வியாழன், செப்டம்பர் 23, 2021

articles

img

விடியலைத் தந்து சமூகநீதி காத்திடுக.....

ஓய்வு பெற்ற சத்துணவு - அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ 7850/- வழங்க தமிழக அரசுக்கு சத்துணவு - அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலாளர் இ.மாயமலை கூறியிருப்பதாவது:

சத்துணவுத்திட்டம் 1982-ல்துவங்கப்பட்டது. அரசுப்பணி கிடைக்காதகுடும்பத்தில் ஒருவருக்கு வேலை, விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், நிராதரவான பெண்களின் சமூக பாதுகாப்பு, பொறுப்பாளர் நிலையில் குறைந்த பட்சம் எஸ்எஸ்எல்சி கல்வித் தகுதி ஆகியவை இந்த மதிப்பூதியப் பணி நியமனத்துக்கான முன்னுரிமைத் தகுதிகளாக அறிவிக்கப்பட்டது. 1991-ல் அன்றைய அரசு, பெண்கள் மட்டும் இத்திட்டத்தில் நியமனம் என உத்தரவிட்டதால் இது 100 சதவீத பெண்களின் வேலைவாய்ப்புத் திட்டமாக பரிணமித்தது. அதன் பின் ஒன்றிய அரசின்ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகளும் இத்திட்டத்துடன் இணைக்கப்பட்டு இன்றுவரை 40 ஆண்டுகளாக சமூக நலத் துறையின் மிகப்பெரும் மக்கள் நலத் திட்டமாக தொடர்கிறது.

சத்துணவு - அங்கன்வாடி ஊழியர்களின் தன்னலமற்ற உழைப்பால் இந்ததிட்டம்  பெற்றுள்ள வெற்றியை உலகநாடுகள் போற்றுகின்றன. உலக வங்கியும் பாராட்டியது. ஒன்றிய அரசும், பல்வேறு மாநிலங்களும் இத்திட்டத்தைமுன்னுதாரணமாக கொண்டு சில மாறுதல்களுடன் மதிய உணவுத் திட்டமாக அமல்படுத்துகின்றன. சிலநாடுகளும் இதைப் பின்பற்றுகின்றன.

தொகுப்பூதிய ஊழியர்கள் நிரந்தரமான வரலாறு 
இந்தத் திட்டம் துவங்கியதற்குப் பின்னால் 1981 -ல் உருவாக்கப்பட்ட நில உடமை மேம்பாட்டுத் திட்டத்தில் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த இரவுக் காவலர் உள்ளிட்ட அனைத்து தொகுப்பூதிய பணியாளர்களும் அரசுப் பணியில் ஈர்க்கப்பட்டனர். 1991-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் 6 மாதங்கள் பணி புரிந்தோரும் அரசுப் பணியாளராக்கப்பட்டனர். நகராட்சியில் தினக்கூலியாக பணிபுரிந்தோரும், அனைத்துத் துறைகளிலும் பணியாற்றிய தினக் கூலி மற்றும் தற்காலிகப் பணியாளர்கள் நிரந்தரம் செய்யப்பட்டனர். 

2003-ல் தொகுப்பூதியம் ரூ.4000த்தில் நியமிக்கப்பட்ட 12000 பேர் அரசு ஊழியராக்கப்பட்டு பதவி உயர்வில் அரசின் உயர்நிலை அதிகாரிகளாக உள்ளனர். இவை அனைத்தும் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரின் உத்தரவுகளாகும். அருகாமை மாநிலமான பாண்டிச்சேரியில் அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு இளநிலை உதவியாளர் நிலையிலும், அங்கன்வாடி உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர் நிலையிலும் பதவி உயர்வு 2001-ல் வழங்கப்பட்டுள்ளது.சத்துணவு - அங்கன்வாடி ஊழியர் பணி மட்டும் பகுதிநேர நிரந்தரம்; ராகேஷ்கே. சர்மா எதிர் ராஜஸ்தான் அரசு சிவில்சர்வீஸ் வழக்கிலும், சந்திரகா பிரகாஷ் பாண்டே எதிர் உத்திரப் பிரதேச அரசு நிர்வாகத்துக்கு எதிரான வழக்கிலும் மதிய உணவுப் பணி குடிமைப்பணி எனவும்,அரசுப் பணிக்கு நிகரான பணி எனவும்  2001 - ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் தீர்ப்புவழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறைச் செயலாளருக்கு எதிராக பெரியண்ணன் என்பவர் தொடுத்த வழக்கில்சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதியரசர் பால் வசந்தகுமார் சத்துணவுப் பொறுப்பாளர் பணி என்பது அரசுப்பணிக்கான பதிலிப் பணி என 2006ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியுள்ளார். 

எனவே, இந்திய அரசின் பணியமைப்பு சட்ட விதி 311 (2) -ன் கீழ் இந்த ஊழியர்கள் பணியாளர்/ஓய்வூதியர்களுக்குச் சட்டபூர்வ உரிமைகள் ஓய்வூதியஉரிமைகள் வழங்கி வாழ்வாதாரம் பாதுகாக்க வேண்டியது சேம நல அரசின் கடமை என்பதை இந்த தீர்ப்புகள் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளன.இதனைக் கருத்தில் கொண்டு தான்டாக்டர் கலைஞர் எவ்வித பதவி உயர்வு வாய்ப்புமின்றி நீண்ட நெடிய காலம் அரசுப் பணியாற்றியமைக்காக சத்துணவு - அங்கன்வாடி ஊழியர்களின் முதுமை, இயலாமை, நோய் நொடிகள்மிகுந்த காலத்தின் ஓரளவு சமூக பாதுகாப்பு கருதி 1998 - ல் சிறப்பு சேமநல நிதியும்,2008-ல் அறிஞர் அண்ணா பிறந்த நாளன்று சிறப்பு ஓய்வூதியத் திட்டத்தையும் முதன் முதலில் அறிமுகம் செய்தார். அது, அதிமுக அரசு அமலாக்கிய 7-ஆவது ஊதிய மாற்றத்தின் போது அனைவருக்கும் பொருத்தப்பட்ட 2.57 பெருக்கல் காரணி நிராகரிக்கப்பட்டதால் மிக சொற்பமான மாத ஓய்வூதியம் ரூ. 2000 ஆக உள்ளது. இது கட்டுபடியாகாததால் சிலர்பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கொரோனா பெருந்துயர் இந்த ஓய்வூதியர் வாழ்வைச் சுக்குநூறாக்கி விட்டது.        

இன்றைய சூழலில் ஒன்றிய அரசின்குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.9000 ஆகவும், தமிழ்நாடு அரசின் பென்சன் சட்டப்படி குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 ஆகவும் உள்ளது. ஏட்டுக் கல்வி முறைத் தகுதியுடன் மதிப்பூதியத்தில் விஓ. கர்ணம் ஆக பணியமர்வு பெற்றவர்கள் 1980-ல் அவசர சட்டத்தால் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். முறையான ஓய்வு பெறாத அவர்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் ரூ 6750/ம், 1982 க்குப் பின் 5 ஆம் வகுப்பு கல்வி தகுதியில் மதிப்பூதியத்தில் பணி அமர்வு பெற்று 10 ஆண்டு பணி நிறைவுடன் ஓய்வு பெற்ற வருவாய் கிராமஉதவியாளர் ரூ 6750/ம், அதே பணியில் 5 ஆண்டு பணி நிறைவு செய்தோருக்கு  ரூ.3375ம் சிறப்பு ஓய்வூதியமாக இன்று வழங்கப்படுகிறது.கோவிட்-19 பெருந்துயர், சமூக பொருளாதாரத்தில் கடும் நெருக்கடியை உருவாக்கிய சூழலில் அரசு 2020-ல் கிராமப்புற கோவில் பூசாரிகளது ஓய்வூதியத்தை ரூ.1000த்திலிருந்து ரூ. 3000 ஆகஉயர்த்தியது. இன்றைய அரசு கூட சட்டமன்ற கூட்டத் தொடரில் அதே பூசாரிகள் ஓய்வூதியத்தை ரூ.4000மாக உயர்த்தியுள்ளது. மேலும், குடும்ப நல நிதி ரூ.15,000த்திலிருந்து ரூ.40,000மாக உயர்த்தப்பட்டுள்ளது.

இது, மனித நேயம் மற்றும் சமூக நீதிக் கோட்பாட்டின் பால் இந்த அரசுக்கு உள்ள அக்கறையை வெளிப்படுத்துவதாக உள்ளது. அதே போல அரசுப் பணியாளர் சமூகத்தின் அடிமட்டத்தில் வறுமையே ஆயுள் முழுவதும் வாழ்க்கை முறை என்றாகி சமூக நீதிமறுக்கப்பட்டு 99 சதவீதம் பெண்களாக உள்ள சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கும் இன்றைய அரசின் தேர்தல்கால வாக்குறுதிக்கிணங்க குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850ஐ வழங்கி அவர்தம் வாழ்வில் விடியலைத் துவக்கிவைத்திட வேண்டுகிறோம்.

கட்டுரையாளர் :  இ.மாயமலை, மாநில பொதுச் செயலாளர்

;