கீழ்வானம் சிவந்தது
“டேய்..தாத்தா...” மீசையை தடவியபடியே திரும்பினார் ரெங்கராஜ்...குனிந்தபடியே சிரித்து மகிழ்ந்த பேச்சியம்மா ஆச்சி..”வேணும்..கிழவனுக்கு..இன்னும் சத்தமா நாலு தடவ டேய்...டேய்...னு வாய்நெறைய கூப்புடுறா...எம்பேராண்டின்னு” மனதார நினைத்துக் கொண்டு....”அடேய் கருவா நாயே...எம் புருஷன இந்த எட்டு ஊர்ல. எவனும் நிமிந்து பாத்து பேசமாட்டானுவ...நேத்து முளச்ச காளான்..என்னலே மருவாதியில்லாம....டேய்ங்கிறவன்?”...பேரனைக் கண்டித்த...பேச்சியைக் கோபத்தோடு ..”ஏலா..ஏம்பேரன் கூப்பிடாம வேற எவன்டி..கூப்பிட முடியும்?...இங்கவாடா..அவகிடக்கா கிழட்டுநாயி”தூக்கி மடியில் வைத்துக்கொண்டார் ரங்கசாமி “என்ன ராசா கூப்பிட்ட?”.என்றபடி ரங்கனின் தலையைச் செல்லமாய் தடவினார் தாத்தா கட்டிய புருஷனின் முகத்தை நிமிர்ந்து பார்த்து பேச துணியாத பேச்சிக்கு ஒரு நிம்மதி... பேரனுக்கு ரெங்கசாமி ராசான்னு பேருவச்சது..ஏன்னா...அவரு வெளிய போன நேரத்திலாயெல்லாம் ..பேரன..”டேய் ரங்கா..நாயே இங்க வாடா....போடா”என்று அழைப்பதில் அப்படி ஒரு சந்தோஷம்...புருஷன் மேல எவ்வளவு பிரியம் இருந்துச்சோ அதைவிட பேரன் மேல பாட்டிக்கு உசிரு.. நாலு பொம்பளப் புள்ளையும்...மூணு ஆம்பளப்புள்ளையும் பெத்து ..வளத்து..கட்டிக்கொடுத்தாச்சு.கடைசிப்பய மாரிமுத்து வீட்டோடயிருந்து விவசாயத்தையும் பெத்தவங்களையும் பாத்துக்கிறான்... அவனோட மகன்தான் ரெங்கன்...மூணாப்பு படிக்கிறான் ஞாயிற்றுக் கிழமை...ரங்கன் விளையாடப் போயிட்டான்..பேச்சி..மொட்டமாடியில துணியக் காயப் போட்டுக்கிட்டு இருந்துச்சு...வெளிய திண்ணையில சாய்வு நாற்காலியில உட்கார்ந்து வெத்தலையை மென்றபடியே அன்றைய பேப்பரைப் புரட்டிக்கொண்டிருந்தார் ரெங்கசாமி தூரத்தில் பெட்டியோடு வருவது மூன்றாவது மகள் மீனாட்சி ..என்பதை உற்றுப்பார்த்து...நிமிர்ந்து உட்கார்ந்தார்... “என்ன...மீனா..எங்க உங்க வீட்டுக்காரரு?...அதான் ..வாத்தியாரு” சத்தம் கேட்டு இறங்கி வந்த பேச்சி மகளைப் பார்த்ததும்...”மீனாட்சி... வாடி...உள்ள...எங்க..அவரு? ரெங்கசாமி...முறைத்தபடி....”முதல்ல உள்ள கூப்பிட்டுப்போ” அப்படியே..அடங்கிய பேச்சி...மகளை உள்ளே அழைத்துக்கொண்டு போனாள்.. கதவை சாத்திவிட்டு உள்ளே வந்த ரெங்கசாமி... என்ன?.எங்க அவரு? பொல..பொல...வென கண்ணீர் வடிய..”அம்மா...இனிமே..அங்க போகமாட்டேன்....குடிச்சுட்டு வந்து தெனமும் அடிக்கிறாம்மா...பிள்ளையில்லையினா..நான் என்ன செய்ய...பீரோவிலையா...வச்சிருக்கேன்..எடுத்துக்குடுக்க..வாடா..ஆஸ்பத்திரிக்குன்னா..வரமாட்டேங்கிறான்....அவனுக்கு இருக்கிற குறை தெரிஞ்சிருமுன்னு பயப்படுறான்” “நாயே....வாயமூடு...உன்னைய படிக்க வச்சு..டீச்சராக்கி...ஒரு வாத்தியாருக்கு இதுக்கா கட்டிக்குடுத்தேன்? அவன்..உன்னைய அடிச்ச உடனே திருப்பி அடிச்சிருக்கனும்.. நேரா சட்டைய புடுச்சு இழுத்துட்டுப்போய் புள்ளை இல்லாமப் போனதுக்கு நீதாண்டா..காரணமுன்னு நிரூபிச்சிட்டு வந்திருக்கனும்...அப்பத்தான் நீ ரங்கராஜன் மக....முதல...போய் அதைச் செஞ்சிட்டு வா...போ...” “என்னங்க...இப்பிடிபேசிறீயளே?இது அடுக்குமா?ஒரு பொம்பளய போயி ஆம்பளைய அடிக்கச் சொல்றீயளே..இது நம்ம பூமாரிக்கே அடுக்குமா?” “ஏய்...கிழட்டு நாயே..நிமிந்து மூஞ்சியப்பாத்து பேச தைரியமில்லாத நீயெல்லாம் எனக்குப் புத்திசொல்ல வந்திட்டியா....வக்காலி கொன்னேபூடுவேன்” “வேணாஞ்சாமி...அவ வாழ்க்கையே கேட்டுப்போகும்யா..போயி நல்ல வார்த்தையா நால பேசி அவள உட்டுட்டு வாயா” “ஏண்டி..கிழட்டு முண்ட.. எனக்கே புத்திசொல்றியா? கொன்றுவேன்னு”பேச்சியை அடிக்க கைய்யை ஓங்கினார் ....ஓங்கிய கையை இறக்க முடியாதபடி பேச்சியின் இடது கை தடுத்து நிறுத்தியிருந்தது... “ஏய்..கிழவா..எத்தனை நாளு என்னைய குடிச்சுட்டு வந்து அடிச்சிருப்ப?.மாசமாயிருக்கப்ப வயித்தில இரக்கமில்லாம மிதிச்சிருக்கையே...பொத்திக்கிட்டு...எல்லாத்தையும் தாங்கீட்டுதான இருந்தேன் ...எங்கப்பன் என்னைய படிக்க வைக்கல....உம் பொன்னமாரி நானும் ஒரு பொம்பள தான? அவளுக்கு ஒரு நாயம்...எனக்கொரு நாயமா....இனி...தொட்ட மருவாதி கெட்டுறும்...சாக்கிறத” விளையாடிவிட்டு உள்ளே நுழைந்த ரெங்கன் “டேய்...தாத்தா..ஆச்சி பாவம்யா” .என்று சொல்லியபடியே உள்ளே ஓடினான்
