வியாழன், பிப்ரவரி 25, 2021

articles

img

ஜனவரி - 19 வீரப்புதல்வர்கள் நினைவு தினம்....

இந்திய வரலாற்றில் 1982 ஜனவரி-19 ஒரு புதியதிருப்புமுனையாக அமைந்தது. தேச விடுதலைக்கு பிறகு, பொதுப்பிரச்சனைகளின் அடிப்படையில் இந்திய உழைப்பாளி மக்கள் நடத்திய நாடுதழுவிய பொது வேலை நிறுத்தம் தொழிலாளி வர்க்கத்தின் வலிமையை எதிரிவர்க்கத்திற்கு எடுத்துக்காட்டியது மட்டுமல்ல, தங்களது எல்லையற்ற வலிமையை தாங்களே உணர்ந்து கொள்ளவும் உதவிசெய்தது.

1980ஆம் ஆண்டில்  காங்கிரஸ் மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தபின் தொழில் வளர்ச்சி என்ற பெயரால் பெருமுதலாளிகளுக்கு ஏராளமான சலுகைகளை வழங்கியது. மறுபுறத்தில் கருத்தாலும், கரத்தாலும் உழைக்கும் சாதாரண உழைப்பாளி மக்கள் மீது சொல்லொண்ணா தாக்குதலை தொடுத்தது. கடன் பெறுவதற்காக ஐஎம்எப் விதித்த நிபந்தனைகளை முழுமையாக ஏற்றுக்கொண்டது. இதன் விளைவாக,

* ஊதியம் குறைக்கப்பட்டது.

* உற்பத்திச் செலவை குறைத்தார்கள்.

* மக்களுக்கான மானியத்தை வெட்டினார்கள்.

* பொதுத்துறைகளை தனியார்மயமாக்க தீவிர முயற்சி மேற்கொண்டார்கள்.

*  விவசாயிகளுக்கான மானியத்தை சுருக்கினார்கள்.

கடுமையான விலைவாசி உயர்வு மறுபுறத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியம் பல்வேறு வழிகளில் ராணுவத் தளவாடங்களையும், ராணுவத் துருப்புகளையும் அமைத்து யுத்த அபாயத்தை ஏற்படுத்தியது.

காங்கிரஸ் கட்சி ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்கு பதிலாக முழுக்க முழுக்க முதலாளித்துவ நிலப்பிரபுத்துவக் கொள்கைகளை பாதுகாப்பதே தனது லட்சியமாக கொண்டு செயல்பட்டது. மத்திய அரசின் இத்தகைய நாசகரக் கொள்கையை எதிர்த்து நாடெங்கிலும் போராட்டங்கள் வெடித்துக் கிளம்பின. இதுவரை போராட்டம் என்பதே அறியாதவர்கள் கூட போராட்டத்தில் ஈடுபட்டனர்.

& தாங்கள் உற்பத்தி செய்யும் விளை பொருளுக்கு நியாயமான விலைவேண்டும் என்பதற்காக விவசாயிகள் போராட்டம்.

& நிலப்பிரபுக்களின் தாக்குதலை எதிர்த்து விவசாயத் தொழிலாளிகள் நடத்திய போராட்டம்.

& மாணவர்கள் இளைஞர்கள்-மாதர்கள் அவர்தம் பிரச்சனைகளுக்காக நடத்திய போராட்டம்.

இவர்களை ஒருமுகப்படுத்தும் வகையில் சிஐடியு முன் முயற்சியில் 1981ஆம் ஆண்டு ஜூலை 4ல் மும்பையில் சிறப்பு மாநாடு நடத்தப்பட்டு நவம்பர் 23 தில்லியில் பிரம்மாண்டமான அணி வகுப்பு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.  முடிவின் அடிப்படையில் தலைநகர் தில்லி மாநகரை சிவப்பாக்கும் வகையில் உழைப்பாளிகளின் எழுச்சிமிகு அணி வகுப்பு கம்பீரமாக நடைபெற்றது. மத்திய-மாநில அரசு ஊழியர்கள், வங்கி, காப்பீடு, தபால், தந்தி, பாதுகாப்பு, துறைமுகம், நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள், ஆலைத் தொழிலாளிகள், துறைவாரியான உழைப்பாளிகள், மாணவர்கள், வாலிபர்கள், மாதர்கள் என அனைத்துத் தரப்பினரும் ஒன்றாக கூடி மத்திய அரசின் மக்கள் விரோத தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக அவரவர் மொழியில் முழங்கினர்.

பேரணியின் இறுதியில் ஜனவரி 19 அன்று ஒரு நாள் பொதுவேலை நிறுத்தம் என்ற அறிவிப்பு தொழிலாளர்கள் மத்தியில் பலத்த கரகோஷம் பெற்றது.

கோரிக்கைகள்

$  உணவுப் பண்டங்கள், சமையல் எண்ணெய், துணி, சர்க்கரை ஆகியவற்றை மானிய விலையில் போதுமான அளவிற்கு தடையில்லாமல் பொது வினியோக முறையில் வழங்கவேண்டும். இவற்றை கண்காணிக்க மக்கள் குழுக்கள் அமைக்கவேண்டும்.

$   விவசாய விளை பொருட்களுக்கு கட்டுபடியான விலை வேண்டும்.

$  விதை, உரம் போன்ற இடுபொருட்கள் நியாயவிலையில் கிடைக்க உத்தரவாதம் வேண்டும்.

$  கள்ளச்சந்தை, பதுக்கல், கடத்தல், வர்த்தகச் சூதாடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

$  காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும்.

$  புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வேலை இல்லா திண்டாட்டத்திற்கு முடிவுகட்ட வேண்டும்.

$  தேசியபாதுகாப்புச் சட்டம், அத்தியாவசிய சர்வீஸ் வேலைநிறுத்த தடைச் சட்டம் ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும்.

$  தொழிலாளர்களுக்கு தேவைக்கேற்ற குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும்.

$  ஆலை மூடல், ஆட்குறைப்பை தடுக்க வேண்டும்.

போன்ற மக்களுடைய நியாயமான, அவசியமான கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 19 பொது வேலை நிறுத்தம் பிரகடனப்படுத்தப்பட்டது.வேலை நிறுத்த அறிவிப்பு வெளிவந்தவுடன் இது ‘தேசத் துரோகம்’ என ஆட்சியாளர்கள் கூக்குரலிட்டனர்.

# பிரதமர் நேரிடையாகவே எச்சரித்தார்.

# உள்துறை அமைச்சரும் அதே பாணியை பின்பற்றினார்.

# காங்கிரஸ் முதலமைச்சர்கள் மாநாடு நடத்தி அடக்குமுறைக்கு திட்டமிடப்பட்டது.

# வேலை நீக்கம், சம்பளவெட்டு, சிறைவாசம் என ஒன்றன்பின் ஒன்றான மிரட்டல்கள்.

# கண்டதும் சுட்டுத்தள்ளு என உத்தரவிட்டார் பீகார் முதல்வர்.

# அரசின் பிரச்சாரக் கருவிகளான வானொலியும், தொலைக்காட்சியும் வேலை நிறுத்தத்திற்கு எதிரான பொய்ப்பிரச்சாரங்களை தொடர்ந்து மேற்கொண்டன.

மேலும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள், முன்னெச்சரிக்கை என்று சொல்லி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். எந்த தேசிய பாதுகாப்புச் சட்டம் எனும் ஆள்தூக்கிச் சட்டத்தை எதிர்த்து வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டதோ அதே கருப்புச் சட்டத்தை பயன்படுத்தி நூற்றுக் கணக்கானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். பல மாநிலங்களில் போலீஸ் தடியடி மற்றும் துப்பாக்கிச் சூட்டினால் 10 பேர் பலியானார்கள் மற்றும் கேரளாவில்  காங்கிரஸ் கட்சியினரால் 2 பேர்  கொலைசெய்யப்பட்டார்கள்.

தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, தொழிற்சங்க இயக்கங்களின் பிரச்சார இயக்கங்கள் தடைசெய்யப்பட்டன. இத்தனை அச்சுறுத்தல்களையும், நிபந்தனைகளையும், மிரட்டல்களையும் எதிர்கொண்டு அஞ்சாமல் இந்திய தொழிலாளி வர்க்கம் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய புதியதோர் போராட்ட வரலாறு படைத்தது. ஜனவரி-19.

நாடுமுழுவதும் வெற்றிகரமாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் தமிழகமும் குறிப்பிடத்தக்க பங்கை வகித்தது. தமிழக அரசு பல்வேறு விதமான அடக்குமுறைகளைக் கையாண்டது. அதன் உச்சகட்டம் தான் வேலை நிறுத்த நாளன்று ஒன்றுபட்ட தஞ்சையில் நடத்திய துப்பாக்கிச் சூடு.

தஞ்சைத் தரணியில் செங்கொடி இயக்கம் தாக்குதல்கள் பலவற்றையும் சந்தித்து வந்திருக்கிறது. செங்கொடி இயக்கத்தை நிலப்பிரபுக்களும் அரசும் ரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கச் செய்ய மேற்கொண்ட முயற்சிகள் ஏராளம்.இரணியன், சிவராமன், களப்பால்குப்பு முதல் பூந்தாழங்குடி பக்கிரியோடு கீழ் வெண்மணி தியாகிகள் வரை எத்தனையோ தியாகச் செம்மல்களை தந்த மண் தஞ்சைமண்.இந்தத் தியாகத் தழும்பேறிய ஒன்றுபட்ட தஞ்சை மண்ணில், இன்றைய நாகை மாவட்டத்தில் விவசாய இயக்கத்தின் வீரப்புதல்வர்கள் ஜனவரி-19 அன்று இந்திய நாடு முழுவதிலும் உள்ள தொழிலாளி வர்க்கத்துடன் தோளோடு தோள் சேர்ந்து போராடினார்கள். இப்படி தொழிலாளர்களோடு இணைந்து நின்று போராடிய விவசாய இயக்கத் தோழர்கள் மீது தமிழக அரசு துப்பாக்கி முனையை நீட்டியது. இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான தியாகச் செம்மல்கள் அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் மூவருக்கும் நமது செங்கொடி தாழ்த்திய வீரவணக்கத்தை உரிதாக்குவோம்.

இன்று நாடாளுமன்ற ஜனநாயக குரல் வளையை நெரித்து மோடி அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாகவும், போராட்டத்தை மேலும் முன்னெடுத்து செல்லும் வகையில் நாடு முழுவதும் தொழிலாளி வர்க்கம் களம் இறங்க தயாராகி உள்ளது. வரும் ஜனவரி 23 அன்று சிஐடியு உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்களும், விவசாயத் தொழிலாளர்களும் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவது எனவும், மற்ற மாவட்டங்களில் தர்ண போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவுசெய்யப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட போராட்டங்களில் தமிழக உழைப்பாளிகள் முன்னிலைபாத்திரம் வகிக்க நாம் தயாராவோம் இதுவே இந்த தியாகிகளுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும்.

கட்டுரையாளர் : வி.குமார், சிஐடியு மாநில உதவி பொதுச் செயலாளர்

;