articles

img

முதல்வர் வேட்பாளரும் முன்னுக்கு வரும் மோதல்களும்....

அதிமுக, பாஜக கூட்டணியில் நாளுக்குநாள் முட்டலும், மோதலும், குழப்பமும், குளறுபடியும் அதிகரித்த வண்ணம் உள்ளன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை விசாரிக்க வேண்டும் என்று கூறிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதுகுறித்து இப்போது பேசுவதே இல்லை. அதற்காக அமைக்கப்பட்ட விசாரணைக் கமிசனும் பேச்சுமூச்சின்றி கிடக்கிறது. இதனிடையே அடுத்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்தது. ஓபிஎஸ் தன்னைத் தான் அறிவிக்க வேண்டும் என்று முறுக்கிக் கொண்டார். நெருக்கடியான காலங்களில் ஜெயலலிதா தன்னைத்தான் முதல்வராக்கினார் என்று அவர் வெளிப்படையாகக் கூறாவிட்டாலும், தனது கோஷ்டியினர் மூலம் கூறவைத்தார். ஆனால் முதல்வர்நாற்காலியை இறுகப் பிடித்துக் கொண்ட எடப்பாடியார் இறங்கி வரவில்லை. மூத்த அமைச்சர்கள் அங்கும் இங்கும் ஓடி சமாதானம் செய்தனர். ஆட்சியில் தனக்கு பிடியில்லை என்று புரிந்துகொண்டதால் ஓபிஎஸ்வேறு வழியின்றி எடப்பாடியாரை முதல்வர் வேட்பாளர் என்று ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று. 

இருந்தாலும் இரு கோஷ்டிகளுக்கும் இடையில் அவ்வப்போது தனிக்கச்சேரி நடந்துகொண்டுதான் இருந்தது. குறிப்பாக பாஜகவின் ஆசியுடன் களத்தில் இறக்கி விடப்படும் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து அமைச்சர்ஜெயக்குமார் எதிர்மறையான கருத்தைத் தெரிவிக்க, துணை முதல்வர் ஓபிஎஸ் அவரது வருகையை வரவேற்று மகிழ்ந்தார். தற்போதுவரை இருகோஷ்டிகளுக்கும் இடையில் பகைமை நீருபூத்த நெருப்பாகவே உள்ளது. இந்த நிலையில் பாஜக தனது வேலையை காட்டத் துவங்கியது. முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அதிமுக மட்டும் முடிவுசெய்ய முடியாது என்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைமை என்ற முறையில் பாஜகதான் அறிவிக்கும் என்றும் வேல்யாத்திரை புகழ் எல்.முருகன் கொளுத்திப் போட்டார். அவர் அத்துடன் நில்லாமல் தமிழகத்தில் பாஜகவும் இடம்பெறும் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்றும் கூறினார். இதற்கு அதிமுக தரப்பில் சிறு முணுமுணுப்புத்தான் வெளிப்பட்டதே தவிர, வலிமையாக எதிர்க்க அவர்களால் முடியவில்லை. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் முதல்வர் வேட்பாளர் குறித்து கேட்கப்பட்டபோது அவர் பதிலளிக்காமல் மழுப்பினார். நிருபர்கள் விடாமல் கேட்கவே “எங்களது கட்சிக்கே சில வழிமுறைகள் உள்ளன. அதன்படிதான் கட்சியின் தலைமை அனைத்தையும் அறிவிக்கும். அதைத்தான் மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்தார். ஒரு கூட்டணி என்று வந்தால் அதில் ஒருவரையொருவர் சார்ந்திருத்தல் இயல்பு. எந்தக் கூட்டணியாக இருந்தாலும் அதில் இருப்பவர்கள் ஒருவரையொருவர் சார்ந்தே இருக்க வேண்டும்” என்று பட்டும்படாமல் பதில் கூறினார். இதற்கே ஜவடேகரின் மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி என்கிறார் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு. 

ஜவடேகர் ஏதோ அமெரிக்காவின் டிரம்ப் கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பது போல பேசுகிறார். ஆனால் இவர்களோ அவருடைய பேச்சுக்கு பொழிப்புரை எழுதி சமாளிக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.அதிமுகவின் சில அமைச்சர்கள் உள்குத்து குத்தத் துவங்கிவிட்டனர். அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் கேட்டதற்கு, முதல்வர்வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமைதான் அறிவிக்கும் என்று அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் கூறுகிறார். அது அவரது கட்சியின் கொள்கை என்று கூறியுள்ளார். எங்கள் கட்சியின் தலைமையில்தான் கூட்டணி என்றோ, நாங்கள் முடிவு செய்பவர்தான் முதல்வர் வேட்பாளர் என்றோ செல்லூர் ராஜுவால் கூறமுடியவில்லை. மாறாக அதுஅவர்கள் கொள்கை, இது எங்கள் கொள்கை என்று கொள்கைக் கோமானாக மாறி குழப்புகிறார்.பாஜகவின் குபீர் செய்தித் தொடர்பாளரான குஷ்பு, எடப்பாடியாரை எல்லாம் முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என்றார்.அக்கட்சியின் துணைத் தலைவர் அண்ணாமலை ‘பாஜகவின் தேசியத் தலைவர்கள் வேறு வேலையில் பிசியாக உள்ளனர். இதனால்தான் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிப்பதில் குழப்பம் நீடித்து வருகிறது’ என்றார். அப்படி தேசிய தலைவர்கள் என்ன வேலையில் பிசியாக இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அம்பானிக்கும், அதானிக்கும் ஆதரவாக அடுத்தடுத்த சட்டங்களை போட வேண்டும் அல்லவா. 

இதனிடையே பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கூறியுள்ளார். முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமைதான் அறிவிக்கும் என்று அவர் கூறியதோடு, தேர்தலுக்குப் பிறகு பாஜகஎம்எல்ஏக்களின் எண்ணிக்கை அடிப்படையில் அமைச்சர் பதவி குறித்து முடிவு செய்யப்படும் என்று அமைச்சரவை அமைக்கும் அளவுக்கு சென்றுவிட்டார். ஏற்கெனவே பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை, சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு அமையும் ஆட்சியில் எச்.ராஜா அமைச்சராவார் என்று ஓடாத பேருந்தில் இப்பொழுதே ஒரு துண்டைபோட்டு வைத்திருக்கிறார். 

ஞாயிறன்று நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரச்சார துவக்கவிழா பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வரோ, துணை முதல்வரோ பாஜக கூட்டணி ஆட்சி, முதல்வர் வேட்பாளர் என்றெல்லாம் கூறி வருவது குறித்து எதுவும் கூறவில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா புகழை மட்டும் பாடிவிட்டு, திமுகவைவிமர்சிப்பதிலேயே குறியாக இருந்தனர். மற்றபேச்சாளர்களும் அப்படியே. பேசிய அனைவரும் இன்னும் நூறாண்டுக்கு அதிமுக இருக்கும் என்று ஜெயலலிதா கூறியதையே தேவ வாக்கு போல கூறிக்கொண்டிருந்தனர். ஆனால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடியா, இந்த லேடியா என்று அவர் கேள்வி எழுப்பியதையோ, அதற்கு முந்தைய சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் இனி எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை என்று கூறியதையோ மறந்தும் கூட கூறவில்லை. அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரான கே.பி.முனுசாமி மட்டுமே பாஜகவின் பெயரைக் கூறாமல் சில தேசிய கட்சிகள் அதிமுகவை அழிக்கப் பார்க்கின்றன. அவர்கள் நீண்டகாலமாக இதற்காக சதி செய்து கொண்டிருந்தனர். இப்போது அதை செயல்படுத்தத் துடிக்கின்றனர் என்று மறைமுகமாக பாஜகவை சாடினார். அதிமுக தலைமையில்தான் ஆட்சி, அதை ஏற்றுக்கொள்ளாத எந்தக் கட்சியும் எங்களுக்குத் தேவையில்லை என்று பாஜக மட்டுமின்றி பாமக, தேமுதிக போன்ற கட்சிகளையும் சேர்த்து ஒரு வாங்கு வாங்கினார். ஆனால் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரின் பேச்சுகளில் இந்த வேகத்தை காண முடியவில்லை.

மொத்தத்தில் அதிமுகவின் பிரச்சாரக் கூட்டம் தனி ஆவர்த்தனமாகவே முடிந்திருக்கிறது. அடுத்த நாட்களில் போட்டிப் பாட்டு, பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சிகள் அதிகரிக்கும் என்றே அரசியல் வானிலை நிலவரங்கள் தெரிவிக்கின்றன. ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கப் போவதாக சொல்லியிருக்கும் நிலையில்தான்கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்த பாஜக முயல்கிறது என்பது அதிமுகவினரின் குற்றச்சாட்டு. சொந்தக்குளம் இல்லையென்றாலும் எந்தக் குளத்தையாவது குத்தகைக்கு எடுத்து தாமரையை மலரவைத்துவிட வேண்டும் என்று பாஜகவின் திட்டம். அகப்பட்டவரை அடித்துப் பிடுங்குவது என்பது அந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகளின் மனவோட்டம். மற்றபடி அந்தக் கூட்டணியில் எந்தக்குழப்பமும் இல்லை. மங்களம், சுப மங்களம்.

==மதுரை சொக்கன்==

;