மானுட மேம்பாட்டுக்காக உடல் தான இயக்கம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியின் முதலாம் ஆண்டு நினைவு நாள் 12.09.2025 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. அவருடைய உடல் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக கொடுக்கப்பட்டது. அந்த வகையில், சீத்தாராம் யெச்சூரியின் நினைவு தினத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு கிளை, உடல்தான இயக்கத்தைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது. உடல்தான இயக்கத்தில் முன்னோடியாகத் திகழும் தமிழ்நாட்டில் இருந்து, அரசியல் கட்சி ஒன்றே இப்படிப்பட்ட முன்னெடுப்பை எடுப்பது, உடல்தான இயக்கத்தை மேலும் வலுப்படுத்தும் என்று பலரும் பாராட்டி வருகின்றனர். இந்திய ஒன்றியத்திற்கே வழிகாட்டும் வகையில், முதன்முதலில் 2008-ஆம் ஆண்டு உடல் உறுப்பு தான திட்டத்தைத் தொடங்கிய மாநிலம் தமிழ்நாடு, தொடங்கிவைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். 2008 ஆம் ஆண்டு சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஹிதேந்திரனின், உடல் உறுப்புகளை பெற்றோர் தானம் செய்ய முன்வந்த நெகிழ்ச்சி சம்பவத்தை ஒட்டி, இத்திட்டம் தொடங்கப் பட்டது. ஹிதேந்திரனின் நினைவுநாள் ‘உடல் உறுப்பு தான நாள்’ என்றும் தி.மு.கழக அரசால் அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு 2,000க்கும் மேற்பட்டோரின் உடல்கள் தானமாக வழங்கப்பட்டு, 10,000க்கும் மேற்பட்டோருக்கு, தானமாக பெறப்பட்ட உடல் உறுப்புகள் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டுள்ளன. உடல் உறுப்பு தானத்தை விரிவுபடுத்தும் விதமாகவும், தானம் செய்வோரை கெளரவப்படுத்தும் விதமாகவும், உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச் சடங்குகள், இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்று 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் 23-ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக, மருத்துவ ஆய்வுகளுக்காக உடல் தானம் செய்யும் வழக்கமும் தமிழ்நாட்டில் கணிசமாக அதிகரித்து வருகிறது. முன்மாதிரியாக, தமிழ்நாடு முதலமைச்சரும் உறுப்பு தானத்திற்குப் பதிவு செய்துள்ளார். அந்த வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், உறுப்பு தான பதிவுக்காக இயக்கம் தொடங்கப்படுவது முற்போக்கான, வரவேற்கப்பட வேண்டிய செயல், மறைந்தும் பயனுள்ளதாகட்டும் மானுட உடல்! நன்றி : முரசொலி (10.9.25)