articles

img

ஏர்க் கலப்பைகள் புகட்டும் பாடம்...

வெடவெடக்க வைக்கிறது கடுங்குளிர். கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு வெப்பநிலை 10 டிகிரி செல்சியசில் இறங்கி குளிர் நடுக்கம் தருகிறது. வீசும் காற்றில் மிக மோசமாக மாசு படிந்துள்ளது. அதன் தரக்குறியீடு கடந்த4 நாட்களாக ஏ.க்யூ.ஐ. 245, 231, 137, 413 என பதிவாகிறது.

எனினும் தலைநகர் தில்லியின்  சிங்கு மற்றும் திக்ரி உள்ளிட்ட 5 எல்லைப் பகுதிகளும் உழவர்களால் முற்றுகை இடப்படுகின்றன. ஜெய் ஜவான்,ஜெய் கிசான் என போர் வீரர்களை உழவர்களோடு ஒப்பிடும் முழக்கம் உண்டு. பஞ்சாப்,ஹரியானா, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் என பல மாநிலங்களிலிருந்தும் விவசாயிகள் திரள்கின்றனர். ஒருபுறம் கோவிட் 19ன் மூன்றாம் அலை வந்துவிட்டதோ என தில்லியில் தொற்றும் பீதியும் பெருகி வருகிறது. அதன் விஷ ஆலிங்கனத்துக்கு அஞ்சாமல் குழந்தைகளும் வயோதிகர்களும் என விவசாய குடும்பங்கள் தில்லியில்குழுமியுள்ளனர். கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கஆராய்ச்சி செய்வதுபோல் பிரதமர் இடம் பெயர்கிறார். விவசாயிகளின் டிராக்டர்களும் லாரிகளும் ஏன் மாற்றுத் திறனாளிகளான முதிய உழவர்களின் கால்களும் தில்லியை தொடாத வகையில் நெடுஞ்சாலைகளில் குழிகள் பறிக்கப்படுகின்றன. பிரதமரோ வாரணாசியில் புதிய சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறாராம். கோரிக்கைகள் நிறைவேறாமல் வீடு திரும்ப மாட்டோம் என போர்வைகள், பாத்திரங்கள், உணவுப்பொருட்கள், மனதிட்பம் இவற்றோடு இலட்சக்கணக்கில்  விவசாயிகள் எல்லைகளில் திரண்டுள்ளனர். காலம் சென்ற கால்பந்தாட்ட வீரர்  அர்ஜெண்டினாவின் மாரடோனா தான் போட்ட ஒரு கோலை கடவுளின் கையால் போடப்பட்டதாக கூறுவார். நரேந்திர மோடியோ  சாத்தானின் விஸ்வரூபமாக விவசாயிகள் மத்தியில் தோன்றுகிறார்.

விவசாயிக்கு புதுவரையறை 
விலை உறுதி அளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் அவசரச் சட்டம்-2020, விவசாயிகள் விளைபொருள் வாணிகம் மற்றும் வர்த்தக அவசரச்சட்டம் -2020, அத்தியாவசிய பொருள்கள் அவசரச் சட்டத்திருத்தம் - 2020 ஆகிய இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு நலம் பயக்கும் சட்டங்கள் என்று நரேந்திர மோடி கூறுகிறார். சிலர் தாய் மீதும் சிலர் தாரத்தின் மீதும் சத்தியம் செய்வார்கள். மோடியோ கங்கை நதி மீது ஆணையாக பேசுகிறாராம். சுருக்கம் கருதி இந்த சட்டங்களில் சிலவற்றை இங்கு பார்வைப்படுத்துகிறோம். விலை உறுதிஅளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள்அவசரச் சட்டம்-2020 ன் படி விவசாயி என்ற சொல்லுக்கே புது வியாக்கியானம் தரப்படுகிறது. விவசாயிகள் யார் என்பதை திருக்குறள் பின்வருமாறு கூறியது.“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்தொழுதுண்டு பின்செல் பவர்.கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி என்றார் எம்.ஜி.ஆர். 2(f)ன் படி உழவர் உற்பத்தியாளர் குழுவோ விவசாயத்தில் ஈடுபடுவோரோ அல்லது பதிலி தொழிலாளிகளாக அவர்களால் நிறுத்தப்படுவோரோ விவசாயிகளாம். உழவு உற்பத்தியாளர் என்ற இருக்கையில் கார்ப்பரேட் முதலாளிகள் ஜம்மென்று இனி உட்காரலாம். ஒரு தனி நபர் அல்லது ஒரு குழு அல்லது ஒரு நிறுவனம் அல்லது கூட்டு நிறுவனம் விவசாயிகள் என புது வரையறை கூறப்படுகிறது.

இடைத்தரகர்கள் அல்லது மூன்றாம் நபர்கள் இனி உழவுத்தொழிலில் தலையிட முடியாது என மத்தியஅமைச்சர்கள் வாய் கிழிய பேசுகிறார்கள். இந்த சட்டத்தின்2(h),பிரிவு 4(iv), 6 மற்றும் 10 ஆகிய பிரிவுகள் மூன்றாம்தரப்பினரை நவீன தொழில்நுட்ப நிபுணத்துவ பெயர்களில்ஒட்டகச்சிவிங்கி போன்ற கழுத்தை உள்ளே நுழையவிடுகின்றன. 

விழுங்கப்படும் மாநில உரிமைகள்
பிரிவு 2(d) ஊக வணிகத்தை சட்டப்பூர்வமாக்குகிறது. அரிசி, கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்டவை அத்தியாவசியப் பட்டியலிலிருந்து நீக்கப்படுகின்றன. அவற்றை இருப்பு வைப்பதற்கான உச்சவரம்பும் நீக்கப்படுகிறது. இந்த திருத்தம் பெரும் வர்த்தகர்களை, கார்ப்பரேட்டுகளை பொருட்களை திரட்டி பதனப்படுத்தி பத்திரமாக இருப்பு வைக்க அதிகாரம் வழங்குகிறது. அரிசி, பருப்பு, எண்ணெய் என்பவை அத்தியாவசியப் பொருட்கள் தானே. ஏன் பெயரை மாற்றுகிறீர்கள்? ரோஜாவை எந்த பெயரிட்டு அழைத்தாலும் அது ரோஜாதான். பெயரை மாற்றுவதால் அது முள் ஆகி விடாது. கொரோனா பேரிடரில் பெயர் மாற்ற வேண்டிய கட்டாயம் என்ன வந்தது?மேலும் வேளாண்மை குறித்த அதிகாரங்கள் மாநிலப் பட்டியலில் இருந்து மத்தியப் பட்டியலுக்கு மாற்றப்படுகின்றன. கட்டிடத்தின் செங்கற்கள் உருவப்படுகின்றன. அரசியல் சாசனத்தின் ஏழாவது அட்டவணையில் மாநிலப் பட்டியலில் வேளாண்மை தொடர்பான சட்டங்களைஇயற்றும் முழு அதிகாரம் மாநில அரசுக்கே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கூட்டாட்சிக்கு முரணாக மாநில அரசின் அதிகாரங்கள் மோடி அரசின் முதலை வயிற்றில் விழுங்கப்பட்டுள்ளன.

இந்தச் சட்டத்தின் மற்றொரு சதி, ஒப்பந்தங்கள் மீறப்பட்டால் ஆர்.டி.ஓ. விடமோ கலெக்டரிடமோ முறையீடு செய்யலாமாம். கோர்ட்டுக்கு செல்ல வேண்டியது இல்லையாம். கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியில் கூட நீதிமன்ற முறையீடு அனுமதிக்கப்பட்டது. கலெக்டர் என்பவர் யார்? உங்கள் சட்டத்தில் நீங்கள் குறிப்பிடும் மத்தியஸ்த வாரியம் எது? சொல்லப்போனால் இவர்கள் யாரும் நீதிபதிகள் அல்லர். இவர்களுக்கு நீதிபதிகளின் சீருடை இல்லை. இவர்களை நீதிபதிகள் என்று உங்கள் வசதிக்காக நீங்களே கூறிக் கொள்கிறீர்கள். அரசியல் சாசனமே இதனைஏற்காது.

நீதிமன்றம் செல்ல முடியாது
ஒரு மாவட்ட கலெக்டரை அரசியல் கட்சிகளோ அல்லதுதனி நபர்களோ அவர் அறையில் சந்தித்து அந்தரங்க முறையீடு செய்யலாம். நீதிபதிகளிடம் அது நடக்காது. சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்படும் பகிரங்க நீதிமன்ற முறையீடுகள்தான் நீதிமன்றத்தில் செய்ய முடியும்.ஒரு கலெக்டரை தன்னை வந்து சந்திக்கும்படி ஒரு மந்திரி சுற்றுலா மாளிகைக்கு அழைக்க முடியும். நீதிபதியிடம் அந்த சீட்டு செல்லாது. நீதிபதி தன்னை விட உயர்ந்த நீதிபதிக்கு மட்டுமே கட்டுப்பட்டவர். கலெக்டர் போன்றவர்கள் குவாசி ஜூடிசியரியாக (Quasi Judiciary) கருதப்படுகிறார்கள். ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் அநேகமாக இது பொருந்தும். கிழக்கிந்திய கம்பெனியின் வர்த்தகநலனுக்காக ஆங்கிலேய அரசு நிர்வாக மாஜிஸ்டிரேட்டுகளுக்கு நீதித்துறையின் சில அதிகாரங்களை வழங்கியது. எனினும் இந்திய சுதந்திரத்திற்கு பின் இந்த நிலை மாறியது.

டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தலைமையிலான குழு இயற்றிய அரசியல் சாசனத்தின் பிரிவு 50 நீதித்துறை, நிர்வாகம் ஆகியவற்றின் அதிகாரங்களை பிரிவினை செய்தது. ராஜாஜி தமிழக முதலமைச்சராக இருந்த போது அதை உறுதிசெய்தார். எனினும் 2013ல் தமிழக அரசு மீண்டும் ஒரு அரசாணை வெளியிட்டது. அதன்படி காவல்துறை ஆணையருக்கு கூட நிர்வாக மாஜிஸ்டிரேட் அதிகாரம் கொடுக்கப்பட்டது. எனவே மாவட்ட ஆட்சியரோ மத்தியஸ்த வாரியம் உள்ளிட்ட அமைப்புகளோ தோற்றத்தில் நீதித்துறையாகவும் உள்ளடக்கத்தில் நிர்வாகத்துறையாகவுமான அமைப்புகளாகவே பராமரிக்கப்படுகின்றன. 

அதிகாரிகளுக்கு புனிதம் வழங்கும் சட்டம்
விவசாயம் விளைபொருள் வாணிபம் மற்றும் வர்த்தக அவசரச் சட்டம் 2020 அத்தியாயம் 5, பிரிவு 13ம் விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் அவசரச் சட்டம் 2020 அத்தியாயம் 4, பிரிவு 18ம் விசாரணை அதிகாரிகளுக்கு புனிதமும் பரிசுத்தமும்வழங்குகின்றன.  முறையீடு செய்வதற்கான ஒரு பிச்சைக்கார உரிமையை கூட இச்சட்டங்கள் பிடுங்குகின்றன.சட்டங்கள் கறாராகும் போது நடக்கப் போவது யாது? கொள்முதலை அரசு செய்யாது, விநியோகத்தை அரசு செய்யாது, உணவுக் கழகங்களும் தொடர்ந்து ரேசன் கடைகளும் மூடப்பட போகின்றன.மன்கி பாத் வானொலி உரையில் நரேந்திர மோடி மராட்டியத்தின் ஜிதேந்திர போயிகி, ஹரியானாவின் வீரேந்திர யாதவ் என பலன் அடைந்தோராக சிலரை சான்று காட்டுகிறார். நெல், வாழை, கரும்பு விவசாயிகளில் எங்கள் கிராமங்களில் பாதிக்கப்பட்டோர் ஆயிரம் ஆயிரம் உண்டு மோடி அவர்களே. தேவைப்பட்டால் பட்டியல் வெளியிடுவோம்.

கொரோனா காலத்திலும்  கூடுதல் உற்பத்தி...
கொரானா தொற்றுக்கிடையிலும் இந்தியாவின் முதுகெலும்பை நிமிர்த்திய தொழில் விவசாயம் மட்டும்தான். விவசாயிகளின் பத்து விரல்களும் உழைத்து விவசாய உற்பத்தியை பெருக்கின. விவசாயிகளுக்கு நலம் தரப்போவதாக கூறுகிறீர்கள். நீங்கள் பூக்களை நசுக்கி வண்ண வண்ண தட்டான் பூச்சிகளை பிடித்து சிறகைப் பிடுங்கி உயிரைப் பறிக்கிறீர்கள். விவசாயிகளோ தேள்களும் பூரானும் தீண்டிய விஷத்தோடு, இலைகளில் பரிமாறஅன்னத்தை உற்பத்தி செய்கிறார்கள். இந்த ஆண்டு 19-10-2020 மட்டும் நாடு முழுவதும் நெல் கொள்முதல் 98.19 லட்சம் டன் கூடுதலாகி உள்ளது. அதாவது 22 சதவீதம் உயர்வு ஏற்பட்டுள்ளது.பாஞ்சால பூமி வழிகாட்டுகிறது. பகத்சிங் காலத்திலிருந்தே அநீதிகளை எதிர்ப்பதில் பஞ்சாப் முன்னணியில் நிற்கும் மாநிலம் ஆகும். இந்திய விடுதலைப் போராட்டத்தில்பிரிட்டன் 121 பேருக்கு தூக்கு தண்டனை தந்தது. அதில் 93 பேர் சீக்கியர். இதே காலத்தில் ஆயுள்தண்டனை பெற்றது2646 பேர். அதில் 2147 பேர் சீக்கியர்.  1840களில் இறுதியாக வீழ்த்தப்படும் முன் சீக்கியர்கள் 11 முறை ஆங்கில படையை தோற்கடித்தனர். 

மோடியின் கெழுதகை நண்பர் முகேஷ் அம்பானியின் மும்பை அரண்மனையில் மூன்று ஹெலிபேடுகள், 128 கார் நிறுத்தும் தளங்கள் ஆகியவற்றை அமைக்க கடற்படை மற்றும் சுற்றுச் சூழல் அமைப்புகளின் எதிர்ப்புக்கிடையில் அனுமதி தரப்பட்டது. தில்லியில் விவசாயிகள் போராடக் கூட இடம் மறுக்கப்படுகிறது.விவசாயத்தின் கூரைகளில் வெடிகுண்டு வீசப்படும் போது ஏர்க்கலப்பை பிடித்த விவசாயிகள் வாழ்வதற்காக சாகத் தயாராகி விட்டனர்.

==வெ.ஜீவகுமார்==

 

;