articles

img

கற்றலிற் கேட்டல் நன்றா?

கற்றலிற்  கேட்டல் நன்றா?

உயிரியல் மற்றும் சமூக காரணிகள் எவ்வாறு மொழியை வடிவமைக்கின்றன என்பது குறித்து டெலாவேர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த கல்வி மற்றும் மனித மேம்பாட்டு துறை பேராசிரியர் ஸ்டெபானி என்.டெல் டூபோ ஆய்வு செய்து வருகிறார். எம்ஆர்ஐ மற்றும் இசிஜி போன்றவற்றின் துணையோடு, பேச்சு மற்றும் எழுத்து மொழிகளை மூளை எவ்வாறு பகுப்பாய்வு செய்கிறது என்பதை அவரது ஆய்வுகள் பரிசீலனை செய்கின்றன.  ஒரு புத்தகத்தை படிப்பதோ அல்லது ஒரு பதிவை கேட்பதோ இரண்டின் நோக்கமும் ஒன்றுதான். அதை புரிந்துகொள்வதுதான். ஆனால் இந்த இரண்டும் ஒத்ததல்ல. இரண்டும் புரிதலை வெவ்வேறு வழிகளில் சாத்தியமாக்குகிறது. நாம் படிக்கும்போது மூளை பின்புலத்தில் கடுமையாக பணி செய்கிறது. எழுத்துக்களின் வடிவத்தை அடையாளம் கண்டு அவற்றை பேச்சு ஒலிகளோடு பொருத்திப் பார்க்கிறது. அவற்றின் அர்த்தத்துடன் இணைக்கிறது. ஒவ்வொரு சொல்லோடும் வாக்கியத்துடனும் மொத்த புத்தத்துடனும் இணைக்கிறது.  அச்சு எழுத்தானது காணும் அமைப்புகளான நிறுத்தற் குறிகள், பத்தி பிரிப்பு மற்றும் தடித்த எழுத்துக்கள் போன்றவற்றின் மூலம் புரிதலுக்கு உதவுகிறது. ஒருவர் அவருக்கு வசதியான வேகத்தில் படிக்கலாம். மாறாக, கேட்டலில் மூளையானது பேசுபவரின் வேகத்தில் செயல்பட வேண்டும். பேச்சு மொழியானது ஒரு கணமே நிலைப்பதால் கேட்பவர்கள் தாங்கள் செவி மடுத்ததை நிலைநிறுத்திக் கொள்ள, நினைவாற்றல் உட்பட மற்ற அறிதிறன் செயல்பாடுகளை சார்ந்து இருக்க வேண்டும்.  ஒருவர் பேசும்போது ஒலிகள் ஒன்றோடொன்று கோ ஆர்ட்டிகுலேஷன்(coarticulation) என்கிற முறையில் கலக்கின்றன. எனவே மூளையானது சொற்களின் எல்லைகளை விரைவாக அடையாளங்கண்டு ஒலிகளை பொருளோடு பொருத்திப் பார்க்க வேண்டும். மேலும் பேசுபவரின் தொனி, அவரது அடையாளம் மற்றும் இடம் பொருள் ஏவல் ஆகியவற்றிற்கும் கவனம் செலுத்தி பேசுபவர் கூறும் அர்த்தத்தை விளக்கிக் கொள்ள வேண்டும்.  கற்பனைக் கதைகள் போன்ற எளிமையானவற்றை பொறுத்த வரை படிப்பதும் கேட்பதும் ஒத்தவையே. ஆனால் உண்மைகள், கருத்துகள் மற்றும் விஷயங்கள் எவ்வாறு செயல்படுகின்றன போன்றவற்றை விளக்கும் அபுனைவு அல்லது கட்டுரைகள் படிப்பதை விட கேட்பது கடினமாக இருக்கும். இவை ஒவ்வொன்றிற்கும் மூளையானது வெவ்வேறு பகுதிகளை பயன்படுத்துகிறது.  எதார்த்தமாக பார்த்தாலும் படிப்பதில் பல சாதகங்கள் உள்ளன. புரியாத பகுதிகளை திரும்பவும் படிக்கலாம்; பின்னர் படிப்பதற்காக அடிக்கோடிடலாம். கேட்பதில் இவ்வாறு எளிமையாக செய்ய இயலாது. ஆனால் டிஸெல்க்சியா போன்ற பேச்சு குறைபாடு உள்ளவர்களுக்கு கேட்பதே எளிதாக இருக்கும். இன்னொரு வேறுபாடு என்னவென்றால், ஒன்றை காதால் கேட்கும்போது, உடற்பயிற்சி, சமையல் அல்லது இணையத்தை மேய்வது போன்ற பல விஷயங்களை(multi tasking) கூடவே செய்து கொண்டிருப்போம். எனவே கவனம் குறைவாக இருக்கும். ஒரு பரிசோதனையில் கல்லூரி மாணவர்கள் ஒரு பதிவை படிக்கவோ கேட்கவோ செய்யலாம் என்று கூறப்பட்டது. பதிவை படித்த மாணவர்கள் அது தொடர்பான புதிர் போட்டியில் சிறப்பாக செயல்பட்டார்கள். அதாவது படித்துப் புரிந்து கொள்வதை விட கேட்டுப் புரிந்து கொள்வதற்கு அதிக கவனம் தேவைப்படுகிறது. ஆகவே இன்றும் படிப்பது அவசியம். கேட்பது என்பது ஒரு தெரிவு. இரண்டும் ஒன்றல்ல. இரண்டும் எவ்வாறு வினை புரிகிறது என்பதை தெரிந்து கொண்டு உலகை புரிந்து கொள்ள இரண்டையும் பயன்படுத்த வேண்டும். (சயின்ஸ் அலர்ட்)  

சினம் எனும் குன்றேறி  

கோபம் வரும்போது அதை வெளிவிடுவது நல்லது என கூறப்படுகிறது. ஒரு பிரஷர் குக்கரின் வால்வை திறந்து உள்ளிருக்கும் அழுத்தத்தை வெளிவிடுவது போல. ஆனால் இது தவறானது என ஒரு ஆய்வு காட்டுகிறது. ஒஹையோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் சினம் தொடர்பான 154 ஆய்வுகளை பரிசீலித்ததில் கோபத்தை வெளிவிடுவது உதவிகரமானது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என தெரிய வந்துள்ளது. சில சமயங்களில் அது கோபத்தை அதிகமாக்கவும் செய்யலாம். அதற்காக கோபத்தை புறக்கணிக்க வேண்டியதில்லை. நாம் ஏன் மிகையாக கோபம் கொள்கிறோம் என்பதை பரிசீலிக்க வேண்டும். கோபத்தின் அடியில் உள்ள சிக்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டும். உணர்ச்சிகளை சமனப்படுத்துவதற்கு அது உதவும். அதுவே உணர்ச்சிகளை ஆரோக்கியமான வழியில் பரிசோதிக்கும் முதல் படியாகும்.  இந்த ஆய்வு பலதரப்பட்ட வயது, பால், கலாச்சார மற்றும் இனங்களை சேர்ந்த 10189 நபர்களிடம் நடத்தப்பட்ட சோதனைகளை பரிசீலனை செய்தது. கோபத்தினால் எழும் உடல் எழுச்சிகளையும் கோபம் ஏற்படும்போது நாம் மேற்கொள்ளும் உடல் இயக்கங்களை (அவை மற்ற நேரங்களில் நலம் பயப்பதாக இருந்தாலும்) குறைப்பதே கோபத்தை கட்டுப்படுத்துவதற்கு முக்கியமாகும் என இந்த ஆய்வு காட்டுகிறது. கோபம் தலைக்கேறும்போது பொருட்களை போட்டு உடைப்பதற்கென்று உள்ள அறைகள் பிரபலமாக உள்ளன. அதிலிருந்தே இந்த ஆய்விற்கான உத்வேகம் உண்டானது என்கிறார் விர்ஜீனியா காமன்வெல்த் பல்கலைக்கழகத்தை சேர்ந்த தொடர்பு அறிவியலாளரும் இதன் முதன்மை ஆய்வாளருமான ஸோபி கிஜார்விக்.  இந்த பரிசீலனை ஷாக்டர் -சிங்கர்(Schachter-Singer) இரு காரணி என்கிற கருதுகோளை அடிப்படையாகக் கொண்டது. கோபம் உடலியல் மற்றும் அறிதிறன் ஆகிய இரு பகுதிகளைக் கொண்டது என்கிறது இந்த கருதுகோள். இதற்கு முந்திய ஆய்வுகள் அறிதிறன் என்கிற கோணத்தையே அதிகம் கவனம் செலுத்தின. அறிதிறன் அடிப்படையிலான நடத்தை சிகிச்சைகள் எல்லாவிதமான மூளை செயல்பாடுகளையும் சரி செய்வதில்லை. எனவே கோபத்தை ஆற்றுப்படுத்துவதற்கு மாற்று வழியை இந்த ஆய்வு காட்டுகிறது. உடல் எழுச்சியை அதிகப்படுத்தும் குத்து சண்டை, சைக்கிள் ஓட்டுதல், வேகமான நடை போன்றவற்றையும் எழுச்சியை குறைக்கும் ஆழ்ந்த மூச்சு, தியானம் மற்றும் யோகா ஆகியவற்றையும் இந்த ஆய்வு சோதனை செய்தது. அமைதிப்படுத்தும் செயல்பாடுகள் சோதனைசாலையிலும் வெளி களத்திலும் கோபத்தை குறைப்பது காணப்பட்டது. நிதானமான யோகா, சீரான தசை தளர்வு, வயிற்று தடுப்பு மூலம் சுவாசித்தல்(diaphragmatic breathing) மற்றும் சம்பவத்திலிருந்து வெளிவருதல்(time out) போன்ற எழுச்சியை குறைக்கும் செயல்பாடுகள் திறனானவை. கோபத்தை வெளியிடுவதை விட அதை அடக்குவதை இந்த ஆய்வாளர்கள் பரிந்துரைக்கிறார்கள்.  அமைதிப்படுத்தும் உத்திகள் மன அழுத்தத்தை குறைப்பது போல கோபத்தையும் குறைக்கின்றன. பந்து விளையாட்டுகள் மற்றும் அது போன்ற உடற்பயிற்சிகள் உடல் எழுச்சியை குறைக்கின்றன. நமக்கு அது மகிழ்வாக இருந்தால் கோபத்தை குறைக்க உதவிகரமாக இருக்கும். இந்த முடிவுகளை தெளிவுபடுத்த மேற்கொண்டு ஆய்வுகள் தேவைப்படுகின்றன. ஆனால் இப்போதைக்கு சிறிது ஒய்வு எடுத்தல் அல்லது ஒன்றிலிருந்து பத்து வரை எண்ணுதல் போன்ற அமைதிப்படுத்தும் உத்திகள் கோபத்தை அடக்குவதற்கு சிறந்த தெரிவுகள் என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள். இந்த ஆய்வு Clinical Psychology Review என்கிற இதழில் வந்துள்ளதாக சயின்ஸ் அலெர்ட் கூறுகிறது.