articles

img

அவர்கள் சொல்வதுதான் விலை.... முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பதில் - 2

...நேற்றைய தொடர்ச்சி...

சந்தேகம் கூட சட்டத்திற்கு வரவில்லை. இந்திய விவசாயத்தை கார்ப்பரேட்கள் கபளீகரம் செய்துவிடுவார்கள் என்று நாம் சொல்வது காழ்ப்புணர்ச்சியில் அல்ல! அத்தனையும் உண்மை.

திருட்டுப் பழி சுமத்திய பெப்சி கம்பெனி
அடுத்து, ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளின் படி பொருட்களை கொடுத்தால் தான் ஒப்புக் கொண்ட விலையை கொடுப்பார்கள். அது சாத்தியமா? எந்ததேதியில் பொருளைக் கொடுப்பதாக ஒப்புக் கொண்டிருக்கிறோமோ அந்த குறிப்பிட்ட தேதியில் கொடுக்க வேண்டும். இயந்திரங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்கிற பொருளையே குறித்த தேதியில் தருவதில் பலவிதமான இடைஞ்சல்கள், எதிர்பாராத தாமதங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இயற்கையை நம்பி செய்யும் வேளாண்மையில் குறித்த தேதியில் தருவது எப்படி சாத்தியமாகும்?

இரண்டாவது, பொருளின் தனித்த இயல்பு. உதாரணத்திற்கு பெப்சி கம்பெனி உருளைக்கிழங்கில் சிப்ஸ் தயாரித்து லேஸ் (Lays) என்ற பெயரில் விற்பனைசெய்வதை அறிவீர்கள். மிகவும் மெலிதாகவும்,பெரிதாகவும் (வட்டமாக) இருப்பதற்கு எங்கள் உருளைக்கிழங்கு தான் காரணம் என்று உருளைக்கிழங்கு விதையை அவர்களே விவசாயிகளிடம் கொடுத்து விளைவித்து கிலோ ரூ.18 என்று வாங்கிக் கொள்கிறார்கள். அந்த மெலிதான தன்மை, சுவை அந்த உருளைக்கிழங்கின் தனித்த இயல்பு. அதுபோல் இல்லாமலோ, உருண்டையாக இல்லாமல் சற்றுநீளமாகவோ வந்தால் அது ஒப்பந்தத்தை மீறிய செயல். அடுத்து தரம், பிறகு ஒரு ஏக்கரில் எத்தனை கிலோ அல்லது டன் தருவதாக ஏற்றுக் கொண்டிருக்கிறோமோ அந்த அளவு, இவையனைத்தையும் நிறைவேற்றினால் விலை உத்தரவாதம் என்ற அந்த நிபந்தனை பூர்த்தியாகும். ஒப்புக் கொண்ட விலையை தருவார்கள். இல்லையென்றால் ஒப்பந்தப்படி நடந்து கொள்ளாத குற்றத்திற்காக விவசாயி தண்டம் கட்ட வேண்டும்.
பன்னாட்டு நிறுவனங்களிடம் வழக்கு நடத்தி விவசாயிகளால் வெற்றிபெற முடியுமா? அவர்களிடமுள்ள திறமையான வழக்கறிஞர்களுக்கு இணையாக நமதுவிவசாயிகளால் வழக்கறிஞர்களை அமர்த்த முடியுமா?

இதே பெப்சி கம்பெனி 2019-ஆம் ஆண்டு அந்த கம்பெனியின் உருளைக் கிழங்கு விதையை திருடிவிவசாயிகள் பயிரிட்டு விட்டார்கள் என்று கூறி கோடிக்கணக்கில் இழப்பீடு கேட்டு வழக்குப் போட்டதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். இந்தப் பிரச்சனையில், தமிழ்நாடுவிவசாயிகள் சங்கம் உட்பட பல்வேறு விவசாய சங்கங்களும் பன்னாட்டு நிறுவனங்களின் படையெடுப்புக்கு எதிரான போராட்டமாக முன்னெடுத்ததையொட்டி பிறகு மத்தியஅரசு தலையிட்டு வழக்கை வாபஸ் பெற வைத்தது. இந்தியவிவசாயிகளுக்கு கிடைத்தது திருட்டுப்பட்டம், வழக்கு. இந்தநிலை தொடர வேண்டுமா? எனவேதான், ஒப்பந்த சாகுபடிஎன்பது நம் விரலைக்கொண்டே நமது கண்ணை குத்தும் செயல் என்பதை உணர வேண்டும்.

கரும்பு விவசாயிகள் கதி
நாடு முழுவதும் கரும்பு விவசாயிகள் ஒப்பந்த சாகுபடியில் தான் ஈடுபட்டுள்ளனர். சர்க்கரை கட்டுப்பாட்டுச் சட்டம் 1966ன் படி கரும்பு விவசாயிகள் ஆலைகளுக்கு கரும்பு கொடுக்கிறார்கள். ஆலை நிர்வாகம் எப்போது விரும்புகிறதோ அப்போது தான் கரும்பை வெட்ட முடியும். அது பதினைந்து மாதங்களானாலும்! காலதாமதத்தால் ஏற்படும் இழப்பை, கூடுதல் செலவை எவரும் ஏற்க மாட்டார்கள். எடையளவு, சர்க்கரை சத்து குறித்த விபரங்கள்ஆலை நிர்வாகம் சொல்வதுதான். கரும்பு அனுப்பிய 15 நாட்களில் பணத்தை கொடுக்க வேண்டும்; இல்லையென்றால் 15 சதவீத வட்டியுடன் பணத்தை கொடுக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. இதுவரை இந்தியாவில் எங்காவது கரும்பு விவசாயிகள் 15 நாட்களில் பணம் பெற்றதாகவோ, இல்லை 15 சதவீத வட்டியுடன் பாக்கியைப் பெற்றதாகவோ வரலாறு உண்டா? ஆண்டு தவறாமல் பாக்கி கேட்டு விவசாயிகள் போராடிக் கொண்டு தானே இருக்கிறார்கள். அரசால் முதலாளிகளின் முடியைக் கூட தொட முடியவில்லையே! வருவாய் பறிமுதல்சட்டப்படி நடவடிக்கை எடுக்க அதிகாரம் இருந்தும் எந்த முதலாளியின் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லையே! விவசாயிகள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை. முதலாளிகள் மனம் கோணாமல் நடந்து கொள்வது என்பது தானே ஆட்சியாளர்களின் கொள்கையாக இருக்கிறது.

உள்நாட்டில், அதுவும் மாநிலத்திற்குள் இருக்கும் முதலாளிகள் மீதே அரசு நடவடிக்கை எடுக்க தயங்கிக் கொண்டுள்ள நிலையில், பன்னாட்டு நிறுவனங்களை கண்டு பயந்துகொண்டல்லவா இருப்பார்கள்? எனவே, இந்தச் சட்டத்தால் ஏற்கனவே வேளாண் விளைபொருள் விற்பனையில் விவசாயிகளுக்கு இருக்கும் குறைந்தபட்ச வாய்ப்பும், பாதுகாப்பும் பாதிக்கப்படும். விவசாயிகளை நிறுவனங்களிடம் ஒப்படைத்துவிட்டு அரசு வேடிக்கை பார்க்கும்.இந்த சட்டம், நிறுவனங்களுக்கும், அரசுக்கும் சாதகமானதேதவிர விவசாயிகளுக்கு மிக மிக மிக பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. எனவே தான் இச்சட்டத்தை திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்துகிறோம்.

இப்போது இயற்கைச் சீற்றங்களால் வெள்ளம், வறட்சி, பூச்சிதாக்குதல் போன்றவற்றால் பயிர்கள் பாதிக்கப்படும்போது மத்திய – மாநில அரசுகளிடம் போராடி ஓரளவாவது நிவாரணத்தை விவசாயிகள் பெறுகிறார்கள். இந்தச்சட்டங்கள் அமலுக்கு வந்தால், இத்தகைய நிவாரண உதவிகள் தொடருமா? நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்து கொண்டு நிறுவனங்களுக்காக பயிரிடும் விவசாயிகளுக்கு அரசு எதற்காக நிவாரணம் கொடுக்க வேண்டும் என்ற கேள்வி எழும். வெள்ளம், வறட்சி, பூச்சி தாக்குதல், புயல், இயற்கைப் பேரழிவு மோசமான பருவநிலை, பூமி அதிர்ச்சி, நோய்ப்பரவல் போன்றவற்றால் பயிர்கள் பாதிக்கப்பட்டால் ஒப்பந்தம் கட்டுப்படுத்தாது என்று சட்டம் குறிப்பிடுகிறதே தவிர, ஒரு பருவ விவசாயம் அழிந்து போவதால் விவசாயிகளின் குடும்பத்திற்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்டுவது குறித்து சட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

யாருக்கு விடுதலை?
இரண்டாவது சட்டம், வேளாண் விளை பொருள் விற்பனை மற்றும் ஊக்குவிப்புச் சட்டம். இது குறித்து ஆட்சியாளர்களும், ஆதரிப்பவர்களும் என்ன சொல்கிறார்கள்? இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் உள்ள விவசாயி இந்தியாவின் எந்தவொரு மூலைக்கும் தனது பொருளை கொண்டு சென்று எவரிடம் அதிக விலை கிடைக்கிறதோ அவரிடம் விற்கலாம். 50 ஆண்டுகள் கிடைக்காத விடுதலையை இந்த சட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு நாங்கள்வழங்கியிருக்கிறோம். இந்தச் சட்டத்தின் மூலம் இடைத்தரகர்களை ஒழித்து விட்டோம். தனியார்கள் வேளாண் விளைபொருள் விற்பனை சந்தையை ஏற்படுத்துவார்கள். அரசின்வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடமும் இருக்கும்.எங்கு அதிக விலை கிடைக்கிறதோ அங்கு விற்றுக் கொள்ளலாம் என்று மிகுந்த புளகாங்கிதத்தோடு அளந்துவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். தாராள வர்த்தகம் என்பது உலகின்எந்த மூலையில் உள்ள பொருளையும் வேறு எந்த மூலைக்கும் கொண்டு செல்ல முடியும் என்பது தான்.

நமது கேள்வி! ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கோ, அல்லது மாநிலத்திற்கோ வேளாண் விளை பொருட்களை கொண்டு சென்று விற்பதில் சட்டப்படிஇப்போது என்ன தடை? எந்த தடைகளை அகற்றி விவசாயிகளுக்கு நீங்கள் விடுதலையை பெற்றுத் தந்திருக்கிறீர்கள்? எனவே, ஏற்கனவே தடையேதும் இல்லை. ஆனால்விவசாயிகள் யாரும் தங்களுடைய பொருட்களை மாநிலம்விட்டு மாநிலம் கொண்டு சென்று விற்பதில்லை என்பதேஉண்மை! ஏனென்றால் நாட்டில் உள்ள மொத்த விவசாயிகளில் 86 சதவீதம் பேர் சிறு-குறு விவசாயிகள். அரைஏக்கர் முதல் ஐந்து ஏக்கர் வரை பயிர் செய்பவர்கள். இவர்களில் சிறு பகுதியினர் அரசு கொள்முதல் நிலையங்களிலும், மற்றொரு சிறு பகுதியினர் வேளாண் ஒருங்குமுறை விற்பனைக் கூடங்களிலும் பெரும்பாலானோர் சிறுவியாபாரிகளிடம் தான் பொருட்களை விற்பனை செய்கின்றனர்.மற்றொன்று, அரசு நிதி நிறுவனங்களில் விவசாயத்திற்கு கடன் கிடைக்காத நிலையில், இந்த வியாபாரிகளிடம் முன்பணம் பெற்றே விவசாயப் பணிகளை மேற்கொள்கின்றனர்.

குடும்பத்தில் ஏற்படும் அவசரச் செலவுகளுக்கும் இவர்களிடமே கடன் பெறுகின்றனர். இந்த நிலையில் மகசூலை அவர்களிடம் கொடுப்பதைத்தவிர விவசாயிகளுக்கு வேறு வழியில்லை. சொல்லப்போனால், பெரிய வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் இடையில் இந்த சிறு வியாபாரிகள் அல்லது தரகர்கள்தான் பாலமாக செயல்பட்டு வருகின்றனர். இதைத்தான் ஒழித்துவிட்டோம் என்று இப்போது மத்திய அரசு சொல்கிறது. சரி! இவர்களை ஒழித்துவிட்டு பதிலாக அந்த இடத்தில் யாரைக் கொண்டுவந்து நிறுத்தப்போகிறீர்கள். பெரும் கார்ப்பரேட் கம்பெனிகளின் ஏஜெண்டுகளைத்தானே? தெரியாத பிசாசை விட தெரிஞ்ச பேய் நல்ல பேய் என்று ஒரு சொலவடை உண்டு! அது தான் தற்போது நினைவுக்கு வருகிறது. இணைய வழி வர்த்தகத்தை ஊக்குவிக்கப்போகிறோம் என்கிறார்கள். பொருளை வாங்குபவன் யாரென்று பார்க்கமுடியாது. விலை பேசுகிறவனுக்குத்தான் பொருள் போகிறது என்பதற்கு உத்தரவாதமில்லை. யாருக்காகவோ யாரோ விலை பேசுவான். பொருள் அனுப்பி மூன்று நாட்களுக்குள் விவசாயிகளுக்கு பணத்தைக் கொடுத்துவிட வேண்டும். இல்லையென்றால், புகார், வழக்கு நீதிமன்றம் இத்தியாதி தான். பெரும் நிறுவனங்களிடம் விவசாயிகளால் விலை பேச முடியுமா? நமது தாலுகாவில் உள்ள வியாபாரிகளே தங்களுக்குள் கூடிப் பேசிக்கொண்டு, இன்ன விலைக்குத்தான் வாங்குவோம் என்று அறுதியிட்டுச் சொல்லும் போது, அடிமாட்டு விலைஎன்று தெரிந்தே விவசாயிகள் பொருளை விற்பனை செய்கிறார்கள். இந்த நிலையில், பன்னாட்டு நிறுவனங்
கள் தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு அடிமாட்டு விலைக்கு வாங்கி கொள்ளை லாபம் ஈட்ட பார்ப்பார்களா? அல்லது பாவம் விவசாயிகள் கஷ்டப்பட்டு பொருளை உற்பத்தி செய்திருக்கிறார்கள். எனவே, விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும் வகையில் விலையைத் தீர்மானிப்போம் என்று நினைப்பார்களா?

பகற்கொள்ளை தடுக்கப்படுமா?
கடந்த பருவத்தில் கொடைக்கானலில் விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ காப்பிக் கொட்டை 180 ரூபாய்க்கு நிறுவனங்கள் வாங்கின. நெஸ்லே காபி நிறுவனம் ஒரு கிலோ காபி தூள் 11299 ரூபாய்க்கு என்றும், அமேசான் மூலம்வாங்கினால் 42 சதவீதம் கழிவு போக 6699 ரூபாய் என்றும்நுகர்வோருக்கு விற்பனை செய்கிறது. ஆகவே, முதலாளிகளைப் பொருத்தவரை லாபம்; மேலும் லாபம், மேலும் கொள்ளை லாபம் என்று தான் செயல்படுவார்களே தவிரஉற்பத்தி செய்யும் விவசாயிகளைப் பற்றியோ, வாங்கிச்சாப்பிடும் மக்களைப் பற்றியோ சிறிதளவும் கவலைப்படமாட்டார்கள். இந்த புதிய சட்டங்கள் இத்தகைய பகற்கொள்ளையைத் தடுத்து நிறுத்தப்போகிறதா?

அரசால் நடத்தப்படும் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள், கொள்முதல் நிலையங்களில் ஏராளமான குறைபாடுகள், ஒழுங்கீனங்கள் இருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. குறைபாடுகளை சரிசெய்து மேம்படுத்தி சிறந்த சந்தையாக மாற்றுவது தானே அரசு செய்ய வேண்டிய வேலை. மாறாக இதற்கு மாற்று தனியார் சந்தையா? என்பது தான் நமது கேள்வி. உதாரணத்திற்கு, அரசு பள்ளிக்கூடத்திற்கும், தனியார் பள்ளிக்கூடத்திற்கும் ஒப்பிட்டால் கட்டமைப்பு வசதிகளில் பெருத்த வேறுபாடு உள்ளது. அரசுப்பள்ளிக்கூடம் படுமோசமாக வைத்திருப்பதற்கு யார் காரணம்? அரசு தானே? இப்படி வைத்திருப்பதன் மூலம் தனியார் பள்ளிகள் வளர்வதற்கு காரணம் அரசுதானே. இந்தப் பள்ளிகளை நடத்துவதும் அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள்தானே! இதே நிலைமைதான் அரசு சந்தை, தனியார் சந்தையிலும் நடக்கும். பிறகு அரசுப்பள்ளிகளுக்கு போதுமான எண்ணிக்கையில் மாணவர்கள்சேர்க்கை இல்லை என்று மூடுவிழா நடத்துவதைப் போல,அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூடப்பட்டுமுழுக்கவும் தனியார் சந்தைகளை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்படும். பிறகென்ன! அவர்கள் சொன்னதுதான் விலை. வைத்ததுதான் சட்டம் என்ற நிலை ஏற்படும்.தனியார் சந்தையில் விவசாயிகளுக்கு பிரச்சனை என்றால் அரசு தலையிடுமா? அதற்கு ஏதாவது சட்டத்தில்இடமிருக்கிறதா என்றால் இல்லை. அரசு கொள்முதல் செய்யாது! குறைந்தபட்ச ஆதரவு விலையும் தீர்மானிக்காது. தனியார் வியாபாரிகளை மட்டும்தான் விவசாயிகள் நம்பி இருக்க வேண்டுமென்றால் எப்படி அது விவசாயிகளுக்குச்  சாதகமாக இருக்க முடியும். விலை கட்டுப்படியாகவில்லையென்றால், விற்க வேண்டாமே என்று சொல்வதுசுலபம். ஆனால் அதை சேமித்து வைப்பதற்கு குடோன்வசதியோ, குளிர்பதனக் கிடங்கு வசதியோ இல்லாத நிலையில், வாங்கிய கடனை உடனடியாக திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ள விவசாயிகள் எப்படி விற்காமல் வைத்திருக்க முடியும்.உதாரணத்திற்கு, காவிரி டெல்டா மாவட்டங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் சாலையோரங்களில் வாரக்கணக்கில் கொட்டிக் கிடக்கிறது.

உடனடியாக அரசு கொள்முதல் செய்யாததால் மழையில் நனைந்து வீணாகிக் கொண்டிருக்கிறது. இதைப் பயன்படுத்தி தனியார் வியாபாரிகள் அரசு தீர்மானித்துள்ள விலையை விட 600 முதல் 700 ரூபாய் வரை குறைத்து நெல்லை வாங்கிச் செல்கின்றனர். இதற்குத் தீர்வு என்னவாக இருக்க முடியும்? விவசாயிகள் விற்க விரும்பும் அனைத்து நெல்லையும் அரசு கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்வது தானே நிரந்தரத் தீர்வாக இருக்கும். தனியார் சந்தை எப்படி தீர்வாக இருக்க முடியும்?இச்சட்டப்படி, பேசியபடி பணம் தரவில்லை என்றாலும் பொருட்களைத் தரவில்லை என்றாலும் 25 ஆயிரத்திற்குகுறையாமல் 5 லட்சம் வரை அபராதம் விதிக்கலாம். குறிப்பிட்ட தேதிக்குள் அபராதக் கட்டணத்தைச் செலுத்தவில்லையென்றால் ஒவ்வொரு நாளைக்கும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். 

இணைய வழி வர்த்தகத்தில் பிரச்சனை ஏற்பட்டால் 50 ஆயிரம் முதல் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கலாம். குறிப்பிட்ட தேதிக்குள் அபராதத்தை செலுத்தவில்லை என்றால் ஒவ்வொரு நாளைக்கும் பத்தாயிரம் அபராதம் கட்ட வேண்டும் என்கிறது. இப்படி அபராதம் செலுத்தி யாராவது விவசாயம் செய்ய முடியுமா அல்லது வியாபாரம்தான் செய்ய முடியுமா? சந்தைக்குள் செல்வதற்கான வரிரத்து செய்யப்பட்டிருப்பதை பெரும் வரப் பிரசாதமாக சித்தரிக்கிறார்கள். குறைந்தபட்ச விலை கூட உத்தரவாதமில்லாத நிலையில் நுழைவு வரி ரத்தால் விவசாயிகளுக்கு என்ன பெரிய பலன்? மாநில அரசுகளுக்கான வருவாய் நட்டம் என்பது கூடுதல் செய்தி!

எது அத்தியாவசியப் பொருள்?
மூன்றாவது சட்டம், அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020. ஏற்கனவே, உள்ள அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955ல் தான் இப்போது திருத்தம் கொண்டு வந்திருக்கிறார்கள். 55ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்ததன் நோக்கம், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்கள் தட்டுப்பாடின்றி அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். குறிப்பிட்ட அளவுக்கு மேல் வியாபாரிகள் வைத்திருந்தால் அது பதுக்கல் என்று கூறி வழக்குப் போட்டு கைது செய்வதற்கு இச்சட்டத்தில் வழிவகை இருந்தது.தற்போது, அரிசி, கோதுமை போன்ற உணவு தானியங்கள், பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பொருட்கள் அத்தியாவசியப் பொருட்கள் அல்ல என்றும், இப்பொருட்களை யார், எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கி, சேமித்து வைத்துக் கொள்ளலாம் (பதுக்கல் அல்ல). எவ்வளவு காலத்திற்கு வேண்டுமானாலும் வைத்திருந்து, விருப்பப்பட்ட போது விற்றுக் கொள்ளலாம் என்று வர்த்தகர்களுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் “சுதந்திர வர்த்தகம்” என்றவாய்ப்பை வழங்கியிருக்கிறார்கள். நமது கேள்வி, இதெல்லாம் அத்தியாவசியப் பொருட்கள் இல்லையென்றால் வேறு எது அத்தியாவசியப் பொருள்? பசிக்கு மாற்று உணவுதான். உணவைத்தவிர வேறு எதுவுமில்லை. உணவு இல்லையென்றால் பட்டினி கிடந்து சாகத்தான் வேண்டும். உணவுக்கான உரிமை என்பது ஒவ்வொரு மனிதருக்கும் மறுக்க முடியாத உரிமையாகும்.

இந்த உரிமை வாழ்வதற்கான உரிமை மட்டுமல்ல, மனித உரிமைகளிலேயே மையமானதாகும். உணவுப் பாதுகாப்பு என்பதை ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு இவ்வாறு வரையறுத்துள்ளது. அதாவது,“ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை நடத்துவதற்கு அனைத்துமக்களுக்கும்,அனைத்து நேரங்களிலும் தேவையான உணவு கிடைப்பதற்கு வெளிப்படையான மற்றும் பொருளாதார ரீதியான வாய்ப்பு என்பதே உணவுப்பாதுகாப்பு”. ஆனால் இந்தியாவில் என்ன நிலைமை? 100 பெண்களில் 70 பேர் ஊட்டச்சத்துணவின்மை நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். குழந்தைகளில் ஒவ்வொரு இரண்டாவது குழந்தையும் ஊட்டச்சத்துணவின்மையால் பாதிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய ஒரு ஆய்வில் கிராமப்புறங்களில் வாழும் மக்களில் 76 சதவீதம் பேர் ஊட்டச்சத்துக்குரிய உணவை பெற முடியாமல் உள்ளனர் என்றும், 52 கோடி பேர் ஊட்டச்சத்துணவின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கிறது.

===பெ.சண்முகம்===

பொதுச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

தொடரும்...

;