articles

img

புதுச்சேரி மாநிலத்தின் ஜனநாயக மாண்புகளைப் பாதுகாப்போம்...

கடந்த 07.01. 2021 அன்று புதுச்சேரிஆளுநர் மாளிகை, பாரதி பூங்கா,கடற்கரைச் சாலை, தலைமைச்செயலகம் என அனைத்துப் பகுதிகளிலும் இந்தியத் துணை ராணுவ அணிவகுப்பு. துப்பாக்கி ஏந்தியபடி புதுச்சேரியில் பிரதான வீதிகளில் ராணுவத்தினரின் பாரா. மோடியின்ராணுவம் புதுச்சேரியில் பராக். ஒட்டுமொத்தமாக புதுச்சேரியில் “வொயிட் டவுன்” என்றுஅழைக்கப்பட்ட பகுதி இந்திய ராணுவத்தால் மூன்று அடுக்கு பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஏன் இந்த ராணுவ அணிவகுப்பு?2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சிஅதிகாரத்திற்கு வந்தது. மத்திய அமைச்சராகவும், நாடாளுமன்ற அனுபவம்மிக்க  நாராயணசாமி  தலைமையில் அமைச்சரவை பதவி ஏற்றது.

கண்டதே காட்சி கொண்டதே கோலம்
ஆனால் அதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் பாஜகவின் முதல்வர் வேட்பாளராகஅறிவிக்கப்பட்டு தில்லி மக்களால் நிராகரிக்கப்பட்ட  கிரண்பேடி  புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்படுகிறார். பொறுப்பேற்றவுடன் அரசின் உயர் அதிகாரிகளுடன் சந்திப்பு நடத்துகிறார். உத்தரவுகளைப் பிறப்பிக்கிறார். தனக்குத் தான் யூனியன் பிரதேசத்தில் அதிகாரம் என்கிறார்.முதல்வரும், அமைச்சரவையும் இது அரசியலமைப்புக்கு எதிரானது. ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று எடுத்துச் சொல்கிறார்கள். ஆனால் ஆளுநர் கிரண்பேடி எதையும் கேட்கத் தயாராக இல்லை. நானே சர்வாதிகாரம் படைத்தவர் என்கிறார். சில ஐ.ஏ.எஸ்.  அதிகாரிகளும் ஆமாம் சாமி போடுகின்றனர். மக்கள் உரிமைகள், நலத்திட்டங்கள் காலில்போட்டு மிதிக்கப்படுகின்றன. எந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளும் பின்பற்றப்படவில்லை.

நள்ளிரவில் பதவி ஏற்பு
இதன் உச்சகட்டமாக புதுச்சேரி மக்களால் சட்டமன்ற தேர்தலில் நிராகரிக்கப்பட்ட, பாஜகவேட்பாளர் உள்பட, குற்றப் பின்னணி உள்ளமூன்று பாஜகவினர்  சட்டமன்ற நியமன உறுப்பினர்களாக பதவி அமர்த்தப்படுகின்றனர். பிரதமர் மோடியின் உள்துறை அமைச்சகம் இதை ஆமோதிக்கிறது. நள்ளிரவு 12 மணிக்குஆளுநர் மாளிகையில் பத்திரிகையாளர்களுக்கு கூட தெரியாமல் பதவி ஏற்பு விழா நடந்தது. ஆளுநர் தலைமையில் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படுகிறது.  இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நிகழாத ஜனநாயகப் படுகொலை புதுச்சேரியில் நிகழ்கிறது.

அரிசி கொடுக்க மாட்டேன்: பிடிவாத ஆளுநர்
இந்தியாவில் ரேசன் கடை இல்லாத மாநிலமாக புதுச்சேரியை மாற்றுவேன் என்கிறார் ஆளுநர்.  இலவச அரிசித் திட்டத்தை தடுத்து நிறுத்துகிறார். பணம் தான் கொடுப்பேன் என்கிறார். புதுச்சேரியில் அனைத்துப் பொதுமக்களும் பணம் வேண்டாம், அரிசிதான் வேண்டும் என்கிறார்கள். ஜனநாயக மாதர் சங்கம் நடத்திய சர்வேயும் இதை உறுதிசெய்தது. இதனடிப்படையில் அமைச்சரவை அரிசிதான் தரவேண்டும் என்று முடிவெடுக்கிறது. ஆனால் கோப்பில் கையெழுத்துப் போடாமல்  திருப்பி அனுப்புகிறார்.

முதல்வர் நாராயணசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறார். மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடிதப் போர் நடத்தியது. ஒரு வழியாக அரிசி  போடுவதற்கு முடிவாகிறது. ஆனால் அதிலும் குளறுபடி செய்தனர் ஆளுநரும் அதிகாரிகளும்.  2 வருட காலமாக சம்பளம் இல்லாமல் அவதியுறும் ரேசன் கடைஊழியர்கள். அவர்கள் மூலமாக போட மாட்டோம் என்றனர். அரிசியை விநியோகிக்க ஆசிரியர்களை பயன்படுத்துவோம் என்றனர். புதுச்சேரியில் எக்காலத்திலும் ரேசன் கடைதிறப்பதற்கு அனுமதியில்லை. பொதுவிநியோக முறையை அமல்படுத்த மாட்டோம் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார் ஆளுநர்.

பஞ்சாலைகளுக்கு மூடுவிழா
புதுச்சேரியின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் 3 பஞ்சாலைகள். ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரம். அதை மீண்டும் திறந்து நடத்துவதற்குஅத்தனை முயற்சிகளையும் அமைச்சரவையும் தொழிற் சங்கங்களும் எடுக்கின்றன. ஆனால் ஆளுநர் தொடர்ந்து தடைக்கற்களை உருவாக்கி இறுதியாக தன்னிச்சையாக அதிகாரிகளின் துணையோடு மூடு விழாவிற்கு உத்தரவைப் போடுகிறார்.

மக்கள் நலத்திட்டங்களின் எதிரியாக ஆளுநர்

9200 காலிப்பணியிடங்கள் அரசுத்துறைகளில், அதை நிரப்புவதற்கு கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டால்  திருப்பி அனுப்பப்படுகிறது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வியில் 10 சதவீத இட ஒதுக்கீடுக்கு ஆளுநர் ஒத்துழைக்க மறுப்பு.

 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50சதவீத அரசுக் கோட்டா. ஆளுநர் தனியாருக்கு ஆதரவு.

பாப்ஸ்கோ, பாசிக், கே.வி.கே  போன்றபுதுவை அரசு நிறுவனங்களின் ஊழியர்களுக்கு பல மாதங்களாக வழங்கப்படாத சம்பளத்தை கொடுப்பதற்கான கோப்புகள் ஆளுநரால் மறுக்கப்படுகிறது.

உள்ளாட்சித் தேர்தலை நடத்த அமைச்சரவை நியமிக்கும்  அதிகாரியை ஏற்க மறுக்கிறார் ஆளுநர்.

மத்திய அரசின் கொரோனா நிதி, தானேபுயல் நிவாரண நிதி ஆகியவற்றை பெறுவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை ஆளுநர்.

நிதிப் பற்றாக்குறையால் தவிக்கும் புதுச்சேரி மாநிலத்திற்கு இதுவரை எந்த நிதியையும், மத்திய அரசிடம் இருந்து பெற முயற்சிக்கவில்லை ஆளுநர்.

புதுச்சேரி மாநிலத்திற்கு 26 ஐ.ஏ.எஸ்அதிகாரிகள், 13 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இவர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு பொதுமக்களின் வரிப்பணம் செலவிடப்படுகிறது. அரசின் கஜானா காலியாகிறது.

9000  கடைநிலை ஊழியர்களுக்கு பலமாதங்களாக சம்பளம் இல்லை. அவர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கான கோப்புகளில் கையெழுத்திட கிரண்பேடிக்கு மனமில்லை.

ரூ.3,000 கோடி மதிப்புடைய புதுச்சேரி மின் துறையை தனியார் கார்ப்பரேட்டுக்கு தாரைவார்க்க ஆளுநர் முயற்சிக்கிறார்.

தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு 2500. புதுச்சேரி அமைச்சரவையும் அதைகொடுக்க விரும்புகிறது.  ஆனால் கிரண்பேடியோ 200 ரூபாயை பிச்சையாகப் போடுவேன் என்கிறார்.

முதியோர் பென்சன், விதவை பென்சன்,பெண்கள், குழந்தைகள் நல உதவி போன்றஎந்த சமூக நலத் திட்டங்களையும் செயல்படுத்த அனுமதி இல்லை.

புதுச்சேரி மக்களுக்கான 40க்கும் மேற்பட்ட நலத் திட்டங்களின் கோப்புகள் அனுமதிக்காக காத்துக் கிடக்கின்றன.

இதை எதையும் செய்யாத, செய்ய மனமில்லாத, செய்ய விடாத ஆளுநர் கிரண்பேடி, தனக்குத் தான் ‘சர்வ’ அதிகாரமும் என்கிறார். இந்த அதிகாரத்தால் புதுச்சேரி மக்களுக்கு என்ன பயன்? என்ன பலன்?

ஆளுநர் மாளிகை வாசலில் அமைச்சரவையின் போராட்டம்
இச்சூழ்நிலையில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் ஆதரவுடன் கடந்த ஆண்டு,முதல்வரின் தலைமையில் ஆளுநர் மாளிகைவாசலில் இரவு, பகலாக அமைச்சரவை நெடிய போராட்டத்தை நடத்தியது.ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு போராட்டம் முடிவுக்கு வந்தது.  ஆனால் ஆளுநர்,வேதாளம் முருங்கை மரம் ஏறிய நிலையிலேயே இருந்தார். எந்தவிதப் பலனும் இல்லை, அவர் நடவடிக்கைகளில் எந்தவித மாற்றமும் இல்லை. நலத்திட்டங்கள் எதுவும் மக்களைச் சென்றடையாமல் இருப்பதை ஆளுநர் கவனமாக பார்த்துக் கொள்கிறார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் ஆசீர்வாதங்களும் கிரண்பேடிக்கு உண்டு என்பதை சொல்லத் தேவையில்லை.

ஆர்.எஸ்.எஸ்சின் கூடாரமாய் ஆளுநரின் மாளிகை
புதுச்சேரி கலாச்சாரத் திருவிழா என்றபெயரில் இந்தியா முழுவதிலும் உள்ள  ஆர்.ஏஸ்.ஏஸ், சங் பரிவாரங்கள் புதுச்சேரிஆளுநரின் விருந்தாளிகளாக வருகைபுரிந்தனர்.வரலாறுகளைத் திரிப்பதற்காகவும், வகுப்புவாத வெறுப்புணர்வை விசிறி விடவும் இந்நிகழ்வுகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆளுநர் மாளிகையின் பெருமளவு நிதி தனியார் தொண்டு நிறுவனங்களின் பெயரில்மடைமாற்றம் செய்யப்படுகின்றது. இவ்வாறு புதுச்சேரி மக்களின் அமைதியை சீர்குலைத்து வருகிறது ஆளுநர் கிரண்பேடியின் மாளிகை.

ஆளுநர் மாளிகை முற்றுகை
இந்தப்பிரச்சனைகளுக்கு தீர்வு காண, காங்கிரஸ் கட்சியின் தலைமையில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள், இந்தப் புத்தாண்டின்தொடக்கத்தில் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டன.  முத்தாய்ப்பாக  2021 ஜனவரி 8ஆம் தேதி அன்று கவர்னர் மாளிகையின் முன்பு முற்றுகைப் போராட்டத்தை நடத்துவது என முடிவு செய்தது.இதன் எதிரொலியாகவே ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு என்ற பெயரில் இந்தியதுணை ராணுவப் படைகள் அழைக்கப்படுகின்றன.  இந்த முற்றுகைப் போராட்டத்தை ஒட்டிமாவட்ட ஆட்சித்தலைவர், காவல் துறை உயர் அதிகாரிகள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக்கூட்டினார்கள்.  புதுச்சேரியின்  அமைதிக்கும், சட்டம் ஒழுங்கிற்கும் எந்தவிதமான சீர்குலைவும் நேராமல் போராட்டங்களை நடத்த வேண்டும். ஆளுநர் மாளிகைக்கு 500 மீட்டருக்கு அப்பால்தான் போராட்டத்தை நடத்த வேண்டும்  என்று வலியுறுத்தினர். அரசியல் கட்சித்  தலைவர்களும் பரிசீலிப்பதாகவும், ஒத்துழைப்பு தருவதாகவும் உறுதியளித்தனர்.ஆனால் ஆளுநருக்கு பாதுகாப்பு என்ற பெயரில் மத்திய அரசின் துணை இராணுவப் பிரிவுகள் புதுச்சேரிக்கு வந்திருக்கின்றன. காஷ்மீரில் லடாக் பகுதியில் நடப்பது போன்றும், அந்தமான் தீவு போன்றும் புதுச்சேரியை மாற்ற மத்திய ஆட்சியாளர்கள் துடிக்கிறார்கள். அதனுடைய முன் முஸ்தீபுகள் தான் இத்தகைய நடவடிக்கைகள்.

புதுச்சேரியின்  போராட்ட வரலாறு
புதுச்சேரி மக்களுக்கு ஒருதனி வரலாறு உண்டு. 1978ல் புதுச்சேரி தமிழகத்தோடு இணைக்கப்படும் என்று சொன்ன அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாய், அதை ஆதரித்த அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்ஆகியோரை தங்களது ஒன்றுபட்ட போராட்டங்களினால் பின்வாங்கச் செய்தனர். புதுச்சேரி மக்கள் பிரெஞ்சிந்திய விடுதலைப் போராட்டத்தில் ராணுவத்தை சந்தித்த பஞ்சாலைத் தொழிலாளர்களின் வரலாறு புதுச்சேரிக்கு உண்டு.காங்கிரஸ் ஆட்சியின் மீது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இடதுசாரி கட்சிகளுக்கும் தொழிலாளர்கள் நலன் சார்ந்த, செய்ய வாய்ப்புள்ள திட்டங்களைக் கூடச் செய்யவில்லை என்ற விமர்சனம் உண்டு.ஆனால் புதுச்சேரி மக்களின் உரிமைகள்இம்மாநிலத்தின் ஜனநாயக மாண்புகள் பாதுகாக்கப்பட, மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளுடன் இணைந்து போராடுவோம் என்றஉறுதியோடு புதுச்சேரியில் தொடங்கியிருக்கும் மக்கள் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் களத்தில் நிற்கிறது. ஜனநாயகம் காப்பதற்கான இந்தப் போராட்டத்தில் இந்திய ராணுவத்தை எதிர்கொள்ளவும்  புதுச்சேரி மக்கள் தயாராகஇருக்கிறார்கள். ஆளுநர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் ஓயாது. புதுச்சேரி மக்களின் மீது புதிய யுத்தத்தை தொடங்கியிருக்கும் பாஜக அரசைக் கண்டிக்கிறோம். மத்திய பாஜக அரசு, புதுச்சேரியில் நிலை கொண்டிருக்கும் ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும். புதுச்சேரியின் மக்கள் உரிமைகளை பாதுகாக்கவும், மீட்டெடுக்கவும் அனைத்துப் பகுதி மக்களையும்  அணிதிரள அழைக்கிறோம். புதுச்சேரியின் ஜனநாயக மாண்புகளை பாதுகாப்போம்.

கட்டுரையாளர் : எஸ்.ராமச்சந்திரன், செயற்குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  (மார்க்சிஸ்ட்), புதுச்சேரி.

;