articles

img

கம்யூனிஸ்ட்டுகள் மீது கல்லெறியும் தினமலருக்கு சில கேள்விகள்....

நடுநிலை நாளேடு, உண்மையின் உரைகல் என்றெல்லாம் தனக்குத்தானே பட்டம் சூட்டிக் கொண்டு வெளிவரும் நாளேடு ‘தினமலர்’. இந்த ஏட்டை நடத்தும் குடும்பத்தார்களுக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் இருக்கும் தொடர்பு ஊரறிந்த ஒன்று. தொழிலாளர்களுக்கு எதிராகவும், உழைக்கும் மக்களுக்கு எதிராகவும், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதி ஊழியர்களுக்கு எதிராகவும் அன்றாடம் ஆலகால விஷத்தை கக்கும் தினமலர், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வெண்சாமரம் வீசி தன்னுடைய முதலாளித்துவ விசுவாச விலாசத்தை அன்றாடம் புதுப்பித்துக் கொள்ளும். 

பாஜகவுக்கு அதிகாரப்பூர்வ பத்திரிகைகள் தமிழகத்தில் இல்லையே என்ற குறையை பல ஏடுகள் தற்போது பூர்த்தி செய்து கொண்டிருக்கும் நிலையில், இந்துத்துவா கும்பலின் தலைமைப் பத்திரிகை தானே என்பதுபோல, அன்றாடம் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக செய்திகளுக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கும். பொதுவாக அந்தப் பத்திரிகை, தலையங்கம் எழுதுவதில்லை. ஆனால், ஒவ்வொரு செய்தியிலும் தன்னுடைய கருத்தை திணிக்கும். செய்திக்கு தலைப்பு கொடுப்பதிலேயே தன்னுடைய கோணல் புத்தியையும், குறுகிய நோக்கத்தையும் வெளிக்காட்டும். தமிழக முதல்வர் உட்பட பலரை தலைப்பிலேயே தினமலர் சிறுமைப்படுத்தியது என்பது அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு பக்கத்திலும் தன்னுடைய மேலாதிக்க மேட்டிமைத்தனத்தை காட்டிக் கொள்ளும் ஏடு அது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க தினமலரின் பாஜக பாசம் வெறியாக மாறத் துவங்கியுள்ளது. முதல் பக்கத்திலேயே பல்வேறு புனைபெயர்களில் அன்றாடம் கட்டுரைகளை வெளியிட துவங்கியுள்ளது. பாஜகவை எதிர்க்கும் அத்தனை கட்சிகளையும் அமைப்புகளையும் நாகரிகம் சிறிதுமின்றி நரகல் நடையில், நாராச ராகத்தில் வசைமாரி பொழிகிறது. பாஜக தமிழக தலைவர் எல்.முருகன், வேல் யாத்திரை என்ற பெயரில் அன்றாடம் உலா போவதும், காவல்துறையினர் கைது செய்து விடுவிப்பதும் அடுத்த நாள் எல்.முருகன் தனது பரிவாரங்களோடு, அடுத்த ஊரில் யாத்திரையை துவங்குவதுமாக இருந்தபோது, முற்றிலும் அரசியல் நோக்கங்களுக்காக நடத்தப்படும் இந்த விளையாட்டை தினமலர் ரசித்து ருசித்து, வேல் வேல் வெற்றிவேல் என்றுஅன்றாடம் முழக்கமிட்டு, புளகாங்கிதம் அடைந்து புல்லரித்து போர்வையை எடுத்து போர்த்திக் கொண்டது. ஆனால்,திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி கைது செய்து விடுவிக்கப்பட்டது கண்டு (25.11.2020), ஆத்திரமடைந்த அந்த ஏடு, ‘பிடிச்சு ஜெயிலில் போட்டு களி திங்க வைக்கவேண்டும்’ என்று முதல் பக்கத்திலேயே எழுதியது. அவர்களைப் பொறுத்தவரை ஆளுக்கொரு அளவுகோல்தான். கம்யூனிஸ்ட்டுகள் என்றாலே தினமலருக்கு சர்வாங்கமும் பதறி, உதறல் எடுக்கும். பாஜக தலைமையிலான மத்திய கூட்டணி அரசு நாட்டை மொத்தமாக முதலாளிகளிடம் விற்கத் துணியும்போது, இவர்கள் போராட்டங்களின் மூலம் தடுப்பணை போடுகிறார்களே என்ற கடுப்பு அந்தஏட்டுக்கு எப்போதும் உண்டு. சமூகநீதி சார்ந்த கோரிக்கைகள் முன்னெழுந்து வந்தால், எட்டு எட்டிக்காயை மொத்தமாய் கடித்தது போல, முகத்தை சுழிக்கும். வேலைநிறுத்தம் என்று அறிவித்தாலே தேச விரோத குற்றம் என்று முதலாளித்துவத்தின் முற்றத்தில் நின்று கொண்டு கும்மி அடிக்கும்இந்த ஏடு. 

இந்நிலையில், நவம்பர் 22 ஆம் தேதி ஏட்டின் முதல் பக்கத்தில் ‘கொள்கையாவது கொத்தவரையாவது’ என்று தலைப்பிட்டு, கொம்பேறி என்ற புனைபெயரில் கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக வம்பளந்து வன்மம்கக்கியிருக்கிறது அந்த ஏடு. கொம்பேறி என்பது முதுகெலும்பற்ற ஊர்ந்து செல்லும் பாம்பு வகையை சேர்ந்தது. எதற்காக இந்த புனைபெயரை தேர்வு செய்தார்களோ தெரியவில்லை. ஆனால் கொம்பேறி பாம்புக்கு விஷம் இல்லை. ஆனால், இந்த புனைபெயருக்குள் கம்யூனிஸ்டு எதிர்ப்பு எனும் கொடும் நஞ்சு நிறையவே இருக்கிறது. 

கம்யூனிஸ்ட்டுகளைப் பொறுத்தவரை விமர்சனம், சுயவிமர்சனம் என இரண்டையும் இயக்க வாழ்வில் இருகரைகளாக கொண்டவர்கள். நியாயமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டால், அதை ஏற்று சரிசெய்து கொள்ளும் பக்குவம் வாய்க்கப் பெற்றவர்கள். ஆனால்,கொம்பேறியின் வம்பேறிய இந்த உளறலில் விமர்சனம்எதுவும் இல்லை. ஆத்திரம், அவதூறு, வயிற்றெரிச்சல்தான் நிரம்பி வழிகிறது. ‘கொள்கையாவது கொத்தவரையாவது’ என்று ஏகடியம்பேசும் இந்த ‘கொள்கைக் குன்று’ கடந்த காலத்தில் எவ்வாறெல்லாம் தன்னுடைய கொள்கையை மாற்றிக் கொண்டு வந்துள்ளது என்பதை அதன் வரலாறை அறிந்தவர்கள் அறிவார்கள். எம்.ஜி.ஆர். அதிமுகவை துவக்கியபோது, அவருக்கு ஆதரவாக எழுதி தன்னுடைய வணிகத்தை பெருக்கிக் கொண்ட ஏடு, தற்போது அதிமுகவை விழுங்க பாஜக வாயை திறந்து கொண்டு வரும்போது அந்த பாஜகவுக்கு துணை போகிறது.

ஒரு காலத்தில், கம்யூனிஸ்ட்டுகள் நேர்மையாக இருந்ததாகக் கூறும் இந்த ஏடு, தற்போது அப்படியெல்லாம் இல்லையே என அங்கலாய்க்கிறது. ஒரு வாதத்திற்காக இதை ஏற்றுக் கொண்டால், கம்யூனிஸ்டுகள் நேர்மையாக இருந்தபோது, தினமலர் ஏடு அவர்களை ஆதரித்து பக்கம் பக்கமாக எழுதித் தீர்த்ததா? கம்யூனிஸ்ட்டுகள் போராட்டக் களத்தில் நின்ற போதெல்லாம் அதைக் கொச்சைப்படுத்திய ஏடுதானே இது.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஏதோ மந்திரப் பொடியை கொண்டு வருவது போலவும் அதை தூவியவுடன், தாமரை தமிழகம் முழுவதும் பூத்துக் குலுங்கப் போவது போலவும் பில்டப் கொடுத்தது தினமலர். ஆனால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிகரமாக தோல்வியடைந்த அதே கூட்டணியை அரசு விழாவில் அறிவித்து, நெறிமுறைகளுக்கு கேடு விளைவித்தார்கள் என்பதைத் தவிர, வேறெதுவும் நடக்கவில்லை. அமித்ஷா வருகையை‘பிள்ளையார்சுழி’ என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது தினமலர். ஆனால், பிள்ளையார் பிடிக்க நினைத்து வேறெதுவோ வந்துவிட்டதால், விரக்தியின் விளிம்புக்கு சென்றுவிட்டது.

கடந்த ஆண்டுகளில் கழகங்கள் இல்லாத தமிழகம் என்றும், தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்றும் பாஜகவினர் கூச்சலிட்ட சமயங்களில், இந்த ஏடு அதை லவுட் ஸ்பீக்கரில் ஒலிபரப்பி காதுகளை புண்ணாக்கியது. ஆனால், கழகங்களில் ஒன்றாகிய அதிமுகவின் கரத்தை பற்றுவதைத் தவிர பாஜகவுக்கு வேறு வழியில்லாமல் போய்விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை தாமரை மலரவே இல்லை. மலர்ந்த தாமரைகளும் கருகிவிட்டன. இதற்கெல்லாம் காரணமாக இருப்பவர்களில் கம்யூனிஸ்ட்டுகளும் இருக்கிறார்கள் என்பதால், அந்த இயக்கத்தை சிறுமைப்படுத்தி தன்னுடைய சின்னத்தனத்தை காட்டியுள்ளது அந்த ஏடு. கம்யூனிஸ்ட்டுகளைப் பொறுத்தவரை மக்களுக்காக அயராது போராடி வருபவர்கள். விடுதலைப் போராட்ட காலம் துவங்கி, இன்றுவரை கம்யூனிஸ்ட்இயக்கம் அளவுக்கு தியாகத் தழும்பேறிய இயக்கம் வேறெதுவும் இல்லை. தேர்தலையும்கூட ஒரு போராட்டக் களமாக கருதி, அப்போதைய அரசியல் சூழலுக்கேற்ப நாட்டு நலனையும், மக்கள் நலனையும் கருத்தில் கொண்டு முடிவெடுத்து வந்திருக்கிறார்கள். இதற்கான காரண, காரிய நியாயங்களை மக்களிடம் எடுத்துரைத்திருக்கிறார்கள்.

தினமலர் ஏடு பாராட்டுப் பத்திரம் வாசிக்கும் பாஜக ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தகைய தில்லுமுல்லு, திருகுதாள வேலைகளை செய்து வருகிறது என்பதற்கு பல உதாரணங்களை கூற முடியும் என்ற போதும்கூட, அண்மையில் நடந்த பீகார் தேர்தல் முடிவு ஒன்று போதும். நிதிஷ்குமார் கட்சியையும், பஸ்வான் கட்சியையும் பிரித்து மோதவிட்டு, தன்னைப் பலப்படுத்திக் கொண்டது பாஜக. கர்நாடகம், கோவா, மத்தியப் பிரதேசம் என பல மாநிலங்களில் அந்தக் கட்சி நடத்திய ஆட்சிக் கவிழ்ப்புகளும், ஆள்பிடி அரசியலும்  ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்குபவை. ஆனால் இதையெல்லாம் ‘சாணக்கிய தந்திரம்’ என்று பாராட்டி சமாதிக்குள்ளிருக்கும் சாணக்கியனையே வெட்கப்பட வைக்கும் இந்த ஏடு.கம்யூனிஸ்ட்டுகள் பணம் வாங்குவது பரம ரகசியம் என்றும், தங்கமலை ரகசியம் என்றும் எழுதுகிறது இந்த ஏடு.கம்யூனிஸ்ட்டுகளைப் பொறுத்தவரை திறந்த புத்தகம். தங்களது தேர்தல் கால வரவு-செலவுகளையும் தேர்தல் ஆணையத்திடம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், இந்தியாவிலேயே கார்ப்பரேட்டுகளிடம் அதிக கைக்கூலி வாங்கும் கட்சி பாஜகதான் என்று எழுத்துப்பிழையாகக் கூட என்றைக்காவது எழுதியது உண்டா தினமலர்...? 

பிஎம்கேர் என்ற பெயரில் திரட்டப்படும் நிதி, அது எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்ற பரமரகசியத்தையும், தங்கமலை ரகசியத்தையும் உளவு பார்த்து எழுத எப்போதாவது முயன்றது உண்டா தினமலர்....? 

கம்யூனிஸ்ட்டுகள் சீனாவைப் பார்... ரஷ்யாவைப் பார்... என்றெல்லாம் கூறிய காலம் மலையேறிவிட்டது என்கிறதுஅந்த ஏடு. இந்த கொரோனா காலத்திலும்கூட சீனா பொருளாதார வளர்ச்சியில் முன்னேறியுள்ளது. அங்கிருக்கும் சோசலிச கட்டமைப்புதான் அதற்கு காரணம். ஆனால், தினமலர் முட்டுக் கொடுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட முதலாளித்துவ நாடுகள் இந்த காலத்தில் முட்டுச் சந்துக்குள் மாட்டிக்கொண்டு முழிப்பதை அந்த ஏடு என்றைக்கேனும் எழுதியது உண்டா..?
இடதுசாரி தொழிற்சங்கங்கள் தேசபக்தியோடு இயங்கிக்கொண்டிருப்பது, அந்த ஏட்டிற்கு எரிச்சல் ஏற்படுத்துகிறது. தேசத்தின் பாதுகாப்பு அரண்கள் இத்தகைய தொழிற்சங்கங்கள்தான். இந்த அரணும் இல்லாவிட்டால், தேசத்தை கூட்டுக் களவாணிகள் என்றைக்கோ மேய்ந்துவிட்டு போயிருப்பார்கள். 

தேர்தலுக்குத் தேர்தல் கழைக்கூத்தாடி போல கம்யூனிஸ்ட்டுகள் கொள்கையையும் கூட்டணியையும் மாற்றிக் கொள்கிறார்கள் என்கிறது இந்த ஏடு. கழைக்கூத்தாடுவதும் ஒரு கலைதான். ஆனால் முதலாளிகளும், மத-சாதி வெறியர்களும் அடிக்கும் கொட்டுக்கேற்ப ஆடி பத்திரிகையின் பக்கங்களை அசிங்கப்படுத்துவதுதான் பத்திரிகை தர்மமா?பாஜக இதுவரை எந்தக் கட்சியோடும் கூட்டணி வைத்ததேஇல்லையா? அந்தக் கட்சிகளையே விழுங்கி ஏப்பம் விட்டதுஇல்லையா? அந்த புளிச்ச ஏப்ப ஒலி, தினமலருக்கு சங்கீதமாக கேட்கிறதா?

கம்யூனிஸ்ட்டுகள் திட்டி தீர்ப்பதற்கு அதிமுக இருக்கிறது,பாஜக இருக்கிறது, நீட் தேர்வு இருக்கிறது என்றெல்லாம் நீட்டி முழக்குகிறது அந்த ஏடு. தமிழக மக்களுக்கு வஞ்சகம்இழைப்பதையே குறியாகக் கொண்ட பாஜகவை கொண்டாடித் தீர்ப்பதற்கு தினமலர் உள்ளிட்ட ஏடுகள் இருக்கின்றன. நீட் தேர்வினால் தமிழகத்திற்கு ஏற்பட்ட இழப்புகளை கம்யூனிஸ்ட்டுகள் மக்களிடம் நிச்சயம் கொண்டு செல்வார்கள். வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் தமிழக துரோகங்களையும் அதற்கு துணை போகும் அதிமுகவின் அவலங்களையும் மக்களிடம் நிச்சயம் கொண்டு செல்வார்கள். இது பொறுக்கவில்லையென்றால், கொத்தவரை வத்தல் போடுவது குறித்து பக்கம் பக்கமாக எழுதட்டும் அந்த ஏடு.தினமலர் ஆசிரியர் பழங்கால நாணயங்கள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருபவர். இது பாராட்டத்தக்க ஒன்று. அதே நேரத்தில், பத்திரிகை நடத்தும்போது குறைந்தபட்ச நாணயத்தையாவது பின்பற்ற அந்த ஏடு முன்வரட்டும். இறுதியாக ஒன்று, கொத்தவரங்காய் மனஅழுத்தத்திற்கு நல்ல மருந்து என்கிறது மருத்துவக் குறிப்பு. இந்தகட்டுரையை எழுதிய கொம்பேறி முயற்சித்துப் பார்க்கலாம்.

==மதுரை  சொக்கன்===

;