articles

img

தர்ம சங்கடமா சங்கட தர்மமா?

பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பது தொடர்பான  கேள்விக்கு பதிலளிப்பது தர்மசங்கடமானது. இந்த விலை உயர்வு எனக்கும் வருத்தமளிக்கிறது. ஆனால், பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு மட்டும் தீர்மானிக்க முடியாது. மாநில அரசுக்கும் பங்குள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் தான் விலையைத் தீர்மானிக்கின்றன. நான் எதுவும் முடிவு சொல்ல முடியாது. எனினும் பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் கொண்டுவர  அதை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும். மத்திய-மாநில அரசுகள் முழுமையாகப் பேசி முடிவெடுத்தால் மட்டுமே இது சாத்தியம்.

இவ்வாறு கூறியிருப்பவர் மரியாதைக்குரிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நல்லவேளை, வெங்காய விலை உயர்வு குறித்துக்கேட்டபோது, நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை. எனவே அதன் விலை உயர்வு பற்றி தெரியாது என்றுபதிலளித்தது போல் நான் சொந்தக் காசில் பெட்ரோல் போடுவதில்லை. எனவே அதன் விலை உயர்வு குறித்து எனக்குத் தெரியாது என்று கூறாமல் “பொறுப்பாக” பதில் சொல்லியிருக்கிறார் நிதியமைச்சர்.வருத்தப்படுவது அவர், ஆனால் பாரம் சுமப்பதுநாட்டு மக்கள். இவருடைய வருத்தத்தால் நயா பைசாகூட விலை குறையப் போவதில்லை.விலை உயர்வுக்கும் மத்திய அரசுக்கும் சம்பந்தமில்லை என்று இவர் சொல்வதில் ஒரு துளி பெட்ரோல் அளவிற்குக் கூட உண்மையில்லை.சர்வதேச சந்தை நிலவரத்திற்கேற்ப எண்ணெய்நிறுவனங்கள் விலையைத் தீர்மானிக்கின்றன என்று இவர் கூறுவது உண்மையானால் கொரோனாஊரடங்கு காலத்தில் கச்சா எண்ணெய் விலை ஒருபீப்பாய் 65 டாலரிலிருந்து 25 டாலர் வரை சரிந்தது. ஒரு நிலையில்  அடிமட்டத்திற்குச் சென்றது. அப்போது பெட்ரோல், டீசல் விலை குறைந்திருக்க வேண்டுமல்லவா? ஆனால் என்ன நடந்தது? சர்வதேச சந்தை விலை சரிவால் ஏற்பட்ட பலன் மக்களுக்கு கிடைக்கவிடாமல் அடுத்தடுத்து கலால் வரியைத் தீட்டி ஒரு நயா பைசா கூட குறையாமல் பார்த்துக்கொண்டது மத்திய அரசு.

டீசல் மீதான வரி லிட்டருக்கு ரூ.47 அளவிற்கும்,பெட்ரோல் மீதான வரி ரூ.58 வரைக்கும் வசூலிக்கப்படுகிறது. உற்பத்திச் செலவைவிடக் கூடுதலாகமத்திய-மாநில அரசுகளின் மூலம் திணிக்கப்படும் வரியால்தான் அநியாய விலை உயர்வு ஏற்படுகிறது. இதில் பெரும்பகுதி வரியைச் சுருட்டுவது மத்திய அரசுதான். இந்தியன் ஆயில் இணையதளத்தின் முந்தைய தகவல்படி மத்திய கலால்வரிதீர்வையால் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.32,9-ம்மாநில வரியால் லிட்டருக்கு ரூ.20,61-ம் தில்லியில்வசூலிக்கப்படுகிறது. பெட்ரோல் அடிப்படை விலை மற்றும் டீலர் கமிஷனையும் சேர்த்தால் கூட ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.35,78 அளவிற்குத் தான் வரும். மீதமுள்ள தொகை வரியாகத்தான் வசூலிக்கப்படுகிறது. இதில் மத்திய அரசு வரியைக் குறைத்தால் ஓரளவு நிவாரணம் தர முடியும்.ஆனால், மத்திய நிதியமைச்சர் ஒரு ரூபாய் கூட வரியைக் குறைக்காமல் கையை விரிப்பதும், எல்லாம் சந்தை செய்யும் விந்தை என ஒதுங்கிக் கொள்வதும் எந்த வகையில் நியாயம். மாநில அரசுகள் ஓரளவு வரியைக் குறைப்பதன்மூலம் விலையைக் குறைக்க முடியும் என்றாலும்
கூட ஜிஎஸ்டி வரி விதிப்பால் மாநிலங்களின் வருவாய்க்கான வாய்க்கால்கள் பெரும்பாலும் அடைக்கப்பட்டுவிட்டன.

இதற்கான இழப்பீட்டைத் தருகிறோம் என்று சொன்ன மத்திய அரசு அவ்வப்போது பிச்சை போடுவது போல மாநில அரசுகளுக்கு கிள்ளிக் கொடுத்து தவிக்கவிட்டுக் கொண்டிருக்கிறது. ஜிஎஸ்டி வரி இழப்பீட்டைக் கேட்டால் கடன் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறும் இதே நிதியமைச்சர், அப்படி கடன் வாங்கவேண்டுமென்றால் கூட உதய் மின் திட்டத்தை ஏற்றுமின்துறையை தனியாருக்கு தந்துவிட வேண்டுமென நிபந்தனை விதிக்கிறார்.இந்த பட்ஜெட்டில் கூட பெட்ரோல், டீசலுக்குகூடுதல் வரி விதிக்கப்பட்டது. அதாவது பெட்ரோல்லிட்டருக்கு ரூ.2.50-ம் டீசல் லிட்டருக்கு ரூ.4-ம்விதிக்கப்பட்டது. கேட்டால் வேளாண்துறை கட்டமைப்பிற்காக இந்த வரி என்கிறார்கள். வேளாண் துறையையே கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கை மாற்றும் சட்டத்தை நிறைவேற்றி விட்டு வேளாண்கட்டமைப்பை வலுப்படுத்தப் போகிறார்களாம். முன்பு கல்விக்கான செஸ் வரி என்று கூறி வரியைஉயர்த்தினார்கள். பின்பு புதியக் கல்விக்கொள்கைஎன்ற பெயரில் கல்வியையே முற்றாக தனியாருக்குக் கொடுக்க துணிந்தது போல வேளாண் மைக்கு வரி விதித்து அதையும் அழிக்கிறார்கள்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மட்டுமல்ல ஒரே மாதத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு அடுத்தடுத்து ரூ.25, ரூ.50 என ரூ.75 அளவுக்கு விலையை உயர்த்தியுள்ளனர். உங்கள் பணம் உங்கள் கையில் என்ற பெயரில் எரிவாயுமானியத்தை உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்துகிறோம். அனைவரும் வங்கிக் கணக்கு தொடங்குங்கள் என்றார்கள். ஆனால், வங்கிக் கணக்கில் ரூ.400 வரை மானியமாக செலுத்தப்பட்ட நிலையில் தற்போது ரூ.24 வரை குறைக்கப்பட்டு அதுவும்தற்போது தரப்படுவதில்லை. மானியம் பெற ஜன்தன் வங்கிக் கணக்கு தொடங்கியவர்கள் குறைந்தபட்ச இருப்பு வைக்கவில்லையென்று அபராதம் போடுவதோடு அந்த அபராதத்திற்கும் ஜிஎஸ்டி வரி போடுகிற “காருண்யமிக்க” அரசுதான்மோடி அரசு.

பழையபடி மண்ணெண்ணெய்க்கு மாறிவிடலாம் என்று மக்கள் நினைத்தால் கூட ரேஷன் கடைகளில் கிடைக்காத பொருளாக மண்ணெண்ணெய் மாறிவிட்டது. இந்த லட்சணத்தில் பட்ஜெட்டில்மண்ணெண்ணெய் விலையும் ரூ.3 உயர்த்தப்பட் டுள்ளது. இனி வீடுகளில் அடுப்பெரிய வழியில்லை.வயிறுகள் தான் எரியும். இதுதான் நாங்கள் சொன்னமாற்று எரிபொருள் என்று மார்தட்டிக் கொள்வார் கள் மத்திய ஆளுங்கட்சியினர்.ராஜஸ்தான், மத்தியப்பிரதேச மாநிலங்களில் பெட்ரோல் விலை சதமடித்துவிட்டது. வெகுவிரைவில் நாடு முழுவதும் இந்த நிலை வந்துவிடும். அடுத்து டீசலும் ரூ.100-ஐ தொட்டுவிடும். இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்குமான இடைவெளியைக் குறைக்க முடியாதவர்கள், பெட்ரோல்,டீசல் விலைகளுக்கிடையே இடைவெளியைக் குறைப்பதில் ‘இமாலய வெற்றி’ பெற்றுவிட்டனர். ஒரே நாடு, ஒரே விலை என்பதை பெட்ரோல், டீசல்விலை உயர்வில் மட்டும்தான் இவர்கள் பின்பற்றவில்லை. ஒரே நாடு, ஒரே வரி என்று வாய்ப்பட்டா போட்டவர்கள் ஆட்சியில் பெட்ரோல், டீசலை பொறுத்தவரை ஒரே நாடு, ஒரே வெறித்தான்.

2014-ஆம் ஆண்டு ஒரு பேரல் கச்சா எண்ணெய்விலை 107 டாலராக இருந்தபோது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71,41 பைசாவாக இருந்தது.கொரோனா காலத்தில் கச்சா எண்ணெய் விலை 30 டாலருக்கு விற்றபோதும் இந்தியாவில் லிட்டர் ரூ.88-க்கு விற்கப்பட்டது. கச்சா எண்ணெய் தற்போது59 டாலராக இருக்கும் போதும் பெட்ரோல் விலைலிட்டருக்கு ரூ.92 ஆக உள்ளது.இதற்கு முக்கியக் காரணம் மத்திய அரசுவிதிக்கும் முறைமுக வரிதான். இது நேரடியாகவே தெரிகிறது. ஆனால் எதுவும் என் கையில் இல்லை என்கிறார் நிதி அமைச்சர்.பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மீதுபழிபோடுவதன் மூலம் மத்திய அரசு தொடர்ந்து தப்பிக்க முயல்கிறது. அண்மையில் பாரத் பெட்ரோலியத்தின் பங்குகளை 51 சதவீதம் அளவிற்கு அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கிவிட்டது. அடுத்த கடியில் 49 சதவீதமும் காலியாகிவிடும். இதேபோல் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் கொஞ்சம் கொஞ்சமாக அதானி, அம்பானியின் வாய்களுக்குள் போய்விடும்.கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து, சுத்திகரித்து மீண்டும் ஏற்றுமதி செய்யும் ‘அரும் சேவைக்காக’ அம்பானி நிறுவனங்களுக்கு வரி விலக்கு மட்டுமல்ல. இந்த மேக் இன் இந்தியா திட்ட சேவைக்காக மானியமும் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. இதையெல்லாம் மறைத்து வருத்தப்படுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை என்கிறார் நிதியமைச்சர்.

பெட்ரோல், டீசலுக்கு தரப்படும் விலையில் பெரும்பகுதி வரிதான். தோட்டத்தில பாதி கிணறுஎன்று கூடச் சொல்லமுடியாது. கார்ப்பரேட்டுகளின் தோட்டத்திற்காக மக்களின் தோட்டங்கள் கிணறுகளாக்கப்படுகின்றன. வலியோர் சிலர் புசிக்க எளியோரின் குருதி உறிஞ்சப்படுகிறது.மறுபுறத்தில் சீர்திருத்தம் தீவிரப்படுத்தப்பட வேண்டுமென்று பிரதமர் கூறிக்கொண்டே இருக்கிறார். இதன் பொருள் மொத்தத்தையும் தனியாருக்குக் கொடுத்துவிட வேண்டுமென்பதுதான். பெட்ரோல், டீசலுக்கு அரசு விலை தீர்மானிக்கும் முறையை கொண்டு வந்தால் விலையை கட்டுப்படுத்த முடியும். அது நிதியமைச்சரின் கையில்தான்இருக்கிறது. ஆனால் செய்ய மாட்டார்கள். ஏனெனில் இதுவரை பெட்ரோல், டீசல் மீதான வரியைபாஜக ஆட்சி 360 சதவீதம் அளவுக்கு ஏற்றியிருக்கிறது. இதன்மூலம் கடந்த ஆறரை ஆண்டுகளில் ரூ.19 லட்சம் கோடி அளவுக்கு வரியாக மட்டும் பாஜககூட்டணி அரசு வசூலித்துள்ளது.அமைச்சர் நிர்மலா சீதாராமன் தர்மசங்கடமாக இருப்பதாக கூறுவதில் பொருளில்லை. ஏனெனில்இவர்கள் நாட்டில் வளம் அனைத்தும் கார்ப்பரேட்,பெருமுதலாளிகளுக்கே என்ற சங்கடமான தர்மத்தையே ஆட்சி தர்மமாக கொண்டுள்ளனர்.

கட்டுரையாளர் :  மதுக்கூர் இராமலிங்கம்

;