வெள்ளி, பிப்ரவரி 26, 2021

articles

img

வர்க்க எழுச்சி வகுப்புவாதத்தை பின்னுக்குத் தள்ளும்....

2013ஆகஸ்ட் 27 – செப். 17 வரையில் முசாபர் நகரில் நடந்த இந்து –முஸ்லிம் மத மோதலில் 62 பேர் பலியானார்கள். இறந்தவர்களில் 42 பேர் முஸ்லிம்கள்,20 பேர் இந்துக்கள், காயமடைந்தவர்கள் 93 பேர்.இந்தக் கலவரங்களின் காரணமாக 50 ஆயிரம் பேர் ஊர்களை விட்டு வெளியேறிவிட்டனர்.இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் அனைவரும் விவசாயிகள். விவசாயிகளுக்கிடையில் ஏன் இந்த மோதல்? தான் விவசாயி என்ற அடையாளம் பின்னுக்குத்தள்ளப்பட்டு, மத அடையாளம் முன்னுக்கு வந்து, அதன் காரணமாக மதவெறிக்கு ஆளாகி, கலவரம் நடைபெற்றது. இதனால், மக்கள் ஒற்றுமையும், ஒரே வர்க்கமான விவசாயிகளின் ஒற்றுமையும் கடுமையான பாதிப்புக்கு உள்ளானது.இந்த வகுப்பு மோதலுக்கு மூல காரணம், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும், பாஜகவும்தான். இதன் காரணமாக 2014 முதல் 2019 வரையில் உ.பி., மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல்களில் இப்பகுதியில் பெரும்பான்மையாக பாஜக வெற்றியடைந்தது.

2013 கலவரம் - எப்படி ஏற்பட்டது
மத்திய அரசின் தாராளமய பொருளாதாரக் கொள்கையினால் விவசாயம் எதிர்கொள்ளும் பெரும் நெருக்கடியின் காரணமாக கிராமங்களில் வேலை இழப்பும், வருமான இழப்பும் உருவாகியுள்ளது. இளைஞர்கள் நகரங்களுக்கு வேலை தேடிச் செல்கின்ற நிலைஏற்பட்டது. இதனால் மேற்கண்ட பகுதிகளில்கிராமங்களில் விவசாயம் அல்லாத வருமானம் அதிகரித்தாலும், அது வறுமையை தீர்க்க உதவவில்லை.கிராம மக்களில், குறிப்பாக இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி, விரக்திஏற்பட்ட சூழலில், அப்பகுதியில் செயல்பட்ட ஆர்.எஸ்.எஸ்.சின் அமைப்புகள் மத அடையாளங்களின் அடிப்படையில் அவர்களைத் திரட்டத் தொடங்கியது. இதற்கு எதிர்வினையாக இஸ்லாமியர்களின் மத்தியிலும் மத அடையாள அமைப்புகள் தோன்றின.நெருக்கடியில் சிக்கிய இளைய தலைமுறையினருக்கு பாஜக தனது கட்சியில் பதவிகளை வழங்கியது. இதன் மூலம் இளைஞர்களை வகுப்புவாத அரசியலின் பக்கம் திருப்பமுடிந்தது. ஆனாலும், அந்த கிராமங்களில் வேளாண் நெருக்கடி தொடர்ந்து அதிகரித்தே வந்தது.

 மின் கட்டணம் உயர்வு, டீசல் மற்றும் உர விலை உயர்வு, சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் கரும்பு விவசாயிகளுக்கு உரிய காலத்தில்பாக்கி தர மறுத்தது என பல்வேறு வகைகளில் இந்து மற்றும் முஸ்லிம் விவசாயிகளை பாதித்தது. யோகி தலைமையிலான ஆட்சியின் ‘பசுப்பாதுகாப்பு’ நடவடிக்கைகள் காரணமாக கைவிடப்பட்ட கால்நடைகள் பயிர்களைத் தின்று அழிக்கும் கொடுமைகளும் நடைபெற்றன. நெருக்கடி அதிகரிக்கும்போது, துயரங்களும் பெருகின. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின்வகுப்புவாத பிரச்சாரம் இந்து மற்றும் முஸ்லிம் விவசாயிகளிடையே ஒருவரை ஒருவர்குறித்த பார்வைகளை மாற்றியமைத்தன.இப்பின்னணியில் இந்துப் பெண்ணை இஸ்லாமிய இளைஞர் ஒருவர் பாலியல் வல்லுறவு செய்ததாக பரவிய ஒரு வதந்தியின் அடிப்படையில், இந்து – முஸ்லிம் மோதல் ஏற்பட்டது. பிறகு அது மதக் கலவரமாகவும் மாற்றப்பட்டது. இதுதான் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற மதக் கலவரத்தின் சமூக பொருளாதாரப் பின்னணி.

கைகோர்த்த இந்து - முஸ்லிம் விவசாயிகள்
சமீப காலத்தில் பாரதிய கிசான் யூனியன்அமைப்பின் தலைவர்கள் முசாபர் நகர் உள்ளிட்ட மேற்கு உத்தரப்பிரதேச மாவட்டங்களில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக மதம் கடந்து அனைத்துப் பகுதி விவசாயிகளையும் திரட்டுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டனர். இந்த அமைப்பு, தில்லியில் போராட்டத்தை தலைமையேற்று நடத்தும் கூட்டமைப்பின் ஒரு முக்கிய அங்கமாகும்.இந்து விவசாயிகளையும், முஸ்லிம் விவசாயிகளையும் ஒன்றிணைக்காமல் விவசாயிகளை ஒன்று திரட்ட முடியாது என்ற முடிவுக்குஇந்த சங்கம் வந்தது. 2017 – 2018 ஆண்டுகளில், தங்கள் சங்கப் பதாகையின் கீழ், இந்து – முஸ்லிம் விவசாயிகள் சபைக் கூட்டங்களைதொடர்ந்து நடத்தியது. 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக பாரதிய கிசான் யூனியனின் சார்பில் தில்லியில் விவசாயிகளின்பேரணியை நடத்தியது. இந்தப் பேரணியில் இரண்டு மதங்களையும் சார்ந்த விவசாயிகள் ஒற்றுமையோடு பங்கேற்றார்கள்.தற்போது தில்லியில் நடந்துவரும் வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து, கடந்த ஜனவரி 29  அன்று, பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் முசாபர் நகரில் பிரம்மாண்டமான பேரணியை நடத்தினார்கள். இப்பேரணியில் இந்து – முஸ்லிம் விவசாயிகள், ஒரே வர்க்கமாக இணைந்து நின்றார்கள்.

 உ.பி., மாநிலத்தில் பாஜக ஆட்சியின் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தி மட்டுமல்ல, மத்திய பாஜக ஆட்சியின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றிட வேண்டும் என்ற வர்க்கப் போராட்டமும் விவசாயிகளை மத வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்றிணைத்துள் ளது. நடந்து வரும் விவசாயிகளின் ஒன்றுபட்ட இயக்கம் 2013 வகுப்புவாதக் கலவரத்தினால் ஏற்பட்ட காயங்களை ஆற்றி, சமூகத்தை ஒற்றுமைப்படுத்தியுள்ளது.

வங்கத்தில் நடந்த முழு அடைப்பு
விவசாயிகளின் போராட்டம் மட்டுமல்ல, நாட்டின் பல பகுதிகளில் நடைபெற்றுவரும் மக்கள் இயக்கமும் மதவெறியை பின்னுக்குத்தள்ளுகிறது. உதாரணமாக, மேற்கு வங்கத்தில் இந்திய மாணவர் சங்கமும், இந்திய ஜனநாயகவாலிபர் சங்கமும் இணைந்து கொல்கத்தா நகரில் தலைமைச் செயலகத்தை நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பேரணியை நடத்தினார்கள். இவர்களை மம்தா பானர்ஜி அரசின் காவல்துறை காட்டுமிராண்டித்தனமாக தாக்கியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் ஒருவரான மொய்துல் இஸ்லாம் இறந்துவிட்டார். மாநில அரசின் இந்த அடக்குமுறையைக் கண்டித்து பிப். 12 ஆம் தேதியன்று, கடை அடைப்பு போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான  இடதுமுன்னணி கட்சிகள் அழைப்புவிடுத்தன. மேற்கு வங்கம் முழுவதும், பலஆண்டுகளுக்கு பிறகு மதம், சாதி வேறுபாடுகளைக் கடந்து, பாசிச பாணியிலான வன்முறையை எதிர்த்து முழு அடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடந்துள்ளது.

விவசாயிகளும், தொழிலாளர்களும் நடத்திவரும் வர்க்கப் போராட்டங்கள் மத அடிப்படையிலான வகுப்புவாத இயக்கங்களை பின்னுக்குத்தள்ளுகின்றன.வாலிபர்கள், மாணவர்கள், பெண்கள் முன்னெடுக்கும் ஜனநாயக இயக்கங்களும், மக்கள் இயக்கங்களும் சாதி, மத அடையாளங்களைத் தாண்டி, ஒற்றுமையை உருவாக்குகின்றன. மத அடையாளங்களை முன்னுக்கு கொண்டுவரும் நோக்கத்துடன், சில பிரச்சனைகளை முன்நிறுத்தி, மத அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்திட, ஆர்.எஸ்.எஸ் பரிவார அமைப்புகள் திட்டமிட்டு செயல்படுகின்றன. தமிழகத்தில் வேல் யாத்திரை உள்ளிட்டு பல்வேறுஉதாரணங்களை எடுத்துக் காட்டிட முடியும்.மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளை முன்னெடுப்பதும், அவற்றின் அடிப்படையிலான வர்க்க போராட்டத்தையும், மக்கள் இயக்கங்களையும் முன்னெடுப்பதுமே, ஒற்றுமைக்கு வழிவகுத்திடும். சமூகத்தில் நல்லிணக்கத்தை மேம்படுத்திடும். மார்க்சிஸ்ட் கட்சி அந்த அடிப்படையிலேயே செயல்படுகிறது.

படக்குறிப்பு : முசாபர் நகரில் கடந்த வாரம் நடைபெற்ற விவசாயிகளின் மகா பஞ்சாயத்து

கட்டுரையாளர் : ஜி.ராமகிருஷ்ணன்,  அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

;