கிறது. தினமலர் பத்திரிகை அப்படியே உறைந்து நிற்கட்டும், பாவம்!

கட்டுரையாளர்: சிபிஐ(எம்) மதுரை மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்