articles

img

அன்பின் பால்.... (கோவில்பட்டி பால்வண்ணம் தொடர்பான கட்டுரைத் தொகுப்பு)

தமது அக்காள் மகன் கே.பி. பாலச்சந்தர் எனும் அற்புதமான படைப்பாளியை ஜூன் 2011ல் பறிகொடுத்த போதே தோழர் பால் வண்ணம் மிகவும் தளர்ந்து விட்டிருந்தார். அக்காள் மகளைத் திருமணம் முடித்தபிறகு, அவருக்கு பாலச்சந்தர் மைத்துனன் உறவும் கூட. மிக நெருக்கமான இயக்கத் தோழன் அவருக்கு. அத்தனை கொண்டாடுவார் பாலச்சந்தரை. கரகரத்த குரல், மூக்குக் கண்ணாடியை ஊடுருவிப் பாயும் புன்னகை தோய்ந்த தோழமைப் பார்வை, பளிச்சென்ற இலக்கிய பரிச்சயம், இலேசான நகைச்சுவை இழையோடும் நையாண்டிப் பேச்சு. கெடுபிடி மிக்கசைவ ஆன்மீகக் குடும்பச் சூழலிலிருந்து (நெற்றியில் நீறு பூசாமப் போய் உட்கார்ந்தா ஆச்சி சோறு வைக்க மாட்டா....என்பார் பால் வண்ணம்) தெறித்து இடது சாரி கருத்தியல் பக்கம் வேகமாகத் தம்மை வளர்த்தெடுத்துக் கொண்ட பாலச்சந்தருக்கு ஞான ஆசிரியராக பால் வண்ணம் இருந்திருப்பார் என்பது என்ஊகம். நிறுத்தாது பேசிக் கொண்டே இருந்தார் பால் வண்ணம், பாலச்சந்தர் மறைந்த அன்று. 

அடுத்து பால் வண்ணம்  அப்படி ஓயாதுபேசிக் கொண்டிருந்தது, தமது ஆருயிர் வாழ்க்கைத் துணையை இழந்த அன்று.  பெரும்பகுதி வாழ்க்கை கரைந்து போயிருந்தமெழுகுத் திரி போல் தெரிந்தார்.  அன்று, பள்ளிக்கரணை வீட்டில் கீழ்ப்பகுதி இஸ்லாமிய குடும்பத்துச் சின்னங்சிறுசுகள் கூடத் தங்களது நெருங்கிய உறவைப் பறிகொடுத்த சோகத்தில் இருக்க, பால் வண்ணத்தின்  மறைவு இப்போது அந்தக் குழந்தைகளை இன்னும் கூட அதிகத் துயரத்தில் ஆழ்த்தி இருக்கும். அங்கிருந்து வீடு காலி செய்துகொண்டு மகள் வீட்டுக்கு அவர் குடி பெயர்ந்த அடுத்த சில நாட்களில் அவரைப் பார்க்கச் சென்றபோது, தாத்தா தாத்தா என்று உருகி மருகிப் பார்த்துவிட்டுப் போனான், இட்லி மாவுகொடுக்க வந்து சென்ற அந்தக் குடும்பத்துப் பையன் ஒருவன். 
இன்னும் நிறைய பேருக்காக வாழ வேண்டிய அளவு வாழ்க்கை அவருக்குத் தேவைப்பட்டது. முரட்டுப் பாசம் பெருகும்அந்தக் கண்களில் குறும்பு மறையாதிருக்கும். சமரசமற்ற கொள்கைப் பிடிப்பு, தோழமைக்காக மறைத்துக் கொள்ளாத நேரிய விமர்சனம்,முரட்டு பிடிவாதமான கோட்பாடுகள், மறவாதவரலாற்று அறிவின் வழி எதிர்கால அரசியல்குறித்த தெளிவான கருத்துகள் கூற வல்ல திண்மை,  மிக்கொழுகும் இலக்கிய வாசம், அசாத்திய நெஞ்சுரம் இவற்றையெல்லாம் குழைத்த தூரிகையை வைத்துத் தீட்டுங்கள், பால் வண்ணத்தின் அசல் முகம் வரைந்து கிடைக்கும்.பாரத ஸ்டேட் வங்கியின் தோழன் தான் அவர் என்றாலும், மார்க்சிஸ்ட் இயக்க வாசனைபூத்த வங்கி ஊழியர் கூட்டம் ஒன்றில் தான் அவரை எண்பதுகளில் முதலில் பார்த்தது. வெள்ளைச் சட்டை, வேட்டி, ஒரு ஜோல்னாப்பை. தொன்னை நெய்க்கு ஆதாரமா, நெய் தொன்னைக்கு ஆதாரமா என்று தத்துவார்த்தக் கேள்வி அந்நாட்களில் கேட்கப்படுவதுண்டு. பால் வண்ணத்திற்கு ஜோல்னாப்பை தான் ஆதாரம், வேரென அந்தப் பை அவரை எப்போதும் தாங்கி இருக்க, அதில் தான் வீழ்ந்துவிடாதிருந்தவர் அவர். கொள்ளை கொள்ளையாக புத்தகங்கள், ஒவ்வொரு முறையும் புத்தம் புதிதாய்.வாங்குகிற ஆட்களாகப் பார்த்து எடுத்துக்கொடுப்பார், சில்லறையை அத்தனை எதிர்பாராத தொடர் புத்தக விற்பனையாளராக இருந்தார், நடமாடிக் கொண்டிருந்த காலம்முழுக்க.  சிலவற்றை எத்தனை முயன்றாலும் ஆட்டைய போட முடியாதபடி திரும்ப எடுத்து செருகிக் கொண்டு விடுவார், வேற காப்பி இல்ல, அப்புறம் கொடுக்கிறேன் என்று சொல்லி விடுவார். 

வங்கி ஊழியர் மாநாடு என்று அழைப்பிதழ்பார்த்ததும், வாசலில் புத்தகக் கடை போடவேண்டும் என்று தீர்மானமாக நிர்வாகிகளிடம் தெரிவிப்பார். பாரதி புத்தகாலயத்தின் நூல்கள் ஒரு பக்கம், பேங்க் ஒர்க்கர்ஸ் யூனிட்டி பத்திரிகையின் பழம் இதழ்கள் வசீகரமாக இன்னொரு பக்கம் வைத்துக் கொண்டு சந்தா புத்தகத்தில் ரசீது போட்டுக் கொண்டிருப்பார். விருப்ப ஓய்வில் வங்கிப்பணி நிறைவு செய்துவிட்டு, சென்னை மாநகருக்குக் குடி பெயர்ந்து விட்டிருந்தாலும், ‘ஊர் வந்து சேர்ந்தேன் என்றன் உளம் வந்து சேரக் காணேன் ஆர் வந்து சொலினும் கேளேன்’ என்கிற சீட்டுக் கவி போல், அவரது உள்ளம்கோவில்பட்டியில் தான் வாழ்ந்து கொண்டி ருந்தது. ‘உண்ணும் சோறும் பருகு நீரும்தின்னும் வெற்றிலையும்’ எல்லாம் மார்க்சியம்அவருக்கு. சுவாசிக்க மறந்தாலும் மறப்பார்,நாளேடுகள் புரட்டாத நாள் எல்லாம் விழுப்புண்படாத வீரனின் நாள் அவருக்கு. ஒரு பத்திரிகைஅலுவலகம் சேர்த்து வைத்துக் கொள்ள முடியாத அளவு காகிதங்கள், பழைய நாளிதழ்கள், புத்தகங்கள், புத்தகங்கள், புத்தகங்கள்என்று நிறைத்து வைத்திருந்தார் தம்மைச் சுற்றி.206 எலும்புகளில் மட்டுமல்ல, அவரது உடற்கூடுவாசிப்பால் தான் இறுகப் பிணைக்கப்பட்டிருந் தது. 

ஒரு பொருட்காட்சிப் பார்வைக்கான அரிய ஜீவராசி போல் பலருக்கும் அவர் தட்டுப்படுவார், தேனாம்பேட்டை நரேஷ் பால் மையத்தில் அவர் வாழ்க்கை கடத்திய ஆண்டுகளில். கால அட்டவணைப்படி அவரது காலை உணவு முதற்கொண்டு சீடர்கள் கிடைத்தனர் அவருக்கென்று மெத்த அன்போடும், உரிமையான கோப தாபங்களோடும் பணிவிடை செய்ய. அப்படியான மாத காலண்டரில் குறிப்பிட்ட கிழமை திடீர் என்று வீட்டுக்குப் போவதும், மற்ற நாட்கள் படிக்க வரவேண்டியது உள்ளே வந்து விழுந்தால் போதும், காற்று வரவேண்டாம் என்று சன்னல்களையும் அடைத்துக் கொண்டு முரட்டுத் தவமாக நகரும் வாழ்க்கை. 

அடுத்தடுத்த இளம் தலைமுறை படைப்பாளிகள், தோழர்கள் யாரையும் ஈர்க்கும் அன்பின் மொழி வாய்த்திருந்தது அவருக்கு.  பரிகாசமிக்க வாய் கொள்ளாச் சிரிப்பு. ‘ஹாய் மேன்’ என்ற விளி. இழுத்திழுத்த பேச்சு. வங்கித்துறை சீர்திருத்தங்கள், உடன்பாடுகள், ஊதிய ஒப்பந்தங்கள் குறித்த ஒப்பீட்டு நிலவரங்கள் எப்போதும் தொடர் கவனத்தில் வாசித்தும், பகிர்ந்தும், கேட்டறிந்து வாதிட்டுமாக நேற்று வங்கியில் புதிதாகச் சேர்ந்த இளம் தோழருக்குண்டான ஆர்வமும்,அக்கறையும், விழிப்புணர்வும் அவரோடு ஒட்டியிருந்தது. திரைப்படங்கள் குறித்த நுட்பமான விமர்சன பார்வை வாய்த்திருந்தது.பேங்க் ஒர்க்கர்ஸ் யூனிட்டி இதழின் ஆசிரியர் குழுவில் தொடர்ந்து அவர் செலுத்தியபங்களிப்பு, மேலதிக உழைப்பு விவரிப்புக்கு அப்பாற்பட்டது. அடுத்த இதழுக்காக தயாரிப்புகூட்டத்தில் யார் பொறுப்பாசிரியராக இருந்தாலும், ஓர் ஆசிரியருக்குத் தேவைப்படும் பொறுப்புணர்வோடு என்னென்ன விஷயங்கள்வந்தாக வேண்டும் அந்த இதழில் என்ற தயாரிப்போடு தான் ஆசிரியர் குழு கூட்டத்தில்வந்து அமர்வார்.  வித்தியாசமான குரலும், உரிமை சார்ந்த ஒருமையில் அரசியல் பிரமுகர்கள் முதல் தொழிற்சங்கத் தலைவர்கள் வரை அவர் பெயர் சொல்லி அவர் பேசத் தொடங்கும்போதே கலகலப்பு களைகட்டத் தொடங்கிவிடும்.  யாரையாவது பன்மையில் குறிப்பிட்டால் அத்தனை தாக்குதல் இருக்கிறது என்று பொருளாகும். 

நியூஸ் அண்ட் வியூஸ் என்ற பகுதி, அவரதுசெல்லமான பகுதி. பிசினஸ் நாளேடுகள் வாசித்து அவற்றில் இருந்து முக்கிய செய்திகள்நாலைந்து தேர்வு செய்து, அவற்றை ஆங்கிலத்திலேயே மேலே நாளிதழ் பெயர், தேதியோடு குறிப்பிட்டுவிட்டு, அதன் கீழ் அந்தச் செய்திக்கான பின்புலம், பின்விளைவுஎல்லாம் சுருக்கமான வரிகளில் எழுதிவிடுவார்.இரண்டு பக்கங்கள் அவரது ஆஸ்தான பக்கங்கள், அதற்கு வாசகர் வரவேற்பு எப்போதும் இருக்கும். ஸ்டேட் வங்கி குறித்த செய்திகள் எனில் சிறப்புக் கட்டுரை எப்போதாவது கேட்டால் எழுதித் தருவார். விடாமல் திரை விமர்சனம் எழுதி வந்தவர் பால் வண்ணம்.கதை, வசனம், பாடல்கள் மட்டுமல்ல தொழில்நுட்ப விஷயங்கள் முதற்கொண்டு பல அம்சங்கள் குறித்தும் அமைந்திருக்கும் அவரது விமர்சனம், தப்பித் தவறி பக்க அளவுக்காகக் கைவைக்கலாம் என்றால், மிஸ்டர்,அதுக்கு எதுக்கு கஷ்டப்பட்டு எழுதிக் கொடுக்கறது என்று முதலிலேயே தற்காத்துக் கொண்டுவிடுவார். தசாவதாரம் படத்திற்கு அவர் எழுதியவிமர்சனம் மறக்க முடியாதது, அதில் ஜெயபிரதா வயதானாலும் யவ்வனம் குறையவில்லை என்று எழுதியதை, அடுத்த மாதக் கூட்டத்தில் பலரும் பிடித்துக் கொண்டுவிட்ட னர், ஒரு ரொமான்ஸ் பார்வையும் நமுட்டுச் சிரிப்புமாக, விமர்சனத்தை விமர்சனமாப் பாருங்கப்பா, சும்மா பேசிக்கிட்டு என்று அவர் சொந்த ரசிப்போடு பதில் கொடுத்தது அவரது மறக்கமுடியாத இன்னொரு பக்கம்.

பிசினஸ் நாளேடுகளில் அன்றாடம் வரும்வங்கித்துறை, நிதித்துறை தொடர்பான செய்திகளை மெனக்கெட்டு கத்தரித்து, நகல்கள் எடுத்துத் தொகுத்து, தொழிற்சங்கத் தலைவர்களுக்கு ஓயாது அனுப்பியும் வந்தார். அது அவரது அன்றாடக் கடமைகளுள் ஒன்று. வங்கி அரங்க கட்சித் தோழர்களுக்கான அரவணைப்பும், தத்துவார்த்தக் கல்வியும் கொட்டிக் கொட்டிக் கிடந்த திண்ணையின் மீது தான் அவர் வாசம் செய்து வந்தது.  கோவில்பட்டியில் எழுபதுகளில், எண்பதுகளில் காந்தி திடலில், தேநீர்க் கடையில், வீதி நடைகளில், ஓயாது உழைத்த சைக்கிள் பயங்களில் அவர் கண்டெடுத்துச் செதுக்கிய தோழமை இதயங்கள் பலவும் இன்று கதறிக் கொண்டிருப்பதைக் கேட்க முடிகிறது. எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களது ஜிந்தாபாத் ஜிந்தாபாத் நூலின் எந்தப் பக்கத்தைத் திறந்து விரலால் தொட்டாலும், அதில் அவர் பெயர் தட்டுப்படும் மாயத்தின் பொருள் முன்னெப்போதையும் விட இப்போது கூடுதலாகப் புரிகிறது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்க நிகழ்வுகளில் அசாத்திய எளிமையோடு திருத்தமாகத் துலங்கி இருக்கும் இவரது பங்களிப்பு.

பல பத்தாண்டுகளாக மூச்சிரைப்பு நோய் உடலோடு ஒட்டியிருக்க, அதையெல்லாம் புறத்தே உதறிப்போட்டுவிட்டு இயங்கிக் கொண்டே இருந்தது அவரது இடதுசாரி உலகம். எல்லாக் கருத்தரங்குகள், மாநாடுகள்,சிறப்புக் கூட்டங்கள், நூல் விமர்சன அரங்குகள் எங்கும் பார்க்கத்தக்க முகங்களில் ஒன்றாகஅவரது முகம் இருக்கும். அரங்குக்கு வெளியேஅவரது வாசஸ்தலம் புத்தகங்களுக்கு மத்தியில் துடிப்போடு இருக்கும். தேனாம்பேட்டை நரேஷ் பால் மையத்தில் எந்தக் கூட்டத்திற்கு வருவோரிடமும் பேச அவருக்கு நிறைய இருந்தது. தங்கள் சொந்த வாழ்க்கையின் புதிர்களுக்கான விடை தேடலில் நடுத்தர வயதினருக்கான ஆதரவுத் தோள்கள் அவருடையதாக அமைந்தது. மிகத் தன்னியல்பாக அவரோடு உரையாடும் சுதந்திரத்தை எடுத்துக் கொண்டோருக்கு வழங்கிக் கொண்டே இருக்கத்தக்க அனுபவ அமுத சுரபி அவரிடத்திருந்தது. எந்த நவீன சாதனங்களோடும் உடன்பட்டுப் போக முயற்சி மேற்கொள்ளாதிருந்த அவரது தகவல் தளம் வியப்புக்குரிய அளவு நடப்பு விவரங்களால் நிரம்பி இருந்தது. ஏதோ ஓர் ஊகத்தினால் தவறாகப் புரிந்து கொண்டிருந்த ஓர் இளம் படைப்பாளியை, அடுத்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் அவருக்கு அறிமுகம் செய்து வைக்கும்போது, அவருக்கே தெரியாத அந்த விஷயத்திற்காக அவரிடம் மன்னிப்பு கோரிக்  கண்களைக் கலங்க வைத்த இலக்கிய நேர்மை அவரதுமுகத்திற்கு நேரே யாரையும் புகழ்ந்துரைக்கும் பழக்கம் இல்லாதிருந்த அவர், சிறப்பான அம்சங்களை மற்றவர்களிடம் சொல்லிப் பாராட்டி மகிழ்ந்தவர். நெருப்பு போல் பற்றிக் கொள்ளும் அவர் சிரிப்பு, இருக்குமிடத்தை ஆரோக்கியமான விவாதத்திற்கான களமாக்கும் நேர்த்தி கொண்டிருந்தது.

இந்த ஆண்டு பொங்கலை அடுத்த சில நாளில், தங்களோடு அன்புத் தந்தையை உடனிருக்க இசைவு தெரிவிக்க வைத்து, ஆச்சியோடு அவரையும் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டோம் என்று அவருடைய அன்பு மகள் ராணி வாட்ஸ் அப்பில் பகிர்ந்திருந்தார். ஜனவரி25 அவரது 75 வது பிறந்த நாளில் காலடி எடுத்து வைக்கிறார் என்பதும் தெரிந்தது. அந்த நாள் பிற்பகல் நேரத்தில்,  சென்டிரல் வங்கி தோழர் சண்முகம், இந்தியன் வங்கி தோழர் கங்காதரன் எனும் மூத்த தோழர்களோடு இணைந்து ராணியின் இல்லத்திற்கு ஓர் இன்ப அதிர்ச்சியாகப் போய் நின்றோம். போகிற வழியில் பால் 75 என்று பிறந்த நாள் கேக் ஒன்று எழுதி வாங்கி, ஓய் கேக்க வெட்டும்என்று கேட்க, ஒரு குழந்தை போன்ற குதூகலம் பொங்க அவர் அதை வெட்டி எடுத்துச்சாப்பிடப் போக, இனிப்பு கூட வேண்டாம், அளவோட அளவோட என்று ராணி அன்போடுகொடுத்த குரலுக்கு சிரிப்பு மட்டுமே பதிலாக்கிய அந்தப் பார்வை இன்னும் நெஞ்சில் நிற்கிறது. 

இனிப்பு தான் அளவுக்கு அதிகமாகி விட வேண்டாம். துயரத்தைத் தாங்க ஓர் அளவு வேண்டாமா....அன்பைப் பொழியவும், துயரத்தைப் பகிர்ந்து கொள்ளவும் கூட நேரேபோய் நிற்க முடியாத இந்த கொரோனா சூழல் எத்தனை சாபமிக்கதாக ஆக்கிவிட்டது நம் இயல்பு வாழ்க்கையை. 

போய் வாருங்கள் எங்கள் பால் சிந்தை வைத்திருந்த அன்பின் பால்!

கட்டுரையாளர் : எஸ். வி. வேணுகோபாலன்

;